ஓணான் உருவாக்கிய பகை
ஓணான் ஒன்றை சாகடித்தேன்
நிலத்தில் புதைத்து அடையாளமிட்டு வந்தேன்
கிடைக்கும் காசை கொண்டு
வாங்கவேண்டிய பொருட்களின் பட்டியலோடு
இடம் அடைந்து தோண்டினேன்
காசை பிறப்பிக்கும் முன்னே
நிலம் ஓணானை தின்றுவிட்டிருந்தது
அன்றுதான் துவங்கியது
நிலத்தின் மீதான பகை
யார் மீதாவது கோபம் வந்தால்
ஓங்கி மிதிப்பேன் நிலத்தை
அடிக்கடி காறித் துப்புவதுமுண்டு
சொந்த நிலங்களை அப்பா விற்றபோது
வீடு துக்கத்திலிருக்க நான் மகிழ்வேன்
மனையாளின் தொந்தரவால்
வேறு வழியற்று சொந்தமாக்கினேன்
வீட்டுமனை மட்டும்
இப்பவும் ஓணான் பார்க்க
ஆசை எழுவதுண்டு
நிலத்தின் மீதான பகையை முடித்துக்கொள்ள
சனியன் வயது தடையாய்...
நன்றி: மாற்றுப்பிரதி
2 comments:
கவிஞரே
ம்ம்ம் எக்சலன்ட்
சின்ன வயசில இப்படி ஒரு நம்பிக்கை இருந்தது
மறக்க முடியாத விஷயம்
என்ன சொல்ல அருமையான கவிதை சார்
நன்றி செய்தாலி சார்...
Post a Comment