1.அமைதி
மண்டையுள்
தாள்கள்
படபடத்துக் கொண்டிருந்தன.
கழிந்த காலம் மட்டுமல்லாது
நிகழ் எதிர் கால
எழுத்துக்களும் இசைத்துக்கொண்டிருந்தன
ஒன்று மற்றொன்றோடு
உராய்வு கொள்ள
பற்றி எரிந்திடுமோ
பயம்
உடலைக் கவ்வியது.
நீடிக்க விடாதிருக்க
காக்கை இட்ட எச்சம்
எடை கல்லானது.
அங்கொரு
அழகிய நித்திரை
நிகழக் கண்டீர்கள்.
*
2. பிராயம்
மழை வாங்கியக் குளங்களில்
முட்டைகளாக வந்த
ஆலங் கட்டிகள்
ஓயாத தவளைகளின்
செம்மையாக ஒலிப்பதை
வியக்கும் சிறுவனொருவன்
காலத்தின் கரையில்
வேடிக்கைப் பார்க்கும்
மிதவையாக கலங்குகிறான்
வானத்தில்.
3.அழைப்பு
*
என்றாவது
ததும்பும் மனதோடு
பேச அழைத்தால்
காலத்தை கச்சிதமாக்கும்
அழைப்பின் ஓசை
நிமிடங்கள் கடந்து
பதற்றம் கவ்விக் கொள்ள
இதைத்தான் என்றில்லாது
நினைவின் உரையாடல்கள்
தட்டான்களாக வெப்பத்தில்
மிதக்கும் ஸ்மைலிகளாகின்றன.
4. தரிசிப்பு
*
வெட்கம்
கால்களைப் பின்ன
தயக்கத்தோடு சொற்கள்
பெயரைக் கேட்டது
சிரித்தவள் சிரித்தபடியே.
கடிகாரம்
இரண்டு இரவு
மூன்று பகல் கடக்க
மீண்டும் கண்டபோது
சிரிப்பி என்றழைத்தேன்.
அன்றைய நாளில்
கண்டோரெல்லாம் களிப்புடனிருந்தனர்.
5. விநோதங்கள்
*
காலனியுள் காலத்தை சொருகி
கச்சிதமான தோற்றத்தோடு
ஐந்து
ஏழு
ஒன்பது சுற்றுகள்
இன்னும் இன்னுமென
அடிகளின் கணக்கீட்டை
அறிவியல் காட்டிட
நம்பிக்கை பெருக்கெடுத்த ஆற்றில்
மிதந்து கொண்டிருந்தனர்.
இன்னும் எதை எதையெல்லாம்
பார்க்கவேண்டி இருக்குமோ
நடந்து செல்வதை
வாழ்வாக கொண்டவன்.
6. கதையல்ல...
குட் மார்னிங் தொடங்கி
குட் நைட் முடிய
உறவாடி மகிழ்திருப்பாயே
நீர் ஊற்றா தொட்டிச் செடியானதேன்
பொம்மைகள் பழசானதோ
புதியது வாங்கிடலாமா?
தலையாட்டி மறுத்தவள்
என் கைபட தளிர்களாக துளிர்த்திடும்
இருப்பதே போதும்
விளையாட விருப்பம் இல்லை
பொம்மைகள் மீது
வெடிமருந்து நாற்றமப்பா.
தொலைக்காட்சியில்
உக்ரைன் நிலத்தின்
அழிவுக் காட்சிகள்.
No comments:
Post a Comment