Wednesday, November 19, 2014

நன்றி- புத்தகம் பேசுது

ஆசை கொண்டு வாங்கிய மூன்று சக்கர சைக்கிளை வீட்டினுள் விருப்பம்போல் ஓடித் திரிந்தேன். வளர்ச்சி கொள்ள சற்றே பெரிய சைக்கிள். தள்ளிப் பழகி சிறுசிறு காயங்களுடன் பெடல் அடித்துக் கொண்டிருந்தேன். விடாப்பிடியாக அதனோடு பிரியம் கொள்ள நண்பர்களின் ஆலோசனைகளோடு தொடர்ந்தேன். அதன் நுணுக்கங்கள் பிடிபட வீதியில் நானும் எல்லோரோடும் ஓட்டினேன். இது என் கவிதைகளுக்கும் பொருந்தும்... என்று தன் தொகுப்பின் முன்னுரையில் எழுதும் ந.பெரியசாமி நதிச்சிறை, மதுவாகினி ஆகிய இரண்டு கவிதைத் தொகுப்புகளை ஏற்கனவே கொடுத்தவர். தமிழ்ச்சூழலில் தொடர்ந்து இயங்கிவரும் ஒரு படைப்பாளி. புதுவிசை இதழின் குழுவில் அங்கம் வகிப்பவர்.

தனது மன அவசங்களையும், புறஉலகின் யதார்த்தங்களையும், சமூகத்தின் மீதான கோபதாபங்களையும், அடர்த்தியான கவிதை மொழியில் வெளிப்படுத்தும் இவர் குழந்தைமையின் அன்பிலும், கருணையிலும் மனம் நெகிழ்பவர். தோட்டாக்கள் பாயும் வெளி என்னும் இவருடைய மூன்றாவது தொகுப்பு நல்ல சில கவிதைகளை உள்ளடக்கிய பிரதி. இருளும் ஒளியும் என்ற தலைப்பிலான அவருடைய ஒரு கவிதையை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

மரம்
தன் நிழலைக் கிடத்தி
இரண்டாகக் கிழித்தது என்னை.
அம்மணச் சிறுவனாகி
மிதந்தலைந்தேன் குளத்தில்
அருகிலிருக்கும் நந்தவனத்தில்
எச்சிலாக்கினேன் புளியமரம் ஒன்றை
தோழிகளுக்குப் பூக்களைக் கொய்தேன்
காம்புகளில் மீந்த தேன் சுவைத்தேன்
மயக்கத்தில் புரண்டேன்
வெய்யில் சுட்டது.
கூலிச் சீருடை அணிந்து
பிழைப்புக்குத் தயாரானேன்
சுருங்கியது மர நிழல்.

-சிகப்பு


No comments:

Post a Comment