1.
நடைபயிற்சி உரையாடல்.
*
தங்கரளிச் செடிக்கு மட்டும் ஏன்
இப்படி வேர்த்திருக்கெனக் கேட்டாள்.
வியர்வையல்ல பனித்துளி
சற்று நேரத்தில்
சூரியனில் கரைந்திடுமென்றேன்
உரையாடலைக் கேட்டவாறு
வந்துசேர்ந்த மற்றொரு சிறுமி,
வானம்
இந்த செடிக்கு மட்டும்
இத்தனை முத்தங்கள்
இட்டுள்ளதென்றாள்.
வியந்து வியர்த்துச் சிவந்தது இளவானம்.
*
2.
மழை இப்போதைக்கு
வராதென்றாள்
வானத்திடம் பேசி
வந்த சிறுமி.
எட்டிப் பார்த்த வானத்தின்
வெய்யில் வர
நிழல் மழை
பெய்யத்துவங்குகிறது
பூமியெங்கும்.
*
3.
வந்தமரும் கிளியிடம்
கேட்டபடியே இருந்தது
தன் பின்பக்கம் அறிய ஆவல் கொண்ட இலை.
பின்பக்க உருவே
முன்பக்க நிழலென
சன்னமான காற்றிற்கு
வீழ்ந்தது இலை.
அறிந்து கொண்டது
வேறு இலை.
அது கனியோடு பறந்தது.
No comments:
Post a Comment