Friday, May 6, 2022

பேசும் புதிய சக்தி 2018

 1. நம் மழை


உரையாடலற்றிருப்பது
சொச்ச காலம்தானே என்கிறாய்
அருகிலா இருக்கிறது
கண்ணுக்குத் தெரியும் நிலா.

வாழ்தல்
நாட்களை கடப்பதாகாது
நேற்றில் வாழ்வது
சாத்தியமற்றது- நீயும்
அறிந்த உண்மைதானே.

உன் குரலில் துள்ளும்
அணில் பிள்ளைகளை
தினம் தினம் இழப்பது
அவ்வளவு துன்பகரமானது
எளிதில் சமாதானம் அடையாததும்.

வலியை
நினைவு குணமாக்காது.

அறியாயா
நம்பிக்கையற்ற வானத்தில்
ஆயிரமாயிரம் நட்சத்திரங்கள் ஒளிர்ந்தும்
உணர முடியாது ஊனமாகிறேன்.

அன்பே உரையாடல்தானே
நம்மை எழச்செய்யும்
காத்திருக்கிறேன்.

நம் மழைக்காக.
*

2. விளையாட்டு

முதலில் எதிரியை
தீர்மானிக்க வேண்டும்.

விளையாட்டை
சொல்லித்தந்தவன்
பேசியை என்பக்கமாக காட்டி
இவன் பலமாக இருக்கிறான்
தோல்வி அடைவோம் வேண்டாமென்றான்.

மற்றவனைக் காட்டி
பலவீனனாக இருக்கிறான்
வெற்றிகொள்ளலாமென
விளையாடத் தொடங்கினான்.

எழவு நமக்குத்தான்
எதைச் செய்யவேண்டுமென்றாலும்
ஆயிரத்தெட்டு குழப்பங்கள்.
*

No comments:

Post a Comment