Thursday, January 3, 2013

நிறமாறும் தேவதை

1
சுவர் பல்லியாய் நாவு நீட்டி
சொட்டும் துளித்தேன் சுவைத்து
காடு கழனியில் நிழல்
மிதக்க தோகை விரித்திருந்தேன்
அண்மையில் பறந்தது
தன் அலகால் கிளறி
நான் மதுவாகினியென்றது...

2
மகன்
பென்சிலை சீவிக்கொண்டிருந்தான்
சுருளாக விழுந்த அலைகளை
கடந்து அமைதிக் கடலடைந்தேன்
உலாவினேன் உப்புநீர் குடித்து
பிடித்த இரையை வாயூட்டி
செவுளில் இசைத்தது இன்னொரு மீன்
நான் மதுவாகினியென...

3
சிறு சிறு ஊற்றாகி
உருக்கொண்டேன் ஆறாக
காடு மலை வயல் கடந்து
கடல் சேர்ந்தேன்
வேறு மலை வேறு காடு
வேறு வயல் அறிந்து
என்னுள் கலந்த வேறு ஆறு
உங்களுக்குத் தெரியும்
என்ன பெயர் கூறியிருக்குமென...

நன்றி: யாவரும்.காம்

No comments:

Post a Comment