Thursday, July 10, 2014

நடுகல் நாயகர்களோடு...


என்றாவதுதான் வாய்ப்பதுண்டு. நண்பர்களோடு ஊர் சுற்றுவது. ஒருநாள் நானும் கவிஞர்.பத்மபாரதியும் நாங்களிருக்கும் ஓசூர் பகுதியைச் சுற்றினோம். ஒரு சிறிய கோவிலைச் சுற்றிலும் சதுரமான பெரிய பெரிய கற்கள் அடுக்கப்பட்டிருந்தன. அதில் நிறைய சிற்பங்கள் செதுக்கப்பட்டிருந்தன. சிதைந்து கிடந்த கற்களிலும் சிற்பங்கள் இருந்தன. உடனடியாக மனோன்மணியை தொடர்புகொண்டு கூறினோம். அடுத்த வாரமே ஓசூர் வந்துவிட்டார்.

எங்களோடு அவ்வூருக்குச் செல்லும் வழியில் அவர் நடுகல் ஒன்றைப் பார்க்க வேகமாக ஓடினார். எங்களை அழைத்து ஆச்சரியமாக இது ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இப்பகுதியில் வாழ்ந்த வீரன் ஒருவனுக்காக நடப்பட்டிருக்கு என்றார். பக்கத்தில் இருந்த சிறிய கோவிலை பார்த்து மீண்டும் ஓடினார். அங்கிருந்த ஒரு கல்லில் கல்வெட்டுகள் இருப்பதைப் பார்த்து அங்குமிங்குமாக ஓடி இலைதழைகளைப் பறித்து வந்து அதில் தேய்த்தார். எழுத்துக்கள் தெரிய ஆரம்பிக்க ஓவென கூச்சலிட்டு வேகமாக படித்துக் காட்டினார். அவரது செயல் தொப்புள் கொடியின் ஈரப் பிசுபிசுப்போடு இருக்கும் குழந்தையை ஏந்திய தாயின் பரவசத்தை நினைவூட்டியது.

நடு கற்கள் வெறும் சாவுச் செய்தி கற்களல்ல. அதற்கும் உயிர் உண்டு. வாழ்வு இருக்கிறது.தன் இனக்குழுவை காப்பதற்காக புலியைக் கொன்றவன், போரிட்டு இறந்த வீரன் போன்றோருக்குத்தான் நடுகல் வைக்கப்பட்டிருக்கு. நடுகற்களுக்கு உண்மையான வரலாறு  உண்டு என்பதை அறிந்த தருணம் மகத்தானது. சில மகத்தான தருணங்கள் மனிதனை செழுமைப்படுத்தும். அன்றிலிருந்து பாறை தகர்க்கும் வெடிச் சத்தம் கேட்கையில் அவசர ஊர்தியின் ஓசை கேட்டு உண்டாகும் பதற்றம் தொற்றுகிறது. ஏதாவது கல்வெட்டுகள் அழிந்திருக்குமோ, பாறை ஓவியங்கள் சிதைவடைந்திருக்குமோவென..

அடிக்கடி மனோன்மணியோடு சுற்றத் துவங்கினேன். அதன் நீட்சியாகத்தான் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மையம், ஓசூர் ஏற்பாடு செய்த நடுகற்கள்-தேசிய கருத்தரங்கில் கலந்துகொண்டேன். ஓசூரில் ஜூன்21 மற்றும் 22ம் தேதிகளில் நடந்தது. புத்தக வெளியீடு, தொல்லியலாளர் மங்கை-வீரராகவன் ஆகியோரின் நடுகற்கள் பற்றிய கண்காட்சி, புத்தக கண்காட்சியும் நிகழ்ந்தன. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா தொல்லியல்  ஆய்வு அறிஞர்களின் கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. ஒவ்வொரு அறிஞர்களும் அவர்களின் கண்டுபிடிப்புகளை குறுந்திரையில்  ஒளிபரப்பி விளக்கம் சொல்லியது சிறப்பான ஏற்பாடாக இருந்தது. கர்நாடக இதிகாச அகாதெமி பெங்களூர் (ஹம்பி பல்கலைக்கழகம்) தலைவர் பேரா.முனைவர் தேவர கொண்டா ரெட்டி, வணிகவரி இணை ஆணையர் பா.தேவேந்திரபூபதியும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

அன்று  மாலையில் ஓசூரிலிருந்து பாகலூர் செல்லும் சாலையில் இருக்கும் குடிசெட்லு கிராமத்தில் இருந்த நடுகல் கோவிலுக்கு சிற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டிருக்க, போய் வந்தது எல்லோருக்கும் நல்ல அனுபவமாக இருந்தது. அதைத் தொடர்ந்து இரவு திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி பேராசிரியர் கி.பார்த்திபராஜா தலைமையில் மாற்று நாடக குழுவினரின் பறை, செண்டை இசை நிகழ்ச்சி பார்வையாளர்களுக்கு பெரும் துடிப்பை உண்டாக்கியது.

22ம்தேதியும் நடுகல் அறிஞர்களின் கட்டுரை வாசிப்பு தொடர்ந்தது. பின் சிறப்பு விருந்தினராக வந்திருந்த தியோடர் பாஸ்கரன் உரையாற்றினார்.  அவரைத் தொடர்ந்து தார்வாட் கன்னட ஆய்வு மையம் கர்நாடக பல்கலைக்கழகத்தில் இயக்குனராக இருந்து ஓய்வு பெற்ற ஷதக்ஷரய்யா உரையாற்றினார். கர்நாடக பகுதி தொல்லியல் ஆய்வு குறித்து அறிந்துகொள்ள ஏதுவாக இருந்தது.

முன்னாள் காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர் கே.எ.மனோகரன் மற்றும் பெருமாள் மணிமேகலை பொறியியல் கல்லூரிச் செயலாளர் குமார் தலைமையில் பேராசிரியர் கோவிந்தன் நினைவு அறக்கட்டளை சொற்பொழிவு நிகழ்வு தொடங்கியது. நடுகற்களில் இருந்த கல்வெட்டுகளை திரையிட்டு அதை வாசித்துக் காட்டி அவற்றில் இருக்கும் ஈர்ப்பான சொற்களை குறிப்பிட்டு அதனோடு தொடர்புடைய சங்க இலக்கியப் பாடல்களை கூறினார் தமிழகத் தொல்லியல் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற முனைவர் இர.பூங்குன்றன்.

வரலாறு மன்னர்களுக்கானது மட்டும் அல்ல. மக்களுக்கானதும்தான் என்பதை உணர்த்தும் நடுகற்களின் முக்கியத்துவம் அறிந்து ஆதிக்கும் ஆதியில் வாழ்ந்த நடுகல் நாயகர்களோடு அலைந்து திரிந்த அனுபவத்தைத் தந்தது நிகழ்வு.

Saturday, May 31, 2014

டாக்டர் சித்தார்த்!

பள்ளியின் வளாகத்தில்
நீங்களும் காத்திருக்கிறீர்கள்
எல்.கே.ஜி. அட்மிசனுக்காக.
ஒருவர் பின் ஒருவராகச் சென்றுவர
இப்போது உங்களது முறை
பையனது பெயர் கேட்க
'டாக்டர் சித்தார்த்' என்கிறீர்கள்.
எல்லோரும் உங்களையே வியந்து பார்க்க
பெருமிதங்களோடு வெளியேறுகிறீர்கள்.
அக்கம் பக்கத்தினரும்
அழைக்கத் தொடங்கினர்
டாக்டர் அப்பா... டாக்டர் அப்பாவென.
உங்களது கனவு வளர்ந்துகொண்டே இருக்க
டாக்டர் சித்தார்த்
பனிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சியடைந்தார்.
ஓவியக் கல்லூரியில் சேர
விருப்பம் தெரிவித்தார்.
அறுந்தது உங்களது கனவு.
விடுவீர்களா என்ன...
விஷப்புட்டி ஒன்றை கையிலெடுக்கிறீர்கள்.
தன் ஆசையைப் பலியிட்டு
டாக்டர் சித்தார்த்
'டாக்டர் சித்தார்த்' ஆனார்!

நன்றி: ஆனந்த விகடன்

நீரைத் தேடிப் பயணிக்கும் வேர்களாக...

படித்து முடித்தோம், வேலைக்குச் சேர்ந்தோம், நன்றாக சம்பாதித்தோம், திருமணம் முடித்து செட்டிலாகிவிட்டோம் எனும் மனநிறைவோடு வாழ்வை நகர்த்தாது தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் பலர் தன் மாதச்சம்பளத்தில் சிறு தொகையை பகிர்ந்து 1995ல் ‘அன்புக்கரங்கள்’ எனும் அமைப்பை உருவாக்கினர். அதன் மூலம் மேல்படிப்பிற்கு வழியற்று ஆர்வம் இருந்தும் வறுமையால் படிக்க இயலாது தவிக்கும் மாணவ மாணவிகளை கண்டடைந்து அவர்களுக்கு உதவத் துவங்கினர். பின் மருத்துவச் செலவிற்கும் உதவத்துவங்கினர். நீரைத் தேடிப் பயணிக்கும் வேர்களாக தங்களின் பயணத்தை வேறுவேறு தளங்களில் துவங்கினர்.

2004-ல் இரத்தக் கொடையாளர்களை ஒருங்கிணைக்க ‘உதிரம்’ அமைப்பும், கண்தானம் செய்ய விரும்புவர்களுக்காக 2009ல் ‘விழி’ என்ற அமைப்பையும், குழந்தைகளின் மாற்றுச் சிந்தனைப் போக்கை வளர்த்தெடுக்க ‘குட்டி யானைகள்’ என்ற அமைப்பையும் உருவாக்கி அன்புக்கரங்களின் பரிணாமம் நீண்டுகொண்டே சென்றது.

‘கூட்டு முயற்சி’ என்னும் வார்த்தையில் மிகுதியான நம்பிக்கை வைத்திருப்பதால் எந்த ஒரு தனிநபர் பெயரையும் அமைப்போடு பொருத்திப் பார்க்காது எல்லோருக்குமானதாக இருப்பதால் அது தன் தொடர் பயணத்தில் எவ்வித இடையூறுமின்றி வளர்ந்துகொண்டிருக்கிறது.

01 மே 2014 உதிரம் அமைப்புத் துவங்கி பத்தாம் ஆண்டு. ஒவ்வொரு ஆண்டும் மே முதல்நாள் இரத்தக்கொடை முகாம் நடத்தப்படும். தொழிலாளர்களும் பொதுமக்களும் ஆர்வாமாக வந்து பங்குகொள்வார்கள். இவ்வாண்டு இரத்தக்கொடையாளர்களின் எண்ணிக்கை 949 ஆக எட்டியது. ஓசூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர் அரசு மருத்துவமனைகளும், பெங்களுர் டி.டி.கே இரத்த வங்கியும் வந்திருந்து இரத்தக்கொடை முகாம் சிறப்புற உதவினர்.

குடும்பம் குடும்பமாக நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்துகொண்டு தங்களின் மேலான உழைப்பை எவ்வித சலிப்புமின்றி ஆண்டுதோறும் வழங்கிக்கொண்டிருக்கிறார்கள். ஆணும், பெண்ணுமாக பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்க, அவர்களது குழந்தைகள் ‘குட்டி யானைகள்’ அமைப்பில் ஓவியம் வரைதல், கதை சொல்லல், விடுகதை போடுதல், சிறுசிறு விளையாட்டென கொண்டாட்டமாக இருப்பார்கள். சற்றே வளர்ந்த மாணவர்கள் மரக்கன்றுகள் விநியோகிக்கும் பொறுப்பை எடுத்துக்கொள்வார்கள். முகாம் ஆண்டுதோறும் சிறக்க ஒசூர் ஆட்டோ தொழிலாளர்களின் பங்களிப்பு மகத்தானது. அவர்களின் சவாரியில் முகாமின் விளம்பரமும் பயணிக்கும். பழங்கள், பழச்சாறு, இளநீர், கேக், மற்றம் சிறுசிறு பரிசுபொருள்கள் என வருடம் தோறும் முகம் சுளிக்காமல் வழங்கிக்கொண்டிருக்கும் நன்கொடையாளர்களின் தாராளமான மனமும் முகாமிற்கு மகுடம் சேர்க்கும்.

ஓசூரில் வெவ்வேறு அமைப்புகளால் அடிக்கடி இரத்தக்கொடை முகாம் நடப்பதுண்டு. ஆனாலும் மே முதல்நாள் கொடுப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்தபடி இருக்கும். சுற்றுப்புற ஊர்களில் இருந்து வரும் தொழிலாளர்கள் தங்கள் இரவுப்பணி முடித்து நண்பர்களின் அறைகளில் தங்கி காலையிலேயே வந்திருந்து இரத்தம் வழங்கி பின்னர் ஊருக்குச்செல்வார்கள். தொழிலாளர்களின் மேதின பணிகளில் முதன்மையாக இரத்தம் கொடுப்பதும் முதன்மையானதாக மாறிப்போனது குறிப்பிடத்தக்கது.

மருத்துவக் குழுவினர், தன்னார்வலர்கள், இரத்தக்கொடையாளர்கள், பார்வையாளர்கள் என திரண்டிருக்கும் அவையின் மையத்தில் ஒசூர் நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப்பணியாளர்களை அழைத்துவந்து ஒவ்வொருவராக அமரச்செய்து துண்டு போர்த்தி, மெடல், கேடயம், மற்றும் சிறு பரிசும் வழங்கி அவர்களை கௌரவித்தது நெகிழ்வான சம்பவமாக இருந்தது.

நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கும் விபத்துகளின் எண்ணிக்கை பெரும் கவலையை அளித்துக்கொண்டிருக்கையில் உதிரம் போன்ற அமைப்புகளின் பணி மேலும் சிறக்க நாமும் பக்கமிருப்போம்..

Saturday, May 17, 2014

nantri: malaigal.com

சாபவிமோசனம்

ஒரு பூ
பாறையாகிக் கொண்டிருந்தது
சாபத்தினால் அல்ல
வேறு கதை உங்களுக்கு
நினைவிற்கு வரலாம்
பாதகமொன்றுமில்லை
வேகமாக அடிவாங்கிய
மட்டை பந்தை தேடிப் போனபோது
பெரும் குழியொன்றில் கண்டேன்
அதிசயித்து சப்தமெழுப்ப
திரண்ட பெருங் கூட்டத்தின்
வியப்பு அடங்கும் முன்
இனிப்புகளை வழங்கத் துவங்கினான்
வந்திருந்த பாறை வியபாரி.
*

வாக்கு மூலம்

அரசு கர்ஜித்தது
விஞ்ஞானிகளின் திசை அதிர
கூடியது ரகசிய மாநாடு
ஆனவத்தைக் காட்டி
அறிவை வாங்க முடியாது
ஆவேசமாக சிலர்
நடுநிலைவாதிகள் பரிந்துபேசி
ஆராய்ந்திடலாமென ஆமோதிக்கச் செய்தனர்
ஓராண்டுக்குப் பின்னர்
மனு ஒன்று அனுப்பப்பட்டது
மண்ணில் விளைவிக்க இயலாது
வேண்டுமானால் தாளில்
குழந்தைகள் பிறப்பிப்பார்களென.

அறிக்கை வாசிக்கிறது அரசு
விஞ்ஞானிகள் கடும் முயற்சியில் இருக்கிறார்கள்
விரைவில் பாறைகள் உருவாக்கப்படுமென.

nantri: malaigal.com