Sunday, April 17, 2022

 நன்றி: நுட்பம் இணைய இதழ்



ந. பெரியசாமி கவிதைகள்

1. காட்சி
அந்தரத்தில்
நீண்டிருந்தது கோடு
மேலிருந்து கீழும்
கீழிருந்து மேலுமாக
அலகுகள் பிணைந்திருந்த
பறவைகளைக் கண்ட கணத்தில்
என் அருகாமையிலிருந்த காலி இருக்கையில்
நீ அமர்ந்து சென்ற கண நேரம்
அத்தனை மகத்தானது.

2. மலர்ந்த தேநீர்

இன்னும் கொஞ்ச நேரம்
அமர்ந்திருந்திருக்கலாம்
உரையாடல்
சற்றே நீடித்திருக்கலாம்
நமை ஈர்த்த சிறுமி
விளையாட்டை முடிக்காது இருந்திருக்கலாம்
எல்லாமும்
காரண காரியமற்றே
சடுதியில் முடிந்திடுகிறது
இருப்பினும்
நினைவில் தங்கி வாழ்ந்திருக்க
ஏதாவது நிகழத்தான் செய்கிறது
அன்று மலர்ந்த தேநீருக்கு
ஏன்தான் அத்தனை சுவையோ...



3. சவாரி

உருவாக்கப்பட்டிருந்த
வடிவமைப்பு வனத்துள் அமர்ந்திருந்தனர்
ஊஞ்சலாடிய சிறுமி
சலிப்படைந்து இறங்கி
அவனை அழைத்து
யானை சவாரி வேண்டுமென்றாள்.

தோற்றம் கொண்டான்
முதுகில் அமர்ந்து
சற்று பயணித்தவள் குதித்து
அடங்கொண்டாள்
யானை லத்தியை பார்க்கவேண்டுமென.

கணநேரம் நின்று இயங்கியது வனம்
அவன் காதலியின் வெடித்த
சிரிப்போசைக்கு.


No comments:

Post a Comment