Saturday, May 28, 2022

நகர்வு.காம்

 

ந.பெரியசாமி கவிதைகள்

1. நிகழக்கூடும் அதிசயம்
*
வானங்களை
இறகாக கொண்ட பறவையொன்று
மேல் எழுந்தது.
கண்ட சிறார்கள்
களிப்பில் நதியாகினர்.
வளர்ந்தவர்கள்
யூகங்களிடம் தோற்றுக் கொண்டிருந்தனர்.
ஆதிக்கிழவி வேண்டுதலை வைத்தாள்.

அன்பின் தேவதையே
வெறும் காற்றில் கத்தியை சுழற்றி
களைப்படைந்தோம்.
நீரற்ற ஆற்றில்
எவ்வளவு நேரம்தான் நீந்துவது.

உலகைச் சுற்று
இறக்கைகளால்
தொற்றுக் கிருமிகளை
வழித்தெடுத்து வான் பறந்து
மீண்டும்
வாழ்வைக் கொடுத்திடு.
*

2. காலத்தை ஓவியமாக்குபவள்
*
மாடியில்
என் வருகையை உணராது
மேற்கு நோக்கியிருந்தாள்.
நிலம் விழும் பழுத்த
இலையானயென் கை தொடர்பு
மகிழ்ந்து திரும்பிவள்
இந்த நட்சத்திரங்கள் ஏன் இணைந்தே இருக்கின்றன.

மேகங்கள் நகர்ந்தவாறு இருக்கும்
வான் பார்த்து
விடியலில் நட்சத்திரங்களை
கண்டதில்லையென்றேன்.

பயிற்சி கொண்டேனப்பா
காலத்தை
இருத்திவைக்கவென்றாள்.

Tuesday, May 24, 2022

நகர்வு.காம்

 

1. நிகழக்கூடும் அதிசயம்
*
வானங்களை
இறகாக கொண்ட பறவையொன்று
மேல் எழுந்தது.
கண்ட சிறார்கள்
களிப்பில் நதியாகினர்.
வளர்ந்தவர்கள்
யூகங்களிடம் தோற்றுக் கொண்டிருந்தனர்.
ஆதிக்கிழவி வேண்டுதலை வைத்தாள்.

அன்பின் தேவதையே
வெறும் காற்றில் கத்தியை சுழற்றி
களைப்படைந்தோம்.
நீரற்ற ஆற்றில்
எவ்வளவு நேரம்தான் நீந்துவது.

உலகைச் சுற்று
இறக்கைகளால்
தொற்றுக் கிருமிகளை
வழித்தெடுத்து வான் பறந்து
மீண்டும்
வாழ்வைக் கொடுத்திடு.
*

2. காலத்தை ஓவியமாக்குபவள்
*
மாடியில்
என் வருகையை உணராது
மேற்கு நோக்கியிருந்தாள்.
நிலம் விழும் பழுத்த
இலையானயென் கை தொடர்பு
மகிழ்ந்து திரும்பிவள்
இந்த நட்சத்திரங்கள் ஏன் இணைந்தே இருக்கின்றன.

மேகங்கள் நகர்ந்தவாறு இருக்கும்
வான் பார்த்து
விடியலில் நட்சத்திரங்களை
கண்டதில்லையென்றேன்.

பயிற்சி கொண்டேனப்பா
காலத்தை
இருத்திவைக்கவென்றாள்.

Monday, May 23, 2022

வாசகசாலை

 கொரானா பருவம்

- ந.பெரியசாமி


நிகழ்வு - 1


நாய்கள் தன்போக்கில் திரிந்தன

பொழுது நடுநிசியும் அல்ல

தொலைக்காட்சி விளம்பர சப்தங்கள்

அளவுக்கு அதிகமாக

கண்கள் மட்டும் தெரிய வந்தவள்

மாஸ்க் இல்லாத எனை

எமனாக கண்டு 

சில அடிகள் தள்ளி

நடையை விரைவுபடுத்துகிறாள்.

தன் பற்களை நட்சத்திரங்களாக்கி

சிரித்துக்கொண்டிருந்தது நிலவு.

*

நிகழ்வு - 2


நின்று

ரசித்துக் கடக்க வேண்டிய

முகமது.

அந்த கண்களில் அத்தனை பேரொளி

குலைத்த நாயின் சப்தம்

அவளின் நினைவை குலைக்க

அப்பொழுதான் வந்து தொலைய வேண்டுமா

சனியன் பிடித்த இறுமல்.

வெருண்டோடினாள்

ஐய்யோ

அவளின் கண்கள்

பொறியில் சிக்கிக் கொண்ட 

எலியின் கண்களை நினைவூட்டின

சைரன் ஒலியோடு

எங்கோ ஆம்புலன்ஸ்

விரைந்தோடிக் கொண்டிருந்தது.

*


நிகழ்வு-3


வீடு

விவாதத்தில் இருந்தது

தொலைக்காட்சியின் திரையில்

மரணத்தின் எண்ணிக்கையை

அடுக்கிக் கொண்டிருந்தனர்.

சனி மூலையில் பிரதமரும் சாத்தான் மூலையில் முதல்வரும்

கருணையே உருவாகி

கையேந்திக் கொண்டிருந்தனர்

ஏதோ நினைவில்

எப்பொழுதும்போல் உள்புக

ஏக வசனத்தில் எல்லோரும்

அடேய் கையை கழுவுட.

*

நிகழ்வு - 4


அறிவிப்புகள்

வந்து கொண்டே இருந்தன

மரணக் குழியை

அவரவர்களே தோண்டிக்கொண்டு இருக்கிறீர்கள்.

சானமும் மஞ்சள் தூளும்

தற்போதைய கடவுளர்களாக

அவதரித்துக் கொண்டிருக்க

ஏற்கனவே நம்பப்பட்ட கடவுளர்கள்

பூட்டிய கதவு

இன்றாவது திறக்கப்படுமாவென

காத்துக்கொண்டிருக்கிறார்கள்

சாத்தான்கள் சங்கலி போட்டு பூட்டியிருப்பதை அறியாது.

கடவுளை மக்களும்

மக்களை கடவுளும்

எப்படியும் காப்பாற்றி விடுவார்களென

நம்பிக்கை ஒளியை உருவாக்கியபடி இருக்கிறார்கள்.

Friday, May 20, 2022

வாசகசாலை


இருளடைந்த வெளி 

*

உண்பதற்கும்

உறங்குவதற்குமே வீடு.

சீக்குண்ட கோழியாக

சுருண்டு கிடக்காதேயென

சுற்றித் திரிபவர்

வீடே உலகமென முடங்கிப்போனார்.

வலபக்கச் சுவர் ஆயிரத்தி எட்டுச் செங்கல்

இடப்பக்கச் சுவர் எட்டுநூத்தி எட்டு

மேல்பக்க கலவையின் கணம்

ஒரு டன் இருக்கக் கூடுமென

தன் யூகத்தினை 

எழுதி அடித்து 

திருத்தம் செய்தபடியே இருந்தார்.

தன் தலைமுடியை தானே

கணக்கிட முடியாதுபோக

வரையும்போதே எண்ணிக்கொண்டேனென

தன் புத்திசாலித்தனத்தை

மெச்சிக்கொண்டவர்

எண்ணிவர பணிக்கிறார்.

தினசரி ஒரு இடம் கூறி

அங்கிருக்கும் மரத்தின்

இலைகளை.


அழியாத் துயர்

*

வேர்களை

வெளியெங்கும் பரப்பி

புலப்படாத புள்ளிகளால்

அச்சத்தில் நாட்களை

நகர்த்தும் காலத்தில்

தொங்கவிடப்பட்ட உடலின்

ஆசனதிறப்பில்

அதிகாரம் திமிர்த்த மரமொன்றில்

கிளைத்த லத்தியை ஈட்டியாக்கி

வம்சத்தை துண்டாடச் செய்திருத்தல்

காட்சி அல்ல.

திரைச்சிலையை இழுத்துவிட

மறைந்து போவதற்கு.

Wednesday, May 18, 2022

வாசகசாலை

 நினைவில் விழும் நட்சத்திரங்கள்

*
முகத்தில்
வாய் இருக்கவேண்டிய இடத்தில்
பூக்களை வைத்துக்கொண்டிருப்பவனிடம்
எப்படி கோபிப்பது?

அவனொரு
விற்பனை பிரதிநிதியாக இருக்க
மறுக்கத்தான் மனம் வருமா?

வாகனங்களை
பழுது நீக்குபவனாக இருக்க
காலதாமதத்திற்கு கடிந்துகொள்ள முடியுமா?

தாகத்தோடு வந்தடைவோருக்கு
மது ஆற்றை
கொண்டுவந்து சேர்ப்பிப்பவன் கொடுக்கும்
மீதியை வாங்கிக்கொள்ள முடியுமா?

நீளும் ஆறுவழிச் சாலையில்
அங்கொன்றும் இங்கொன்றுமாக
நிற்கும் மரங்களென நினைவி்ல்
மனிதர்கள் பூத்துக்கொண்டேதான் இருக்கிறார்கள்.


Sunday, May 15, 2022

கணையாழி

 

கனி நகைப்பு
*

மரத்தடியில்
நின்றவனின் கைகளில்
வீழ்ந்தது கனி.

ஐய்யத்தோடு
உண்ணாதிருக்க
அருகில் வந்தவன்
ஏதும் கேளாது எடுத்துத் தின்றான்.

சுவைமிகு பழமென
சொப்புக் கொட்டிச் சென்றவனை
கண்கொட்டாது பார்த்திருக்க
சிரித்துக்கொண்டிருந்தது.

கையில்
இல்லாக் கனி.

Monday, May 9, 2022

கனலி2021

 பூனை

*
விந்தி விந்தி நடக்கிறது பூனை
தவறுதலாக
கால் ஒன்றை குறைச்சலாக்கி 
வரைந்துவிட்டேன். 

எங்களுக்குள் இயல்பாகியது
அது முறைப்பதும்
நான் மன்னிப்பு கேட்பதும். 

விரையும் வேறு பூனை பார்க்க
அதன் கண்கள் நெருப்பாகிடும்
அப்பொழுது கிண்ணத்தில்
பாலை நிரப்பி அமைதி காத்திடுவேன். 

இன்று மறக்காமல்
வரைபட தாள்களையும்
எழுது உபகரணங்களையும்
எதிர் இல்ல சிறுமிக்கு
அன்பளிப்பாக்கினேன்
மென்மையை ஏந்திக்கொண்டு
பதுங்கிப் போனாள்.

உடனிருக்கும் நிலா

உன் சொற்கள்
எல்லோர் உடனும்
போகும் நிலா.
போர்வைக்குள் உடன் இருத்தி
உறங்கும் நம்பிக்கைமிக்கது.
பாவங்களை கழுவி
ரட்சிப்பதல்ல
நானிருப்பேன் எனும்
பலத்தை தருவது.
*
மந்திரச் சொல்
*
ஆகாயத் தாமரைகள்
கொக்குகளாகி பறக்கும்
காலம் வரக்கூடும். 

அன்றென் ஏரியில்
நிரம்பி இருக்கும் நீர்
மீன்களென சிறார்கள்
வான்பார்த்து நீந்திக் களிப்பர்
சிறு புழுவிற்கு
மீன்கள் கூடையை நிரப்பும்
காட்சிகள் மன
அடுக்குகளில் சேர்ந்தபடி. 

இருந்தென்ன செய்ய
கொக்குகளாக்கும் மந்திரச் சொல்
எந்த மேகத்துள்
ஒளிந்து கிடக்கிறதோ?

Friday, May 6, 2022

பேசும் புதிய சக்தி 2018

 1. நம் மழை


உரையாடலற்றிருப்பது
சொச்ச காலம்தானே என்கிறாய்
அருகிலா இருக்கிறது
கண்ணுக்குத் தெரியும் நிலா.

வாழ்தல்
நாட்களை கடப்பதாகாது
நேற்றில் வாழ்வது
சாத்தியமற்றது- நீயும்
அறிந்த உண்மைதானே.

உன் குரலில் துள்ளும்
அணில் பிள்ளைகளை
தினம் தினம் இழப்பது
அவ்வளவு துன்பகரமானது
எளிதில் சமாதானம் அடையாததும்.

வலியை
நினைவு குணமாக்காது.

அறியாயா
நம்பிக்கையற்ற வானத்தில்
ஆயிரமாயிரம் நட்சத்திரங்கள் ஒளிர்ந்தும்
உணர முடியாது ஊனமாகிறேன்.

அன்பே உரையாடல்தானே
நம்மை எழச்செய்யும்
காத்திருக்கிறேன்.

நம் மழைக்காக.
*

2. விளையாட்டு

முதலில் எதிரியை
தீர்மானிக்க வேண்டும்.

விளையாட்டை
சொல்லித்தந்தவன்
பேசியை என்பக்கமாக காட்டி
இவன் பலமாக இருக்கிறான்
தோல்வி அடைவோம் வேண்டாமென்றான்.

மற்றவனைக் காட்டி
பலவீனனாக இருக்கிறான்
வெற்றிகொள்ளலாமென
விளையாடத் தொடங்கினான்.

எழவு நமக்குத்தான்
எதைச் செய்யவேண்டுமென்றாலும்
ஆயிரத்தெட்டு குழப்பங்கள்.
*

Thursday, May 5, 2022

அம்ருதா 2021

 1. மன அவசம்.

*
திடும்மென
நடந்துகொண்டிருந்தவனின் முன்
பொற்குவியல்
திசை எட்டும் கண்கள் சுழற்றி
தனதாக்கிக் கொண்டான்
திருடன் திருடன் என்றவாறு
கிளியொன்று பறந்த 
குழப்பத்தில்
மகிழ்வு கணம் புதைந்து
முகிழ்ந்தது
ஒரு வீச்சம்.


2.காத்திருப்பு
*
நழுவிய
கனியின் சுவையை
சொல்வதெப்படி
நடுக்கத்தில் மொழி. 

காத்திருப்பேன்
பயிற்சியோடு
மற்றுமொன்று
நழுவிடும் கணத்திற்கு.

3. இறைஞ்சுதல்

தொங்கியபடி
வீட்டின் மீது
கனிந்திருந்தது மதியம்.


இன்னும் கொஞ்சமென
மின்விசிறியிடம்
இறைஞ்சியபடி சிறுமி. 

எஞ்சிய
கதைகளை கேட்டேன்
தூங்கும்போது என்றபடி
ஓடிப்போனாள்.

Tuesday, May 3, 2022

அம்ருதா 2019

 


நெளிந்து கொண்டிருக்கும் பாம்பு
ந.பெரியசாமி


நீர் ஓட்ட ஆற்றுக்கரை
செழித்த வயலின் ஓரம்
அடர் வனத்தில் இருப்பதை
ஒத்ததாகவோ
போலவோ
இல்லை.

மரத்தை வரைந்திருந்தான்.

பச்சைக்கிளி
சிட்டுக்குருவி
காகம்
புறா
எப்பறவையை பிறப்பிப்பான்
மனதின் அடுக்குகள்
ஆர்வத்தை கிளறிட
பாம்பொன்று நெளிந்தோடியது
தொங்கத் துவங்கின வௌவ்வாள்கள்.

கருப்பு  பிடிக்குமா
அபத்தமாக கேட்டது
வளர்ந்த வயது.
0
ஏக்கப் படலம்
ந.பெரியசாமி

மாலை போர்த்தி
பாதம் வணங்கி நிமிர்கையில்
அந்திமக் காலத்தில் அருந்தியிராத
ஏக்கத்தின் படலம்
மூடிவைத்த கண்களில்.
உதடுகளில் துரு படிந்துகொண்டிருக்க
நினைவுகளில் அவருடனான நாட்கள்
இறந்த காலமாகிக் கொண்டிருந்தது
பறை இசையுடனான ஒப்பாரியை
உடன் மனதுள் இட்டவாறு
பெருத்த டயரில் அடுக்கியிருந்த
கட்டைகளுக்குத் தின்ன
கொடுத்துத் திரும்பினோம்.

பத்திருபது பாட்டில்கள்
சாராயத்தை சுமந்தவாறு
மகிழ்ச்சியோடு வந்தார்
நெடுநாட்களுக்குப் பிறகு
நேற்றைய கனவில்
தாத்தா.


Monday, May 2, 2022

அம்ருதா 2018

 1

சொட்டும் ஒலிகளால் 
நிரம்பும் பாத்திரம் வழிந்தது
நிலம் உறிஞ்சி குளிர்ந்திட
தழைத்தது விருட்சம்.

பின்பொரு நாளில்
நின்றிருந்தவனின் தலையில்
ஒலிச்சொட்டுகள்
சிலிர்த்த உடலுள்
ஒளியின் நடனம்.

2. பலூன்
காற்றடைக்க பறந்தாடுவதற்கும்
நிரப்புகையில்
வெடித்து துக்கடாவதற்கும்
மத்தியில் 
ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறது வாழ்வு.