ஆற்றுப்படுத்தல்
ந.பெரியசாமி.
ஆற்றுப்படுத்தல் சங்க காலத்தில் அரசனைக் கண்டு பரிசினைப் பெற்று வரும் பாணர்கள் எதிரில் வரும் பாணர்களிடம் தான் போன பாதை, பார்த்த அரசன், கிடைத்த பரிசுகளின் விபரங்களைக் கூறி அவனது பதற்றத்தை தணிய வைத்து அனுப்புவது. ஜி.எஸ்.தயாளனின் 'வேளிமலைப் பாணன்' தன் நிர்வாணத்தால் அடர்காட்டை தனதாக்கி, மகிழ்வின் விளையாட்டை பெருக்கம் கொள்ளச் செய்து, மேகங்களுக்கு ஆசையை தூண்டுபவனாக இருந்தபோதும், தன் அனுபவங்கள், சூழல், ரசனை, காதல், கலவி, குழந்தமையாதல் என கலவையான மனநிலையோடு பயணிக்கச் செய்து நம்மையும் ஆற்றுப்படுத்துகிறார்.
சிரிங்க கொஞ்சம், நேராக பாருங்க என கேட்டு எடுக்கப்படும் ஸ்டுடியோ போட்டோக்கள் அடையாளப்படுத்த மட்டுமே பயன்படும். வெளிகளில் எடுக்கப்படும் போட்டோக்கள் ரசிக்கவும் கொண்டாடவுமாக தன்னுள் வெளிச்சங்களை பொதித்து வைத்திருக்கும். பார்வையாளரின் ரசனைக்கேற்ப அவ்வெளிச்சம் மினுக்கம் கொள்ளும். இவைகளை நாம் கவிதைகளோடும் பொருத்திப் பார்க்கலாம். களம் வந்தடையும் பயிர்களை முறம் அள்ளித் தூற்ற பதற்கள் பறந்துபோகும். நல்ல நெல்மணிகளே குவியும். அள்ளிப் பார்த்து பெருமிதம் கொள்ளும் உழவனின் மனநிலை வாசகர்களுக்கும் நல்ல தொகுப்புகளை வாசிக்க கிடைக்கும். அப்படியானதொரு மனநிலையைத் தரக்கூடிய தொகுப்பாக இருக்கிறது ஜி.எஸ். தயாளனின் 'வேளிமலைப் பாணன்'.
காதல் எல்லோருக்கும் வாய்த்துவிடுவதில்லை. அது ஒரு மகா உணர்வு. அதை ஏனோ தனோவென்று கடந்திட இயலாது. நுட்பமான கடத்தல் அது. அந்நுட்பம் கைவரப்பெற்றவர்கள் கொண்டாடுகிறார்கள். அறியாதவர்கள் கொலைகாரர்களாக மாறிவிடுகிறார்கள். நொதித்து நொதித்து நினைவில் சுவையூட்டியபடி இருக்கம் காதல் அனுபவம் உன்னதமானது. பால்யம் துவங்கி பாடையேறும் வரை குறுக்கிடும் பெண்ணின் நினைவில் உயிர்ப்பை வைத்திருக்கும் காதல் மகாஉன்னதம்.
காதலும் காமமும் சரியாக புரிந்துகொள்ளப்படாமலேயே கெட்ட செயல், கெட்ட வார்த்தை என மறைத்துவைக்கத் தவறான வழிகாட்டுதல்களால் அதிகாரம் குவிந்தவர்கள் ஆண் எனும் சிந்தனைப்போக்கு மட்டரகமான செயல்பாடுகளையே வெளிப்படுத்துகிறது.
கணவன் இன்னுயிர் செல்லுங்கால் தன்னுயிரும் தானே நீங்குவது- தலையாய கற்பு.
தன்னைக் கொண்டவன் இறந்ததைக் கண்டு தன்னுயிர் பிரியத் தீக்குளித்தல் போன்றவற்றில் ஈடுபட்டு உயிர் நீங்குதல் - இடையாய கற்பு.
கைம்பெண்ணாக உயிர் நீங்கும் வரை வருந்தி வாழ்தல்- கடையாய கற்பு.
இவ்வாறான மூவகை கற்புகளை பெண்ணின் ஒழுக்கத்தோடு தொடர்புபடுத்தி பண்டைய காலம் தொட்டு எதிர்வரும் காலம் தோறும் ஓரவஞ்சனையோடு சொல்லப்படும் ஒழுக்கம் தொடரத்தான் செய்யும். பிழையான இச்சிந்தனையை ஆனிவேராக ஊன்றச்செய்ததால் பிழையான அனுகுமுறையே பெண்மீது நீடிக்கிறது.
ஆண் எனும் திமிர் பெருத்த சமூகத்தை பார்த்து காறித் துப்பி உண்மை பேசும் பெண்களை இச்சமூகம் பிடாரிகள் என தூற்றுகிறது.
....................
ஒவ்வொரு உமிழ்தலிலும் ஒரு காரணம் சேர்ந்து விடுகிறது
நாகரம்மனை நாகராஜாவாக மாற்றிய மோசடிக்கு
மருமக்களின் வழி மக்கள் வழியாக மாறிவரும் தந்திரத்திற்கு
பெண்களை பர்தாவுக்குள் சிறையெடுத்த வகாபிசத்திற்கு
பெண்ணை பாதிரியாகவும் ஏற்க இயலாத வக்கிரத்திற்கு
புத்தத் துறவியென்றால் மழித்த தலையோடு
குழல் குறியும் வேண்டுமென்னும் வஞ்சத்திற்கு
உமிழத்தான் செய்வாள்
பேயை உமிழ்ந்து விரட்டிய வரலாற்றில் வந்தவள்
துப்பி விரட்டினாலும் அந்தக் கோபிகையின்
கொப்பூழைச் சுற்றிப் பதிந்திருந்தன
ஓராயிரம் கண்ணன்களின் பார்வைச்சுவடுகள்
ஒவ்வொரு பார்வையையும் பிடித்துக் கடாசுகிறாள்
விந்து சொட்டி நிற்கும் கருவிழிகளை
உதாசீனம் செய்கிறாள்
நாசூக்கை நையைப் புடைக்கிறாள்
பூடகத்தின் பூட்டைகளை நறுக்கி எறிகிறாள்
கோபத்தின் உச்சத்தில்
வேடிக்கையாளர்களுக்கு
சேலையோடு சேர்ந்து பாவாடையையும் தூக்கிக் காட்டுகிறாள்
அருகிலிருந்தும் மறைவிலிருந்தும்
பார்த்துக் கொண்டிருந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர்
இரு காவலர்களும் நழுவியிருந்தனர்
விரைத்த குறிகள்
விந்து வெளிப்படாமலேயே சுருண்டு கொள்கின்றன
பிடாரி
அடாங்காப் பிடாரி
அகங்காரி
மாகாளி
லிங்கக் குண்டத்தை வெற்றுடலால் மிதித்துக் கடந்து
குதப்பிய வெற்றிலையோடு
தனியாளாய்த் திட்டியபடி திரிகிறாள்.
என முடிவுறும் தயாளனின் பிடாரி கவிதை. சக மனுசிகளுக்கு செய்த, செய்துக்கொண்டிருக்கும், செய்யப்போகும் துரோகங்களின் வரலாறு. 'சேலையோடு சேர்ந்து பாவாடையையும் தூக்கிக் காட்டுகிறாள்' தெரியும் பெண்குறி பார்க்க திராணியற்றது ஆண்திமிர். வெளிச்சத்தில் அதன் ஆகிருதியை காணத் தயங்குபவர்கள். எல்லாம் இருளிலேயே. அவசர அவரசமாக திமிரை நிருபிக்கும் பதற்றம். தோல்வியுற்றுத் தொங்கும் முகம் பார்க்க தெம்பற்றவர்கள். சுயமைதுனம் செய்துகொள்ளக்கூட அவர்களின் நிழலான உருவத்தின் கருனை தேவை என்பதை உணராதவர்கள். உண்மை பேசும் பிடாரிகளை எதிர்கொள்ள முடியாத சமூகத்தில்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அடைப்புகளை பிய்த்தெறிந்து ஆக்கிரமிப்புகளை சூழ்ந்து தவியாக தவிக்க வைக்கும் மழை நீராக பாய்ச்சலை உண்டாக்கும் நாள் கட்டாயம் வந்தே தீரும். அதிகாரத்திற்கு உண்மை தேவையில்லை சாட்சியமே போதும் எனும் நிலை மாறும். மயிர்கள்/ சிரைக்கப்படாத என் நிர்வாணம்/ அழிக்கப்படாத காடுகளைப் போல் /கம்பீரம் வீசுகிறது எனும் சுகிர்தராணியின் கவிதை வரிகளை நினைவூட்டியது இக்கவிதை.
பேருந்து நிலையம் பயணத்திற்காக ஏறி இறங்கும் இடம் மட்டும் அல்ல. குழைவு, காதல், காமம், கள்ளத்தனம், சைகைகள், கண் அசைவில் விலை நிர்ணயிக்கும் விபச்சாரம், திருட்டு என ஒட்டுமொத்த உலகத்தின் கூறுகளையும் ஒரு பஸ் நிலையம் வைத்திருக்கும். ஒவ்வொரு பேருந்து நிலையத்திற்குமான பிரத்யோக வாசனை உண்டு. அவசர அவசரமாக ஓடிக்கொண்டே இருந்தால் அவ்வாசனையை உணர முடியாது. இரவில் எங்காவது ஓரமாக உட்கார்ந்து வேடிக்கையில் இருக்கவேண்டும். வண்ணங்களின் வகைமைகளை உணரலாம். சில்மிசத்தால் செருப்படி படுபவனின் முகக்கூறுகளை அங்கு தான் காணமுடியும். ஒவ்வொரு பஸ் நிலையமாக இறங்கி இறங்கி வேடிக்கைப் பார்த்து ஊர்சென்ற நாட்களின் நினைவில் இருக்கச் செய்தது 'மஞ்சள் நிறப் பேருந்து நிலையம்' கவிதை.
காமம் காமம் என்ப, காமம்
அணங்கும் பிணியும் அன்றே, நுணங்கிக்
கடுத்தலும் தணிதலும் இன்றே, யானை
குளகு மென்று ஆண்மதம் போலப்
பாணியும் உடைந்து அது காணுநர்ப் பெறினே.
-மிளைப் பெருங் கந்தன்
எழுதிய குறுந்தொகை பாடலொன்றில் காமம் இகழ்ச்சிக்குரியது அல்ல. அது எவ்வளவு வலிமை வாய்ந்தது என்பதை யானையின் நீடித்த காமம் குறித்து தலைவன் தேர்பாகனுக்கு விளக்குவதாக உள்ள இப்பாடலைப் போல் தயாளன் நமக்கு காமம் சார்ந்து சில கவிதைகளை இத்தொகுப்பில் வைத்துள்ளார்.
ஆண் எனும் திமிர்த்தனங்களால் காமத்தின் நுட்பங்களை அறிய முடியாது. காமம் சரணகதியாலே மினுக்கம் கொள்ளும். சரணாகதியடைய சரணாகதியடைய அதன் ஒளிர்மை கூடிக்கொண்டே இருக்கும். காமத்தின் சூத்திரம் சரணாகதி என்பதை தன் கவித்துவ வரிகளால் தயாளன் நமை வசீகரிக்கிறார்.
கழுவப்படாத யோனியில் படிந்திருக்கும் உப்புச்சுவை தீண்ட உருக்கொள்ளும் காற்றில் தக்கையாக மிதந்தலைந்து சோர்வுகொள்ளும் காட்சியை அவளீந்த இரவை அவளாலேயேனும் தர முடியுமா எனும் ஏக்கம் கொள்ளச் செய்திடுகிறது 'தோழிக்கு உரைத்தது' கவிதை.
காமத்துப்பாலை
கறவை சூட்டுடன் பருகத் திணித்து
யோனியை வாயெனவும்
வாயை யோனியெனவும்
லாவகமாய்த் திரித்து
வியர்வைத் திவலைகள் உடைந்து சிதற
அவளீந்த இரவை
அவளாலேனும்
திரும்பத் தரவியலுமா.
நினைவில் விழிக்கும் காமம் உடலை வெப்பமேற்றிக் கொண்டிருக்க இணை இருந்தும் இல்லாது போக உண்டான தகிப்பைக் கூறுகிறது 'கிணற்றிரவு'
.......................
சலனமுற்ற கிணறு
வேறு வழியின்றி
விண்ணையே பார்த்துக் கொண்டிருக்கிறது.
தொகுப்பில் இருக்கும் 'வெவ்வேறு உயிர்கள்' கவிதையை வாசிக்கையில் மீண்டும் தன்னிடம் வரச்செய்திடுகிறது கிணற்றிரவு கவிதை. சகியின் சமிக்ஞை வந்து கொண்டிருந்தபோதும் அதை அறியாது போல் இருக்கும் நிலையை உணர முடிகிறது. அகத்திலிருந்து புறத்திற்கும், புறத்திலிருந்து அகத்திற்குமான ஊசலாட்டத்தில் நாம் சிக்குண்டவர்கள்தானே.
குழந்தை தூங்கிவிட்டாள்
மனைவி அனுப்பும்
கூடலின் சமிக்ஞைகள்
ஒவ்வொன்றாய் வந்தடைகின்றன
அருகில் படுத்திருக்கும் என்னை
நானோ ஏதொன்றும் அறியாதவன் போல
உலகின்
சுடுமணற் பரப்புகளை மேவிக் கிடக்கிறேன்.
என முடிவுறும் இக்கவிதையில் அலைவுறுகிறது ஆதங்கம்.
மூத்திரம் பெய்தல் தனிநபர் சார்ந்தது. நீண்டநேரம் அடக்கிவைத்து பின் வெளியேற்றுகையில் உண்டாகும் நிம்மதி சுகம் அளிக்கக்கூடியது. அச்சுகத்தை ஒருவர் மட்டுமே அனுபவிப்பதில் யாதொரு குற்றச்சாட்டும் இல்லை. ஆனால் கலவி அப்படியானதா? இருவர் சார்ந்ததுதானே. அதில் ஆண் என்பதனாலேயே ஆத்திரத்தில் வெளியேற்றி ஆனந்தித்திருத்தல் சரியானதுதானா? உடனிருப்பவர்களின் உணர்வுகளை காயப்படுத்துவதாகாதா, எல்லாவற்றிலுமா சிந்தனையை சுயத்தோடு வைத்திருக்க வேண்டும். தயாளனின் 'தலைவியின் கூற்று' கவிதை நமைநோக்கி பெரும் கேள்வியை எழுப்புகிறது. கூடல் கொள்ளும் நாட்களிலெல்லாம் இணையின் வேட்கை தணித்திருக்கிறோமாவென? பிறகு ஏன் ஆண் ஆண் என மதம் கொண்டு அலைகிறீர்கள் என்பதாகப் படுகிறது.
காமப்பெருந் தீ அணையும்
கடைசி நொடியை நெருங்க நெருங்க
வேகமெடுத்த ஆக்ரோஷம்
ஸ்கலிதம் செய்ய
ஆட்டத்தை நிறுத்துகிறது கட்டில்
வேட்கை தணியாத அவளோ
எழுந்து தன் யோனியை
கூரிய வாளெடுத்து
சீவி செதுக்கித்
திறந்து வைக்கிறாள்.
தயாளன் பெண் உடலை, வலியை, உணர்வை பேதம் பாராது நெருங்குகிறார். மலிவான சுகம் கொண்டு ஆண் எனும் மாயையில் மகிழ்வோரை தொலும்பாக உடைத்து போட்டபடி இருக்கிறார். இவ்வுடைப்பின் அவசியத்தை உணர்ந்தவர்களாக நாமும் இருப்போம்.
காமத்தின் வெதுவெதுப்பை இசையாக்கிய தி.ஜானகிராமன்,பரத்தமையுள் காதல் நுட்பம் பேசும் ஜி.நாகராஜன், கேட்பதல்ல காதல், தருவதுதான் என்ற ந.பிச்சமூர்த்தி, மனப்பிறழ்வுகளை காட்சியாக்கிய கலாப்ரியா,கல்யாண்ஜி, மீகாமம் தந்த க.மோகனரங்கன், வழிபாட்டுக் காமம் காட்டிய பாலகுமாரன், மாந்த்ரீகத் தன்மையால் சிலிர்க்கச் செய்திடும் என்.டி.ராஜ்குமார், ஆணாதிக்கம் என்பது காரியம் முடிந்ததும் திரும்பி படுத்துக்கொள்வது என்ற மகுடேஸ்வரன் மேலும் கு.ப.ரா, தஞ்சைபிரகாஷ், சம்பத், கி.ரா, சாருநிவேதிதா என காமம் குறித்து பேசும் தமிழிலக்கியத்தின் நீளும் பட்டியலில் அதன் பரிணாமத்தோடு தனக்கான நுண்ணுனர்வை லாவகமாக கையாள்பவராகவும் இருக்கிறார் ஜி.எஸ்.தயாளன்.
மேக்காலே வடக்காலே என இயற்கையின் அறிவோடு இருக்கும் நம் பாட்டிகள் திசையறியாது திசையற்று தினறும் நம் வாழ்வை ஆதி அறிவால் கேலி பேசியபடியே இருப்பதாகக் கூறுகிறது 'திசையறிதல்.' கவிதை.
--------------------
தாழ் பணிந்து
குஞ்சாமணியைத் திறந்து பார்க்க
வளர்ந்த குழந்தையுடையதாய் இருந்தது
சிறு குழந்தையுடையதாய் அது மாறும் நாளில்
தன் வலி
தன் அழுகை
தன் விளையாட்டு
எல்லாவற்றையும்
படைத்துவிட முடியும்
என முடிவுறும் மொழிதம் கவிதை. தனக்கானதை தானே படைக்கும் இயல்போடிருக்கும் குழந்தைகளின் மனஉலகோடு நெருக்கம் கொள்ளல் எளிதில் வாய்த்திடுவதில்லை என்பதை உணர்த்துவதாக உள்ளது.
ஒரு சொல்லில் காலத்தை எழுத்தை அழிக்கும் ரப்பரைக் கொண்டு அழியாது நினைவில் வைக்க வேண்டியவைகளை நினைவூட்டுகிறது 'அழியும் ரப்பர்' கவிதை.
எல்லா ஆசிரியர்களாலும் நெருங்கிவிட முடிவதில்லை குழந்தைகளோடு. கஞ்சிபோட்ட சட்டையாக எப்பொழுதும் விரைத்தபடியாக திரியும் சில ஆசிரியர்களைப் பார்க்க பரிதாபமாகத்தான் இருக்கும். தாம் செய்யும் பணி எத்தகைய மகத்துவமானது என்பதை அறியாமலேயே டிசிப்ளின் சப்ஜெக்ட் என்பதிலேயே முனைப்பாக இருந்து குழந்தைமையின் அற்புத உலகை காண வழியிருந்தும் நுழைந்து விடாதிருக்க பெரிய பூட்டை போட்டு சாவியையும் காலபோக்கில் தொலைத்து விடுகிறார்கள். எதோ ஒரு சில ஆசிரியர்களை மட்டுமே குழந்தைகள் நெருக்கமாக உணருகிறார்கள். அவர்களின் காலத்திற்கும் அவர்களை நினைவில் வைப்பார்கள். நமக்கு பிடித்த ஆசிரியர்களையும் நினைவூட்டுவதாக இருக்கிறது 'கறாம்புறாம் சித்திரம்' கவிதை.
சமையலுக்காக வாங்கி வந்த கீரைக் கட்டை ஆய்ந்து விடுவதைப்போல மரங்களை எல்லாம் ஆய்ந்து எடுத்துவிட்டார்கள். இரையோடு திரும்பிய காக்கை குருவிகள் தன் குஞ்சுகள் செத்துக்கிடப்பதைப் பார்த்து அலறுகின்றன.அமர்ந்து அழக்கூட வழியற்றுப்போக அவைகளின் சாபம் நம்மை கட்டாயம் சீரழிக்கும். மூன்று நாள் மழையைக்கூட தாங்க முடியாமல் நம் வாழ்வை புரட்டிப்போட்டன. ஏதும் செய்ய இயலாது தவித்தோம். இன்னும் இருக்கிறது பாடாய் படத்தத்தான் போகிறது இயற்கை. இப்பொழுதுதான் கொஞ்சமாக விழிக்க ஆரம்பித்திருக்கிறோம் என்பதே ஆறுதலாக இருக்கிறது. நம் படைப்பாளிகளும் சூழல் மீதான கரிசனத்தை அவசியத்தை வாய்ப்பிருக்கிற இடங்களிலெல்லாம் சுட்டிக்காட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள். தயாளனும் இத்தொகுப்பில் சூழல் மீதான தன் அக்கறை வெளிபடுத்தியுள்ளார்.
ஏற்கனவே இருந்த பெரும்காட்டை நினைவூட்ட மிஞ்சிய இரு மரங்களின் உரசலில் உண்டாகும் 'கூப்பாடு'.
அழைப்பாரற்ற அம்மிக் கொத்துபவனின் கூப்பாட்டை எதிரொலிக்கும் சரிந்த 'கடைசி ஆலமரம்'.
குளங்களில் சாக்கடையை கலக்கச் செய்த கீழான மனிதர்களின் செயலில் செத்து மிதங்கி நீர் உயிரிகளை காட்சிபடுத்தும் 'குளமிருந்தது'
தண்ணீர் பாம்புகளை பார்க்க இயலாது செய்து அவைகளின் இருப்பிடமான கிணற்றை தூர்த்துவிட்டு பிள்ளைகளுக்கு மணிக்கு நூறு இருநூறு என காசுகொடுத்து நீச்சல் பழக்கும் தன் மடத்தனத்தைக் சுட்டும் 'சடையப்பர் குளம்'
பச்சையற்று போவதை பார்க்க சகிக்காத வானம் அவைகளின் பொருட்டு பெய்விக்கும் மழையை நமக்காக பெய்கிறதென ஆறுதல் கொள்ளும் மனித மனத்தை காட்சிபடுத்தும் 'கிளைக்காகத்தான் மழை தூறுகிறதோ' என இயற்கை மீதான நம் வன்முறையை சுட்டியபோதும் நம்பிக்கையூட்டி ஆற்றுப்படுத்தும் கவிதையையும் தொகுப்பில் வைத்துள்ளார்.
சில மலைகளையும் காடுகளையும் திமிர்த்து நிற்கும் அதன் கம்பீரத்தை கண்ணுறுகிறபோது உங்களால் எங்களை ஒன்றும் புடுங்க முடியாதென சொல்வதாகப்படுகிறது.
மண்ணாக
கல்லாக
நீராக வெந்நிர் ஊற்றாக
உலோகமாக எண்ணைய்க் கிணறாக
நிலக்கரியாக எரிகுழம்பாக
புதையலாக முது மக்கள் தாழியாக
ஏதேனும் ஒன்றாக
தந்து கொண்டேயிருக்கும் பூமி
வந்து கொண்டேயிருக்கும் பூமியிலிருந்து
கொண்டு
முடிந்த மட்டும் தோண்டு
முடிவற்றுத் தரும்
தோண்டு.
என முடிவுறும் தயாளனின் 'இல்லையென்றில்லை' கவிதையை அதன் குரலாக பார்க்கலாம். ரொம்ப நல்லவண்டா எவ்வளவு அடிச்சாலும் தாங்குகிறான் எனச் சொல்லும் வடிவேலுவின் வசனமும் நினைவுக்கு வருகிறது. இயற்கை நல்லவைகளை மட்டுமே பிரதிபலிப்பதாக இருக்கிறது. நாம் அதனிடம் வேறு எதையோ கற்றுக்கொள்கிறோம்.
எழத்து
ரணத்தை ஆற்ற முடியும்
கொதித்தபடியே இதயம் துடித்துக்
கொண்டிருப்பதை
சாந்தமாக்கவும் கூடும்
ஒரு வரியும் நான் எழுதப்போவதில்லை.
பிற இடங்களில் வசிப்பவர்களை விடவும் கடல் சார்ந்த பகுதிகளில் வசிப்பவர்களுக்கு ஈழம் சார்ந்து அதிக புரிதலும் , தகவலும் தெரிந்துகொண்டவர்களாக இருப்பார்கள். வாதைகளின் சாட்சியங்களை அடிக்கடி காணக்கூடியவர்கள். அவர்களின் உணர்வின் வெளிப்பாடாக தயாளனின் 'ஒரு வரியும் எழுதப்போவதில்லை' கவிதையை காண முடியும்.
'அப்பாவைப் பார்க்க கன்னியாகுமாரி போய்க்கொண்டிருக்கிறேன்' எனும் கவிதை வாசிக்க ஞானக்கூத்தனின் 'அம்மாவின் பொய்கள்' கவிதை நினைவில். குழந்தைகளை பயமுறுத்த அப்பாவை பூச்சாண்டியாகவும் கோபக்காரர்களாகவும் சொல்லி வைத்திருப்பார்கள். குழந்தைகள் பயம் கலந்த நெருக்கத்தோடு அப்பாவிடம் இருப்பார்கள். அப்பா அப்படியானவர் இல்லை என உணரும் தருணத்தில் அம்மாவின் பொய்கள்தான் இது என அறிய அப்பாவிடம் சிநேகம் பூப்பார்கள். இக்கவிதையில் 'மேலிருந்து அப்பா சற்றே நகைக்கிறார்' எனும் வரிகளை நெருக்கமாக உணரமுடிந்தது.
உடலைப் பிரிந்த உயிர்
ஆலய மணியில் நுழைந்து
துக்கமணி ஓசையோடு வெளியேறி
காற்றோடு காற்றாக காற்றில் காற்றேயாகும் என முடிவுறும் 'துக்கமணி' கவிதை வாசிக்க ஆம்புலன்ஸ் சைரன் ஒலிகேட்டு ஏற்படும் பதற்றம் நினைவோடியது. எப்பொழுது கேட்க நேர்ந்தாலும் ஏற்கனவே கண்ட விபத்து காட்சிகளெல்லாம் நினைவில் வந்து வதைக்கும்.
தொகுப்பின் இறுதியில் இருக்கும் 'தன்னானே' கவிதையில் தயாளனின் ஆசைபட்டியல் அழகு.
ஆத்திரம், ஆவேசம், உணர்ச்சிவயப்பட்ட கொந்தளிப்பு நிலைகளில் எதையும் அணுகலாகாது. அதில் வார்த்தைக் கழிவுகள் மட்டுமே மிஞ்சும். தெளிவற்ற நிலையே தொடரும். நிதானிக்கத்தான் தெளிவு பிறக்கும். நிதானிக்க நிதானிக்க தெளிவின் மேன்மையை உணரலாம். தயாளனின் கவிதைகளில் மேன்மைகொண்ட தெளிவுகளை தரிசிக்க முடிகிறது. தயாளனுக்கு நிதானிக்கத் தெரிந்திருக்கிறது.
வெளியீடு-காலச்சுவடு பதிப்பகம்.
நன்றி: ்நான்காவது கோணம்.