ராமநாயக்கன் ஏரி உயிர்ப்பிக்கும் கருவறை
இந்த உலகத்தில் முதன்முதலில் பேசத் தொடங்கியது ஓடையில் ஓடும் நீர்தான். அப்பொழுது தாவரங்கள் கிடையாது. பறவைகள் கிடையாது, விலங்குகள் கிடையாது, மனிதர்களும் கிடையாது. மனிதர்களே இல்லை என்கின்றபோது அவனது மொழிகள் மட்டும் எங்கிருந்திருக்கப்போகின்றன? பேசுவதற்கு ஆள் இல்லாமல் இருந்த நீர்தான் பேச்சுத்துணைக்கு முதலில் தாவரங்களை முளைக்க வைத்ததாம். அத்தாவரங்கள் தாம் பேசுவதற்காக பூக்களை படைத்ததாம். பூக்கள் தாம் பேச கனிகளைச் சமைத்தது. கனிகள் தாம் பேச பறவைகளை அழைத்தது. இப்படி வரிசையாக வந்து மனிதர்களில் முடிந்தது. இந்த மனிதர்களுக்கு அப்பொழுதெல்லாம் மற்ற மனிதர்களின் முகம் தான் தெரியும். தன் முகம் எப்படி இருக்குமெனத் தெரியாது. அம்மனிதர்கள்மீது ஓடைநீர் இரக்கப்பட்டு இந்தா உன் முகத்தைப் பார்த்துக்கொள் என்று தன்னையே கண்ணாடியாக மாற்றி மனிதர்களுக்கு அவர்களை அடையாளம் காட்டியது. அது ஒரு ஓடும் கண்ணாடி. பேசும் கண்ணாடி. அக்கண்ணாடியோடு எல்லா உயிர்களும் இன்னமும் உரையாடிக்கொண்டுதான் இருக்கின்றன. உரையாடலை நிறுத்திய முதல் உயிரி மனிதர்கள்தான். மனிதர்கள் எப்போது தனக்கென்று ஒரு கண்ணாடியைத் தயாரித்துக்கொண்டு இனி எல்லோரும் இதில் முகம் பார்த்துக்கொள்ளுங்கள் என்று சக மனிதர்களுக்குச் சொன்னார்களோ அப்போதே இந்தக் கண்ணாடியின் மீது கல்லைப்போட்டு உடைக்கவும் செய்துவிட்டார்கள். சூழலியல் எழுத்தாளர் நக்கீரன் எழுதிய காடோடி நாவலில் தொல்குடியின் கூற்றில் வரும் நீரே நம் ஆதாரம். இந்நீரை சேமிக்கத்தான் குளங்கள் வெட்டப்பட்டன. குளங்கள் காலப்போக்கில் ஏரிகள் என்றும் அழைக்கப்பட்டன. நம் முன்னோர்கள் நீரை சேமிக்க காட்டிய அக்கறையும் ஆர்வமும்தான் நம்மை இவ்வளவு காலம் உயிர்ப்போடு வைத்திருக்கிறது. அப்போது வாழ்ந்த மனிதர்கள் தனக்கு மட்டும் என்றில்லாமல் தன் சந்ததியரின் மீதுள்ள காதலால் அவர்களின் நலன்பொருட்டும் வாழ்ந்ததன் விளைவுதான் நாம் இவ்வளவு காலம் உயிர்ப்போடு வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
1991 ல் நான் பிழைப்பிற்காக ஒசூர் வந்தபோது எப்பொழுதும் மழை, பனி பொழிவு இருந்துகொண்டே இருக்கும். வெய்யில் சுள்ளென அடிப்பதெல்லாம் அரிதாக நிகழும். இச்சூழல் எனக்கு அந்நியமானதாக இருக்க எப்படா இந்த ஊரை விட்டு போவோம் என்ற மனநிலையே இருந்தது. ஆனால் இம்மனநிலை மாற்றம்கொள்ள துவங்கியது. எவரையும் வசீகரிக்கும் தன்மையோடிருந்த ராமநாயக்கன் ஏரியை பார்த்த நாளில். அது கர்ப்பப்பையாக மாறி என்னை தன்னுள் வைத்துக்கொண்டது. கடல்மாதிரி இருக்குடாவென நண்பர்களோடு வியந்த நாட்கள் இன்னமும் மனதுள். அதிகாலை, மதியம், மாலை, நள்ளிரவென எல்லா நேரங்களிலும் ஏரியில் அமர்ந்து ரசித்திருந்த நாட்கள் ஓவியங்களாக நினைவிலிருக்கிறது. அதுவும் மழையின்போது ஏரியை பார்த்திருத்தல் பேரழகாக இருக்கும். விழும் மழைத்துளி ஏரியில் நட்சத்திரங்களாக மிதப்பதை போன்றிருக்கும் காட்சி அலாதியானது. ஏரிக்கும் வானுக்குமான விளையாட்டாக இருந்துகொண்டிருக்கும். மனம் ஊர், உறவுகளின் நினைவில் துயர்கொள்ளும்போது துயர் துடைக்கும் தேவதையாக ஏரி உருமாறிக்கொண்டிருக்கும் அற்புதத்தை அனுபவித்தவர்கள் உணர்ந்திருப்பார்கள்.
பாகலூர் பாளையக்காரரான ராமநாயக்கன் என்பவரே ஏரியை உருவாக்கினார். இதன் அருகில் அகழியுடன் கூடிய கோட்டை ஒன்றும் இருந்தது. அகழிக்கு ஏரியில் இருந்துதான் தண்ணீர் போகும். 1980கள் வரை ஏரியிலிருந்து பாசன வசதிக்கும் நீர் பயன்படுத்தப்பட்டிருந்தது. ஏரிக்கு பூனப்பள்ளி, கர்னூர், அந்திவாடி என பல ஏரிகளிலிருந்து வரும் உபரி நீரே இந்த ஏரியின் ஆதாரமாக இருந்தது. ராமநாயக்கன் ஏரியிலிருந்து வெளியேறும் நீர் இராஜ கால்வாய் வழியாக செல்லும். பாகலூர் சாலை பகுதியில் இருக்கும் விளைநிலங்களுக்கு நீர் பாய்ந்து விளைச்சலை தந்தது. வருடத்திற்கு ஒன்பது மாதங்கள் இக்கால்வாயில் நீரோட்டம் இருந்திருக்கிறது என்ற செய்திகள் ஆச்சரியப்படுத்துகிறது. படித்தவன் சூதும் வாதும் செய்ய ஐய்யோவென போவான் என்ற பாரதியின் கூற்று வெறும் ஆதங்கமாக மட்டுமே நிற்கிறது. இன்று இராஜ கால்வாய் என்ற பெயர் மட்டுமே உள்ளது. கால்வாய் வரைபடத்தில் மட்டும் கோடுகளாக உள்ளது. ஏரி நிறைந்து வெளியேறுவதை பார்த்து பார்த்து பழகிய கண்கள் சூன்யத்தை காண்பதும், என்றுமே வற்றாதெனும் நம்பிக்கை உதிர்ந்த மலரானதும் கொடுமை. அதுவும் வாழும் காலத்திலே பார்த்தது பெரும் கொடுமை. வாழ்ந்து கெட்ட குடும்பம் எனும் அங்காலயப்பு மனிதர்களுக்கு மட்டுமல்ல. ஏரிகளுக்கும் பொருந்தும் போலும். ஏரியை கடந்து செல்லும்போதெல்லாம் அதன் மொத்த நீரையும் சில துளிகளாக்கி கண்கள் கசியச் செய்திடுகிறது.
''இடியுடைப் பெருமழை எய்தா ஏகப்
பிழையாவிளையுள் பெருவளம் சுரப்ப
மழைபிணித்(து) ஆண்ட மன்னவன்'' எனும் இளங்கோவடிகளின் பாடல் முறையாக பெய்யும் மழைநீரை தக்க முறையில் சேமித்து நாட்டை வளம் பெறச் செய்யும் மன்னன் என்றும்...
''நிலம் நெளிமருங்கின் நீர் நிலை பெருகத்
தட்டோரம்ம இவன் தட்டோரே
தள்ளாதோர் இவண் தள்ளாதோரே'' எனும் புலவர் புலவியனாரின் புறநானூற்றுப் பாடலில் நிலம் எங்கெல்லாம் பள்ளமாக இருக்கிறதோ அங்கெல்லாம் நீர் நிலைகள் அமையும் படி கரை அமைத்த மன்னர்களே இவ்வுலகில் அழியாப் புகழ் பெற்று விளங்குவர் என்றும் நம் சங்க இலக்கியங்களில் நீர் மேலாண்மைக்காக இது போன்ற நிறைய்ய பாடல்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இப்படியானதொரு வளம் மிக்க சிந்தனையாலும், செயல்பாட்டாலும் மேலோங்கிய வழித்தோன்றல்கள்தாம் நாம் என்பதை மறந்து அல்லது மறந்ததுபோல் நடித்து நம் அரசுகள் செய்துகொண்டிருக்கும் செயல்கள் நம்பிக்கையின்மையை அளித்துக்கொண்டிருப்பது நம் காலத்தின் பெரும் துயர். சாலை போடுதலும், மேம்பாலம் கட்டுவது மட்டுமே நம் நோக்கமாக சுருங்கிப்போனது. மாற்றங்கள் நிகழ்வது யாராலும் தவிர்க்க இயலாது. ஆனால் எதை அழித்து எதை உருவாக்குகிறோம் என்பதும் கவனிக்கத்தக்கது. நாம் செய்துகொண்டிருப்பதெல்லாம் அம்மாக்களை அழித்து பிள்ளைகளை மட்டும் செல்வாக்கோடு வளர்க்கும் செயலே. விளை நிலங்களையும் நீர் நிலைகளையும் அழிக்கும்போது வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு இப்போ சுங்கவரி உயர்வுக்காக போராடிக்கொண்டிருக்கிறோம். எதையும் முளையிலேயே கிள்ளி எறியவேண்டும் என்பதை செய்யத்தவறியதால் அதன் விளைச்சலை மட்டுமே அறுவடை செய்து அவதியுறுகிறோம்.
ராமநாயக்கன் ஏரியின் அழகும் கம்பீரமும் குமிழித் தூம்பு மதகும் அதன் மேல் அமைக்கப்பட்டிருந்த அழகிய கல் மண்டபமும்தான். ஏற்கனவே இருக்கும் சாலையையே மேம்படுத்தி இருந்தாலே போதுமானதாக இருக்கும். தேவையற்ற விரிவாக்கத்தால் காலம் முழுமையும் பாதுகாக்க வேண்டியதை இழந்து நிற்கின்றோம். பழமையை காக்கும் மனநிலை அற்று பழமைமீதான பெருமிதங்கள் அற்ற அரசும் அதிகார வர்க்கத்திடமிருந்து கல் மண்டபத்தைக்கூட காப்பாற்ற இயலாத நம் வாழ்வு நம்மீது எச்சிலைத் துப்பிக்கொண்டிருக்கிறது. துடைத்து துடைத்து முகப்பூச்சை தடவி மினுக்கிக்கொண்டு திரிகின்றோம்.
ராமநாயக்கன் ஏரிக்கானதாக சுருக்கிப்பார்க்கத் தேவையில்லை. பெரும்பாலான ஏரிகளின் நிலையும் இதுவாகத்தான் இருக்கிறது. புதிதாக உருவாக்க முடியாவிட்டாலும் இருப்பதையாவது காணாமலாக்காமல் விழிப்போடிருப்போம்.
No comments:
Post a Comment