Friday, March 3, 2023

நன்றி: தமிழ்வெளி

 

இனி இல்லாமலாகட்டும் ' சாமி எசமாங்களே ராசாங்கமே'

- ந.பெரியசாமி

 

 

இதெல்லாம் சாத்தியமா? இப்படியெல்லாம் நடக்கக்கூடுமா? வாழ்ந்து மடிந்தவர்கள் இப்படியும் கூட இருந்திருப்பார்களா? இப்படியானவர்களை பிறக்க வைத்து வாழ்ந்து மடியச் செய்யும் காலத்திற்குட்பட்டதை மொழி எவ்வாறு எழுத்துக்களாக மாற்றுகிறது. இது இதனால்தான் என அறுதியிட்டுக் கூற முடியாத புதிர்த்தன்மையை எழுத்துக்கள் வைத்துக் கொண்டிருப்பதன் ரகசியம் யாருக்கேனும் புலப்படக் கூடுமோ? புலப்படும் தருணத்தை கண்டடைந்தவர்களின் விடியல் எத்தகைய இன்பத்தைக் கொடுக்கும். இன்பம் திகட்டத் தொடங்கி சலிப்படையும் காலத்திற்குமுன் இல்லாது போய் விடுதல் அபூர்வம்தானே. ஒருவரின் மனதுக்குள் குளமாக, ஆறாக, கடலாக மொழி உருக்கொண்டபடி இருப்பது எதனால். யோசிக்க அதன் புதிர்த்தன்மை கெட்டித்துக்கொண்டே இருக்கும் படைப்புகள் வந்துகொண்டுதானே இருக்கிறது!. அப்படியான படைப்பாக வந்திருக்கிறது தேவிபாரதியின் 'நொய்யல்' நாவல்.

 

வேரோடு பிடுங்கி இழுத்து வந்த மரத்தைக் கரை ஒதுக்கிச் சென்று கொண்டிருந்தது ஆறு. வேடிக்கை பார்த்தபடி மரத்திலிருந்த இலைகளைப் பறித்த சிறார்கள் ஆளுக்கொரு பீப்பி' செய்து ஊதிக்கொண்டு சென்றுகொண்டிருந்தனர். ஒவ்வொரு பீப்பியிலிருந்தும் நொய்யல் ஓடும் பகுதி மக்களின் கதைகளை கேட்கத் தொடங்கிடுகிறோம். தேவிபாரதியின் நொய்யல் நாவலை வாசித்து முடித்ததும் இப்படியான சித்திரம் ஒன்று மனதுள் உருக்கொண்டது.

 

ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஓடிக்கொண்டிருக்கும் தனித்த ஒன்றல்ல ஆறு. ஊரின் உயிர். ஊரில் வாழ்வோருக்கெல்லாம் அதனோடு உறவுண்டு. தாய், சிநேகிதி, தந்தை, சிநேகிதனென அவரவரின் தேவைக்கேற்ற உறவாக உருமாற்றம் கொள்ளும். ஒவ்வொருவரின் உடலின் ரகசியம் அறிந்தது ஆறு. உடல் கழிவோடு மனக் கழிவையும் அகற்றக் கூடியது. வாசிப்போரை தன் பிரதேச ஜீவன்களாகக்  கொள்ளும் தன்மை ஆற்றுக்கு உண்டு. நம்மையும் அப்படித்தான் சுழற்றி அணைத்துக் கொள்கிறது.

 

பேரிரைச்சலோடு வரும் நொய்யலின் பாய்ச்சலை எதிர்கொள்ளும் உடல் மற்றும் மனவலுவோடு இருக்கும் அப்பகுதி மனிதர்களின் சாமார்த்தியத்தையும் காட்சிப்படுத்தும் நாவலில் தேவனாத்தா எனும் சிறு தெய்வத்தின் கதையோடு சென்னி மூப்பன் சொல்லும் கதை நம்மையும் கரையில் அலைவுகொள்ளச் செய்திடுகிறது.

 

ஊரென்பது சாதிய அடுக்குகளால் பிளவுபட்டும் பிணைந்தும் கிடக்கக் கூடியது. உயர்சாதி எனும் நினைவு எதையும் செய்யத் துணிவு கொண்டது. அறம் அறியாதது. அடுக்குகளுக்குள் பின்னப்பட்ட வலையை தாண்டவிடாது பார்த்துக்கொள்ளக் கூடியது. சாதி தொழில் துறந்து தன் முனைப்பில் எதையாவது கற்றுக்கொண்டாலும் அதை செய்யவிடாதிருக்க எத்தகைய இழிசெயலையும் செய்யக்கூடியது.  " நாலூறு செரச்சு எட்டூறு எரந்து குடிக்கற எச்சக்கலைக்கு படிப்பு கேக்குதாக்கு" என திட்டிக்கொண்டிருப்பவர்கள் மத்தியில் குமரப்ப நாவிதன் பண்டிதனாக உருக்கொண்டதை சகிக்காது,  நாய்க்குண்டியை செரைக்கவைத்து பரிகாசப்படுத்தியதை வாசிக்க நினைவில்  உண்டான வலியே தங்கமுடியாதிருக்க, நிஜத்தில் அனுபவித்தவர்களின் துயர் எத்தகு வலி மிக்கது என்பதை உணர்த்தி செல்கிறது தேவிபாரதியின் மொழி. குமரப்ப நாவிதர் பண்டிதனாகவும், ஆகச் சிறந்த ஜோதிடனாகவும் மிளிரச் செய்திருப்பது 'சாமி எசமாங்களே ராசாங்கமே' என்பதினி இல்லாது போய்விடும் என்பதற்கான நம்பிக்கையை அளித்தது. ஏரிக்கரையில் மதிய நேரங்களில் வேட்டியை இரு கைகளால் மறைத்துப் பிடித்திருக்க உள்ளே உட்கார்ந்தபடி சிரைக்கும் காட்சிகளை நகைத்தபடி கடந்த சிறார் பருவகாலம் நினைவில் தோன்ற மிகுவலியில் வாசிக்க இயலாதிருந்ததும்  ஏற்பட்டது. ஓட்டப்பந்தயத்தில் முதன்மையாக ஓடிக்கொண்டிருப்பவனை பிடித்திழுத்து கால் நரம்பொன்றை அறுத்துவிட்டு ஓடச்செய்து வலியின் வேதனையைக் கண்டு குதூகலித்திருந்த மனிதக் கூட்டங்களின் குரூரத்தின் வீச்சத்தை காலம் கடந்தும்  நாசியைப் பிடித்து கடக்கவேண்டியதாக இருக்கிறது.

 

நல்லதங்காள் கதைபோன்று காரிச்சி, குமரப்ப பண்டிதன், தேவனாத்தா கதை என நாட்டார் வழக்காற்றியல் தன்மையுள்ள நிறைய்ய கதைகளை நாவல் கொண்டுள்ளது. ஊரார்களின் கதையை ஊரின் மொழியில் சொல்லப்பட்டிருப்பது கதைகளின் மீதான நம்பகத்தன்மையும், கதைகள் நம்மை தொந்தரவு கொள்ளவும் செய்கின்றன. கிராமங்களில் புதையுண்டு கிடந்த கதைகள் நாவல்களாக வந்தடைதல் வழி முன்னோர்களின் வாழ்வியல் துயர்களை அறிந்துகொள்ள முடிகிறது.

 

கிராமங்களில் கள்ளத்தனம் மிக்க காமக் கதைகள் நிறைய உண்டு. அதுவும் திருவிழாக்களில் நிகழும் காமத் திருட்டுக்கதைகள் ஆண்டு முழுமையும் உலவிக் கொண்டிருக்கும். கட்டற்ற காமம் எதையும் செய்யச் செய்யும். மனிதாபிமானம் மண்ணாங்கட்டிகளாக உதிர்ந்து கிடக்கும். விரைத்த குறியை வம்படியாக வாயில் திணித்து தன் தினவு தீர்த்த சம்பவங்கள் நிறைய்ய உண்டு. நாவலில் காட்டப்பட்டிருக்கும் ஒன்றே உயிர் வதைக்கும் வாதையை ஏற்படுத்தி செல்கிறது.

மனித்தன்மையற்ற காமத்தால் மதிகெட்டுத் திரியும் போக்கை குமாரசாமி, சாமியாத்தாள், பூபதி பாத்திரங்கள் வழியே நிகழும் வெறியாட்டத்தை அப்பகுதியின் பொதுத்தன்மையாக மாற்றம் கொள்ளாதிருக்கச் செய்திருப்பதும் நாவலில் கவனிக்கத்தக்கதாக இருக்கிறது.

அடிபட்டு தப்பிய பாம்புகள் அடித்தவரை நினைவில் வைத்து என்றாவது அவர்களை கொத்திவிடும் எனும் பேச்சு உண்டு. ஒருவிதத்தில் உண்மையும் கூட. பத்தாம் வகுப்பு படிக்கையில் சேக்காலிகளோடு தூரமாக இருக்கும் கிணற்றில் குளிக்கச் செல்வதுண்டு. அப்படியானதொரு நாளில் பாதையில் கண்ட பாம்பை கல்லெடுத்து எறிந்தேன். வாலில் அடிபட்டு தப்பியோடியது. இனி உஷாராக இரு அது உன்னை கொத்த வரும் என பயமுறுத்திவிட சிறிது காலம் பாம்பு துரத்துவதாக நினைத்து பயந்து திரிந்தேன். இரவில் தினந்தோறும் கனவில் பாம்பிடம் கடிபட்டுக்கொண்டிருந்தேன். நினைவும், கனவுமே பாம்பு நம்மை தீண்டுவதற்கு சமமானதாகிவிடுகிறது. இந்த அனுபவம்தான் இப்படியானதொரு பேச்சை உருவாக்கி இருக்கக் கூடும். நாவலில் சாரைப் பாம்பு குறித்த கதைப் பகுதி நல்லோட்டமாக இருந்தது.

 

உருவாக்கத்தில் இருக்கும் பாடுகளை உருவாக்கியவர்களே உணர்வர். உருவாக்கம் உள்ளவரைதான் பாடுகளுக்கான உயிர் இருந்துகொண்டிருக்கும். காணமலாக்கி வேறொன்றை உருவாக்கிட, எல்லாமுமே காலமானதாகிவிடுகிறது. நம் காலத்தில் கிணறுகளும், ஏரி, குளங்களும் மரணித்து கட்டிடங்களைப் பிறப்பித்துள்ளன. கிணறு உருவாக்கத்தில் இருக்கும் வலிகளும், இழப்புகளும், நம்பிக்கையும் கிணறு இருக்கும் வரைதான் வாய்மொழிக் கதைகளாக இருந்துகொண்டிருக்கும் என்பதை நாவலில் நெடும் பகுதியாக இருக்கும் கிணறு வெட்டும் கதை நம்முள் மிகுந்த வலியை உருவாக்கிச் செல்கிறது. கிணறு இருந்த இடங்களில் இருக்கும் கட்டடங்களை பார்க்கும்போதெல்லாம் கிணற்று நீரின் சலசலப்பு நினைவுக்கு வந்துகொண்டிருந்தது. காலப்போக்கில் கிணற்றை நினைவும் மறந்துபோக தொடங்கிவிடுகிறது. நாவலில் இருக்கும் இப்படியான சின்னச் சின்ன சம்பவங்கள் நம்முள் நோய்மையை உருவாக்கி சென்றுவிடுகிறது.

 

நாவலில் தேவிபாரதி அக்கால மாந்தர்களின் கதைகளை மட்டுமல்லாது, அவர்களுடனாக இருந்த மரங்கள், செடி கொடிகள், பறவைகள், விலங்குகள், பாம்புகள், மீன்கள் என அவ்வூர்களில் இருந்த எல்லாவற்வையும் பெயர்களோடும், அதன் தன்மைகளோடும் நாவலின் போக்கில் கதையோடு கதையாக சொல்லியிருப்பது குறிப்பிடத்தக்கதாக உணருகிறேன்.

 

கி.பி.ஏழாம் நூற்றாண்டில் அப்பர் தேவாரத்தில் கூறப்பட்டிருக்கும் " சென்று நாம் சிறு தெய்வம் சேரோம் அல்லோம்" என்பதன் நீட்சியாக இருக்கும் சிறு தெய்வமான தேவனாத்தா நொய்யல் பகுதியினரை கட்டுக்குள் வைத்திருக்க யாரின் மேலாவது மருள் வந்து பெரும் ஆட்டத்தை நிகழ்த்துவதும், சூறைக் காற்றை பயங்கொள்ளச் செய்யும் ஒன்றாக நாவலில் மாற்றம் கொள்ளுதலும் நாவலில் சுற்றும் கதைமாந்தராகிவிடுகிறது.

 

பூவுக்கு மட்டுமல்ல புற்களுக்கும் வாசனையுண்டு." கொழுக்கட்டிப் புற்களின் மணம் வீசும் காரிச்சியின் மார்புக் கூடு" என்பதை வாசிக்கையில் அப்புற்கள் எப்படி இருக்கும், என்ன நிறம், என்ன மணம், எவ்வளவு உயரம் இருக்குமென நினைவு தேடத்தொடங்கியது. வறண்டு கிடக்கும் ஆற்றில் வெள்ளம் வரும் காட்சியை காட்டுகையில் கிரிக்கவுண்டனோடு நம்மையும் நிற்கச் செய்திடுகிறாள் காரிச்சி. நான்தான் நொய்யல், நான்தான் தேவனாத்தா என்னை நினைச்சிக்கோ வரும் எனக் கூறும் நிறைவு ததும்பும் சொற்களின் முன் பிதற்றும் சொற்கள் கிரிக்கவுண்டனுக்கு மட்டுமா?

வலட்சணமான தோற்றத்தில் வசீகரிக்கும் பாடலை பாடும் காரிச்சி ஆற்றில் நிர்வாணத்தோடு மிதக்கையில் ஒளிப்பிழம்பாக தகதகக்கும் பேரழகோடு இருப்பதைக் கண்டவர்கள் கூறுவது காரிச்சியே நொய்யல் என்பது உறுதியாகிறது. மாசுபடுத்தப்பட்ட ஆறு அசிங்கமான தோற்றமுள்ளதாகவும், புது வெள்ளம் வரும் காலங்களில் தேவதையாக மிளிரும்  நொய்யலின் உருவாக காரிச்சி இருப்பதை நாவல் உணர்த்துவதாக கொள்ளலாம்.

 

குமரப்ப பண்டிதனை அடியில் சிரைக்க வற்புறுத்தியபோது நாயோடு நாயாக நினைத்து சிரைத்தான் எனும்போது மட்டும் நூலாசிரியரின் குரல் நாவலில் வெளிப்பட்டிருக்கும். மற்றபடி நாவலில் வேறெங்கும் குரலையோ கையையோ உயர்த்திப் பேசவில்லை. நாவலின் போக்கே நாம் யாருடன் நிற்கவேண்டும், யாருக்காக பேசவேண்டும் என்பதை உணர்த்திவிடுகிறது. பொதுவெளியில் மாதாரி இனத்தில் பிறந்த பெண், ஆதிக்க சாதியில் பிறந்தவனை கட்டியணைத்திட முடியாது. நாவலில் காரிச்சியின் உடலை பார்வதியின் உடலாக்கி மீறலை ஏற்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. இருபத்தி ஐந்து ஆண்டுகள் அடைகாத்து அடைகாத்து வைத்திருந்ததன் நோய்மையின் வலியை மறக்கடிக்கும் விதமாக நாவலை வாசித்து முடித்ததும் மீண்டும் ஒரு முறை நாவலை வாசிக்க வேண்டும் என வாசகனை நினைக்கச் செய்கிறது நொய்யல்.

Tuesday, October 25, 2022

நன்றி: நுட்பம்


அந்தியில் வேலை முடிந்து வருபவள் அலுப்பைப் போக்க வைக்கும் ஒப்பாரியிலிருந்து கிளி கொத்தும் தானியமாக சொற்களை சேகரித்து தன் அனுபவங்களை பிணைத்து காட்சிபடுத்தலே கவிதை.

அம்மம்மா, அப்பச்சி, பாட்டி, தாய்கிழவி என செல்லமாக்கப்பட்டவர்கள் அவ்வப்போது மடியில் கிடத்தி பேன் பார்த்தபடி சொல்லப்படும் கதைகளில் வாழ்வு குறித்த சித்திரங்கள், வலியை போக்கும் ரகசியங்கள், அறிந்துகொள்ள வேண்டிய பண்புகளை பிரகடனப்படுத்தாமல் கதையின் போக்கில் உணர்வோடு நம்முள் விதையாக ஊன்றி இருக்கிறார்கள். காலம், தேவைப்படும் சூழல் அறிந்து நம்முள் நினைவாக உணர்த்தும். ஸ்ரீநேசன் கவிதைகளுக்கும் நினைவில் உணர்த்தும் தன்மை உண்டு. ' மூன்று பாட்டிகள்' தொகுப்பின் கவிதைகளிலும் உணர்ந்துகொள்ள முடிகிறது. 


...................

வேர்விட்டு லயிக்கும் பெரும் சந்தர்ப்பத்தை

நழுவவிட்டுக் கொண்டிருக்கும் மனதின் இழப்புணர்வோடு

ஆண்டு புதிதென பிறந்தெழும்

தினத்தின் இவ்வதிகாலைப் பொழுதில்

எமக்காக கொஞ்சம்

விரைந்து உதிக்கலாம் சூரியனே நீ.


நம்மை தேற்ற பெரிதான பிரயத்தனங்கள் தேவைப்படாது. எளிதினும் எளிய இயல்பான அன்றாடங்களின் செயல்பாடுகளே போதுமானதாக இருப்பதை இக்கவிதை சுட்டுகிறது. சூரியன் தினம் பிறப்பதுதான். அன்றைய பிறப்பு மருந்தாக மாற்றம் கொள்கிறது. வெப்பம் நோய்மை அகற்றும் மாமருந்து. 


மனதில் இருக்கும் பூனையும், திடும்மென எட்டிக்

 குதித்த பூனையும் ஒன்றையொன்று நின்று பார்க்கும் கணத்தில் நாமே மனதிலிருந்த பூனையாக உருமாற்றம் கொண்டிருப்போம். இந்நிகழ்வு எதிர்பாராதது. 'ஆண்டன்  செக்காவை மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் வாசிப்பது' கவிதையை வாசித்துக் கொண்டிருக்கையில் நாய்களால் துரத்தப்பட்ட பூனை என்முன் பாய்ந்து எனை நோக்கிய கணம்.  ஒரு அற்புதம் அதுவாகவே உருக்கொண்டது. அப்படி உருக்கொண்ட அற்புதத்தை இக்கவிதையில் காண முடிந்தது. எரிந்து முடிந்த மெழுகுவர்த்தியும், எரியும் மெழுகுவர்த்தியும் பூனைகளாகியது அற்புதங்களின் புதையல்.


பெருமாத்தம்மாள்

*

படிக்கட்டோர இருக்கையில் ஒரு பாட்டி

எதையோ தவறவிட்டதான முகபாவம்

சுமக்க முடியாத புத்தக மூட்டையை

யாரோ ஒரு சிறுமி

அவள் மடியில் இறக்குகிறாள்

என்னவொரு மிடுக்கு கிழவிக்கு இப்போது

தானே பள்ளிக்குச் சென்று கொண்டிருப்பதைப்போல.


எந்தவொரு செயலுக்கும் மதிப்பீடு மாறுபட்டதாகவே இருக்கும். யாரேனும் ஒருவருக்கு அது வாழ்நாள் கனவாகவோ, ஏமாற்றமாகவோ, சாதனையாகவோ இருக்கக்கூடும். புத்தப்பையை பாட்டியின் மடியில் வைத்தல் சாதாரண செயல்தான். 'மிடுக்கு' என்ற சொல்லில் பாட்டியின் எதிர்பார்ப்பு, கனவு, ஏமாற்றம் எல்லாம் ஒரு கணம் அடைந்துவிட்ட நிறைவு,  பால்யம் தொட்டு கிடைக்காத பேறு அன்று கிடைத்திட்ட மகிழ்வின் ததும்பல் 'மிடுக்கு' எனும் சொல்லுக்குள் வைத்துள்ளார் நேசன்.


சூதும் வாதும் அறியாதவர்க்களின் செயலில் இருக்கும் அன்பைக் கூட சந்தேகிக்கச் செய்யும்  வாழ்வில் நாமும் இருப்பதன் அசிங்கத்தை சுட்டுவதாக உள்ளது ' கன்னியம்மாள்' கவிதை.


கோயில் பிரசாதமெனினும்

நீ கொடுக்கும் சுண்டலை

மயக்க மருந்திட்டதோ என இப்பேருந்து பயணிகள்

ஒருவரும் பெற்றுக்கொள்ள மாட்டார்கள்

உன் அன்பை

அழுகையைப்போல் அடக்கிக் கொள் பாட்டி.


நாமும் இப்படியான பேருந்துகளில் பயணித்திருக்கக் கூடும். எதேனும் ஒரு பாட்டி அழுகையை அடக்க இயலாது விம்மியபடி இருந்திருக்கக் கூடும்.


நினைவின்மையோ, கவனப்பிசகோ இல்லாமல், அறிந்தே நிகழ்த செயல் எங்கே திருட்டு என அம்பலப்பட்டுவிடுமோவென பதறுபவனின் மேன்மையை காட்சிபடுத்துகிறது  மூன்றாவது பாட்டியான ஜடசியம்மாள் கவிதை. இத்தகைய மேம்பட்ட பண்புகளை கவிதைக்குள் கொண்டு வருவதால் ஸ்ரீநேசன் கவிதைகள் அபூர்வ தமிழ்குணம் கொண்ட கவிதைகள் என ஷங்கர்ராமசுப்ரமணியன் சொல்வதற்கான காரணமாக இருக்கக் கூடும். திருட்டு பாட்டிகள், மேன்மைமிகு பேரன்கள் நம்முடன் இருந்துகொண்டிருப்பதை நினைவுபடுத்துகிறது.


பச்சை வேர்க்கடலை

கிடைக்காத பருவத்தில் ஒரு மரக்கால் பைநிறைய

மாமியார் பெருமையோடு கொடுத்தனுப்பியதை

அம்மாவுக்கு கொண்டு செல்வேன்

விடிகாலை உறக்கத்தைப் பயன்படுத்தி

ஒரு கிழவி தன்னுடையதைப் போல்

என்னடைய

 பையை இறக்கிச் செல்கிறாள்

தூக்க கலக்கத்தில் கவனித்துவிட்ட நான்

பதற்றமடைந்து விட்டேன்

யாரும் பாட்டியைப் பிடித்துவிடக்கூடாது

யாரும் அவமானப்

படுத்திவிடக் கூடாது.

*


தொகுப்பிலிருக்கும் நான்காவது பாட்டி தள்ளாத வயதில் தயிர் விற்று பிழைப்பதை காட்சிபடுத்துகிறது. அன்றைய தொழில் பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாதென சூரியனிடம் வேண்டுதலை வைக்கும் குரல்  நம் குரலாகவும் இருக்கிறது.


பற்றற்றதெல்லாம் பண்டமாவது இயல்பு. பண்டம் எனில் விற்பனைக்கானதுதானே. சூழலைக் காக்க யானை ஒன்றின் மீது ஒன்று படுத்துக் கிடப்பதைப் போன்று நிற்கும் மலைகள் பொடிப்பொடியாக மாற்றம்கொண்டிருப்பதன் துயரைக் கூறுகிறது ' காணாமல் போகும் மலைகள்' கவிதை. மலைகளும் பண்டமாக்கப்பட்ட சூழலில் வாழ்வதை நினைக்க துயரோடு கடக்கவேண்டியிருக்கு.


சொல் தட்டையான ஒற்றை பொருள் கொண்டதல்ல. அதன் பரிமாணத்தை காட்சிபடுத்துகிறது ' சொல் சில்பம்'.


பெயர் அறியாது, உரு அறியாது குரலை மட்டும் கேட்டு இதுவாகவோ, அதுவாகவோ இருக்குமோவென அறியாத பறவையின் நிழலைத் தேடும்  ' பட்சி கானம்' கவிதையில் வியப்பையும் விந்தையையும் தரிசிக்கலாம்.


கவிதை உருக்கொண்ட கணத்தின் மனவெழுச்சி வாசிப்பின்போதும் மீண்டும் உருக்கொள்ளும் மகத்தான தருணங்கள் எப்போதாவது கிடைப்பதாக நம்பப்படுவதுண்டு. ' வெயிற்சுவை' அப்படியானதொரு கவிதையாக இருக்கிறது.


அக்னி நட்சத்திரத்தில்

காயும் வெயிலை ருசித்து பார்க்கும் விசித்திர ஆசை

சிறுவன் ஒருவனுக்கு உதித்தது

களத்தில் காய்ந்த மிளகாய்மீது

காய்ந்த ஒரு துண்டு சிவந்த வெயிலை

எடுத்து வாயிலிட்டவன் கதறி விட்டான்

நன்றாய் நாக்கையது பொசுக்கி விட்டதுபோலும்

விடுவானா

பின் பனிக்கால விடியலின் புல்நுனியில் பூத்தத் துளிமீது படர்ந்த

பல்வண்ண இளமொளியைக் கனியெனப் பறித்து உண்டான்

அதுவே சில்லென்று இருந்தாலும் சப்பென்றிருந்தது

சலிப்பானா

பூக்கள் மலர்ந்த பூமியைப் பொலிவாக்கிய

இளவேனிலின் முற்றிய அந்திக்கு வந்து சேர்ந்தவன்

மலை முகட்டுப் பாறையின் விளிம்பில்

திரண்டிருந்த கூட்டிலிருந்து சொட்டிய

தேன்தோய்ந்த துளிவெயிலை

நுனிநாக்கில் ஏந்தியவன்

நடனமிடத் தொடங்கினான் இப்போது

இனிக்கிறது

இனிக்கிறது.


வாசிப்பின் முடிவில் நம்முள் இருந்தவன் வெளியேறி நடனமிட்டவாறு இருப்பதை நாமே ரசித்திருப்போம்.


மது அருந்துபவர்கள் தங்களுக்கான இடங்களை தேர்வு செய்வதில் இருக்கும் மனப்போக்கு விசித்திரமானது. தேர்வு கொள்வதில் இருக்கும் அக்கறையும் ஆர்வமும் அருந்தி முடித்த பின் சுத்தப்படுத்துவதில் இல்லாது போதல் அவனுள் இருக்கும் ஆண் எனும் மனத்ததும்பலை உணர்ந்துகொள்ள முடிகிறது. ஆனால் இப்படி சுத்தப்படுத்தாமல் விட்டுப்போய் விட்டதும் கவிதையாகிவிட்டது. செம்போத்தாக உருக்கொண்ட காலி பீர்பாட்டில் தன்னுள் எப்பொழுதும்  வைத்திருக்கும் மயக்கத்தை காட்சிபடுத்துகிறது ' செம்போத்தல்' கவிதை. மிதமான மயக்கம் நாவில் கசப்புச் சுவையை நீட்டிக்கச் செய்கிறது.


தன்னைத் தானே இரண்டாக பகுத்து எதிரும் புதிருமாக இயக்கி வெப்பத்தை மலர்த்திக்கொண்டே இருக்க புதுச்சூரியனோடு வந்துகொண்டிருப்பதைக் கூறுகிறது ' சூரியனோடு வருவேன்' கவிதை.


மரம் தன்னிலிருந்து விடுவிக்கும் இலைகள் தரையடைந்து அதனதன் அளவில் சிறிதான சலனத்தை ஏற்படுத்தவே செய்யும். சில இலைகள் காற்றில் மிதந்து தூரம் சென்றடையும். சில இலைகள் நிலத்தில் பெரும் பிளவையே உருவாக்கும். கவிதைகளும் வாசகனின் மனப்போக்குக்கு ஏற்ப விளைவுகளை செயலாற்றச் செய்யும். 

ஸ்ரீநேசன் முந்தைய தொகுப்பான ஏரிக்கரையில் வசிப்பவனை'ப் போன்று இத்தொகுப்பும் நம்முள் நெருக்கத்தை ஏற்படுத்தும்.

Tuesday, October 4, 2022

வாழ்த்துரை

 S.Anantha Kumar முடிவிலியின் நினைவுச் சங்கிலி தொகுப்பிற்கான என் வாழ்த்துரை....


பட்டாம்பூச்சி கூட்டுப்புழுவான கதை 

*


ஐநூறு, ஆயிரம் என எதேனும் முக்கிய நாளை சாக்கிட்டு மரங்களை நடுவார்கள். அதில் எத்தனை பிழைத்து வந்தது என்பது குறித்த அக்கறையோ, கணக்கீடோ ஏதும் இருக்காது. அன்றைய கொண்டாட்டத்திற்கான மையம் என்றளவிலே நின்றுபோய் விடுகிறது. மரங்களை வளர்த்தெடுக்க பற்றும், பரிவும், காத்திருப்பும் தேவை. இங்கு எதுவும் எளிதல்ல. கவிதைச் செயல்பாடும் அப்படியான ஒன்றே.


கவிதைகளில் வகைமைகள் பல உண்டு. நம் தேர்வுகொள்ளும் தன்மையும், வாசிப்பின் தீவிரமுமே நம்மிலிருந்து வெளிப்படும் படைப்புகளில் காணக்கூடும். இதைத்தான் எழுதவேண்டும், இப்படித்தான் எழுத வேண்டும் என்கிற கட்டளைகள் கிடையாது. நாம் எதையும் எழுதலாம். நாம் எங்கு நிற்கிறோம் என்பதை வாசிப்பில்தான் கண்டடைந்து, நம்மின் நகர்வை திட்டமிடலாம்.


ஆனந்தகுமார் ' முடிவிலியின் நினைவு சங்கிலி' தொகுப்பில் வீட்டிற்குள்ளும், வெளியிலும் தன்னை பாதித்த விசயங்களை கவிதையாக்கியுள்ளார். அம்மா, அப்பா, அக்கா, அண்ணி என உறவுகள் குறித்த கவிதைகள் அவருக்கான அனுபவம் என சுருங்கிப்போய்விடாது, வாசிப்பவர்களும் தங்களின் உறவோடு பொருத்திப் பார்த்துக்கொள்ள ஏதுவாக கவிதைகள் இருப்பது சிறப்பு. பெரும்பாலானவர்களின் கவிதைகளில் அப்பாவைவிட அம்மாக்களுக்கான இடம் நிறைய்யவே இருப்பது இயல்பு. ஆனந்தகுமாரும் அம்மாவின் இருப்பை கவிதைகளில் பத்திரப்படுத்தியுள்ளார். 


கூட்டுப்புழு எப்படி பட்டாம்பூச்சியாகிறதென்று தங்கைக்கு அம்மா பாடம் எடுக்கையில், பட்டாம்பூச்சி கூட்டுப்புழுவான கதை எனக்குத் தெரியுமெனக் கூறும் " கூட்டுப் புழுக்கள்," கவிதை அம்மாவின் மீது மட்டுமல்ல, பெண்களின் மீதான நேசிப்பையும், அக்கறையையும் வெளிப்படுத்தியுள்ளார்.


கொரானா காலத் துயர், சாலை விரிவாக்கத்தில் கிராமங்கள் அடையாளங்களை இழத்தல், தொலைத்த கொலுசில் காதலை இசைத்தல், கையில் பம்பரத்தோடு  விடுப்பை எதிர்நோக்கும் மதுக்கூடத்தில் வேலை பார்க்கும் சிறுவனின் எதிர்பார்ப்பு என  துயர்களை காட்சிபடுத்துகின்றன கவிதைகள்.


' குறிஞ்சி' கவிதையில் நம்மால் அழிவுக்குட்பட்ட இயற்கையை காட்சிபடுத்தல், செயலிகளின் வலையுள் சிக்குண்ட வாழ்வு, நிலம் நம் வாழ்வில் உருவாக்கும் பாதிப்பு, "எப்போ  எடுப்பார்கள்" எனும் வார்த்தைகளுக்குள் வாழ்ந்து மடியும் மனித இருப்பு, கோயில் யானையை, யானை என ஒப்புக்கொள்ள மறுக்கும் சிறுமி, தாத்தா இழந்த மாம்பழக் கதை என கவிதைகள் லகுவான பயணிப்பை தருகின்றன.


'குழந்தைகள்' தலைப்பிட்ட கவிதைகளில் வெளிப்பட்டிருக்கும் சித்திரம் ஆனந்தகுமாரின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. மகிழ்ச்சி. தொடர்ந்து எழுதுங்கள். 


Saturday, August 27, 2022

நன்றி: தமிழ்வெளி

 

வலியின் நரம்புகளால் பின்னப்பட்ட இலைக்கூடு
- ந.பெரியசாமி


திருஷ்டி பொம்மையுள் உருவமாக காட்சி தரும் வைக்கோல், நெல்மணிகளை தலையில் அடுக்கி நின்றபோது, நிலம் காயாது நீர் பாய்ச்சி களித்திருக்கச் செய்த காலத்தின் நினைவையும் தாங்கி நிற்கும். காலம் எதிர்வுகளை உடனுக்குடன் காட்சிபடுத்தி விடுகிறது. பிறப்பு×இறப்பு, வாழ்வு× அ வாழ்வு அனைத்துமே எதிர் எதிர் நிலையில் இல்லாமல் ஒன்றின் உள்ளீடாக மற்றொன்று என அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இவ்வடுக்குகளின் தன்மையை வசீகரத்தோடு பிரதிபலிப்பது கவிதைகளாக உள்ளன. கவிதைகள் என்றென்றும் புதிர்வும் புதிர்வின்மையுமான சுழல். இச்சுழலுள் லாவகமாக கடந்து வருதல் நம் வாசிப்பின் விநோதம். நிலாகண்ணனின் " பியானோவின் நறும்புகை" தொகுப்பிலும் சில விநோதங்களை கண்டடையலாம்.

மூப்பின் காரணமாக இயங்க முடியாவிட்டாலும், நகர்ந்து நகர்ந்து தன்னைச் சுற்றி பெருக்கி சுத்தம் செய்து நான் ஓய்ந்துவிடவில்லை எனக் கூறிக்கொண்டே இருக்கும் திண்ணை பாட்டிகள்  நினைவில் இருப்பதைப் போன்று " வாழ்வென்பது கண்ணீரில் துளிர்க்கும் தாவரம்" , "பாகற்கொடியில் துளிர்த்திருக்கும் இளங்கசப்பு" என நாணயங்களாக்கி உண்டியலில் சேர்த்து வைக்கும் சொற்களை நிலாகண்ணன் தொகுப்பில் நிறைய்ய கொடுத்துள்ளார். 

பருந்தாகிப் பார்க்க ஆஸ்பெஸ்ட்டால் கூரை "தத்தளித்து மூழ்குபவைகளால் எழுப்பப்படும் தவிப்பின் அலை" என்பதை வாசிக்கையில் பிரமிளின் ' வண்ணத்துப் பூச்சியும் கடலும்' கவிதையில் வரும் 
"நாளிரவு பாராமல்
ஓயாது மலர்கின்ற
எல்லையற்ற பூ " நினைவிற்கு வருவது மகத்தானது நிலாகண்ணன்.

தேவ மலர்சூடிய புல்லாங்குழல் பித்தன் காற்றை கட்டி இசையை பிறப்பிக்கும் வித்தை கற்றவன். அதை புனிதம் என போற்றிக்கொண்டிருக்காமல் முதுகு சொறிய, நாய் விரட்ட என பயன்பாடுகளை கற்றவன். மாயப்பறவைகளை ஒத்த கண்களோடு இருப்பவனை உறங்க வைப்பவனுக்கு இருக்கவேண்டிய யோக்கிதையை கூறும் நிலாகண்ணனின் " பியானோவின் நறும்புகை" தொகுப்பு வலியின் நரம்புகளால் பின்னப்பட்ட இலைக்கூடு.

வழியப்போய் வலி கொள்ளல் ஆகாது. அது விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டது. எக்கணத்திலும் துளிர்த்து வதைக்கக் கூடியது. புல்லாங்குழல், கிட்டார், பியானோ, ட்ரம்ஸ், வயலின் இசையை தொகுப்பில் மொழியோடு தந்து வலியையும், ஆற்றுப்படுத்தலையும் செய்ய முயற்சி செய்துள்ளார். இசை காற்றில் உருவம் கொண்டு நம்மை தழுவி துயர் நீக்கும் தேவதை. அதை நன்கு கண்டுணர்ந்ததால் நிலாகண்ணன் மொழியை குழைத்து அதன் தீவிரத்தை காட்டியுள்ளார்.

போர்க் காட்சிகளை திரையில் கண்டால்கூட சட்டென பதற்றம் கொள்வோம்.. அழிவை எதிர்கொள்ள நடுங்கும் தகவமைப்பு கொண்ட உடலைக் கொண்டவர்களே நாம். விபரம் தெரிந்த நாள் தொடங்கி தனி நிலத்திற்கான உரிமைப்போர் நம் வயதோடு வளர்ந்தபடியே இருந்தது. முள்ளிவாய்க்கால் அழிவின் சித்திரம் என்றும் மனம் விட்டு அகலாது. நிலத்தைத் தோண்ட நீர் வரும்முன் இரத்தத்தின் வீச்சம் வரும் சகோதர பூமியை  நிலாகண்ணன் இப்படியாக காட்சிபடுத்துகிறார்.

கண்ணைக் கட்டினாலும் ஈழம் தெரிகிறது
உம்மிடம் வேறு துணியோ
துப்பாக்கியோ இல்லையா?
*
சமரில் பிள்ளையிழந்த
அண்ணைக்கெல்லாம் முகத்தோடு சேர்த்து
மூன்று முலைகள்
ஆயுத எழுத்தைப் போல...

" எல்லா நகரங்களிலும் பொம்மைகள் உடைக்கப்படும் சப்தங்கள் கேட்டது. நகரங்களின் மீது பறந்து சென்ற பொம்மைகள் வெடித்துச் சிதறியது" கோணங்கியின் 'பொம்மைகள் உடைபடும் நகரம்' கதையில் வரும் வரிகள் நினைவில் தங்கிவிட்டதைப் போன்று, குழந்தைகள் வெடித்துச் சிதறிய தேசத்தின் துயர் நம்மைவிட்டு என்றைக்கும் விலகாது.
'குருதியில் நனைந்த நிலம்' கவிதை மீண்டும் சித்ரவதையுள்  உழன்றிருக்கச் செய்தது.

விழும் விதைகளை விளைவித்து, தன் ஆளுமையின் வரப்புக்குள் வளர்த்தெடுக்கும் நிலத்தை ஒத்தவர்கள் அம்மாக்கள். நிலாகண்ணன் தன் கவிதைகளில் அம்மாவிற்கான இடத்தை எளிதில் கடந்துபோய் விடாதிருக்க கினறுகளாக வெட்டிவைத்துள்ளார். அவரின் சொற்கள் வற்றிவிடாது ஊற்றுகளை சுரந்தபடியே இருக்கிறது. தூர்ந்துபோகாத ஊற்றாக இருப்பதால் உழைப்பின் கோடுகளை உடலில் ரேகைகளாக சுமந்தபடி இருக்கும் அம்மாக்களின் நினைவில் வாழ்ந்துபோக முடிகிறது.

தன் விரல்களால் தாய்
பைத்தியத்தின் அகரமெழுதிப் பழகுகிறாள்.
*
கன்னி மரியாவைப் போல அவளுடைய
கண்களின் ஆழத்தில் எப்போதும்
இரக்கத்தின் சொல் இருக்கும்
அவள் ஒரு வயலினிஸ்ட்...
*
எல்லோரும் உறங்கிய பிறகு
அம்மையின் கண்ணீர்
மாணிக்கத்தைப் போல ஒளிரும்
அந்த ஒளியின் துணை கொண்டே
அப்பா தள்ளாடி வந்து
அம்மாவின் அருகில் உறங்குவார்.
*
பொன்வண்டு 
தீப்பெட்டிக்குள் இருப்பதைப் போலத்தான்
அம்மா வீட்டிற்குள்ளிருக்கிறாள்.
*
விறகு வெட்டச் சென்ற அம்மா
நீலம் பாய்ய்த உடலாகி வந்த பாதையில் 
இறைந்து கிடக்கும் நமக்கான நாவல் பழங்கள்
*
புரண்டு படுத்தால் பூக்கள் சரியுமென்று
அம்மா அசைவின்றி கிடக்கிறாள் கல்லறைக்குள்.
*
ஈ மொய்க்க முடியாத உயரத்தில்
' வெள்ளி' யாக அம்மா முளைத்திருந்தது.

என்றைக்குமாக நம்முள் சுடராக இருந்து கொண்டே இருக்கும் அம்மாவைப் போன்று நிலாகண்ணனின் சில சொற்களும் உடன் இருந்துகொள்ளும்.

பச்சை நுங்குகளென
பருவம் துருத்த ஒட்ட மடை வயலுக்கு
எருக்கொட்டப் போகிறாய்...
மாடுகளை ஓட்டிக்கொண்டு
நானும் பின் தொடர்கிறேன்...
ஊரறியாமல் நம் காதல் வளர்க்கவே
நம் கால்நடைகள் சாணமிடுகின்றன.
*
காதலுக்காக ஏராளமான சொற்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். அதில் அழகுணர்ச்சி, மேட்டிமைத்தனம், உயரிய ஒப்பீடு, சாகசம் என வாசனை திரவியங்கள் பூசப்பட்டு மயங்கிக் கிடக்கச் செய்யும் சொல்லாடல்கள் நிறைந்த மாயக் கோளத்தின் உச்சியில் சாணி உருண்டையை வைத்து இதுவும் காதல்தான் என்கிறார்.

இரவின் நதியிலே
மஞ்சள் நிறக் கோழிக் குஞ்சைப் போல
வெளிச்சம் ஓடுகிறது அதன் மூலத்திற்கு.
*
வெளிச்சம் முலைகளுக்குள் நுழைந்து நுழைந்து வந்தது
இந்த வெளிச்சம் தாய்ப்பாலின் வெளிச்சம்
ஒளியின் நீட்சி நாம்.
*
மேகங்களுக்குள் மறைகிறது புகை வண்டி
நிலா அதன் கடைசி பெட்டி
*
பூனையின் சிறுநீர்தான் இரவினில் ஒளிர்கிறது.
*
அம்மாவின் வயிற்றைப் போல
வெளிச்சமாக இருக்கும் வெய்யிலை
கன்னம் குளிரக் குளிர தழுவிக் கொள்ள வேண்டும்.

எல்லாவற்றின் மீதும் எல்லையற்ற மயக்கமுண்டு. மகரந்தங்கள் நிறைந்த காமத்தின் தேன் சொட்டும் இரவின் மயக்கத்தை கொண்டாடும் நம் மனம், மலர்ச்சியை தந்தபடி இருக்கும் வெளிச்சத்தையும் தழுவத் துடிக்கும். தொகுப்பில் நிலாகண்ணன் இருளில் அலைவுறும் வெளிச்சத்தை  மொழியின் பூனையாக்கி தந்து மடியில் கிடத்தி தடவச் செய்திடுகிறார்.

உனக்கென்னப்பா ராஜாபோல் வாழ்க்கை என ஒருவரின் தொழில் அல்லது வாழ்வு சார்ந்து கற்பிதங்களின் அடிப்படையில் மதிப்பீடுகளை கக்குவது எத்தகைய அற்பமானது என்பதை உணர்த்துவதாக உள்ளன. ட்ரம்ஸ் ஒலி, TN68M6561, பட்டினிச் சித்திரம், ஜீரோ பாத்துக்க சார் கவிதைகள்.

பழுது நிலையத்தில் 
நிறுத்திவிட்டு திரும்புகிறேன்
உனக்கென்ன ஒரு 
புத்த சிலை போல் நிற்கிறாய்.
*
வாங்கியவனின் இழுப்புக்கு
வளர்த்தவனைப் பார்த்துக் கொண்டே செல்லும்
வளர்ப்பு மிருகத்தின் துயருருவம்.
*
டீசல் விலையறியாத ஒரு சாவு கிராக்கி
கிலோ மீட்டர் ஆறு ருபாய்க்கு வருகிறாயா
என்றழைக்கிறான்
*
இந்த நள்ளிரவு முதல்
டீசலுக்காக நீங்கள் குறைத்த
ஆறு காசுகளில் அரை டஜன் ஆப்பிளும்
நான்கு ரொட்டியும்
வாங்க முடியுமெனில்
பதிமூன்று வேகத்தடைகளுக்கப்பால்
பட்டினிச் சித்திரங்களாய் படுத்துறங்கும்
என் குழந்தைகளின்
காத்திருந்த வயிற்றில்
முத்தமிட்டு எழுப்புவேன் நான்.
*
புல்லட் வண்டியின் மீதான காதல், எதிர்பாராது பழுதடையும் வாகனம், நேசித்து உறவாடிக் கிடந்த வண்டியை விற்பதன் துயரம், அற்பர்களுடம் சிக்கிக்கொள்ள நேரிடும் பாடு, சொந்த வீட்டு கனவு, துரோகங்களை மட்டுமே பரிசாக தந்தபடி இருக்கும் அரசின் கீழ்மை, அதனால் எருக்கொள்ளும் வலி என நாம் நமக்கான வாழ்விலிருக்கும் சிக்கலையும் பொருத்திப் பார்த்து ஆறுதல் கொள்ளச் செய்திடுகிறார். நிலாகண்ணன் ஓட்டுனர் என்பதால் அத்தொழில் சார்ந்த துயர்களை மட்டுமே கவிதையாக்கியுள்ளார். அத் தொழிலில் இருக்கும் லயிப்புகளையும், வசீகரத்தையும் கவிதையாக்கி இருக்கலாம்.

இரவு ஷிப்ட்டில் வேலை பார்க்கும்போது தூக்கம் இழக்கும் துயரத்தை மீறி வானம் காட்டும் பேரெழில் சித்திரங்கள் தூங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு கிடைக்காதுதானே. அந்த மகிழ்ச்சியே அயற்ச்சியைப் போக்கும். நிலாகண்ணனுக்கும் அவர் தொழிலில் இருக்கும் நாம் கண்டுணரா சித்திரங்களை மொழிப்படுத்துவார் எனும் நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன கவிதைகள்.

நிறைவு கொள்ளாத வீட்டின்முன் அமர்ந்திருந்தவரின் முகம் கேட்கும் காதுகள் கிடைக்காதாவென எதிர்பார்ப்பில் தவிப்போடு இருப்பதாகப் பட, என்னாச்சு வேலை அப்படியே நிற்கிறதெனக் கேட்க, இல்லீங்க சார் சின்ன சின்ன வேலைகள் உள்ளே நடந்துகிட்டுத்தான் இருக்கு. ஓனருக்கு பணத் தட்டுப்பாடு போல, சீக்கிரம் முடிச்சிட்டு ஊர்பக்கம் போகனும் சார், ரொம்ப நாளாகிடுச்சி, வயல்மீது பாதம் பட்டு எனக் கூறியவரின் கண்களில் துளிர்ப்புகள் ஒளிவீசின. விவசாயிகளின் அகம் நிலம்தான். புறம் நிகழ்த்தும் கார்ப்ரேட் போக்குகளை எதிர்கொள்ள இயலாது இப்படி ஏதேனும் வேலைக்கு வந்து தங்கள் நிலத்தை கருவாக்கி வயிற்றில் சுமந்தே திரிகிறார்கள்.  யாரேனும் அவர்களோடு உரையாட கருவை கண்ணில் பார்த்த திருப்தி அடையக்கூடும் என்பதை சுட்டுவதாக உள்ளது இக்கவிதை.

மொட்டப்பனையில் 
பிடித்த கிளியோடு
கொஞ்சம் விதை நெல்லோடும்
ஊரைவிட்டு ஓடி வந்த விவசாயி
மெரினா கடற்கரையில்தான்
ஜோசியம் பார்க்கிறார்
அவரை நீங்கள்
சந்திக்க நேர்ந்தால்
பரிவோடு நலம் விசாரியுங்கள்
ஏனெனில் அவரின்
நெல்மணிகளைத் தின்ற
கிளிகள் நாம்.

அரசியலற்ற வாழ்வென்பது சாத்தியமற்ற ஒன்றானது. திட்டமிடுதல் ஏதும் தேவையில்லை. இயல்பாகவே நம்மிலிருந்து வெளிப்படும் கோபமோ, துயரோ அரசியலால்தான் நிகழ்த்தப்பட்டிருக்கும். அப்போதைக்கு நம் மறுப்பை சொல்லமுடியாவிட்டாலும், திடமாய் மொழியில் வெளிப்பட்டுவிடும். அற்புதம்மாவிற்காகவும், சிறுமி ஆஸிஃபாவிற்காகவும் நம்முள் இருந்த துயரத்தை கவிதையில் காட்சிபடுத்தப்பட்டிருப்பதை காணலாம்.
நீதிமன்ற புங்கைநிழல் உன் நரையில் கவிழ்ந்து
மடியில் நிறைகின்றது
இம்முறையும் கண்ணாடி உயர்த்தி
அழுது தீர்த்தவளாய்
கண்களைத் துடைத்த வண்ணம் வெளியேறுகிறாய்
உனது சேலையில் இருக்கின்ற
கண்ணீரின் ஈரமோ
புங்கை நிழல் கொஞ்சம் மரம் விட்டு இறங்கி
உன் மடியை பற்றிக்கொண்டு அற்புதம்மா
உன்னோடு போவதாய் தெரிகிறது
நிழலைப்போல இல்லைதானே ஏழைகளுக்கான நீதி.
*
எனது ஆஸிஃபாவிற்கு எப்படியுரைப்பன்
எட்டாம்நாள் கடவுளும் கற்பழித்தானென.
இன்று உனது தந்தையின் கண்ணீராய் இருப்பது
நாளை மற்றொரு தந்தையின் கண்ணீராகிறது. 

மீன், மண்புழு, புல்லாங்குழல்,சுடர்,பறவையென உருமாற்றம் கொள்வேன். எனக்குத் தேவை எல்லாம் அன்பின் பொருட்டாக இருக்கவேண்டும் எனக்கூறும் நிலாகண்ணன் தொகுப்பிலும் அன்பின் மிகுதியால் கவிதைகளுக்கு கூடுதல் பாரத்தை சுமக்கச் செய்திடுகிறார். எடிட் செய்திருந்தால் தொகுப்பு கச்சிதத்தன்மையோடு இருந்திருக்கும். ' பியானோவின் நறும்புகை' அகத்தில் வலியை உருவாக்கினாலும் புறத்தில்  மயிலிறகாகி நம்மை தேற்றவும் செய்கின்றன.
*

பியானோவின் நறும்புகை
படைப்பு பதிப்பகம்