S.Anantha Kumar முடிவிலியின் நினைவுச் சங்கிலி தொகுப்பிற்கான என் வாழ்த்துரை....
பட்டாம்பூச்சி கூட்டுப்புழுவான கதை
*
ஐநூறு, ஆயிரம் என எதேனும் முக்கிய நாளை சாக்கிட்டு மரங்களை நடுவார்கள். அதில் எத்தனை பிழைத்து வந்தது என்பது குறித்த அக்கறையோ, கணக்கீடோ ஏதும் இருக்காது. அன்றைய கொண்டாட்டத்திற்கான மையம் என்றளவிலே நின்றுபோய் விடுகிறது. மரங்களை வளர்த்தெடுக்க பற்றும், பரிவும், காத்திருப்பும் தேவை. இங்கு எதுவும் எளிதல்ல. கவிதைச் செயல்பாடும் அப்படியான ஒன்றே.
கவிதைகளில் வகைமைகள் பல உண்டு. நம் தேர்வுகொள்ளும் தன்மையும், வாசிப்பின் தீவிரமுமே நம்மிலிருந்து வெளிப்படும் படைப்புகளில் காணக்கூடும். இதைத்தான் எழுதவேண்டும், இப்படித்தான் எழுத வேண்டும் என்கிற கட்டளைகள் கிடையாது. நாம் எதையும் எழுதலாம். நாம் எங்கு நிற்கிறோம் என்பதை வாசிப்பில்தான் கண்டடைந்து, நம்மின் நகர்வை திட்டமிடலாம்.
ஆனந்தகுமார் ' முடிவிலியின் நினைவு சங்கிலி' தொகுப்பில் வீட்டிற்குள்ளும், வெளியிலும் தன்னை பாதித்த விசயங்களை கவிதையாக்கியுள்ளார். அம்மா, அப்பா, அக்கா, அண்ணி என உறவுகள் குறித்த கவிதைகள் அவருக்கான அனுபவம் என சுருங்கிப்போய்விடாது, வாசிப்பவர்களும் தங்களின் உறவோடு பொருத்திப் பார்த்துக்கொள்ள ஏதுவாக கவிதைகள் இருப்பது சிறப்பு. பெரும்பாலானவர்களின் கவிதைகளில் அப்பாவைவிட அம்மாக்களுக்கான இடம் நிறைய்யவே இருப்பது இயல்பு. ஆனந்தகுமாரும் அம்மாவின் இருப்பை கவிதைகளில் பத்திரப்படுத்தியுள்ளார்.
கூட்டுப்புழு எப்படி பட்டாம்பூச்சியாகிறதென்று தங்கைக்கு அம்மா பாடம் எடுக்கையில், பட்டாம்பூச்சி கூட்டுப்புழுவான கதை எனக்குத் தெரியுமெனக் கூறும் " கூட்டுப் புழுக்கள்," கவிதை அம்மாவின் மீது மட்டுமல்ல, பெண்களின் மீதான நேசிப்பையும், அக்கறையையும் வெளிப்படுத்தியுள்ளார்.
கொரானா காலத் துயர், சாலை விரிவாக்கத்தில் கிராமங்கள் அடையாளங்களை இழத்தல், தொலைத்த கொலுசில் காதலை இசைத்தல், கையில் பம்பரத்தோடு விடுப்பை எதிர்நோக்கும் மதுக்கூடத்தில் வேலை பார்க்கும் சிறுவனின் எதிர்பார்ப்பு என துயர்களை காட்சிபடுத்துகின்றன கவிதைகள்.
' குறிஞ்சி' கவிதையில் நம்மால் அழிவுக்குட்பட்ட இயற்கையை காட்சிபடுத்தல், செயலிகளின் வலையுள் சிக்குண்ட வாழ்வு, நிலம் நம் வாழ்வில் உருவாக்கும் பாதிப்பு, "எப்போ எடுப்பார்கள்" எனும் வார்த்தைகளுக்குள் வாழ்ந்து மடியும் மனித இருப்பு, கோயில் யானையை, யானை என ஒப்புக்கொள்ள மறுக்கும் சிறுமி, தாத்தா இழந்த மாம்பழக் கதை என கவிதைகள் லகுவான பயணிப்பை தருகின்றன.
'குழந்தைகள்' தலைப்பிட்ட கவிதைகளில் வெளிப்பட்டிருக்கும் சித்திரம் ஆனந்தகுமாரின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. மகிழ்ச்சி. தொடர்ந்து எழுதுங்கள்.
No comments:
Post a Comment