Wednesday, July 6, 2022

நன்றி: தமிழ் இந்து

 

தடைபடாத நீர் ஓட்ட அழகு.
*

க.மோகனரங்கன். இப்பெயர் ஓர் மந்திரச் சொல். நினைவில் சட்டென நிதானத்தை கொண்டுவரும் தன்மை கொண்ட எழுத்துக்காரர். தூரிகைகளும் வர்ணங்களும் இல்லாது நம்முள் சித்திரங்களை வரைந்து செல்லும் கவிமொழிக்காரர். தற்பெருமையும், தளும்புதலும் இல்லாது மொழிக்கு வளமை சேர்த்தபடியே இருப்பவர். நான்கு கவிதை தொகுப்புகள், இரண்டு கட்டுரை நூல், ஒரு கதை தொகுப்பு, இரு மொழிபெயர்ப்பு நூல்களென இவரின் பங்களிப்புகள் நீண்டுகொண்டிருக்கின்றன.

வரப்பிலிருக்கும் புல்லை அறுத்து சீர்செய்தபடியே இருக்கும் தாத்தாவிடம், தண்ணியோடத்தானே போகுது, எதுக்கு ஓயாம அதுகூட மல்லுகட்டுறீங்க என்றேன். தடைபடாத தண்ணியோட்டம் ஒருவித அழகுடா எனக்கூறி அவ்வேலையை தொடர்ந்து செய்தார். 'கல்லாப் பிழை' தொகுப்பை வாசிக்க இச்சம்பவம் நினைவிற்கு வந்தது. கச்சிதத்தன்மையே வாசிப்போட்டத்தின் பேரழகு. 

'வாசனை' கவிதை வரைந்த பூக்கட்டும் பெண் தொடங்கி 'கிளிப்பெண்'ணோடு கூடடைந்தது நல் அனுபவம்.

மலையில்/ ஏறம்போது/ மருளவும்/மலரில்/ஊறும்போது/மயங்கவும்/தெரியாத/எறும்பிற்குத்/ திறந்திருக்கிறது/எல்லாத் திசைகளிலும்/ பாதைகள். 'திறப்பு' கவிதை எறும்பை சாவியாக்கி நம்முள் மூடுண்ட கதவுகளை திறக்கச் செய்திடுகிறது.

இரண்டு கால்களும்/இரண்டு கைகளும்/எவ்வளவு உழைத்தும் போதவில்லை/ஒரு வயிற்றுக்கு... என்று நீளும் 'நடைவழி' கவிதை கொரானா காலத் துயர்களின் சாட்சியாக நிற்கும்.

அன்பின் முடிச்சு சூட்சுமம் மிகு குகை போன்றது. கழுத்துக்கு மட்டுமல்ல, காலாகாலத்திற்கும் உடனிருந்து மர்மங்களை அவிழ்த்து புதிய உலகை தரிசிக்கச் செய்தபடியே இருக்கக் கூடியதும்.'முடிச்சு' கவிதை பயணிப்பு.

பிடித்த பாடலுக்கு மனம் தானாய் தாளமிடும். இத்தொகுப்பில் பெரும்பாலான கவிதைகளுக்கு மனம் தாளமிட்டவாறு இருப்பதை உணர்ந்து கொள்ள முடியும்.

அசையாத உறுதியையும், அவசரமில்லாத நிதானத்தையும் புழுவாக ஊர்ந்து வாழ வழிகாட்டும் 'அடங்கல்' கவிதை ஞானத்தின் திறவுகோலாகிறது.

எல்லோருக்குள்ளும் ஒரு குழந்தை இருந்துகொண்டிருக்கும். அக்குழந்தையை, மொழி எப்பொழுதாவது வெளிக்கொணர்ந்திடும். மதுவிடுதியில் வேலைபார்க்கும் சிறுவனின் பையிலிருந்து சிதறிய கோலிக்குண்டுகளை எல்லோரையும் பொறுக்கித்தர செய்த யூமாவாசுகியின் கவிதையை நினைவூட்டிய 'நிறைதல்' கவிதை தரை தாழ விடாமல் வண்ண பலூனை ஏந்தச் செய்தது. இக்கவிதையின் நீட்சியாக 'ருசி' கவிதையும் நம்மை வாழச் செய்கிறது.

....இருப்பினுமிந்த/மனதை திருப்புவதுதான்/மலையைப் புரட்டுவதுமாதிரியிருக்கிறது. என்று முடிவுறும் வே.பாபுவின் நினைவுக்காக எழுதப்பட்ட 'நினைவூசல்' கவிதை இணக்கமான தோழமையோடிருந்த நாட்களை மீட்டுத் தந்தது. அப்பாவின் நினைவில் எழுதப்பட்ட 'வழி'கவிதை கண்களில் நீர் முடிச்சுகளை உருவாக்கியது.

கல்லாப் பிழையும், கருதாப் பிழையும், கசிந்துருகி எனத் தொடங்கும் பாடலில் இறைவனைப்பற்றிய நூல்களைப் படித்து, அதன்படி வாழ்வை நடத்தாமல் இருப்பதை கல்லாப் பிழை என்கிறார் பட்டினத்தார். க.மோகனரங்கனின் 'கல்லாப் பிழை'யோ வாழ்வு எட்டி நிற்பதல்ல, நிழலாய் உடன் நிற்கும் வாழ்வின் மீதான பிடிப்பை இணக்கமாக சொல்லிச் செல்கின்றது.

வெளியீடு: தமிழினி
விலை: ரூ.90

No comments:

Post a Comment