வலியின் நரம்புகளால் பின்னப்பட்ட இலைக்கூடு
- ந.பெரியசாமி
திருஷ்டி பொம்மையுள் உருவமாக காட்சி தரும் வைக்கோல், நெல்மணிகளை தலையில் அடுக்கி நின்றபோது, நிலம் காயாது நீர் பாய்ச்சி களித்திருக்கச் செய்த காலத்தின் நினைவையும் தாங்கி நிற்கும். காலம் எதிர்வுகளை உடனுக்குடன் காட்சிபடுத்தி விடுகிறது. பிறப்பு×இறப்பு, வாழ்வு× அ வாழ்வு அனைத்துமே எதிர் எதிர் நிலையில் இல்லாமல் ஒன்றின் உள்ளீடாக மற்றொன்று என அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இவ்வடுக்குகளின் தன்மையை வசீகரத்தோடு பிரதிபலிப்பது கவிதைகளாக உள்ளன. கவிதைகள் என்றென்றும் புதிர்வும் புதிர்வின்மையுமான சுழல். இச்சுழலுள் லாவகமாக கடந்து வருதல் நம் வாசிப்பின் விநோதம். நிலாகண்ணனின் " பியானோவின் நறும்புகை" தொகுப்பிலும் சில விநோதங்களை கண்டடையலாம்.
மூப்பின் காரணமாக இயங்க முடியாவிட்டாலும், நகர்ந்து நகர்ந்து தன்னைச் சுற்றி பெருக்கி சுத்தம் செய்து நான் ஓய்ந்துவிடவில்லை எனக் கூறிக்கொண்டே இருக்கும் திண்ணை பாட்டிகள் நினைவில் இருப்பதைப் போன்று " வாழ்வென்பது கண்ணீரில் துளிர்க்கும் தாவரம்" , "பாகற்கொடியில் துளிர்த்திருக்கும் இளங்கசப்பு" என நாணயங்களாக்கி உண்டியலில் சேர்த்து வைக்கும் சொற்களை நிலாகண்ணன் தொகுப்பில் நிறைய்ய கொடுத்துள்ளார்.
பருந்தாகிப் பார்க்க ஆஸ்பெஸ்ட்டால் கூரை "தத்தளித்து மூழ்குபவைகளால் எழுப்பப்படும் தவிப்பின் அலை" என்பதை வாசிக்கையில் பிரமிளின் ' வண்ணத்துப் பூச்சியும் கடலும்' கவிதையில் வரும்
"நாளிரவு பாராமல்
ஓயாது மலர்கின்ற
எல்லையற்ற பூ " நினைவிற்கு வருவது மகத்தானது நிலாகண்ணன்.
தேவ மலர்சூடிய புல்லாங்குழல் பித்தன் காற்றை கட்டி இசையை பிறப்பிக்கும் வித்தை கற்றவன். அதை புனிதம் என போற்றிக்கொண்டிருக்காமல் முதுகு சொறிய, நாய் விரட்ட என பயன்பாடுகளை கற்றவன். மாயப்பறவைகளை ஒத்த கண்களோடு இருப்பவனை உறங்க வைப்பவனுக்கு இருக்கவேண்டிய யோக்கிதையை கூறும் நிலாகண்ணனின் " பியானோவின் நறும்புகை" தொகுப்பு வலியின் நரம்புகளால் பின்னப்பட்ட இலைக்கூடு.
வழியப்போய் வலி கொள்ளல் ஆகாது. அது விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டது. எக்கணத்திலும் துளிர்த்து வதைக்கக் கூடியது. புல்லாங்குழல், கிட்டார், பியானோ, ட்ரம்ஸ், வயலின் இசையை தொகுப்பில் மொழியோடு தந்து வலியையும், ஆற்றுப்படுத்தலையும் செய்ய முயற்சி செய்துள்ளார். இசை காற்றில் உருவம் கொண்டு நம்மை தழுவி துயர் நீக்கும் தேவதை. அதை நன்கு கண்டுணர்ந்ததால் நிலாகண்ணன் மொழியை குழைத்து அதன் தீவிரத்தை காட்டியுள்ளார்.
போர்க் காட்சிகளை திரையில் கண்டால்கூட சட்டென பதற்றம் கொள்வோம்.. அழிவை எதிர்கொள்ள நடுங்கும் தகவமைப்பு கொண்ட உடலைக் கொண்டவர்களே நாம். விபரம் தெரிந்த நாள் தொடங்கி தனி நிலத்திற்கான உரிமைப்போர் நம் வயதோடு வளர்ந்தபடியே இருந்தது. முள்ளிவாய்க்கால் அழிவின் சித்திரம் என்றும் மனம் விட்டு அகலாது. நிலத்தைத் தோண்ட நீர் வரும்முன் இரத்தத்தின் வீச்சம் வரும் சகோதர பூமியை நிலாகண்ணன் இப்படியாக காட்சிபடுத்துகிறார்.
கண்ணைக் கட்டினாலும் ஈழம் தெரிகிறது
உம்மிடம் வேறு துணியோ
துப்பாக்கியோ இல்லையா?
*
சமரில் பிள்ளையிழந்த
அண்ணைக்கெல்லாம் முகத்தோடு சேர்த்து
மூன்று முலைகள்
ஆயுத எழுத்தைப் போல...
" எல்லா நகரங்களிலும் பொம்மைகள் உடைக்கப்படும் சப்தங்கள் கேட்டது. நகரங்களின் மீது பறந்து சென்ற பொம்மைகள் வெடித்துச் சிதறியது" கோணங்கியின் 'பொம்மைகள் உடைபடும் நகரம்' கதையில் வரும் வரிகள் நினைவில் தங்கிவிட்டதைப் போன்று, குழந்தைகள் வெடித்துச் சிதறிய தேசத்தின் துயர் நம்மைவிட்டு என்றைக்கும் விலகாது.
'குருதியில் நனைந்த நிலம்' கவிதை மீண்டும் சித்ரவதையுள் உழன்றிருக்கச் செய்தது.
விழும் விதைகளை விளைவித்து, தன் ஆளுமையின் வரப்புக்குள் வளர்த்தெடுக்கும் நிலத்தை ஒத்தவர்கள் அம்மாக்கள். நிலாகண்ணன் தன் கவிதைகளில் அம்மாவிற்கான இடத்தை எளிதில் கடந்துபோய் விடாதிருக்க கினறுகளாக வெட்டிவைத்துள்ளார். அவரின் சொற்கள் வற்றிவிடாது ஊற்றுகளை சுரந்தபடியே இருக்கிறது. தூர்ந்துபோகாத ஊற்றாக இருப்பதால் உழைப்பின் கோடுகளை உடலில் ரேகைகளாக சுமந்தபடி இருக்கும் அம்மாக்களின் நினைவில் வாழ்ந்துபோக முடிகிறது.
தன் விரல்களால் தாய்
பைத்தியத்தின் அகரமெழுதிப் பழகுகிறாள்.
*
கன்னி மரியாவைப் போல அவளுடைய
கண்களின் ஆழத்தில் எப்போதும்
இரக்கத்தின் சொல் இருக்கும்
அவள் ஒரு வயலினிஸ்ட்...
*
எல்லோரும் உறங்கிய பிறகு
அம்மையின் கண்ணீர்
மாணிக்கத்தைப் போல ஒளிரும்
அந்த ஒளியின் துணை கொண்டே
அப்பா தள்ளாடி வந்து
அம்மாவின் அருகில் உறங்குவார்.
*
பொன்வண்டு
தீப்பெட்டிக்குள் இருப்பதைப் போலத்தான்
அம்மா வீட்டிற்குள்ளிருக்கிறாள்.
*
விறகு வெட்டச் சென்ற அம்மா
நீலம் பாய்ய்த உடலாகி வந்த பாதையில்
இறைந்து கிடக்கும் நமக்கான நாவல் பழங்கள்
*
புரண்டு படுத்தால் பூக்கள் சரியுமென்று
அம்மா அசைவின்றி கிடக்கிறாள் கல்லறைக்குள்.
*
ஈ மொய்க்க முடியாத உயரத்தில்
' வெள்ளி' யாக அம்மா முளைத்திருந்தது.
என்றைக்குமாக நம்முள் சுடராக இருந்து கொண்டே இருக்கும் அம்மாவைப் போன்று நிலாகண்ணனின் சில சொற்களும் உடன் இருந்துகொள்ளும்.
பச்சை நுங்குகளென
பருவம் துருத்த ஒட்ட மடை வயலுக்கு
எருக்கொட்டப் போகிறாய்...
மாடுகளை ஓட்டிக்கொண்டு
நானும் பின் தொடர்கிறேன்...
ஊரறியாமல் நம் காதல் வளர்க்கவே
நம் கால்நடைகள் சாணமிடுகின்றன.
*
காதலுக்காக ஏராளமான சொற்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். அதில் அழகுணர்ச்சி, மேட்டிமைத்தனம், உயரிய ஒப்பீடு, சாகசம் என வாசனை திரவியங்கள் பூசப்பட்டு மயங்கிக் கிடக்கச் செய்யும் சொல்லாடல்கள் நிறைந்த மாயக் கோளத்தின் உச்சியில் சாணி உருண்டையை வைத்து இதுவும் காதல்தான் என்கிறார்.
இரவின் நதியிலே
மஞ்சள் நிறக் கோழிக் குஞ்சைப் போல
வெளிச்சம் ஓடுகிறது அதன் மூலத்திற்கு.
*
வெளிச்சம் முலைகளுக்குள் நுழைந்து நுழைந்து வந்தது
இந்த வெளிச்சம் தாய்ப்பாலின் வெளிச்சம்
ஒளியின் நீட்சி நாம்.
*
மேகங்களுக்குள் மறைகிறது புகை வண்டி
நிலா அதன் கடைசி பெட்டி
*
பூனையின் சிறுநீர்தான் இரவினில் ஒளிர்கிறது.
*
அம்மாவின் வயிற்றைப் போல
வெளிச்சமாக இருக்கும் வெய்யிலை
கன்னம் குளிரக் குளிர தழுவிக் கொள்ள வேண்டும்.
எல்லாவற்றின் மீதும் எல்லையற்ற மயக்கமுண்டு. மகரந்தங்கள் நிறைந்த காமத்தின் தேன் சொட்டும் இரவின் மயக்கத்தை கொண்டாடும் நம் மனம், மலர்ச்சியை தந்தபடி இருக்கும் வெளிச்சத்தையும் தழுவத் துடிக்கும். தொகுப்பில் நிலாகண்ணன் இருளில் அலைவுறும் வெளிச்சத்தை மொழியின் பூனையாக்கி தந்து மடியில் கிடத்தி தடவச் செய்திடுகிறார்.
உனக்கென்னப்பா ராஜாபோல் வாழ்க்கை என ஒருவரின் தொழில் அல்லது வாழ்வு சார்ந்து கற்பிதங்களின் அடிப்படையில் மதிப்பீடுகளை கக்குவது எத்தகைய அற்பமானது என்பதை உணர்த்துவதாக உள்ளன. ட்ரம்ஸ் ஒலி, TN68M6561, பட்டினிச் சித்திரம், ஜீரோ பாத்துக்க சார் கவிதைகள்.
பழுது நிலையத்தில்
நிறுத்திவிட்டு திரும்புகிறேன்
உனக்கென்ன ஒரு
புத்த சிலை போல் நிற்கிறாய்.
*
வாங்கியவனின் இழுப்புக்கு
வளர்த்தவனைப் பார்த்துக் கொண்டே செல்லும்
வளர்ப்பு மிருகத்தின் துயருருவம்.
*
டீசல் விலையறியாத ஒரு சாவு கிராக்கி
கிலோ மீட்டர் ஆறு ருபாய்க்கு வருகிறாயா
என்றழைக்கிறான்
*
இந்த நள்ளிரவு முதல்
டீசலுக்காக நீங்கள் குறைத்த
ஆறு காசுகளில் அரை டஜன் ஆப்பிளும்
நான்கு ரொட்டியும்
வாங்க முடியுமெனில்
பதிமூன்று வேகத்தடைகளுக்கப்பால்
பட்டினிச் சித்திரங்களாய் படுத்துறங்கும்
என் குழந்தைகளின்
காத்திருந்த வயிற்றில்
முத்தமிட்டு எழுப்புவேன் நான்.
*
புல்லட் வண்டியின் மீதான காதல், எதிர்பாராது பழுதடையும் வாகனம், நேசித்து உறவாடிக் கிடந்த வண்டியை விற்பதன் துயரம், அற்பர்களுடம் சிக்கிக்கொள்ள நேரிடும் பாடு, சொந்த வீட்டு கனவு, துரோகங்களை மட்டுமே பரிசாக தந்தபடி இருக்கும் அரசின் கீழ்மை, அதனால் எருக்கொள்ளும் வலி என நாம் நமக்கான வாழ்விலிருக்கும் சிக்கலையும் பொருத்திப் பார்த்து ஆறுதல் கொள்ளச் செய்திடுகிறார். நிலாகண்ணன் ஓட்டுனர் என்பதால் அத்தொழில் சார்ந்த துயர்களை மட்டுமே கவிதையாக்கியுள்ளார். அத் தொழிலில் இருக்கும் லயிப்புகளையும், வசீகரத்தையும் கவிதையாக்கி இருக்கலாம்.
இரவு ஷிப்ட்டில் வேலை பார்க்கும்போது தூக்கம் இழக்கும் துயரத்தை மீறி வானம் காட்டும் பேரெழில் சித்திரங்கள் தூங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு கிடைக்காதுதானே. அந்த மகிழ்ச்சியே அயற்ச்சியைப் போக்கும். நிலாகண்ணனுக்கும் அவர் தொழிலில் இருக்கும் நாம் கண்டுணரா சித்திரங்களை மொழிப்படுத்துவார் எனும் நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன கவிதைகள்.
நிறைவு கொள்ளாத வீட்டின்முன் அமர்ந்திருந்தவரின் முகம் கேட்கும் காதுகள் கிடைக்காதாவென எதிர்பார்ப்பில் தவிப்போடு இருப்பதாகப் பட, என்னாச்சு வேலை அப்படியே நிற்கிறதெனக் கேட்க, இல்லீங்க சார் சின்ன சின்ன வேலைகள் உள்ளே நடந்துகிட்டுத்தான் இருக்கு. ஓனருக்கு பணத் தட்டுப்பாடு போல, சீக்கிரம் முடிச்சிட்டு ஊர்பக்கம் போகனும் சார், ரொம்ப நாளாகிடுச்சி, வயல்மீது பாதம் பட்டு எனக் கூறியவரின் கண்களில் துளிர்ப்புகள் ஒளிவீசின. விவசாயிகளின் அகம் நிலம்தான். புறம் நிகழ்த்தும் கார்ப்ரேட் போக்குகளை எதிர்கொள்ள இயலாது இப்படி ஏதேனும் வேலைக்கு வந்து தங்கள் நிலத்தை கருவாக்கி வயிற்றில் சுமந்தே திரிகிறார்கள். யாரேனும் அவர்களோடு உரையாட கருவை கண்ணில் பார்த்த திருப்தி அடையக்கூடும் என்பதை சுட்டுவதாக உள்ளது இக்கவிதை.
மொட்டப்பனையில்
பிடித்த கிளியோடு
கொஞ்சம் விதை நெல்லோடும்
ஊரைவிட்டு ஓடி வந்த விவசாயி
மெரினா கடற்கரையில்தான்
ஜோசியம் பார்க்கிறார்
அவரை நீங்கள்
சந்திக்க நேர்ந்தால்
பரிவோடு நலம் விசாரியுங்கள்
ஏனெனில் அவரின்
நெல்மணிகளைத் தின்ற
கிளிகள் நாம்.
அரசியலற்ற வாழ்வென்பது சாத்தியமற்ற ஒன்றானது. திட்டமிடுதல் ஏதும் தேவையில்லை. இயல்பாகவே நம்மிலிருந்து வெளிப்படும் கோபமோ, துயரோ அரசியலால்தான் நிகழ்த்தப்பட்டிருக்கும். அப்போதைக்கு நம் மறுப்பை சொல்லமுடியாவிட்டாலும், திடமாய் மொழியில் வெளிப்பட்டுவிடும். அற்புதம்மாவிற்காகவும், சிறுமி ஆஸிஃபாவிற்காகவும் நம்முள் இருந்த துயரத்தை கவிதையில் காட்சிபடுத்தப்பட்டிருப்பதை காணலாம்.
நீதிமன்ற புங்கைநிழல் உன் நரையில் கவிழ்ந்து
மடியில் நிறைகின்றது
இம்முறையும் கண்ணாடி உயர்த்தி
அழுது தீர்த்தவளாய்
கண்களைத் துடைத்த வண்ணம் வெளியேறுகிறாய்
உனது சேலையில் இருக்கின்ற
கண்ணீரின் ஈரமோ
புங்கை நிழல் கொஞ்சம் மரம் விட்டு இறங்கி
உன் மடியை பற்றிக்கொண்டு அற்புதம்மா
உன்னோடு போவதாய் தெரிகிறது
நிழலைப்போல இல்லைதானே ஏழைகளுக்கான நீதி.
*
எனது ஆஸிஃபாவிற்கு எப்படியுரைப்பன்
எட்டாம்நாள் கடவுளும் கற்பழித்தானென.
இன்று உனது தந்தையின் கண்ணீராய் இருப்பது
நாளை மற்றொரு தந்தையின் கண்ணீராகிறது.
மீன், மண்புழு, புல்லாங்குழல்,சுடர்,பறவையென உருமாற்றம் கொள்வேன். எனக்குத் தேவை எல்லாம் அன்பின் பொருட்டாக இருக்கவேண்டும் எனக்கூறும் நிலாகண்ணன் தொகுப்பிலும் அன்பின் மிகுதியால் கவிதைகளுக்கு கூடுதல் பாரத்தை சுமக்கச் செய்திடுகிறார். எடிட் செய்திருந்தால் தொகுப்பு கச்சிதத்தன்மையோடு இருந்திருக்கும். ' பியானோவின் நறும்புகை' அகத்தில் வலியை உருவாக்கினாலும் புறத்தில் மயிலிறகாகி நம்மை தேற்றவும் செய்கின்றன.
*
பியானோவின் நறும்புகை
படைப்பு பதிப்பகம்
No comments:
Post a Comment