கொரானா பருவம்
- ந.பெரியசாமி
நிகழ்வு - 1
நாய்கள் தன்போக்கில் திரிந்தன
பொழுது நடுநிசியும் அல்ல
தொலைக்காட்சி விளம்பர சப்தங்கள்
அளவுக்கு அதிகமாக
கண்கள் மட்டும் தெரிய வந்தவள்
மாஸ்க் இல்லாத எனை
எமனாக கண்டு
சில அடிகள் தள்ளி
நடையை விரைவுபடுத்துகிறாள்.
தன் பற்களை நட்சத்திரங்களாக்கி
சிரித்துக்கொண்டிருந்தது நிலவு.
*
நிகழ்வு - 2
நின்று
ரசித்துக் கடக்க வேண்டிய
முகமது.
அந்த கண்களில் அத்தனை பேரொளி
குலைத்த நாயின் சப்தம்
அவளின் நினைவை குலைக்க
அப்பொழுதான் வந்து தொலைய வேண்டுமா
சனியன் பிடித்த இறுமல்.
வெருண்டோடினாள்
ஐய்யோ
அவளின் கண்கள்
பொறியில் சிக்கிக் கொண்ட
எலியின் கண்களை நினைவூட்டின
சைரன் ஒலியோடு
எங்கோ ஆம்புலன்ஸ்
விரைந்தோடிக் கொண்டிருந்தது.
*
நிகழ்வு-3
வீடு
விவாதத்தில் இருந்தது
தொலைக்காட்சியின் திரையில்
மரணத்தின் எண்ணிக்கையை
அடுக்கிக் கொண்டிருந்தனர்.
சனி மூலையில் பிரதமரும் சாத்தான் மூலையில் முதல்வரும்
கருணையே உருவாகி
கையேந்திக் கொண்டிருந்தனர்
ஏதோ நினைவில்
எப்பொழுதும்போல் உள்புக
ஏக வசனத்தில் எல்லோரும்
அடேய் கையை கழுவுட.
*
நிகழ்வு - 4
அறிவிப்புகள்
வந்து கொண்டே இருந்தன
மரணக் குழியை
அவரவர்களே தோண்டிக்கொண்டு இருக்கிறீர்கள்.
சானமும் மஞ்சள் தூளும்
தற்போதைய கடவுளர்களாக
அவதரித்துக் கொண்டிருக்க
ஏற்கனவே நம்பப்பட்ட கடவுளர்கள்
பூட்டிய கதவு
இன்றாவது திறக்கப்படுமாவென
காத்துக்கொண்டிருக்கிறார்கள்
சாத்தான்கள் சங்கலி போட்டு பூட்டியிருப்பதை அறியாது.
கடவுளை மக்களும்
மக்களை கடவுளும்
எப்படியும் காப்பாற்றி விடுவார்களென
நம்பிக்கை ஒளியை உருவாக்கியபடி இருக்கிறார்கள்.
No comments:
Post a Comment