அம்மு நிரப்பிய மதுக்குவளை...
எழுதப்பட்ட
காலத்தில் ஒரு பொருளில் அர்த்தப்படுத்தப்பட்ட ஒரு கவிதை, பலநூறு
வருடங்களுக்குப் பிறகு வேறு விதமாகவும் விளக்கப்படக் கூடும். கவிதையின்
சொற்கள் திரி பற்றி எரியும் சுடர் போன்றன. தமது பிரகாசத்தின் மூலம்
சிலவற்றை வெளிச்சப்படுத்தும், அதே சமயத்தில் அச்சொற்கள் தமது நிழலின் மூலம்
சிலவற்றை திரையிட்டு மறைக்கவும் செய்கின்றன. அதனாலேயே ஒரு கவிதைக்கு
பல்வேறு காலங்களில் பல்வேறு வியாக்கியானங்கள் சாத்தியமாகிறது.
-க.மோகனரங்கன்
1989
ஜீன் மாதம் சேலம் பஸ் சேலம் பஸ் என வேடிக்கைப்பார்த்த பேருந்து ஒன்றில்
பயணித்து முதன் முதலாக சேலம் கண்டேன். அரசு தொழிற்பயிற்சியில்
சேர்வதற்காக...
சில நாட்களுக்குப்பிறகு பகுதிநேர வேலை
செய்யலாம் என அலைந்து திரிந்து பிறகு ஒரு அச்சகத்தில் வேலை கற்றுக்கொள்ளும்
வரை எதுவும் தரமாட்டோம் என்ற ஒப்பந்தத்தோடு சேர்த்துக்கொண்டார்கள். வெகு
ஆர்வத்தின்பொருட்டு ஓரிரு நாட்களில் அச்சுக்கோர்க்கத் துவங்கியதை பார்த்த
ஓனர் பஸ் செலவிற்கு தினசரி மூன்று ரூபாய் கொடுக்க ஆரம்பித்து பின் தினம்
5ரூபாய் என வாங்கத் துவங்கினேன். ஓராண்டு அப்படியே கழிந்தது.
அடுத்த
ஆண்டில் கந்து வட்டிக்கு பணம் கொடுக்கும் ஆசிரியர் ஒருவர் நம்பிக்கையான
ஒருவரை தேடிக்கொண்டிருக்க நான் பகுதிநேர வேலைக்குப் போவதை அறிந்து எனை
அனுகினார். யார் யாருக்கு பணம் கொடுத்துள்ளேன் பார்த்துக்கொள்ளென உடன்
அழைத்துச் சென்றார். பூ கட்டுபவர்கள், டீக்கடை, மீன்கடை, தள்ளுவண்டி
பழக்கடை, வெல்டீங் கடை என அவரிடம் பணம் வாங்குபவரை பார்த்ததும் அவர்களின்
வாழ்வியல் சூழல் எனக்கு மிகவும் பிடித்துப்போய்விட்டது. இந்த புது
தம்பிதான் இனிமே வருவாராவென மகிழ்வோடு எல்லோருமே சந்தோசித்தார்கள்.
அவர்களோடு நெருக்கம்கொள்ள மனம் துடிக்க வேலைக்குச் சேர
சம்மதித்துவிட்டேன். தினசரி ஐந்து ரூபாயும், வசூலித்து வர சைக்கிள்
ஒன்றும் கொடுத்தார். மீதி நேரங்களிலும் அச்சைக்கிளின் ஓனராகவே நான் இருக்க
வசதியாக இருந்தது. அம் மக்களின் மிகையான அன்பில் நனைந்து கிடந்த நாட்களை
என்றென்றும் மறப்பதற்கில்லை.
படிப்பு முடிந்ததும் ஓசூர்
வந்துவிட்டேன். சேலம், பயணத்தில் கடக்கும் ஊராகி விட்டது. எல்லாம் கொஞ்ச
நாட்கள்தான். அவ்வூர் எனை புதுப்பித்து புதுப்பித்து அனுப்பிவைக்கும் ஊராக
மாற்றம் கொள்ளத் துவங்கியது. நட்பாகினேன் வே.பாவு, அ.கார்த்திகேயன்
மற்றும் சாகிப்கீரானுடன். பின் நிறைய்ய நண்பர்கள்... இலக்கியப் பித்தனாக
திரிந்த காலம். ஓசூரிலிருந்து அடிக்கடி சேலம் சென்றுவர இவர்களின் நட்பு
கிடைத்தது. பல்சுவை நாவலில் எனது கவிதை வந்தது. (அச் சமயத்தில்தான் பாபு
மற்றும் தூரன்குணாவின் கவிதைகளும் அவ்விதழில் வந்தது)சேலத்திலிருந்து பாபு,
கார்த்தியிடமிருந்து பாராட்டி கடிதமும்... எனது ஆர்வத்தை வளர்த்தெடுக்க
இருவரிடமும் இருந்து கடிதங்கள் நிறைய்ய வரத் துவங்கின... ஊர்
செல்லும்போதெல்லாம் ஐந்துரோடில் இறங்கி சாகிப்கீரானிடம் காட்டுவதற்காக
எதையாவது அவசரஅவசரமாக எழுதிக்கொண்டு போவேன்... சமயங்களில் நிறைய்ய
பேசுவார். சன்னமான அவரின் குரல் காதுகளில் ஒலித்தபடி இருக்க ஊருக்குச்
(நமச்சிவாயபுரம்)சென்றுவிடுவேன். வரும்போது அம்மாப்பேட்டையில் இறங்கி பாபு
மற்றும் கார்த்தியை பார்த்து சமீபத்தில் வாசித்த கவிதை பிடித்த கவிதை
கதையென பெரும் உரையாடலுக்குப் பின் ஓசூர் பஸ் ஏறுவேன். இப்போ
அம்மாப்பேட்டையில் அகச்சேரன் ராஜா, சமீபமாய் சிபிச்செல்வன்
அண்ணாச்சியும்... அதே பழக்கம் இப்பவும் தொடர்ந்தபடித்தான் இருக்கு...
சாகிப்கீரான்
பாபு இணைந்து நடத்திய தக்கை இதழ் வாசிக்க எல்லாம் எனக்கு புதிதாக இருக்க
இவர்கள் மீதான மதிப்பீடு வேறாய் மாற்றம் கொள்ளத் துவங்கியது. தக்கை
சுற்றுச் சூழல் அமைப்பு, அதன் பின் தக்கை திரை இயக்கம், தக்கை
குழந்தைகளுக்காக கண்ணாமூச்சி என்ற அமைப்பு உருவாக்கினார்கள். நிறைய்ய
இலக்கியக்கூட்டங்கள் தொடர்ந்து நடத்தினர். இலக்கிய நண்பர்களை
அறிமுகப்படுத்திவைக்கும் ஜங்சனாக பாபு இருந்தார். தற்சமயம்
எழுதிக்கொண்டிருக்கும் நண்பர்கள் அனைவரும் பாபு மூலமாகத்தான்
நட்பானார்கள்.
தொடர்ந்து இலக்கியக் கூட்டங்களையும்,
நண்பர்களின் தொகுப்புகளுக்கு விமர்சன, அறிமுக கூட்டங்கள் மிகுந்த
பொருட்செலவில் நடத்தி ஆட்டமிட்டு நெகிழ்ந்து கண்ணீர் சொரிந்து தாயின்
பூரிப்போடு மகிழ்ந்து இழப்புகளின் வலியை வென்றெடுக்கும் பாபுவிற்கு மூத்த
இளைய படைப்பாளிகளின் நட்புக் கூட்டம் குவிந்து கிடந்தும் தன் கவிதை
தொகுப்பை தானே பதிப்பகம் தொடங்கி வெளியிட்டிருப்பது வேதனையாகத்தான்
இருக்கிறது. பதிப்பகத்திற்கும் கவிதை தொகுப்புக்குமான அறுந்து தொங்கும்
உறவு குறித்து வெறுமனே வருத்தப்படத்தான் முடிகிறது.
ஐ டிஐ
படிப்பவனாக, அச்சகத்தில் வேலை பார்ப்பவனாக, கந்துவட்டிக்காரனாக அரியப்பட்ட
சேலத்தில் இப்போ இலக்கியவாதியாகவும் அறியப்படவும் எனை சேலத்துக்காரனாகவே
நினைத்துக் கிடக்கவும் அச்சாணியாக இருந்தவர் வே.பாவு... அவரின்
முதல்தொகுப்பு மதுக்குவளை மலர் ஜீலை 29ம் தேதி ஆதவன் வெளியிட நானும்
விஷ்னுபுரம் சரவணனும் பெற்றுக் கொண்டோம். அக்கணம் பத்தாண்டுகால நாட்களை
நினைவில் நெருக்க பிதுக்கம்கொண்டது மகிழ்வின் அன்புச்சொட்டு நீர்...
வாசிப்பில் வெகு எளிதில் நம்மோடு கரைந்து நாமும் நமக்கானவைகளோடு வாழ்ந்து பார்க்கச் செய்கிறது வே.பாபுவின் மதுக்குவளை மலர்.
நேசிப்பதும்
நல்லதுதான். காரணம் நேசிப்பதும் கடினமானதல்லவா... ஒரு மனிதர் இன்னொரு
மனிதரை நேசியுங்கள் என்பதுதான் நமக்குக் கொடுக்கப்பட்ட மிகவும் கஷ்டமான
வேலை மிகவும் முக்கியமான செயல் என்பார் ரில்கே... ஆனால் பாபுவோ வெகு எளிதாக
எல்லோரையும் நேசிக்கக் கற்றவர். நேசிப்பின் ஆனிவேராக அம்மு.
தொகுப்பெங்கும் கிளை விரித்த பெரும் மரமாய் அம்மு. வந்தமரும் பறவையாக
பவிக்குட்டி...
இதே
இந்த மதுவிடுதியின்
மரத்திலிருந்து
ஒரு சின்னஞ்சிறு பூ
என் மதுக்கோப்பையினுள்
வந்து விழுகிறது
அது
அம்முதான்... என முடிவடையும் முதல் கவிதை வாசிப்போரை கரைத்துவிடுகிறது.
அதே மதுவிடுதி இப்போ விழுவது இலை. அதன் தொடர்ச்சியாய் வனத்தையே குடித்து
வெளியேறுகிறார். ஒரு இலை வனத்தையே கரைத்துவிடுவதுபோல இவர் வாழ்வையும்
கரைத்திடுகிறது அம்மு என்ற இலை...
இறந்தவனின் கண்களை திறந்து
மூடச்செய்யும் அம்மு மதுபாட்டிலாக, ஏவாளாக, பட்டத்து ராணியாக, இணை
இயந்திரமாக, தொடர்பு எல்லைக்கு வெளியேறியவளாக, வண்ணத்துப்பூச்சியின் இறந்த
உடலை இழுத்துச் செல்லும் எறும்பாக, சிலுவையில் அறையப்பட்ட தேவதையாக,
அறைவாசியாக, சந்தேகங்களை நிவர்த்தி செய்பவளாக, கனவாக, பிறரின் துயருக்கு
மனம் உருகுபவளாக, தார்ச்சாலையில் கால்களில் மிதிபடும் ஒற்றை ரோஜாவாக,
ஒப்பாரிகளின் மத்தியில் உறங்குபவளென அனைத்தும் அம்முவாகவும் அம்முவின்
நிழலாக மரணமும் பயணிக்கிறது கவிதைகளில்... வாசிப்பின் நிறைவில்
சக்காரியாவின் அல்போல்சாவின் மரணமும் இறுதிச்சடங்கும் (மொழிபெயர்ப்பு:
ஜெயஸ்ரீ) தொகுப்பின் கதைகள் நினைவில் வந்ததை தவிர்க்க முடியவில்லை.
அத்தொகுப்பிலும் ததும்பிக் கிடந்தது மரணம்...
பகட்டோ
சினிமாத்தனமோ சிறிதுமற்று அப்பழுக்கில்லாது தன்னை உரித்து உரித்து
வாழ்ந்துகொண்டிருப்பவனின் சாட்சியம் இக் கவிதைகள்... அம்முவின் கவிதைகளை
தொகுத்து வாசிக்க ஒரு கணம் ஆண்டாள் கண்தோன்றி மறைந்தாள். பாசாங்கற்று
வாழ்ந்திருப்பவனுக்கு வாய்த்திருப்பது சாத்தியம்தான். எக் காலத்திலும்
எல்லா சூழலிலும் தன்னை காய்ச்சிய பாகுவாக வைத்திருந்து அம்மு அள்ளி ஊற்ற
எவ்வுருவத்தையும் அடையக்கூடியவனாக, தன்னை தீய்த்து தீய்த்து அம்மு மணம்
வீசும் பெரும் காதலை எதனோடு ஒப்பிட? கால மாற்றங்களில் கடந்து போய்விடாது
அம்முவிற்காக தன்னை ஒப்புக்கொடுத்தவனின் வாக்குமூலங்கள்தான் இக்கவிதைகள்...
ஓரிரு
கவிதைகள்தான் என்றாலும் பவிக்குட்டியின் உலகம் அலாதியானது. நாமும் ஏதோ ஒரு
பவிக்குட்டியின் உலகத்துள் நுழைந்து தாகமடைந்தவர்கள் என்பதை மறக்காமல்
நினைவூட்டிச் செல்கிறார். ஒரு குழந்தையிடத்தில் அவர்கள் புழங்கும்
பொம்மைகளுள் ஒன்றாக நாமும் மாறினால்தான் சில அற்புதங்களை தரிசிக்க முடியும்
என்கிறார்.
நண்பர்கள் யாராவது தனக்கான அழுத்தங்களை பகிர்வு
கொள்ள அழைத்து தொடர்புகொள்ள முடியாதுபோக இன்னும் கூடுதலான மனப்பாரத்தோடு
இருக்கிறார்களோ என்னவோ எல்லா நேரமும் அதை பகிர்ந்துகொள்ள முடியாது அதற்கான
மனநிலை வாய்க்கும் நேரத்தில் மட்டுமே பேச முடியும். நம் சூழல் பொருட்டு
அலைபேசியை அணைத்து வைக்கும் பழக்கம் எத்தனை மோசமானது என்பதை உணர முடிந்தது
நள்ளிரவு 1.40 என தொடங்கும் கவிதை வாசிக்க...
ஒருவனிடம்
இருக்கும் தவறான பழக்கங்கள் குறித்தும் அவரவர்களுக்கான வியாக்கியானமும்
கருத்தும் வேறுவேறானவை. அது அவர்களின் கண்ணோட்டத்தில் மிக நியாயமானதும்
கூட. ஆனால் அப்பழக்கத்தில் இருப்பவனுக்கு அது தன்னை சிறுகச் சிறுகத்
தின்னும் எனத் தெரிந்தும் அதனோடு ஸ்பரிசத்தை வைத்திருப்பது நிகழ்வின்
நாட்களை உயிர்ப்போடு நகர்த்த வேண்டி இருப்பதன் பொருட்டும் தவிர்க்க இயலாது
போய்விடுகிறது. அதற்கான நியாயத்தை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது
மதுபாட்டில் அம்முவாகி உரையாடியதை வாசிக்க...
என்றாவது
பயணங்களில் பார்த்திட முடிகிறது ஜன்னலோர இருக்கையில் அழுதபடி பயணிக்கும்
யாராவது ஒருவனை. இப்போ அடிக்கடி டாஸ்மாக் கடைகளிலும் இது நிகழ்கிறது.
சமயங்களில் அவனுக்கான துயரம் நமக்கான துயராகவும் ஒட்டிக்கொள்வதுண்டு.
நமக்கான துயர்கள் அவர்களின் கண்ணீரில் வடிந்துகொண்டிருப்பதை நினைவுக்கு
வரச்செய்தது நள்ளிரவு பேருந்தில் எனத் தொடங்கும் கவிதை.
மிகச்
சிக்கலான சங்கடான விசயம்தான் சாவு செய்தியோடு ஒருவரை சந்திக்கச் செல்வது.
அவ் வீடு இருக்கும் மனநிலை கொண்டாட்டம் எல்லாவற்றையும் ஒரு செய்தி
நொடிப்பொழுதில் மாற்றிவிடுவதை 09-12-2003 அதிகாலை 3-50மணி தலைப்பிட்ட கவிதை
சாவுச்செய்தியோடு சென்று வலியோடு திரிந்த நாட்களை நினைவூட்டியது. சாவு
செய்தி சொல்ல ஏற்படும் சங்கடங்களை அலைபேசி வந்தபின் தவிர்க்க முடிந்தது.
எதிரிலிருப்பவரின் காட்சியை கண் அறியாதுதானே...
எதிர்வினை எனும் கவிதை ஒரு செவ்விந்திய நாட்டுப்புற பாடலை நினைவூட்டியது.
கடைசி மரமும் வெட்டுண்டு
கடைசி நதியும் விஷமேறி
கடைசி மீனும் பிடிபட
அப்பொழுதுதான் உறைக்கும்
பணத்தை சாப்பிட முடியாதென...
எதிர்வினை
கவிதையில் பட்டாம்பூச்சியை சிறைபடுத்தி, பறவையை வேட்டையாடி, மரத்தை
வெட்டி, காட்டை நிர்மூலமாக்கி கடைசியாய் தற்கொலை செய்துகொள்வதென முடிகிறது.
தொகுப்பிலிருக்கும் சின்னஞ்சிறு கவிதைகளும் நெறிஞ்சி முள் குத்த உடல் ஊறும் வலியை ஏற்படுத்துகிறது
கூண்டுகள் அழகானவை
பறவைகளில்லா
கூண்டகள்
மிக அழகானவை...
கீறல்
விழுந்த ரெக்காடாக வெறுமனே தமிழன் தமிழன் என்ற கூப்பாடு ஏதுமில்லாது
உண்மையோடு ஈழம் குறித்த தனது வலியை வெளிப்படுத்தியுள்ளார். எப்பவும் எவ்வித
உதவியும் செய்திடாத ராஜாக்களை கவிதையில் அனைத்து உதவிகளையும் செய்வதாக
கூறச் செய்து அம்மணப்படுத்தியுள்ளார்... பதினேழு பேர் உயிர் குடித்த
ஆற்றின் கதையையும் பெரும் துயர்கொள்ள கவிதையாக்கியுள்ளார்.
மேலும்
இவரிடம் நிறைய்ய வசன கவிதைகளை எதிர்பார்க்கலாம் என்ற நம்பிக்கையை
ஏற்படுத்தி உள்ளது தொகுப்பில் இருக்கும் ஒரே ஒரு வசனகவிதையும். பேசுபவன்
நிறுத்தியபிறகும் அவனுக்கான துயரத்தை கேட்பவன் நிறுத்தமில்லாது
தொடர்ந்தபடி இருக்கச் செய்துள்ளது நாமும் அனுபவித்த உணர்வுதான்.
தொகுப்பை
வாசித்து முடிக்க அம்மு வாராததை பேருந்து நிறுத்தத்தில் இசையால்
எல்லோரிடமும் சொல்லிச் செல்லும் பார்வையற்ற குழல் விற்பவனாக எனை
உணர்ந்தேன்..
விலை:ரூ.50, வெளியீடு: தக்கை பதிப்பகம், 15, திரு.வி.க.சாலை, அம்மாப்பேட்டை, சேலம்-3.
நன்றி: மலைகள் இணைய இதழ்.