Thursday, October 19, 2023

நன்றி: நுட்பம்

 சுய பகடியில் பூத்த மலர்கள்

-ந.பெரியசாமி



"முழுமையற்ற, பரந்துபட்ட வாசிப்பு அற்றவர்களின் மதிப்பீடுகள் தவறான சித்தரிப்புகளையே உருவாக்கும். இத் தவற்றின் சுழலுள் சிக்கிக் கொள்ளாது தொடர்ந்து செயல்படுதலே விடுதலை உணர்வைத் தரும்."


படுக்கையின் அருகில், மேசையின் மீதோ அமர்ந்திருக்கும் சோர்வு எக் கணத்தில் வேண்டுமானாலும் நம்மை கவ்விக் கொள்ள தயாராக இருக்கும். அது சிருஷ்டிக்கும் காரணகாரியங்களுக்கு நம்மை ஒப்புக் கொடுக்காமல், விலகி எதிர்கொள்ளும் தனித்துவமே வாழ்தலின் முழுமை. இம் முழுமையை எப்படி கைகொள்ளுதல் என்பதை அல்லது எதையெல்லாம் விலக்கி வைக்க வேண்டும் என்பதை தபசியின் கவிதைகள் உணர்த்துகின்றன.


நம்முடன் வாழ்ந்துகொண்டிருக்கும் சக மனுசர்/மனுசிகளின் பல்வேறுபட்ட மனபோக்குகளை சித்தரிக்கின்றன கவிதைகள். இதுவெல்லாம் நமக்கு தேவையில்லையென சட்டென முடிவுகொண்டு அடுத்த கட்ட நகர்விற்கு செல்ல வைக்கவும் இவரின் கவிதைகள் துணைபுரிகின்றன. தொட்டதெற்கெல்லாம் புகார்கள், சலிப்புகள், எரிச்சல்கள், அவநம்பிக்கைகள், இயலாமைகள் என வாழ்ந்துகொண்டிருப்போரின் மனபோக்குகளை கவிதைகளை காட்சிகளாக கொண்ட ஆல்பமாக "எல்லோரும் ஜடேஜாவாக மாறுங்கள்", ஜான் கீட்ஸ் ஆதவனைச் சந்தித்ததில்லை" தொகுப்புகள் உள்ளன.


இவ்விரு தொகுப்புகளிலும் சமகால புழங்கு மொழி பிரதானமாக வெளிப்பட்டிருப்பதால் கவிதைகளை நெருக்கமாக உணரமுடிகிறது. மிக எளிய சொற்களால் மிக எளிய விசயங்களை பெரும் வீச்சோடு சொல்ல வைத்திருக்கிறது கவிதை சுதந்திரம். எத்தகைய புது முயற்சிகளை கவிதைகளில் மேற்கொண்டாலும் உணர்வை கடத்துதல் சிதைவுறாது இருக்க வேண்டும். அவ்விதத்தில் தபசியின் கவிதை முயற்சிகள் வெற்றி கொண்டுள்ளதை தொகுப்புகளில் கான முடிகிறது.


பற்றுக...


எல்லா கற்பனைகளும் உங்களுக்குச் சுகமளிக்கின்றன

பின்னிப் பின்னி பேசுகிறீர்கள்.

ரசம் சொட்டச் சொட்டப் பாடுகிறீர்கள்.

பெண்களை ஆஹா ஓஹோ என்கிறீர்கள்.

காதலை சிலாகிக்கிறீர்கள்.

காமத்துக்குச் சாயம் பூசுகிறீர்கள்.

என்னிடம் ஒரு கற்பனையும் இல்லை.

பழுக்கக் காய்ச்சிய இரும்புத் துண்டாக 

யதார்த்தம் என் கையில்.

பல்லைக் கடித்துக் கொண்டு

இறுகப் பற்றிக் கொள்கிறேன்.


இவ்விரு தொகுப்புகளுக்குமான மையம் இக்கவிதை எனச் சொல்லலாம்.  கார்ப்ரேட்டுகள் தங்களுன் உற்பத்தி

 பொருள்களை வியபாரமாக்க 'தினங்கள்' கொண்டாடப்படுவது, அரசின் மூடத்தனமான திட்டங்களால் எதிர்கொள்ள இயலாத மக்களின் அவதி என சாமானியர்களின் அன்றாடச் சிக்கல்களை தன் கவிதைக்கான பாடுபொருளாக மாற்றம் கொள்ளச் செய்வதில் கவிஞரின் திறன் வெளிப்படுகிறது.


பெரும்பாலானவர்களின் அன்றாடங்களின் வாழ்வில் தவிர்க்க இயலாது போன சமூக ஊடகங்களின் கருத்து கூறல், அதற்கான குறியீட்டு பதில்கள், அதனால் உருவெடுக்கும் மனப்போக்குகளை கவிதைகளில் வெளிப்பட்டிருப்பது நன்று. 


உபகாரம்


' உன் நிலம் பற்றி எழுது' என்கிறீர்கள்

என் நிலம் பற்றி எழுத என்ன உள்ளது?

பாளம் பாளமாய்

வெடித்துக் கிடக்கிறது.

யாரேனும் ஒரு குவளை நீர் ஊற்றுங்கள்.

ஏதேனும் முளை விடலாம்.


எதையாவது செய்யச் சொல்லி ஏராளமான கருத்துக் குவியல்கள் நம்மை முழ்கடித்தபடியே உள்ளன. ஆனால் செயலாற்ற யாரும் இல்லை. செயல்பாடே மாற்றங்களை உருவாக்கும். தபசி இப்படியாக நறுக்குத் தெறித்தார்போல் சொல்லிச் செல்கிறார்.



நாம் பார்க்கும், கேள்விபடும், சமூக நிகழ்வுகள் பெரும்பாலானவை கவிதைகளாக மாற்றம் கொள்ளச் செய்திருக்கிறார் தபசி. கவிதைகளில் உரைநடை தன்மை மேலோங்கி இருப்பினும் கவிதை உணர்வை வெளிப்படுத்த தவறாதிருப்பதால் சலிப்பற்று வாசிப்பை தொடர முடிகிறது. 


நாம் பெரும்பாலும் எதிர்கொள்ள நேரிடும் புறக்கணிப்புகளை எளிதாக கடந்து வர இவரின் கவிதைகள் நம்பிக்கையூட்டும். இலக்கிய உலகில் மிக சாதாரணமாக நிகழ்ந்தபடி இருக்கும் கோஷ்டி சேர்ப்பு, சாதி சேர்ப்பு, கருத்துச் சேர்ப்பு, கட்சி சேர்ப்பு என கூட்டமாகி, கூட்டத்துக்குள் இருப்போரை கொண்டாடும் போக்கின் அபத்தத்தையும் கவிதையாக்கி இருக்கிறார்.


'சர்ப்ப நதி' என லா.ச.ரா குறித்த நீண்ட கவிதை குறிப்புகள்  இவரின் வாசிப்பின் ஆழத்தை, சிந்தனை போக்கை உணர்த்துகின்றன. 


 தபசியின் நெடுநாள் பயணிப்பு, தொடர் எழுத்துச் செயல்பாடு, முடங்கிப்போகாத மனப்போக்கு எல்லவற்றையும் சுய பகடியோடு கடந்துபோதல் தனி மனிதர்களுக்கு எவ்வளவு பலமானது என்பதை கவிதைகள் உணர்த்துகின்றன. வாசித்துக் கொண்டிருக்கையில் சட்டென எதேனும் ஒரு கவிதை வண்ணத்துப் பூச்சியாக பறந்து நம்மை தொடரச் செய்யும் தன்மை தொகுப்புகளில் இருப்பதால் தபசி கவிதைகளை நம்பிக்கையோடு வாசிக்கலாம்.


வெளியீடு: வேரல் புக்ஸ்.

Tuesday, October 10, 2023

நன்றி: அம்ருதா


நிர்வாணம் ஆயுதமாதல்.

-ந.பெரியசாமி

 

இச்சன்னல் வழியே தெரிவது

வானத்தின் ஒரு பகுதிதான்

என்றான்.

முழுவானமும் தெரியும் வசமாய்

ஒரு ஜன்னல் செய்ய முடியுமா?

- பிரான்சிஸ் கிருபா.

 

எந்த ஒரு போர் குறித்தும் முழுமையான பதிவு, உண்மையான இழப்புகள் குறித்த விபரம்  வந்துவிடுவதில்லை.  அதிகாரபூர்வமாக தெரிந்தவர்களும் சொல்வதில்லை. இலங்கையில் நிகழ்ந்த இன அழிப்பொழிப்பு குறித்தும் அப்படியான நிலையே. இலக்கிய பிரதிகள் மூலம் ஒரு சித்திரத்தை உருவாக்கி பார்த்துகொள்ளலாம்.  இலங்கையில் நடந்த மாபெரும் மனிதப் படுகொலை, இன அழிப்பு குறித்து சிறு சிறு பகுதிகள் மூலம் ஒட்டுமொத்த சித்திரத்தை உருவாக்கும் முயற்சியே ஷோபாசக்தியின் எழுத்துகள்.  இது அவரது ஐந்தாவது நாவல். மடியில் படுக்கவைத்து தலைகோதியவாறு கதை கூறும் பாங்கு அவரது மொழிக்கு உண்டு. 'இந்த உலகத்தில் ஒரே ஒரு கதைதான் உண்டு' எனும் சொல்லாடல் நாவலில் அவ்வப்போது வருவதற்கான காரணத்தை நாவல் தன்னுள் கொண்டுள்ளது. 

 

தன் தேசத்திலிருந்து வெளியேறி, பிற நாடுகளில் அகதியாக அலைவுறுபவனின் வாழ்வில் அமைதி உருவானதா என்பதை தேட வைப்பதே 'ஸலாக் அலைக்' நாவலின் கதை.

 

1950 டிசம்பர் 14 இல் அமைக்கப்பட்டு ஜெனிவாவில் அமைந்துள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் என்னும் ஐக்கிய நாடுகள் அமைப்பானது அகதிகளைப் பாதுகாப்பதற்கும், ஆதரவளிப்பதற்கும், அரசின் அழைப்பினாலோ அல்லது ஐக்கிய நாடுகளின் அழைப்பினால் அகதிகளை மீளத் திரும்புவதற்கோ அல்லது மீள் குடியமர்விற்கோ உதவுதலை கருப்பொருளாக கொண்டதாகும். 

 

இவ்வமைப்பு தரும் நம்பிக்கையே  தன் தேசத்திலிருந்து தப்பிப் போய் தஞ்சமடைந்து எப்படியாகினும் இவ்வுலகில் வாழ்ந்திடலாம் என புலம்பெயர காரணமாக இருந்துவிடுகிறது. பிற நாடுகள் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்று வாழ வைத்திடுகிறதா, அகதிக்கான அடையாள அட்டை பெறுதல் அவ்வளவு எளிதாக உள்ளதா என்பதை நாவல் விவரிக்கிறது ஜெபானந்தன் என்பவரின் கதை மூலம். 

 

கந்தஞானி, சாவித்திரி இணையரின் ஆதரவில் ஜெபானந்தனுக்கு கிடைக்கும் வேலையை கொண்டு உமையாளின் துணையோடு எப்படியும் இத்தேசத்தில் வாழ்ந்திடலாம் என நம்பி அகதிக்கான அடையாள அட்டை பெற அனுப்பும் கோரிக்கைகள் நீங்கள் சொல்லும் காரணங்கள் அரசுக்கு ஏற்புடையதல்ல, நீங்கள் இத்தேசத்தைவிட்டு வெளியேற வேண்டும் எனும் பதிலால் ஏற்படும் வேதனைகளை மீண்டும் மீண்டும் முயற்சிப்பதன் மூலம் நம்பிக்கை எனும் துளிர்ப்பை கொண்டு ஒளிந்தோடி வாழ வேண்டி இருப்பதன் துயரை  சொல்லிவிட முடியாது. நாவலை வாசித்துதான் உணர முடியும். 

 

" வயிறு முட்டத் தண்ணீர் குடித்தேன் மனம் சற்று ஆறிப்போனது. இந்த மனம் உண்மையிலேயே விசித்திரமானதுதான். சில சமயங்களில் ஒரு கோப்பை நீரிலேயே தணிந்து விடுகிறது. சாவு எதிரே நிற்கும் போதும் இந்த மனம் ஏதோவொரு நம்பிக்கையை பற்றிக் கொண்டு விடுகிறது. கடைசி நொடியிலும் ஒரு அற்புதத்தை எதிர்பார்க்கிறது" நாவலில் வரும் இப்பகுதியை வாசித்ததும் கோடான கோடி அகதிகளின் அகத்தில் உருக்கொள்ளும் இத்துளிர்ப்புதான் அவர்களை வாழச் செய்கிறது. ஓடியும் ஒளிந்தும் வாழ்ந்துகொண்டிருப்பதை உணர முடிகிறது. கொரான காலத்தில் நோய் முற்றி மருத்துவமனையில் தனித்து தினசரி செத்துக் கொண்டிருப்பவர்களை பார்க்கிறபொழுதெல்லாம் எனக்கு இந்நிலை வராது, எப்படியும் குணமாகி வெளியேறிவிடுவேன் எனும் நம்பிக்கை என்னுள் திரண்டிருந்த காலமும் நினைவில் இருக்கச் செய்தது.

 

உழைப்புச் சுரண்டல் என்பது உலகின் அரிச்சுவடி போலும். ஜெபானந்தன் தன் பார்க்கும் வேலை குறித்து விபரித்து செல்வதிலும், முடியப்பனின் கதை மூலமும் அறிந்துகொள்ள முடிகிறது. கடின வேலை பளுவால் நேர்ந்த தவற்றிற்காக சித்ரவதைக்கு உள்ளான போது அதிலிருந்து தப்பிக்க முதலாளியின் முன் தன்னை நிர்வாணமாக்கி நின்ற முடியப்பனின் செயல் நம்மை திகைக்கச் செய்கிறது. எளியவர்களுக்கு நிர்வாணம் கூட ஆயுதமாக மாறத்தான் செய்கிறது. 

 

"தந்தைக்கு முன்பாக மகனை அடிப்பது, தந்தையை கொன்றதற்கு சமானம்" என நினைத்து வாழ்ந்த ஜெபானந்தனின் பிராயத்தில் தன் தந்தையின் முன்னே, தாயும், சகோதரியும் அமைதிப் படையினரால் சிதைந்து போய், அவர்களிடம் இருந்து தப்பி வந்த கதைப்பகுதியை வாசிக்கையில் அரசியல் பிரச்சினைகளை  தன் படைப்புகளில் வெறும் பிரச்சாரம் என எவரும் ஒதுக்கிட முடியாது, மொழியின் நுட்பத்தோடும், அழகியலோடும் சொல்லிச் செல்வதில் தேர்ந்த ஷோபா சக்தி தன் படைப்புகளை அரசியல் துண்டு பிரசுரம் எனச் சொல்வது ஏற்புடையது அல்ல என்பதை நம்மால் உணர முடிகிறது. "அய்யா... வாங்க, வாங்க நாங்கள் இந்திரா காந்தி அம்மாவுக்குதானே ஆதரவு" எனும்  சொற்களை வாங்க மறுத்த காதுடையவர்களாக அமைதிப்படையினர் இருந்ததனால் நமக்கும் உண்டான எரிச்சல் "ராசீவ் காந்தி மகிமையை காட்டிவிட்டார்" என்பதை வாசிக்கையில் கடந்திட முடிகிறது.

 

விதைப்பதையே அறுவடை செய்ய இயலும். ஆயுதங்களை விளைவிக்க அகிம்சையை அறுவடை செய்ய இயலுமா? 

 

அகிம்சையால் தன் குறிக்கோளை அடைய முடியும் என உலகுக்கு உணர்த்திய காந்தியடிகளை  பிறப்பித்த நம் தேசத்தில் ஆயுதங்களால்  சிதைந்த வரலாற்றை வடுவாக கொண்ட கதைகள் கொண்ட ஈழம் நமக்கு விட்டுச் சென்றுள்ள படிப்பினைகள் ஏராளம். ஈழத்தில் கந்தியடிகளின் அகிம்சையை ஆயூதமாக்கி போராடியிருந்தால் இத்தகைய இழப்புகள் இல்லாது இருந்திருக்குமோ, அகிம்சையை மதித்த பிரட்டீசாரின் இயல்பு சிங்களத்தவர்களிடம் இருந்திருக்குமா?, போராட்டக்காரர்கள் என்ன ஆயுதம் எடுக்கவேண்டும் என்பதை தீர்மானிப்பவர்கள் அதிகாரத்தில் இருப்பவர்கள்தானா? எதையும் அரிதியிட்டு கூறமுடியாது மனதுள் தத்தளிப்புகளை ஏற்படுத்திக் கொண்டே இருந்தது நாவல்.

 

போராட்டக்காரர்கள் ஆயுதங்களை நம்பியதில்கூட இருக்கும் நியாயத்தை உணரலாம், ஆனால் அமைதியை உருவாக்கச் சென்ற இந்திய அமைதிப்படையினர்கள் கூட ஆயுதங்களைக் கொண்டுதானே அமைதியை ஏற்படுத்துவதாக சென்றார்கள். அவர்கள் மக்களுக்கு இழைத்த நம்பிக்கை துரோகங்களை வெப்பமடைந்த உடலோடுதானே வாசிக்க முடிந்தது, ராசீவ்காந்தியை நம்பியவர்கள், இந்திராவை நம்பியவர்கள் நாங்கள் என தஞ்சமடைந்தவர்களைக்கூட விட்டுவிடாது கொன்று குவித்த செயல்களை பார்க்க எந்த அறத்தை ஒப்பிடுவது?. 

 

ஷோபா சக்தியின் எழுத்துகள் சார்பற்றவை. பாதிக்கப்பட்ட மக்களின் குரல். சிங்கள ராணுவம், புலிகளின் இயக்கம், அமைதிப் படையினரின் தொந்தரவு என மும்முனைத் தாக்குதலுக்கு பயந்தும் பதுங்கியும் வாழ்ந்த மக்களின் பிரச்சினைகளை தொடர்ந்து வெளிப்படுத்துக் கொண்டிருப்பவர். தான் சார்ந்த இயக்கம், அமைப்பு, தனக்கு பிடித்த தலைவர்கள் குறித்து நாயகத்தன்மை அல்லது குலசாமியாக்கி கொண்டாடும் பொதுபுத்தியோடு இருப்பவர்களுக்கு அமைப்போடும் தலைமையோடும் கருத்து முரண்பாடு கொண்டு தொடர்ந்து அதன் விளைவுகளை எழுத்தில் கொண்டுவந்தபடி இருக்கும் ஷோபாசக்தியின் செயல் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வருவது தவிர்க்க இயலாததாகிறது. இந்நாவலிலும் "வேலுப்பிள்ளையின்ர வளர்ப்புப் பிழைதான் காரணம்" எனும் கூற்று ஈழப்போராட்டம் குறித்து நம்முள் பல யோசிப்புகளை உருவாக்கிச் செல்கிறது.

 

நமக்கு விபரம் அறிய நடந்த போர்களால் மனிதகுலம் சருகளவேனும் கூடுதல் பலனை பெற்றிருக்குமா? அப்படியிருக்க போர்கள் முன்னெடுக்கப்படுவதன் அவசியம் எங்கிருந்து வந்தது? உற்பத்தி செய்த போர்க் கருவிகளை பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தால் போர்ச் சூழல் உருவாக்கப்படுகிறதா? இழப்பின் துயர்களையும், வலியையும், நிலங்களையும், பொருளையும் இழந்துகிடப்பது சாமானியர்கள்தானே, அகதிகளாக பிறப்பெடுப்பதும் அவர்கள்தானே. எளியோரின் வாழ்வை சிதைக்கும் போரில் எத்தனாயிரம் குழந்தைகளை இழந்திருப்போம். போர்க் கருவிகள் ஏவுபவனைப் போன்று நேயமற்றவைகள்தானே. குழந்தைகளை கொல்லாமல் இருக்குமா? எதற்காக, யாரால் கொல்லப்படுகிறோம் என்பதைக் கூட அறியாது இறந்துபோவோர்களின் கண்களை எப்பதிலைக்கொண்டு மூடப்போகிறோம். தலைமுறைகள் கடந்தும் நோய்மை பீடிக்கச் செய்யும் போர்கள் எதற்காக? நாவல் நம்முள் நிறைய கேள்விகளை உருவாக்கியபடியே செல்கிறது நாவல்.

 

ஆன்மா, உடல், பாஸ்போர்ட் என மூன்று மூலகங்களைக் கொண்டது அகதிகளின் உயிர் என்கிறார். உங்களது ஆன்மா இருண்டு போய் இருக்கலாம், உடல் சிதைந்து போய் இருக்கலாம், உங்களிடம் செல்லும்படியான பாஸ்போர்ட் ஒன்றிருந்தால் எதையும் கடந்து செல்ல முடியும் என்கிறார். அடிக்கடி அடையாளத்தை பதியவேண்டி இருப்பதற்காக தன் பத்து விரல்களையும் அயர்ன் பாக்சில் தீய்த்துக் கொண்டவரின் கதையை வாசிக்கையில் தன்னிச்சையாக விரல்களை தடவிப்பார்க்கச் செய்தது. 

 

தொடர்ந்து துயரோடு வாழும் ஜெபானந்தனுக்கு கிடைத்த பாஸ்போர்ட் ஒன்றில் தலையை மாற்றி பிரான்சு செல்ல அங்கும் உண்மையறிய மீண்டும் தன் துயர்வாழ்வை தொடரும் ஜெபானந்தனைப் போன்று எண்ணற்றவர்கள் வாழ்ந்துகொண்டுதான் இருப்பார்கள். அது அவர்களுக்கு பழகிபோய் இருக்கக் கூடும். இப்படியானவர்களும் உலகில் வாழ்ந்துகொண்டுதான் உள்ளார்கள் என்பதை அறியத்தருகிறார் ஷோபாசக்தி. என்றாவது அவர்களின் வாழ்வில் அமைதி உண்டாக நாமும் ஒருமுறை சொல்வோம் ஸலாம் அலைக். 

 

நாவலை வாசித்து முடித்ததும் ஒசூர் அருகிலிருக்கும் கெலவரப்பள்ளி அணையிலிருக்கும் அகதிகள் முகாமில் இருப்போருக்காக நாம் என்ன செய்துள்ளோம், நம்மை நம்பி வந்தவர்களை என்னவாக வைத்துள்ளோம். திறந்தவெளி சிறைக்கூடமாகத்தானே இருக்கிறது. இனப்பற்று, மொழிப்பற்று என பேசிக்கொண்டிருப்பதிலிருக்கும் உண்மைதன்மை குறித்து குற்ற உணர்வையும் நாவல் ஏற்படுத்திச் செல்கிறது. 

 

(ஒசூரில் நிகழ்ந்த புரவி இலக்கிய கூடுகை - 3 

 25-12-22 ல் வாசிக்கப்பட்ட கட்டுரை)

 

நன்றி: கல்குதிரை

 மனிதகுமாரர்கள் பிறந்து கொண்டே இருப்பார்கள்...

-ந.பெரியசாமி



கவிதைகளில் நாம் பயன்படுத்தும் சொற்கள் அர்த்தமிக்கவையாக இருக்கவேண்டும். நம்மால் வாழ முடியாத வாழ்வை கவிதைகள் காட்சிபடுத்திவிடுவதில்லை. அது நம்மால் வாழ ஏதுவாக உள்ளதையே முன்னெடுக்கும். அதற்கான மனதை நாம்தான் தகவமைக்க வேண்டும். அதற்கான இழப்புகள் குறித்து கவலைகொள்ளாதிருக்க சாத்தியப்படும். அப்படியான சாத்தியப்படும் மகத்தான வாழ்வை காட்சிபடுத்துகின்றன ஸ்ரீநேசன் கவிதைகள். இவரின் சொற்கள் விழிபிதுங்கச் செய்யாது நம்முடன் ஒருவித இணக்கத்தை உருவாக்கக் கூடியவை.


' தப்பு விதை' மற்றும் ' கடவுள் மட்டும் எப்படி ஜெயிக்கிறார்'  தொகுப்பிலிருக்கும் கவிதைகளில் வெளிப்படும் சமூகப் பார்வை குறித்தே  இக் கட்டுரை. நிலத்திற்கும் மனிதனுக்குமான பிணைப்பே சமூகம் எனும் என் புரிதலின் அடிப்படையில் என் வாசிப்பை தொடங்கினேன்.


எதன் மீதும் எத்தகைய படபடப்பும், அவசரமும் இல்லாது ஆழ்கடலின் அமைதியில் வெகு நிதானமாகவே சொற்களை பிரயோகப்படுத்துகிறார். இத்தகைய நிதானத்தை தந்திருக்கும் அனுபவ முதிர்ச்சி மெச்சத்தக்கதாகவே உள்ளது.


ஏதேனுமொரு பயணத்தில் எதையாவது பார்க்க, எங்கேயேனும் நின்றிருக்க நம்முள் ஒருவித அமைதி உருக்கொள்ளும். அத்தகைய அமைதியை,  பொதுபுத்தியில் சொல்வதென்றால் பாசிட்டிவ் எனர்ஜி என்போம். 

.....

பற்கள் உறுதியுறுக

பார்வை கூர்மையடைக

புதிதாக மனம் துலங்குக

அதில் அன்பும் கருணையும் மலர்க

உணர்ச்சியில் கலந்தூறிக் கற்பனை கனலுக

சொற்களுக்கு மந்திரப்பித்தேறுக

இனிது இனிது ஒவ்வொரு பிறப்பும்

குடும்பமும் ஊரும் உறவாய்க் குழுமும்

ஒவ்வொரு தேசமும் உடலாம் உணர்க

...........

இப்படியாக இதற்கு முன்னும் பின்னுமாக நம்பிக்கையூட்டும் வரிகளைக் கொண்ட'மெய்ந்நலக் காப்பு' கவிதையை வாசிக்க உருக்கொள்ளும் எனர்ஜி ஒவ்வொருவரும் உணரத்தக்கதாக உள்ளது.


நம்மவர்களிடையே இருக்கும் சில பழக்கங்கள் குறித்து யோசித்தால் அது அறிவுக்கு புறம்பானதாகவே இருக்கும். ஆனால் சில பழக்கங்களை ஆராயாமல் கடைபிடிப்பது இயல்பாகிவிடும். அது பிடித்தமானதாக இருப்பதால், அல்லது தேவையானதாக இருப்பதால் அது குறித்த ஆராய்ச்சிக்கு போகமாட்டார்கள் 'பக்தர்' கவிதையில் இருக்கும் எள்ளல் ரசிக்கத்தக்கதாக உள்ளது.


மனித சமூகம் தனக்கான வேடிக்கை பொருளாக இயற்கை வாழ் உயிரினங்களை கருதிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவைகளுக்கு நாம் வேடிக்கை பொருளாக இருப்போம் என்பதை நினைவூட்டுகிறது 'வெளியே வீடு' கவிதை.


பால்யத்தில் ஊரில் பால்காரப்பாட்டியை மிகவும் பிடிக்கும். கறந்த பாலோடு நீரை கலக்காது விற்பது எல்லோருக்கும் மிகுந்த ஆச்சரியம் உண்டு. அது குறித்து ஒரு நாள் கேட்டபோது, வாங்கிப்போற வீடுகளில் குழந்தைகளுக்கும்  கொடுப்பாங்க, குழந்தைகளை ஏமாத்தக் கூடாதுல்ல, நல்ல பால் கிடைக்குமென நம்பிதானே வருகிறார்கள், அவர்களை எப்படி ஏமாற்ற முடியுமென்றது நினைவில் தோன்றியது 'தப்பு விதை' கவிதையில் வரும் அம்மாவை கண்டதும்.


தப்பு விதை

*

தையில் தானாய் விளைந்த பூசணியை

வீடு வீடாகக் கொடுத்து மாளவில்லை அம்மாவுக்கு

முருங்கையோ வாழையோ ரெண்டு கேட்டு வருபவர்களுக்கு

நான்காகவே கொடுப்பார்கள்

சாபம் பெற்றதுபோல் என் தோட்டம் சும்மா கிடக்கிறது

கேட்பவர்களுக்கெல்லாம் அள்ளி அள்ளி

தர வேண்டும் என்ற ஆசை மட்டும் அளவில்லை

இங்கிருந்து ஊற்றெடுக்கவில்லையே ஒரு வரியும்.


இக் கவிதையில் வரும் அம்மாவை நம் வீட்டில், தெருவில், ஊரில் பார்த்ததுண்டு, ஆனால் கவிதைக்கான கருப்பொருளாக மாற்றம் கொள்ள செய்யாமல் விட்டது குறித்து குற்ற உணர்வையும் கவிதை நம்முள் ஏற்படுத்தவே செய்கிறது. இரண்டு தொகுப்புகளிலும்  மனிதர்களுள் இருக்கும் மகத்தான பண்புகளை தன் கவிதைகளில் காட்சிபடுத்தியிருக்கும் ஸ்ரீநேசனை மனம் அருகமர்த்திக் கொள்கிறது.


கனிவும் கருணையும் நிறைந்தது மட்டுமல்ல சமூகம், நாவில் நச்சோடு இருப்பதும் உண்டு. மணமான தம்பதியருக்கு குழந்தை பிறப்பு தள்ளிப்போனால் அவர்கள் குறித்து பேசப்படும் சாடைப்பேச்சுகள் நீலம் பரிக்கச்செய்யும் தன்மை கொண்டது. இது ஊர்தோறும் நிகழும் சம்பவம்தான். இது 'விரிச்சி' கவிதையில் துணி துவைக்கும் செயல்பாட்டைக் கொண்டு " குழந்தையின் ஆடையைத் துவைக்க/ கண் திறக்காத காலத்தை சபித்துக்கொண்டு"  என பெண்ணின் உணர்ச்சிகளை நம்முள் வடுவாக்கி நுட்பமாக வெளிப்படுத்தி இருப்பார்.


"அமானுஷ்ய வேளை"  எனும் மற்றொரு கவிதையில் குழந்தையற்ற தம்பதியரின் வீட்டில் கண்ட காட்சியை  காட்சிபடுத்தியிருப்பார்.


புழுக்கமான முன் இரவுக்குப் பின்

நள்ளிரவில்

கனத்த மழையொன்று பெய்கிறது

நனைந்தசையும் எல்லாவற்றின் மீதும்

மின்னல் ஒன்று பளீரிட்டு

சில கண நேரம் உறைகிறது

அவ்வமானுஷ்ய வேளை

நீண்ட நாளாய் குழந்தையின்றித்

துக்கித்துக் கிடக்கும்

தம்பதியரின் எதிர்வீட்டுச் ஜன்னல்

அசாதரமான வேகத்தில்

படீரென்று திறக்கிறது

உள்ளே கொடியில்

குழந்தை ஒன்றின் நீர்ச் சொட்டும்

நனைந்த ஆடை.


சட்டென நம்முள்ளும் மின்னல் பாய்ச்சிடுகிறது கவிதை. மனங்களில் நிகழ்த்தப்படும் உள்வெளிப் பயணம் அவ்வளவு எளிதல்ல, அப்படியானதொரு வாழ்வின் தரிசிப்புகளை நமக்கானதாக மாற்றம் கொள்ளச் செய்யும் தன்மை ஸ்ரீநேசன் கவிதைகளுக்கு உண்டு. இடி, மின்னல், மழை எக்காலத்தில் வாசித்தாலும் அக்கணம் நிகழ்ந்துவிடும் தன்மை இக்கவிதைக்கு உண்டு. 


உணர்வுகளை கவனத்தில் கொள்ளாது எடுத்தோம் கவிழ்த்தோமென வார்த்தைகளால் சுடும் கீழானவர்கள் குறித்து "ஒரு" கவிதையில் காணலாம். ரயிலில் பூ விற்கும் பெண்ணை அதிகாரியொருவன் திட்ட அவளை வெளியே வீச முடியாத கோபத்தை பூக்கூடையில் கட்ட மல்லிகைச் சரம் தாறுமாறாக தரையில் விழுவதை காட்சிபடுத்தி, பயணிகளுக்கு கிடைத்த ரசமான சம்பவம் எனக் கூறி

...................

எனக்கு ஒரே ஒரு கேள்வி

மதிப்பிற்குரிய அதிகாரியே உம்மிடமில்லை

வேடிக்கை ரசித்த பயணிகளே உங்களிடமுமில்லை

இங்கு ரயிலில் உன் அம்மா அவமானப்படுவதை

அறிகிறாயா நீ மகனே? 

என முடித்திருப்பதை வாழ்ந்துகொண்டிருப்பவர்களின் கீழ்மை அவர்களோடு இருந்துபோகட்டும். வளரும் தலைமுறைகளான நீங்களாவது கீழ்மையற்று அவமானப்படுத்தாத சமுகத்தை உருவாக்குங்கள், அல்லது அவர்களின் வலிகளை புரிந்துகொள்ளுங்கள் என்பதாகப்படுகிறது.



............

என்னோடு சுற்றியலைந்து கொண்டிருந்த சகச் சிறுமியிடம்

நான் அன்பென்றறியாத அன்பை வெளிப்படுத்தியிருந்தேன்

அன்பு வேறு ஆசை வேறு போலிருக்கிறது

பொருளறிந்த அச்சமோ அவள் அதை மறுதலித்திருந்தாள்

இத்தனைக்கும் ரகசியத்தில்

என்னுடையதை அவளுக்குக் காட்டவோ

அவளுடையதை நான் பார்க்க

விருப்பமோகூட முனைந்ததில்லை

அதற்குப் பிறகும் பலகாலம் நிலைத்திருந்தது 

எப்போதோ அந்த மரம் அங்கிருந்து காணாமல் போய்

இப்போது தீவிரமாய் இங்கு வந்து நிலைத்திருக்கிறது

அட... நினைவடுக்கில் அவள் மறுதலித்ததுதான்

எத்தனை பச்சை

ஆனாலும் அதன் உள்ளடுக்கில் அதுதான் எத்தனை சிவப்பு.


என முடிவுறும் 'கொய்த மரத்து கொய்யாக் கனி' எனும் கவிதை நம்முள் உருவாக்கும் கால மீட்பு மலர்ந்த ரோஜா தோட்டம். நம்முள் பெரும் மீட்பராக இருப்பது பால்யகாலமே. செத்துக்கிடக்கும் அலைபேசியின் நாவில் சிறு சொட்டு மின்சாரத்தை வைக்க ஒளிரும் தன்மை கொண்டது. விரைவில் மூப்பெய்து பழுத்து சருகுகளாகி விடாது பச்சையம் துளிர்க்குச் செய்யும் பால்யத்தின் நினைவு. இக் கவிதை உடன் ஆடுமேய்த்தவளிடம் அடிக்கனியை பார்க்க கெஞ்சிய ஆசை அடுத்த வாரம் எனும் சொல்லுக்குள் நாண்டுகொண்டதை நினைவுபடுத்தியது.


நம் சமூகத்தின் அடையாளமாக இருக்கும் விவசாயத்தின் நிலை பெருமிதம் கொள்ளத்தக்கதாக இல்லாமல் ஆக்கப்பட்டிருக்கிறது நவீன தொழில் நுட்பம். வீட்டுமனை நல்வரவு பதாகைகள் எங்கும் நம்மை வரவேற்கின்றன. உலகிற்கு உணவை விளைவிக்கும் வல்லமை கொண்ட விவசாயிகள் நூறு நாள் வேலைக்கும், ரேசன் அரிசிக்கும் பழக்கப்பட்டு போனார்கள். விவசாயத்தின் எதர்காலம் குறித்த கவலைகள் கொண்ட கவிதையாக இருக்கிறது 'உழை' . 


கோழி கூவல், சாணம் தெளிக்கும் சப்தம் என விடியலுக்கான அடையாளங்கள் இன்னும் இருந்தபடி இருக்கத்தான் செய்கின்றன. ஆனாலும் ஏசியை அணைத்துவிட்டு சன்னலை திறக்க எழுந்திருக்கமனமின்றி கிடப்போரின் எண்ணிக்கை பெருக்கமும் நிகழ்ந்து கொண்டிருக்கும் சமூக மாற்றத்தை காட்சிபடுத்துகிறது 'உறை காலம்' கவிதை.


பெரும்பாலான மனிதர்களின் அன்றாடத் தேவையின் பட்டியலில் மதுவும் இணைந்துபோனது. 'கவித்தல விருட்சம்'  கவிதையில் வரும் 

டாஸ்மாக்கைக் கடந்து செல்லும் கவிஞன்

போதைப் பெருக்கி பேச்சாய் பொங்க

நகுலனின் சுருதி மீட்டிய பிராந்தியுள் பாய்ந்து

உமர்கய்யாம் வரை விரிந்து

ப்யூகோவ்ஸ்கிக்குத் திரும்பி

யூமாவில் நிலை நின்று

தீர்த்தமாய் திரண்டிருந்த கடைசியை பருகி முடிக்கவும்

மதுக்கடை சிறுவனின் கோலிக் குண்டொன்று

இவர்கள் வரை உருண்டு வரவும் எழுந்து கொண்டார்கள்

சில கணம் தடுமாறி பொறுக்கிய கோலிக்குண்டை

சிறுவனிடம் ஒப்படைத்து கிளம்பினார்கள்.

 

எனும் வரிகளை வாசிக்கையில் கலந்து கொண்ட, கலந்து கொள்ளப்போகும் இலக்கிய கூட்டங்கள் நினைவில். யூமாவின் அடையாளங்களுள் ஒன்றகிப்போன " மதுக்கடையில் உருளும் கோலிக் குண்டுகள்" கவிதை வரிகளையும் இக் கவிதைக்குள் காட்சிபடுத்தியிருப்பது அழகின் வெளிப்பாடு.


சதா மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டே இருப்பதில் மிகப் பெருமிதமாய் எல்லோராலும் கொண்டாடப்பட்ட நிறைய்ய விசயங்களை மறந்தே போன நாட்களில் ஸ்ரீநேசன் கவிதைகளில் அவர்களை வாழச் செய்திருக்கிறார். ஆடைகளில், முடி திருத்தங்களில், கழுத்தில் நரிப் பல்லை கட்டி வெற்று மார்போடு திரிந்ததென பழைய வாழ்வை என்றைக்குமான உயிர்ப்போடு இருக்கும்படியாக உள்ளன.



பெண் குறித்து இச்  சமூகம் வைத்திருக்கும் பார்வைகள் புரை படிந்தவை. சக உயிரி, சக பயணி என்பதெல்லாம் இல்லாது தனக்கும் கீழான என்றே வைத்துள்ளது. சூப்பர் பவர் தனக்கே எனும் தடித்தனம் கொண்டவர்களே பெரும்பான்மை மிக்கவர்களாக உள்ளார்கள். ஆனால் உண்மை ஸ்ரீநேசனின் இக்கவிதையாகவே உள்ளது. 


உயிராதாரி

*

நீ ஒரு பெண்

சாதாரணமானவள் எனினும்

இந்தப் பிரபஞ்சம்

உன் கண்களிலிருந்தே தோற்றமளிக்கிறது

உன் இருப்பு ஒரு சிறு துகள்

ஆயினும் இந்த வெளி

உன் விரல் நுனிகளிலிருந்தே விரிகின்றது

நீ இசையின் ஒரு துடிப்பு மட்டுமே

இருந்தும் எல்லாவித ஓசைகளும்

உன் இருதயத்திலிருந்தே பெருகுகின்றன

மிகத் தாமதமாய் எதிர்ப்பெற்ற

ஓர் உயிர் நீ

என் எல்லா சலனத்திற்கும்

உன் உயிர்ப்பே ஆதாரமாயிருக்கிறது. 


நான் சிறுவனாக இருந்தபோது ஊரில் இருக்கும் அம்மன் கோயில் வழியாக செல்லாது சுற்றுப்பாதையில் பெண்கள் செல்வது குறித்து என் சந்தேகத்தைக் கேட்க, வீட்டுக்குத் தூரமாக இருக்கையில் கோயில் முன் நடப்பது தெய்வ குற்றம் அதனால்தான் சுற்றுப்பாதையில் செல்வார்கள் என்றனர். கலப்போக்கில் சுற்றுப்பாதை தேவையற்றதாகிப்போனது காலமாற்றத்தின் விளைவால். அது இன்னும் நவீனமாகி அம்மனை காதலியாக, தாயாக, குழந்தையாக மாற்றம் கொள்ளச் செய்திருக்கிறார் ' ஏரிக்கரை அம்மன்' கவிதையில்.


இயேசு  எனும் சொல் நம்மை வந்தடையும் பொழுது " நள்ளரவில் இயேசு இளம் பெண்ணை அழைத்துச் செல்கிறார்'" கவிதை நினைவில் தோன்றுமளவிற்கு ஸ்ரீ நேசனுக்கான அடையாளமாகிப் போனது இக்கவிதை. எளிய செயல்தான், ஆனால் இச் சமூக நோக்கில் சூழலில் அபூர்வமாகிவிடுகிறது. மனிதனின் மகத்தான பண்பை மனிதகுமாரனோடு ஒப்பிட்டிருப்பதில் இக்கவிதையின் வெற்றியாகப் பார்க்கலாம். திருகலற்ற எளிய சொல் முறையும்  இக்கவிதையின் பலம். இப்படியான மகத்தான பண்புகளை உடைய மணிதர்களை தன் கவிதைகளில் காட்சிபடுத்த தவறுவதில்லை. 


பச்சை வேர்க்கடலை

கிடைக்காத பருவத்தில் ஒரு மரக்கால் பைநிறைய

மாமியார் பெருமையோடு கொடுத்தனுப்பியதை

அம்மாவுக்கு கொண்டு செல்வேன்

விடிகாலை உறக்கத்தைப் பயன்படுத்தி

ஒரு கிழவி தன்னுடையதைப் போல்

என்னடைய

 பையை இறக்கிச் செல்கிறாள்

தூக்க கலக்கத்தில் கவனித்துவிட்ட நான்

பதற்றமடைந்து விட்டேன்

யாரும் பாட்டியைப் பிடித்துவிடக்கூடாது

யாரும் அவமானப்

படுத்திவிடக் கூடாது.

*


நினைவின்மையோ, கவனப்பிசகோ இல்லாமல், அறிந்தே நிகழ்த்தப்பட்ட செயல் எங்கே திருட்டு என அம்பலப்பட்டுவிடுமோவென பதறுபவனின் மேன்மையை காட்சிபடுத்துகிறது  ஜடசியம்மாள் கவிதை. இத்தகைய மேம்பட்ட பண்புகளை கவிதைக்குள் கொண்டு வருவதால் ஸ்ரீநேசன் கவிதைகள் அபூர்வ தமிழ்குணம் கொண்ட கவிதைகள் என ஷங்கர்ராமசுப்ரமணியன் சொல்வதற்கான காரணமாக இருக்கக் கூடும். மேன்மைமிகு பேரன்கள் நம்முடன் இருந்துகொண்டிருப்பதை நினைவுபடுத்துகிறது.


இக்கவிதையை தொடர்ந்து வேறு மூன்று போட்டிகள் குறித்த கவிதைகளையும் காண்போம்.

பெருமாத்தம்மாள்

*

படிக்கட்டோர இருக்கையில் ஒரு பாட்டி

எதையோ தவறவிட்டதான முகபாவம்

சுமக்க முடியாத புத்தக மூட்டையை

யாரோ ஒரு சிறுமி

அவள் மடியில் இறக்குகிறாள்

என்னவொரு மிடுக்கு கிழவிக்கு இப்போது

தானே பள்ளிக்குச் சென்று கொண்டிருப்பதைப்போல.


எந்தவொரு செயலுக்கும் மதிப்பீடு மாறுபட்டதாகவே இருக்கும். யாரேனும் ஒருவருக்கு அது வாழ்நாள் கனவாகவோ, ஏமாற்றமாகவோ, சாதனையாகவோ இருக்கக்கூடும். புத்தப்பையை பாட்டியின் மடியில் வைத்தல் சாதாரண செயல்தான். 'மிடுக்கு' என்ற சொல்லில் பாட்டியின் எதிர்பார்ப்பு, கனவு, ஏமாற்றம் எல்லாம் ஒரு கணம் அடைந்துவிட்ட நிறைவு,  பால்யம் தொட்டு கிடைக்காத பேறு அன்று கிடைத்திட்ட மகிழ்வின் ததும்பல் 'மிடுக்கு' எனும் சொல்லுக்குள் வைத்துள்ளார் நேசன்.

பெண்களுக்கு கல்வி என்பது மிகச் சமீபத்தில் வாய்ந்த ஒன்றுதானே. நம் சமூகம் அவர்களை விட்டுக்குள் வைத்தே அழகு பார்த்துக்கொண்டது. சமூக மாற்றத்தின் நல்வெளிப்பாடு இக்கவிதை. குற்ற உணர்வையும், குதூகலிப்பையும் ஏற்படுத்துகிறது இக்கவிதை.


சூதும் வாதும் அறியாதவர்க்களின் செயலில் இருக்கும் அன்பைக் கூட சந்தேகிக்கச் செய்யும்  வாழ்வில் நாமும் இருப்பதன் அசிங்கத்தை சுட்டுவதாக உள்ளது ' கன்னியம்மாள்' கவிதை.


கோயில் பிரசாதமெனினும்

நீ கொடுக்கும் சுண்டலை

மயக்க மருந்திட்டதோ என இப்பேருந்து பயணிகள்

ஒருவரும் பெற்றுக்கொள்ள மாட்டார்கள்

உன் அன்பை

அழுகையைப்போல் அடக்கிக் கொள் பாட்டி.


நாமும் இப்படியான பேருந்துகளில் பயணித்திருக்கக் கூடும். எதேனும் ஒரு பாட்டி அழுகையை அடக்க இயலாது விம்மியபடி இருந்திருக்கக் கூடும். நாம் கவனிக்கத் தவறியிருப்போம், இருப்பில் இல்லாமல், இல்லாத இருப்பில் இருந்துகொண்டிருக்கிறோமே.


தொகுப்பிலிருக்கும் மற்றொரு பாட்டி தள்ளாத வயதில் தயிர் விற்று பிழைப்பதை காட்சிபடுத்துகிறது. அன்றைய தொழில் பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாதென சூரியனிடம் வேண்டுதலை வைக்கும் குரல்  நம் குரலாகவும் இருக்கிறது.


வால்மீகி தன் சிஷ்யர் பரத்வாஜருடன் ஆற்றின் கரையில் நடக்கையில் இரண்டு பட்சிகள் கூடி குலாவுவதை தற்செயலாக கண்டார். திடிரென்று வேடவன் ஆண் பட்சியை வீழ்த்தினால். கோபம்கொண்ட முனிவர் இரக்கமற்ற வேடனே, " எல்லையற்ற காலம் வரை நிம்மதியற்று வாழ்வாய்" என சபித்தார். பின் நிதானமாகி தன் கோபத்திற்கு வெட்கமடைந்தவர் அச்சமயத்தில் தன் சாபம் பொருத்தமான வார்த்தைகளால் கோர்க்கப்பட்ட கவிதையாக வந்திருப்பதை அறிந்து ஆச்சரியப்பட்டார். " இரக்க உணர்ச்சி இல்லை என்றால் நல்ல கவிதைகள் அமைவதில்லை. சோகத்தில்தான் நல்ல ஸ்லோகங்கள் அமைகின்றன"  எனும் வால்மீகியின் கூற்று எத்தகையான உண்மையை கொண்டுள்ளது என்பதை ஸ்ரீநேசனின் கவிதைகளிலும் உணர முடியும். 


சொர்க்கம், நரகம், நல்லது, கெட்டது, கடவுள், பிசாசு இச் சொற்கள் மனித குலத்தோடு பிணைந்து கிடக்கின்றன. இதை நாம் நம்புகிறோமா, நம்பவில்லையா என்பது குறித்த ஆராய்ச்சியற்றே கவிதைகள் அது எவ்விதம் செயல்படுகிறது என்பதையே நாம் பார்க்கவேண்டி இருக்கிறது. கடவுளின் படைப்பு நாம் என சொல்லப்பட்டாலும், குழந்தை ஒன்றிடம் கடவுள் படும்பாடு குறித்த "கடவுளின் தூளி" கவிதையும் ஸ்ரீநேசனின் உச்சம் என்றே பார்க்கிறேன்.


அம்மாவும் அப்பாவும் குழந்தையுமான

ஒரு குடும்பத்தை

விபத்து நடத்தி கொன்றாள் கடவுள்

அம்மா நல்லவளாகையால் வலப்புறமிருந்த

சொற்கத்துக்கு அனுப்பி வைத்தாள்

அப்பா கெட்டவன் எனச் சொல்லி

இடப்புற நரகத்தில் தள்ளிவிட்டாள்

நல்லதா கெட்டதா எனத் தெரியாமல்

குழந்தையைத் தன்னுடனே வைத்துக்கொண்டாள்

தாய் தந்தையில்லாத ஏக்கத்தில்

அழத் தொடங்கிய குழந்தை நிறுத்தவே இல்லை 

முகிலைத் துகிலாக்கி மின்னலை கயிறாக்கிப் பிணைத்து

வெட்ட வெளியில் தூளி ஒன்றைக் கட்டிய கடவுள்

குழந்தையை அதிலிட்டு தாலாட்டத் தொடங்கினாள்

சொர்க்கத்திற்கும் நரகத்திற்குமிடையே அசைந்தது தூளி

வலப்புறம் அம்மாவையும்

இடப்புறம் அப்பாவையும்

காணத் தொடங்கிய குழந்தை

அழுகையை நிறுத்திக் கொண்டது

அப்பாடா என ஓய்ந்தாள் கடவுள்

குழந்தையோ மீண்டும் வீறிடத் தொடங்கியது

பாவம் கடவுள் குழந்தையை

நல்லதாக்குவதா 

கெட்டதாக்குவதா

என்பதையே மறந்து விட்டுத்

தூளியை ஆட்டத் தொடங்கி

ஆட்டிக் கொண்டே இருக்கிறாள்.


நல்லதுக்கும் கெட்டதுக்கும் இடையே தடுமாற்றத்தோடு இருக்கும் கடவுளிடமிருந்து தூளியை வாங்கிக்கொண்ட ஸ்ரீநேசன் தூளிகளில் குழந்தைகளை படுக்கச்செய்து இவ்வுலகில் இருக்கும் நல்லது கெட்டதுகளைக் கதையாகச் சொல்லியபடி நல்லதுகளில் கவனப்படுத்தி தூளியை ஆட்டிக்கொண்டே இருக்கிறார்.


வெறும் கையில் முழம் போட்டும், வெற்றுச் சவடால்களில் பெருமிதம் பேசித்திரிவோரின் வாழ்வில் கதியற்று நிற்கும் கணங்களைச் சுட்டும் ' கடவுள் மட்டும் எப்படி ஜெயிக்கிறார்' கவிதையும் முக்கியமானதொரு கவிதையாக பார்க்கலாம்.


சம காலத்தின் முக்கிய சொல்லாடலாக இருப்பது மக்கும், மக்காத குப்பைகள் குறித்தான பேச்சு. 'வள்ளலார் தெரு'கவிதை நம்மின் நவீன வரலாற்றை சொல்லிவிடுகிறது. மக்காத குப்பையை அதிகாரத்தின் குறியீடாகவும், மக்கும் குப்பையை மனசாட்சியின் குறியீடாகவும் பார்க்கலாம், அதை பிரித்து பார்க்கும் குப்பை வண்டிக்கார முதியவரின் மனப்போக்கு நமக்கானதாக இருக்கிறது.


மலை, ஆறு, ஏரி, நாய் மனிதர்களின் வாழ்வில் பிணைந்த ஒன்று. இவைகள் குறித்த அனுபவங்களை ஸ்ரீநேசனின் கவிதைகளில் பெற்றுக்கொண்டே இருக்கலாம். 'நானும் நாயும்', 'ஒரு மலையின் மாலை', 'சந்திரகிரி', ' திரவமலை', 'கனவு மலை' 'நகரத்துக்கடியில் புதையுண்ட ஏரி' என நிறைய்ய கவிதைகளை பட்டியலிடலாம்.


இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையே இயற்கை கொண்டிருக்கும் நெகிழ்வுத் தன்மைக்கும், மனிதனிடம் பெருக்கெடுக்கும் பேராசைக்கும் இடையே உருக்கொண்டுள்ள விடுபடல்களை மெல்ல தவிர்க்கச்செய்து பிணைப்பை உருவாக்கும் முயற்சியாக ஸ்ரீநேசனின் கவிதைகளகப் பார்க்கலாம்.


இந்தச் செருப்பைப் போல்

எத்தனை பேர் தேய்கிறார்களோ

இந்தக் கைக்குட்டையைப் போல்

எத்தனை பேர்

பிழிந்தெடுக்கப்படுகிறார்களோ

இந்த சட்டையைப் போல்

எத்தனை பேர் கசங்குகிறார்களோ

அவர்கள் சார்பில்

உங்களுக்கு நன்றி

இத்துடனாவது விட்டதற்கு.


எனும் அத்மநாமின் கவிதையில் வெளிப்படும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருப்பவர்களின் மீதான நேயம் நமக்கும் தேவைப்படக்கூடிய ஒன்று. எங்கோ எவரோ எக்கேடு கெட்டால் என்ன, என் வாழ்வு, என் சுக துக்கம் என வாழ்ந்துகொண்டிருப்பது வாழ்வா? எனும் கேள்வி படைப்புகளில் வெளிப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. ஸ்ரீநேசன் கவிதைகளிலும் அப்படியானதொரு கேள்வி இருந்துகொண்டுதான் இருக்கிறது. அரசு சமூகத்தை ஒற்றைத்தன்மைக்கு கொண்டுவர முயற்சி கொள்ளும்போது, விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் சட்டங்கள் வரும்போது, கடுமையான சூழல் பாதிப்பு ஏற்படுத்தும் திட்டங்கள் வரும்போது போராடத்தானே வேண்டும். எனக்கென்ன வந்தது என்றிருப்பதை எள்ளல் செய்யும் தன்மையும் 'கவிதைகளை வாசித்துக் கொண்டிருப்பவன்' கவிதையில் இருக்கிறது.


மக்கள் கடவுள்களை தரிசிப்பது தெருக்கூத்தில்தான். அவர்களுக்கு உலகின் மிகச் சிறந்த நகைச்சுவைக்காரன் கட்டியக்காரனே. உழைப்பின் அலுப்பிலிருந்து விடுதலை அடையச் செய்வதும், கூத்தின் கதைகளோடு தங்கள் கதைகளை பொருத்தி ஆறுதல் கொள்வதும் என தெருக்கூத்திற்கும் மக்களுக்குமான பிணைப்பு வேர்களுக்கும் மண்ணுக்குமானது. தொகுப்பிலிருக்கும் 'கூத்தாட்சித் தத்துவம்' கவிதை தெருக்கூத்தை நினைவுபடுத்தியதோடு மட்டுமின்றி பபூனாக வேடமேற்ற பபூனாகவே வாழ்ந்துகொண்டு அட்சிபுரியும் பபூனின்  கேலிக்கூத்துகளை இவ்வாறாக காட்சிபடுத்துகிறது.

......

தூய்மைக் கூத்து  இவரது தாரக மந்திரம்

அதைக் காட்டும் நடுத்தெரு மேடையை தாமே கூட்டுவார்

கூத்து ஆரம்பத்தில் ஆர்ப்பாட்டம் செய்பவர் பின்

மேடை பக்கமே தலை காட்ட மாட்டார்

ஊர்ச்சுற்றி வருவதில் அலாதி மோகம் கொண்ட

இவரது பிரதான கூத்தாட்சித் தத்துவம்

ஒரே கருத்து ஒரே கதை ஒரே கூத்து

எதிர்கால நோக்கி கனவு திட்டம் எல்லாம்

என்றென்றைக்கும் தான் ஒருத்தனே நடிகன்

உறங்குவோர் விளக்கம் வரை இரவுகள் விடியும் வரை

இக் கூத்தின் கூத்தே தொடரும்

மங்களம் சுபமங்களம்

ஜெயம் சுபோஜெயம்.


இரவுகள் விடியத்தானே செய்யும், உறங்குவோர் விழிக்கத்தான் செய்வார்கள் இங்கு எதுவும் சாசுவாதம் அல்ல. விரைவில் ஆட்சிமாற்றம் நிகழும் என நம்புவோம்.


ஸ்ரீநேசனின் 'அறி உரை' எனும் இச்சிறு கவிதையோடு கட்டுரையை நிறைவு செய்தல் பொருத்தமானதாக இருக்கும் என நம்புகிறேன்.


எனவே

எங்கேயும்

எப்போதும்

எல்லாவற்றுக்காகவும்

எளியோரின் பக்கம் போய் நில்லுங்கள்

பலவானாகப் பெறுவீர்.

*


( 30-04-23 ஒசூர் புரவி இலக்கிய கூடுகையில் வாசிக்கப்பட்ட கட்டுரை)

Friday, September 29, 2023

நன்றி: உதிரிகள்

 பொழுது

*

காலங்கள் குறித்து 
கவலை கொள்ளான்
பழக 
பாலும் புளிப்பதான
நம்பிக்கை கொண்டவன்
நல்ல நாள் தனித்தில்லை
எல்லா நாளும் நமக்கானதென
கடுகளவு 
மிளகளவு
நீண்டிருக்க
சற்றே கூடுதலாக்கி
ஒரு பிடி பகலவனை
உண்ணத் தொடங்கினான்.


மழை

*
வல்லமையை வளர்த்துக் கொண்டவன்
பரிசோதிக்கக் காலம் வந்தது
நள்ளிரவு என்பதால்
சாட்சிகள் இல்லை
தன்னை நனைத்திடாது
பெய்யச் செய்தான் 
ஒதுங்கி.


பனி
*

கதவு சன்னல்களை 
அறைந்து சாத்தி
சிறு சந்தில் 
துணி வைத்து அடைத்து
போர்வைக்குள் ஒடுங்கிக் கிடக்கும்
எல்லோரையும் ஏளனமாகப் பார்த்து
ஏதுமாற்று உறங்கப் போனவன்
ஆதி சினேகனாக
அடர்வனத்து கனவில்
நித்திரை கொண்டான்.

ஆறு
*

முயற்சிகள் பலன்
அற்றுப் போவதை ரசித்து
இப்படித்தான் என
சொல்லில் காட்சிபடுத்தி
தன் உடலை தக்கையாக்கி
மிதந்தவளை 
ஆறு தாய்மையோடு
தாலாட்டிக்கொண்டிருக்க
வானத்தின் ஒற்றைக் கண்
உக்கிரம் அடைகிறது.

Monday, September 11, 2023

அகப்பிளவு

 அகப்பிளவு- ந. பெரியசாமி. 

ஓர் அறிமுகம். 


சமீபத்தில் மிகவும் பரவலாக பள்ளி மாணவர்களிடையே சென்று சேர்ந்து கொண்டாடப்பட்ட கவிதை தொகுப்பு “கடைசி பெஞ்ச்”. இளையோருக்கான இத்தொகுப்பிலிருந்து ந. பெரியசாமி நகர்ந்து தற்போது வந்து சேர்ந்திருக்கும் தளம் முற்றிலும் வேறானது. அந்தரங்கமானது. 


காதல் - காமம் இவற்றிற்கிடையேயான மெல்லிய கோட்டை பற்றியபடி தலைவன் தலைவி இடையேயான ஊடலைச் சொல்லும் கவிதைகள் சற்றே ஓர் வார்த்தை பிசகினாலும் வேறு அர்த்தத்தில் புரிந்து கொள்ளப்பட்டு சரிந்திடும் அபாயமுள்ளது.  ந. பெரியசாமி லாவகமாக அதனை தாண்டி தான் சொல்ல வந்ததை அழகாக வாசகனுக்கு கடத்தியுள்ளார். 

சங்க பாடல்களில் தலைவன் தலைவிக்கிடையேயான ஊடலை சொல்லும் பல பாடல்களை நாம் அறிவோம். பெரும்பாலும் அவர்களுக்குடையே தோழி மிக முக்கிய பங்கு வகிப்பார் . அவரின் கூற்றாகவே பாடல்கள் அமையும். நவீன யுகத்தில் தோழியின் இடம் தேவையற்றதாகிவிட்டது. நேரடி கூற்றாகவே கவிதைகள் படைக்கப்படுகின்றன. 


இத்தொகுப்பில் “அந்தரங்க நிலா”, “ தாப ப்பித்து” என இருபகுதிகளாக உள்ள பெரும்பாலான கவிதைகள் தலைவன் கூற்று, தலைவிகூற்றாகவும் சில இருபாலர்கூற்றாகவும் உள்ளது. 

தலைவன் தலைவி உறவு என்றாலே பசலைக்கு தவிர்க்க இயலாத இடமுண்டு இல்லையா?? இங்கு அது எப்படி படர்ந்துள்ளது என பார்க்கலாம்.


“பின்னலிட்ட சடையெனப்

பிணைந்து கிடக்கையில்

துவாரம் புகும் நூலென

காற்றின் குளிர்மையை

உயிர் உணரத் துவங்க

பசலை பூக்கும் எனதுடல்

வெப்பத்தினால் வதங்கும்

அந்திப் பூவிதழ்களாக

அடைந்திடும் மாற்றம்

அதற்குள் கொடியோனென

சுடுசொல் விழுங்கும் முன்

ஊரார்க்கு உணர்த்திடு நெஞ்சே

மரம் விலக்கும் இலையல்ல

மறைந்து தாங்கும் வேர்களவன்” 


மரம்…..வேர்களவன் என்ன பிரமாதமான வரிகள். 

 

மற்றொன்று

“அல்லவை விழுமென

அறிந்து கொண்ட நொடியில்

சட்டென்று இமை மூடி

கண்களைக் காக்கும் அனிச்சை

பிரிவு கொள்ளும் நினைப்பே

பசலை பூக்கும் எனதுடல்

அறிந்தும் அவன் பிரிவை

ஒப்புக் கொண்டதேனோ

அவனுள் ஏன் புகுந்தனவோ

கள்ளமிக்க சொற்கள்?


..

கூடி இருக்கையில் கூடலின் இன்பம் அ்லாதியானது. “புங்கை அளித்த நிழல் சுவை

நித்திரையைத் தருவித்தது

மீன்கள் கால்களை மொய்க்க

விழித்தவன் விக்கித்தான்

தவளையால்

விழுங்கப்பட்டிருப்பதை அறிந்து

நீர் சூழ்ந்த பாறையில் அமர்ந்திருந்தவள்

அறிவேன் வருவாயனெ

நீர் தெளித்து விளையாடினாள்

ஆடை கலப்பற்ற உடலாகி

மீன்களோடு மீன்களானோம்

வெட்கத்தில் சூரியன்

தன்னை ஒளித்துக் கொண்டது. 

… 

வெல்லக்கட்டிகளைச் சுமந்தலையும் எறும்புகள்” என்ற நீள் கவிதை தொட்டதை  மீள மீளவும் தொடுவாய் என்பதை அழகாக உணர்த்திடும் கவிதை. இந்த வகையில் காம பிரிவாற்றாமை, பொல்லா வறுமுலை இரண்டும் அடங்கும்.  நீண்ட இடைவெளிக்குப்பின் தளர்ந்து வரும் தலைவனுக்கு எதை அளித்தால் அவன் வீறு கொள்வான் என அறிந்திருக்கும் தலைவி தன்னை ஒப்படைப்பதை சொல்லும்  “பிரிவு “ கவிதை தொகுப்பின் முக்கிய கவிதைகளில் ஒன்று. “ஆடி” இன்னுமொரு சிறப்பான கவிதை 

புது வரவு

அறையுள் ஆளுயரக் கண்ணாடி

அடிக்கரும்பைத் தின்றவளானாள்

…..என தொடங்கி சொல்லிச்  செல்லும் கவிதை இப்படி முடிகிறது

ஊர்க்கோடி கோவிலின் முன்

நின்று கிடக்கும் தேரில்

பொதிந்து கிடக்கும் சிற்பங்கள்

ஒன்றன்பின் ஒன்றாக  “”””


தேரை ரசித்தவர்கள் இக் கவிதையை அதிகம் உணர்வார்கள். 

பல கவிதைகளின் தலைப்புகள் சங்க பாடல் வரிகளிலிருந்து எடுத்தாண்டுள்ளதும் அக்கவிதைகள் அதற்கு நியாயம் செய்துள்ளதும் முக்கியம்

உவந்துறைவர் உள்ளத்துள்

வாலெயிறு ஊறிய நீர்

மடலேறுதல்

இருநோக்கு இவளுன்கண்

…..

திரெளபதி எனும் கவிதை முற்றிலும் வேறு கோணத்தில் அமைந்த கவிதை. 

இக்கவிதைகளை முழுவதும் ரசிக்க கூட்டத்தில் வாய்விட்டு வாசிப்பதைவிட தனியாக ஏகாந்தமான நிலையில் வாசிப்பது அக்கணத்தை மேலும் அழகாக்கும். அத்தகைய personal poetry இத்தொகுப்பு. 

கவிஞர் ந. பெரியசாமிக்கு  வாழ்த்துகள். அழகான கோட்டோவியங்களுடன் இந்த தொகுப்புனை பதிப்பித்த சொற்கள் கே.சி. செந்தில்குமாருக்கு பாரட்டுகளும் வாழ்த்துகளும்.


மகிழ்ச்சியும் நன்றியும் : Munavar Khan

Friday, September 8, 2023

நன்றி: நுட்பம்

 

வலிகளை வாங்கிப்போகும் கடலலைகள்

ந.பெரியசாமி.

*

 

நம்முள் துளிர்த்த செடி தொடர்ந்து வளர்ந்துகொண்டு இருக்க வேண்டும். வளராதுபோக பிடிங்கி எறிந்து மாற்றுச் செடியை துளிர்க்கச் செய்திடுவோம்.  வளர்வது தானே எல்லாவற்றின் பண்பு. வேல் கண்ணனும் தான் இயங்கும் கவிதை தளத்தில் தொடர்ந்து இயங்கியபடி இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

மௌனத்தை குறியீடாக கொண்டு தளர்வான மொழிநடையில் எழுதப்பட்ட கவிதைகளைக் கொண்ட "இசைக்காத இசை குறிப்புகள்" நூலில் தொடங்கி, நாம் அன்றாடங்களில் எதிர்கொள்ளும் வாழ்வியல் கூறுகளை அதனதன் பண்போடு தன் மொழியால் விசாலப்படுத்திய தன்மைகளைக் கொண்ட கவிதைகளோடு வந்த " கனவுகள் மேயும் பாம்பு நிலம்" பலரின் கவனிப்பை பெற்றுத்தர, மூன்றாவது கவிதை தொகுப்பாக "லிங்க விரல்" வந்துள்ளது. பிசிறுகள் இல்லாது நேர்த்தியான சொல்லல் முறையில் நம் காலத்தின் நிகழ்வுகளில் நம்மை இருக்கச் செய்கின்றன கவிதைகள்.

 

நம்மிடம் அற்புத விளக்கு ஒன்று இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். எல்லோருக்கும் அவர்கள் விரும்புவதை கொடுத்திடலாமே. அவ்வாறு கொடுக்க முடியாத ஏக்கம் தேங்கிக் கிடக்கும் நீராக இருந்துகொண்டே இருக்கும். ஆனால் அற்புத விளக்கும் உண்மையற்றதுதானே. உண்மையற்ற ஒன்றைக் கொண்டு உண்மையை திருப்திபடுத்துதில் இருக்கும் சுவாரஸ்யம் எவ்வளவு அலாதியானது.  நம்மை எப்படியெல்லாம் மகிழ்விக்கக் கூடியது. நாமும் நம் கவிதைகளை அற்புத விளக்காக்குவோம்.  கவிதைகளை அற்புத விளக்கென நம்பினால்  வேல் கண்ணனின் லிங்க விரல்  தொகுப்பிலிருக்கும் முதலிரண்டு கவிதைகளில் வெளிப்படும் பெருமூச்சு  காணாமல்போகியிருக்கும்.

 

காலம் தன் நகர்வை தொடர்ந்துகொண்டு இருந்தபோதும் அவரவருக்கும் உயிர்ப்பான சில நினைவுகளை விட்டுச்செல்ல மறந்ததில்லை.  அது நமக்கு ஊன்று கோலாக மாறி நம்மின் இயக்கத்தை உறுதிபடுத்திவிடுகிறது. அதுவும் பால்யத்தின் நினைவுகள் தரும் ஈரம் பட்டுப்போன செடிகளைக்கூட உயிர்ப்பிக்கக் கூடியதாக இருக்கிறது.

…......

.............

தவறவிட்ட

கோலிக் குண்டுகள்

தோட்டத்து அரும்புகள்

அம்மாவின் கடுங் காப்பி

ஆச்சியின் சீலை

சரோஜ் நாராயணஸ்வாமி

ஆண் பெண் மரப்பாச்சி

ஆலமரத் தூளி

பீங்கான் ஜாடி உப்பு ஊறுகாய்

பழுப்பு ஓலைச்சுவடி

மதியத்தில் எப்பவாவது கேட்கும் மிதிவண்டி சத்தம்....

,.............

.................

இப்படியாக அவரவருக்கான வாழ்வு இருக்கத்தான் செய்கிறது.

 

இதுதான் இதன் இயல்பு, இப்படித்தான் எல்லாம் நிகழும் என்பதை மாற்றி எதையும் சாத்தியப்படுத்தும் தன்மையை அலைபேசி உருவாக்கித் தந்துகொண்டே இருக்கிறது. பழுத்த இலைகளை மட்டுமே மரங்கள் உதிர்க்கும், ஆனால் அலைபேசி திரையில் எல்லா இலைகளும் உதிர்க்கும் மேஜிக் நிகழ்ந்துகொண்டே இருக்கும். இந்த மேஜிக் நம் மனப்போக்கை எப்படி உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்பதை காட்சிபடுத்துவதாக இருக்கிறது.

 

லிங்க விரல்

 

உதிரிலைகளின் நடுவே

பழுக்கத் தொடங்குகிறது

ஒன்று

 

திறக்கப்படாத

அந்தக் குறுஞ் செய்தி

ஒரு வேளை

'பிரத்யாக அழைப்பொலி உள்ளவரிடமிருந்து....'

என்று

மனப்பட்சி நமைக்கிறது

' தொழில் நுட்பக் கோளாறாக இருக்கலாம்'

சமாதான நிழலாடுகிறது

அவ்வப்போது

பதிவுக் குரலைக் கேட்கிறேன்

என் பேச்சினைக் குறைத்திருக்கலாம்

காணொளி அழைப்பில்

நீ தவிர்த்த பார்வை

குறுந்தகவல்கள்

தரவிறக்க சுயமிகள்

தடயமின்றி அழிக்கவும்

தேய்ந்தலைகிறது

லிங்க விரல்

இன்னும்...

 

ஏற்கனவே சொல்லப்பட்டிருக்கும் லிங்கம் சார்ந்த தத்துவார்த்தங்களோடு அலைபேசியையும் இணைத்துப் பார்க்கச் செய்கிறது கவிதை. கவிதையின் முதல் பத்தி தவறான புரிதலையும் கொடுக்கக் கூடிய தன்மையிலும் இருப்பதால், இன்னும் கொஞ்சம் கூடுதல் உழைப்பை செலுத்தியிருக்கலாம்.

 

நண்பர்களோடு உரையாடியபடி இருக்கும்போது விக்கல் ஏற்பட்டால் எதிர்பாராத கணத்தில் அதிர்ச்சி உண்டாக்க எதையாவது சொல்லும்போது அதன் விளைவால் விக்கல் நின்றுபோவதுண்டு. வாசிப்பின்போது உண்டாகும் விக்கலை நிறுத்தும் சொல்லாடல்களாக ' பாறை உடைத்த தேரை', ' விண்வெளி விழுங்கிய நிலா'  ' முது நிழல்' போன்று தொகுப்பில் நிறைய ரசிக்கத்தக்க தடுப்பான்கள் உண்டு.

 

"எப்போதோ ஓடிய நதியின் குளுமை

என் கண்ணத்தில் நான் அழுத்திக் கொண்டிருக்கும்

கூழாங்கல்லில் தங்கியிருக்கிறது

இருத்தல்

அதனின் பொருட்டே நீள்கிறது

தேவை"

 

 

சொற்கள் பிணைவு கொள்ளும் தன்மைக்கேற்ப கவிதை நம்முள் ரசவாதத்தை உருவாக்கும். கூழாங்கல், குளுமை  எனும் இச்சொற்கள் கவிதையாற்றில் ஒடி பிணைவுகொள்ள நம்முள் ஒரு நதியை பிறந்தோடச் செய்திடுகிறது. ' கூழாங்கல்லில் தங்கியிருக்கிறது இருத்தல்' எனுமிடத்திலே கவிதை முற்று கொள்கிறது. பின்னிருக்கும் வரிகளை எடுத்திருக்கலாம் அல்லது கவிதையின் தொடக்கத்திற்கு கொண்டு சென்றிருக்கலாம் எனப்படுகிறதெனக்கு.

 

 

சுள்ளிகளைச் சேகரிக்க

வெறுங்காலுடன்

மலையேறிக் கொண்டிருக்கிறது

முது நிழல்

என முடிவுறும் " மலை தரிசனம்" கவிதையில் ஐந்து அனுபவங்கள் காட்சிபடுத்தப்படுத்தப்பட்டிருப்பதில் வேல்கண்ணனின் மொழியில் தொடர் பயணிப்பின் முதிர்ச்சியை கண்டடைய முடிகிறது.

 

பொருள்காட்சி வளாகத்துள் ஏதேனும் ஒரு மூலையில் மனித தலை மீன் உடல் என  வசீகரிப்பு மிக்க விளம்பரங்களோடு இருக்கும் மேஜிக் கூடாரம்போல் தொகுப்பில் எல்லை வீரன் தலைப்பிட்ட கவிதையுள்  தங்கி வியந்தபடி பயணிப்பை தொடரச் செய்கிறார். இயல்புக்கும், இயல்பற்றதுக்குமான மனச்சித்திரங்களை அடுக்கிக் கொள்ளச் செய்கின்றன கவிதைகள்.

 

திண்ம நிலை நீர்ம நிலையை அடையாது திண்மத்திலிருந்து ஆவியாகுதல் பண்பைக் குறிக்கும் பதங்கமாதல் எனும் அறிவியல் விதியை கவிதைக்குள் முயற்சித்து பார்த்துள்ளார். பேருந்து ஒன்றில் விற்கப்படும் வெள்ளரி பேருந்தில் பயணிப்போரை குளிர்விக்கும் கணத்தை  ' பதங்கமாதல்' கவிதையில் காட்சிபடுத்தியுள்ளார்.

 

தொடரும்

*

என் கிளை மீது

வந்தமர்ந்த பறவை

இளைப்பாறிய பின் பறக்கிறது

மீண்டும் இளைப்பாற அமரும் வரை

பின் தொடர்ந்து செல்லும்

என் கிளை.

 

இக்கவிதையில் கிளை என்பதை மனம் எனக் கொள்ளலாம். நுண்ணுனர்வின் மெல்லிய பின்னலே மனம். அது எளிதில் நிறைவு கொள்ளாது. அரிதினும் அரிதினைக்கூட மீண்டும் கைக்கொள்ள ஆசைகொண்டபடியே இருக்கும். மனம் குறித்த தத்துவார்த்தங்களை மீண்டும் அசைபோடவும், அதன் சுழலுள் இருந்துகொண்டிருக்கவும் செய்கிற இக்கவிதையைப் போன்று தொகுப்பில் நிறைய்ய கவிதைகளை காணமுடிகிறது. தனித்திருப்பவனின் மனப்போக்கின் வெளிப்பாடுகளே 'லிங்க விரல்' தொகுப்பின் மதிப்பீடாக சொல்லவும் ஏதுவாக இருக்கின்றன கவிதைகள்.

 

நம்மை நாம் உணரும் தருணங்கள் விசித்திரமானவை. எக் கணத்திலும் அது நிகழக் கூடும். சில செயல்கள் உடன் போதிமரமாகி நமக்கு ஞானத்தைக் கடத்தக்கூடும். சிலருடனான உரையாடலில், குழந்தைகளுடனான பொழுதில், கேட்கும் பாடலில், வாசிப்பில், பயணத்தில் என அதன் பட்டியல் நீண்டிருந்த போதிலும் கவிதைகள் சட்டென நம்மை வேறொன்றாக உருமாற்றும் தன்னை கொண்டவை. என்றாவது நமக்கு நிகழ்ந்ததாக இருக்கும் கவிதையின் வழி நினைவில் பிறக்கும்போது அது நம்முள் கிளர்த்தும் அனுபவங்கள் வேறானவை. லிங்க விரல் நம்முள் வேறு வேறான அனுபவங்களை நினைவுகொள்ளச் செய்கிறது.

 

இழப்பொன்றுமில்லை/ என்னை என் பக்கம் சாய்த்திருக்கிறாய் என முடிவுறும் புறக்கணிப்பு குறித்த கவிதையில் இழப்பொன்றுமில்லை என்பது நம்மை நாமே சமாதானம் கொள்ளச்செய்யும் மருந்து. புறக்கணிப்பின் நோய் முற்றி காணாமல் போய்விடாது நம்மை காக்கும் சூரணமாகவும் அச்சொல் இருக்கிறது. எல்லோருடைய வாழ்விலும் இப்படியான சில சொற்கள் மாத்திரைகளாக மாற்றம் கொண்டு நம்மின் இருப்பை சாத்தியமாக்குகின்றன.

 

கொரானா எனும் சொல்லை சமகாலத்தவர் எவரும் எளிதில் கடந்துவிட முடியாது எல்லோருக்குள்ளும் ஆனி வேராக ஊடுறுவி உள்ளது. அதன் பாதிப்பு எல்லோருடைய படைப்புகளிலும் இருப்பதென்பது இயல்பாகிப்போனது. ' மிக நீண்ட தூரம்' என வேல்கண்ணனும்.

 

தொடக்கத்தை நிர்ணயிக்கும் பூவா, தலையா போட்டுப்பார்த்தல் அழகின் வெளிப்பாடு. உடனடியாக மலர்ச்சியையும், ஏமாற்றத்தையும் தரவல்லது. ரகசியத்தை அவிழ்க்கும் முன் மனம் அறியும் சமிக்ஞையை உணர்த்துகிறது இக்கவிதை.

 

நாணயத்தைச் சுண்டி

உள்ளங்கைகளில் மறைக்கிறேன்

மலர் தொடுக்கவே விருப்பம்

உள்ளங்கை விரியாமல்

கணமொன்று மலர்கிறது.

 

"கவிதையில் ஒரு மரம் வரைகிறேன்

கவிதையில் ஒரு தோப்பு வரைகிறேன்

கவிதையில் கானகம் வரைகிறேன்".

 

மரம், தோப்பு, கானகம் திரும்பி வரவழைக்கும் ஆற்றல் கொண்டவை. அதையும் மீறி ' முதல் வரி எழுதுவதற்கு முன்பிருந்த பறவை/ திரும்பி வந்தபாடில்லை' என முடிவுறும் இக்கவிதையில் ஏமாற்றத்தின் தீவிரம் எத்தகையது என்பதை உணர்த்துவதாக உள்ளது.

 

பேரமைதியை சிம்னியின் ஒளியாக்கி தன்னுள் வைத்திருப்பவர் புத்தர். அவர் குறித்த புரிதல் இல்லாத பிரளயத்தில் இருப்பவர்களையும் வசீகரிக்கும் ஈர்ப்பு புத்தரிடம் உண்டு. சிறார்கள் பெரும்பாலானோர் புத்தர் சிலையை வாங்கி வருவது அதனால் கூட இருக்கலாம். ஓவியம், சிலை, போஸ்டர் என எதில் பார்க்க நேர்ந்தாலும் நம்முள் ஒரு அமைதி பரவுவதை உணர முடியும். வேல்கண்ணன் ' வளரும் புத்தர்' கவிதையில் நமக்கான புத்தரை நினைவு படுத்துகிறார்.

 

எல்லோருடன் இருந்தபோதும் தனித்திருந்து எல்லாவற்றையும் உற்றுநோக்கியபடி இருப்பவனின் துயர்கள், கனவுகளின் சித்திரங்களும், எல்லோருக்குமான எல்லா வலிகளையும் வாங்கிப்போய் நடுக்கடலில் விட்டு வரும் கடலலைகள் நம்மை மீட்சிகொள்ளச் செய்யும் எனும் நம்பிக்கையும் மிளிர்கிறது வேல்கண்ணனின் ' லிங்க விரல்' தொகுப்பில்.

 

வெளியீடு: யாவரும் பப்ளிஷர்ஸ்

 

விலை: 110

Tuesday, July 4, 2023

நன்றி: செம்மலர்

 நிலம் பூக்கும் சூரியன்கள்

- ந.பெரியசாமி



அங்கும் இங்குமாக எதன்பொருட்டு என்பதை அறியாமலே அலைந்துகொண்டிருக்கும் நாய்களின் பொழப்பை ஒத்ததாக இருக்கிறது நம் வாழ்வும். கொஞ்சம் நிதானிக்கச் செய்து தவறவிட்டவைகளின் அழகியலை காட்டி, ஒளிர்வை காணாது கண்மூடிக் கடந்ததைச் சுட்டி, இதுவும் வாழ்வுதான் எதை வாழ்கிறாய் என கேள்விகேட்டு, நம்முள் குடியேறிக்கொண்டிருக்கும் மிருக குணங்களை கழட்டி விட்டபடியிருக்கிறது கலை இலக்கியங்கள்.  அதில் மிகு நுண்ணுணர்வையும் பிரதிபலிப்பதாக உள்ளன கவிதைகள். காலகாலமாக எழுதப்பட்டுக்கொண்டிருந்தாலும் இன்னும் சொல்லப்படாத சங்கதிகள் இருந்துகொண்டே இருக்கின்றன. நந்தன் கனகராஜ் தன் மேழி நகரும் தடம் தொகுப்பில் நமக்கான புதிய சங்கதிகளை வைத்துள்ளார். அவரின் முந்தைய தொகுப்பிலிருந்து மாற்றம் கொண்டு கவிதை சொல்முறையில் கச்சிதத்தன்மையை அடைய முயற்சி செய்துள்ளார். 


உறுதித்தன்மையை பிரதிபலிக்கக் கூடியது பாறைகள். ஆனால் அப்பாறைகளில் மெல்லிய கோடிட்டு ஓங்கியடிக்க பிளவுகொண்டுவிடும். ஒருவிதமான இளகியத்தன்மையை அது உள்ளொடுங்கி வைத்துள்ளது. அது நீரின் சலனமாகவும் பறவைகளின் கீச்சொலிகள், மரங்களின் பேச்சு என சலனம் கவிதையில் கண்டடைந்துள்ளார்.


உலகம் தொடர்ந்து மாற்றங்களை எதிர்கொண்ட போதும் 'கவனமாக விடிந்து, சரியாக இருட்டி' கிராமங்கள் அதற்கேயுரிய தனித்தன்மைகளை இன்னமும் கூட அடைகாத்து வைத்துக் கொண்டிருப்பதை காட்சிபடுத்துகின்றன கவிதைகள்.


" யார் தச்ச சட்ட...

இது

எங்க தாத்தா தச்ச சட்ட..." 

எனும் சிறார்களின் பாடல்களில் மிதந்து வழியும் கொண்டாட்டம் நம்மை என்றும் தொற்றிக் கொள்ளும். இதுபோன்ற பாடல்கள் வழக்கொழிந்து போன காலத்தில் நம்மை காலத்தால் பின்நோக்கி பயணிக்க வைக்கிறது கவிதை. நம் நிர்வாணத்தை மறைக்க உற்பத்தி செய்த பாடுகளை மெச்சும் பாடல் அது. நிலம் பூக்கும் வெள்ளைச் சூரியன்களான பருத்தியை விளைவிக்கும் வாழ்விலிருக்கும் வாதைகளிலிருந்து ஆசுவாசம் கொள்ளச் செய்யும் பாடல் அது. 'நீர்- நிறை- வெள்ளை' கவிதையில் கசப்பேறாத கிராமத்து இளைஞனான கனகராஜிடம் இக்கவிதை உருக்கொண்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.


கொத்து மலர்களைக்

கையளித்து

வார்த்தைகளற்று நிற்கிறேன்.


உள்ளிருந்து 

ஒளிரும் சுடருக்கு

மலரின் சுகந்தம்.

*

தொலைவு


கைப்பிடித் தண்ணீரில்

வரவேற்பறையின் மலர்

புன்னகைக்கிறது.


நெடுந் தொலைவில் 

அதன்

இளந் தண்டுகளை

வெயிலுக்கு ஏந்தி நிற்கிறேன்.


இந்த இரு கவிதைகளும் அகத்திற்கும் புறத்திற்குமான ஓர்மையை உணர்த்துகின்றன. கொத்து மலர்களை கையளித்த போதும் மனதுள் அதன் நறுமணங்களை வைத்துக் கொள்ளுதலும், வரவேற்பறை மலர் கண்ட கணம் தொலைவிலிருக்கும் குளமாக மாற்றம் கொண்டு, இளம் தண்டைத் தாங்கும் நீராகவும் தன்னை மாற்றிக் கொள்ளும் உருமாற்றம் தரும் அழகியலை ரசித்துக் கிடக்க செய்கின்றன கவிதைகள். ' வெளி வெளிச்சம்' எனும் கவிதையில் வரும்  ' காட்டுப் பூக்களாக மலர்ந்து நிற்கிறேன்' என்பதையும் இதனோடு பொருத்திப் பார்க்கலாம். கண்டராதித்தனின் திருச்சாழல் தொகுப்பில் வரும் 'ஞானப் பூங்கோதைக்கு  நாற்பது வயது' எனும் கவிதையில் கவிசொல்லி ஞானப் பூங்கோதையாக மாறுவதும், பின் ஞானப் பூங்கோதையாகவே வாழ்ந்திருப்பதையும் கூறும் பொக்கிசமான அக்கவிதையும் நம்முள் வந்துபோகும்.



அறத்திற்கு புறம்பான செயல்களைச் செய்ய நம்முள் குற்ற உணர்வுகளை எற்படச் செய்யாது, அதனை சமன்செய்ய அல்லது மன்னிப்பை பெற பரிகாரம் எனும் ஏற்பாட்டை உருவாக்கியிருக்கும் மதச் செயல்பாட்டை பரிகாசம் செய்கிறது 'பரிகாரம்' கவிதை.


எவரிடம் எதை எப்படி பேசவேண்டும் என அறிந்திருந்தல் ஒருவித கலை, இவன் இவன் எதற்காக இதை பேசுகிறான் என அறிந்துகொள்ளுதல் மற்றொரு கலை. உங்கள் எழுத்து பாரதியை நினைவூட்டுகிறது என்பதையும், உங்கள் வாழ்வில் காந்தியை காண்கிறேன் என்பதையும் நம்மால் மெச்சிக்கொள்ள இயலுமா? சிலருக்கு நாணம் நாக்கை தொங்கச் செய்திடும், பலருக்கோ புத்தியை அழிக்கும் போதையூட்டும். 'சொல்' கவிதையில் வரும் 'சொல்லை நாடகமாடச் செய்தல்' எனும் கூற்று அழகு.


பொதுபுத்தியில் இன்னமும் கூட பெண் குழந்தைகளை பெற்றவர்களின் மீதான பார்வை எத்தகைய அபத்தமிக்கது என்பதை உணரச் செய்கிறது 'துலக்கம்' கவிதை. ஐந்து பெண் பிறந்தால் அரசனாக இருந்தாலும் ஆண்டியாவன் எனும் சொலவடை வேறு. அவர்கள் எத்தகைய செயலைச் செய்தாலும் வீட்டில் பெண் பிள்ளை இருப்பதை மறந்திட்டியா என தொடர்ந்து குற்றவாளி போன்ற மனநிலையில் வைத்திருக்கச் செய்யும் மனப்போக்கு தற்காலத்தில் மாறியிருப்பது ஆறுதலாக உள்ளது. வாழ்வின் மீதான பயம் எதை எதையெல்லாம் பிடித்தாலும், பிடிக்காவிட்டலும் சமன்செய்து வாழவேண்டி இருக்கிறது என்பதை 'அச்சம்' கவிதையில் உணரலாம்.


யுக கசப்பு


உலகின்

கடவுச் சொல்லைக் கொண்டு வந்த

சிசு

கைகளை இறுக்கி மூடியிருந்தது

இனிப்புச் சுவையின் 

மூன்று சொட்டுகளை

ஒவ்வொருவராக

நாக்கில் விடத் தொடங்கினர்

நிர்வாண உடம்பில் தொற்றிக் கொண்ட

எல்லாவற்றிற்குமாக

வீறிடத் தொடங்குகிறது.


பிளவுகொண்டு வரும் பிறப்புகள் அனைத்துமே ஏதேனுமொரு மாற்றத்தைக் கொண்டு வரும் கடவுச் சொல்லோடே இருக்கும். கண்களையும் கைகளையும் இறுக்கிக் கிடக்கும் குழந்தையின் வாயில் உன் வருகையின் பொருட்டு எங்களின் மகிழ்விதுவென்பதைச் சுட்டும் முதல் சொட்டும், அனைத்து உயிர்களிடத்திலும் அன்பாய் இரு என இரண்டாம் சொட்டும், கற்றறிந்து புதியனவற்றை இவ்வுலகுக்கு வழங்கென மூன்றாம் சொட்டும் வைத்து எங்கள் மிதேறிக் கிடக்கும் கசப்பை அகற்று எனும் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க சிசு வீறிடுகிறதென்றும் நமக்கான அர்த்தத்தை உருவாக்கிக் கொள்ளவும் கவிதை இடமளிக்கிறது.


ஒப்பீடுகள் சிக்கல்களையும், சங்கடங்களையும் உருவாக்கக் கூடியதுதான். ஆனால் சமூகம் குருட்டாம்போக்கில் ஒப்பீடுகளை செய்துவிடுவதில்லை. அப்பனுக்கு பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கிறது, தாயப்போல பிள்ளை, நூலைப்போல சேலை என்பதைப் போன்று, பேரைக் கெடுக்க பிறந்திருக்கான் பாரென்றும் சொல்வதுண்டு. நிறம் உருவ ஒற்றுமை மட்டுமே காரணிகளாக இருந்துவிடுவதில்லை. பண்புகளையும் அறிந்த பின்னே சொல்லப்படுவதுண்டு. நமக்கு வேண்டுமென்றால் நிறைவுகொள்ளாதிருக்க சங்கடங்கள் ஏற்படுவதை நேர்த்தியாக விவரிக்கும் 'சிக்கல்கள்' கவிதையில் தன் தாத்தாவின் பெருமிதத்தையும் சொல்வதாக இருப்பதால் இக்கவிதை மேன்மையடைகிறது. 


சிக்கல்கள்


தாத்தனின்

கடைந்தெடுத்த உருவம் என்கிறார்கள்.


அத்தனை நெருக்கத்திலா

தள்ளி விடுவது.


எதிர்படுபவரிடம்

தொலைவைச் சுருக்கும்

எந்தப் பதிலையும் எனக்குத் தெரியாது.


சேகரிப்பில் உள்ள

தானியங்களை விதைத்து

அனைத்தும் தர இயலாது.


வாய்க்காலும்

வண்டி மாடுகளும்

நிலைகொள்ளாமல் இருக்கும்

உழைப்பை வழங்க முடியாது.


ஒவ்வொரு பருவத்திற்கு

முன்னும் பின்னும்

மண்ணை வயப்படுத்தும்

நுட்பம் திறக்க வராது.


இணையிடம்

அப்படியொரு காதலில்

நிறைந்திருக்கத் தெரியவே தெரியாது.


என்னை

அவ்வளவு

முண்டியடித்துத் தள்ள வேண்டுமா

என்ன.


இக்கவிதையில் நாம் நமக்கான தாத்தாக்களையும் வாழச் செய்திடலாம்.


பரந்துபட்ட வாசிப்பும் எழுத்தின் மீதான காதலும் நிறைந்து சமூகத்தில் அன்றாடம் சனங்களோடு புழங்கி, தாத்தா, பாட்டிகளின் வாழ்வு குறித்த சொற்களை மனக்குதிரில் கொட்டி வைத்திருக்கும் நந்தன் கனகராஜ் மொழியில் தனக்கான தனித்த நடையும், சொல்லல் முறையும் கண்டடைந்து மொழிக்கு நிறைவான பங்களிப்பை செய்வார் எனும் நம்பிக்கையை வலசை பதிப்பத்தில் வந்திருக்கும் 'மேழி நகரும் தடம்' தொகுப்பு ஏற்படுத்துகிறது.