அகப்பிளவு- ந. பெரியசாமி.
ஓர் அறிமுகம்.
சமீபத்தில் மிகவும் பரவலாக பள்ளி மாணவர்களிடையே சென்று சேர்ந்து கொண்டாடப்பட்ட கவிதை தொகுப்பு “கடைசி பெஞ்ச்”. இளையோருக்கான இத்தொகுப்பிலிருந்து ந. பெரியசாமி நகர்ந்து தற்போது வந்து சேர்ந்திருக்கும் தளம் முற்றிலும் வேறானது. அந்தரங்கமானது.
காதல் - காமம் இவற்றிற்கிடையேயான மெல்லிய கோட்டை பற்றியபடி தலைவன் தலைவி இடையேயான ஊடலைச் சொல்லும் கவிதைகள் சற்றே ஓர் வார்த்தை பிசகினாலும் வேறு அர்த்தத்தில் புரிந்து கொள்ளப்பட்டு சரிந்திடும் அபாயமுள்ளது. ந. பெரியசாமி லாவகமாக அதனை தாண்டி தான் சொல்ல வந்ததை அழகாக வாசகனுக்கு கடத்தியுள்ளார்.
சங்க பாடல்களில் தலைவன் தலைவிக்கிடையேயான ஊடலை சொல்லும் பல பாடல்களை நாம் அறிவோம். பெரும்பாலும் அவர்களுக்குடையே தோழி மிக முக்கிய பங்கு வகிப்பார் . அவரின் கூற்றாகவே பாடல்கள் அமையும். நவீன யுகத்தில் தோழியின் இடம் தேவையற்றதாகிவிட்டது. நேரடி கூற்றாகவே கவிதைகள் படைக்கப்படுகின்றன.
இத்தொகுப்பில் “அந்தரங்க நிலா”, “ தாப ப்பித்து” என இருபகுதிகளாக உள்ள பெரும்பாலான கவிதைகள் தலைவன் கூற்று, தலைவிகூற்றாகவும் சில இருபாலர்கூற்றாகவும் உள்ளது.
தலைவன் தலைவி உறவு என்றாலே பசலைக்கு தவிர்க்க இயலாத இடமுண்டு இல்லையா?? இங்கு அது எப்படி படர்ந்துள்ளது என பார்க்கலாம்.
“பின்னலிட்ட சடையெனப்
பிணைந்து கிடக்கையில்
துவாரம் புகும் நூலென
காற்றின் குளிர்மையை
உயிர் உணரத் துவங்க
பசலை பூக்கும் எனதுடல்
வெப்பத்தினால் வதங்கும்
அந்திப் பூவிதழ்களாக
அடைந்திடும் மாற்றம்
அதற்குள் கொடியோனென
சுடுசொல் விழுங்கும் முன்
ஊரார்க்கு உணர்த்திடு நெஞ்சே
மரம் விலக்கும் இலையல்ல
மறைந்து தாங்கும் வேர்களவன்”
மரம்…..வேர்களவன் என்ன பிரமாதமான வரிகள்.
மற்றொன்று
“அல்லவை விழுமென
அறிந்து கொண்ட நொடியில்
சட்டென்று இமை மூடி
கண்களைக் காக்கும் அனிச்சை
பிரிவு கொள்ளும் நினைப்பே
பசலை பூக்கும் எனதுடல்
அறிந்தும் அவன் பிரிவை
ஒப்புக் கொண்டதேனோ
அவனுள் ஏன் புகுந்தனவோ
கள்ளமிக்க சொற்கள்?
..
கூடி இருக்கையில் கூடலின் இன்பம் அ்லாதியானது. “புங்கை அளித்த நிழல் சுவை
நித்திரையைத் தருவித்தது
மீன்கள் கால்களை மொய்க்க
விழித்தவன் விக்கித்தான்
தவளையால்
விழுங்கப்பட்டிருப்பதை அறிந்து
நீர் சூழ்ந்த பாறையில் அமர்ந்திருந்தவள்
அறிவேன் வருவாயனெ
நீர் தெளித்து விளையாடினாள்
ஆடை கலப்பற்ற உடலாகி
மீன்களோடு மீன்களானோம்
வெட்கத்தில் சூரியன்
தன்னை ஒளித்துக் கொண்டது.
…
வெல்லக்கட்டிகளைச் சுமந்தலையும் எறும்புகள்” என்ற நீள் கவிதை தொட்டதை மீள மீளவும் தொடுவாய் என்பதை அழகாக உணர்த்திடும் கவிதை. இந்த வகையில் காம பிரிவாற்றாமை, பொல்லா வறுமுலை இரண்டும் அடங்கும். நீண்ட இடைவெளிக்குப்பின் தளர்ந்து வரும் தலைவனுக்கு எதை அளித்தால் அவன் வீறு கொள்வான் என அறிந்திருக்கும் தலைவி தன்னை ஒப்படைப்பதை சொல்லும் “பிரிவு “ கவிதை தொகுப்பின் முக்கிய கவிதைகளில் ஒன்று. “ஆடி” இன்னுமொரு சிறப்பான கவிதை
புது வரவு
அறையுள் ஆளுயரக் கண்ணாடி
அடிக்கரும்பைத் தின்றவளானாள்
…..என தொடங்கி சொல்லிச் செல்லும் கவிதை இப்படி முடிகிறது
ஊர்க்கோடி கோவிலின் முன்
நின்று கிடக்கும் தேரில்
பொதிந்து கிடக்கும் சிற்பங்கள்
ஒன்றன்பின் ஒன்றாக “”””
தேரை ரசித்தவர்கள் இக் கவிதையை அதிகம் உணர்வார்கள்.
பல கவிதைகளின் தலைப்புகள் சங்க பாடல் வரிகளிலிருந்து எடுத்தாண்டுள்ளதும் அக்கவிதைகள் அதற்கு நியாயம் செய்துள்ளதும் முக்கியம்
உவந்துறைவர் உள்ளத்துள்
வாலெயிறு ஊறிய நீர்
மடலேறுதல்
இருநோக்கு இவளுன்கண்
…..
திரெளபதி எனும் கவிதை முற்றிலும் வேறு கோணத்தில் அமைந்த கவிதை.
இக்கவிதைகளை முழுவதும் ரசிக்க கூட்டத்தில் வாய்விட்டு வாசிப்பதைவிட தனியாக ஏகாந்தமான நிலையில் வாசிப்பது அக்கணத்தை மேலும் அழகாக்கும். அத்தகைய personal poetry இத்தொகுப்பு.
கவிஞர் ந. பெரியசாமிக்கு வாழ்த்துகள். அழகான கோட்டோவியங்களுடன் இந்த தொகுப்புனை பதிப்பித்த சொற்கள் கே.சி. செந்தில்குமாருக்கு பாரட்டுகளும் வாழ்த்துகளும்.
மகிழ்ச்சியும் நன்றியும் : Munavar Khan
No comments:
Post a Comment