என்றாவதுதான் வாய்ப்பதுண்டு. நண்பர்களோடு ஊர் சுற்றுவது. ஒருநாள் நானும் கவிஞர்.பத்மபாரதியும் நாங்களிருக்கும் ஓசூர் பகுதியைச் சுற்றினோம். ஒரு சிறிய கோவிலைச் சுற்றிலும் சதுரமான பெரிய பெரிய கற்கள் அடுக்கப்பட்டிருந்தன. அதில் நிறைய சிற்பங்கள் செதுக்கப்பட்டிருந்தன. சிதைந்து கிடந்த கற்களிலும் சிற்பங்கள் இருந்தன. உடனடியாக மனோன்மணியை தொடர்புகொண்டு கூறினோம். அடுத்த வாரமே ஓசூர் வந்துவிட்டார்.
எங்களோடு அவ்வூருக்குச் செல்லும் வழியில் அவர் நடுகல் ஒன்றைப் பார்க்க வேகமாக ஓடினார். எங்களை அழைத்து ஆச்சரியமாக இது ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இப்பகுதியில் வாழ்ந்த வீரன் ஒருவனுக்காக நடப்பட்டிருக்கு என்றார். பக்கத்தில் இருந்த சிறிய கோவிலை பார்த்து மீண்டும் ஓடினார். அங்கிருந்த ஒரு கல்லில் கல்வெட்டுகள் இருப்பதைப் பார்த்து அங்குமிங்குமாக ஓடி இலைதழைகளைப் பறித்து வந்து அதில் தேய்த்தார். எழுத்துக்கள் தெரிய ஆரம்பிக்க ஓவென கூச்சலிட்டு வேகமாக படித்துக் காட்டினார். அவரது செயல் தொப்புள் கொடியின் ஈரப் பிசுபிசுப்போடு இருக்கும் குழந்தையை ஏந்திய தாயின் பரவசத்தை நினைவூட்டியது.
நடு கற்கள் வெறும் சாவுச் செய்தி கற்களல்ல. அதற்கும் உயிர் உண்டு. வாழ்வு இருக்கிறது.தன் இனக்குழுவை காப்பதற்காக புலியைக் கொன்றவன், போரிட்டு இறந்த வீரன் போன்றோருக்குத்தான் நடுகல் வைக்கப்பட்டிருக்கு. நடுகற்களுக்கு உண்மையான வரலாறு உண்டு என்பதை அறிந்த தருணம் மகத்தானது. சில மகத்தான தருணங்கள் மனிதனை செழுமைப்படுத்தும். அன்றிலிருந்து பாறை தகர்க்கும் வெடிச் சத்தம் கேட்கையில் அவசர ஊர்தியின் ஓசை கேட்டு உண்டாகும் பதற்றம் தொற்றுகிறது. ஏதாவது கல்வெட்டுகள் அழிந்திருக்குமோ, பாறை ஓவியங்கள் சிதைவடைந்திருக்குமோவென..
அடிக்கடி மனோன்மணியோடு சுற்றத் துவங்கினேன். அதன் நீட்சியாகத்தான் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மையம், ஓசூர் ஏற்பாடு செய்த நடுகற்கள்-தேசிய கருத்தரங்கில் கலந்துகொண்டேன். ஓசூரில் ஜூன்21 மற்றும் 22ம் தேதிகளில் நடந்தது. புத்தக வெளியீடு, தொல்லியலாளர் மங்கை-வீரராகவன் ஆகியோரின் நடுகற்கள் பற்றிய கண்காட்சி, புத்தக கண்காட்சியும் நிகழ்ந்தன. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா தொல்லியல் ஆய்வு அறிஞர்களின் கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. ஒவ்வொரு அறிஞர்களும் அவர்களின் கண்டுபிடிப்புகளை குறுந்திரையில் ஒளிபரப்பி விளக்கம் சொல்லியது சிறப்பான ஏற்பாடாக இருந்தது. கர்நாடக இதிகாச அகாதெமி பெங்களூர் (ஹம்பி பல்கலைக்கழகம்) தலைவர் பேரா.முனைவர் தேவர கொண்டா ரெட்டி, வணிகவரி இணை ஆணையர் பா.தேவேந்திரபூபதியும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
அன்று மாலையில் ஓசூரிலிருந்து பாகலூர் செல்லும் சாலையில் இருக்கும் குடிசெட்லு கிராமத்தில் இருந்த நடுகல் கோவிலுக்கு சிற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டிருக்க, போய் வந்தது எல்லோருக்கும் நல்ல அனுபவமாக இருந்தது. அதைத் தொடர்ந்து இரவு திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி பேராசிரியர் கி.பார்த்திபராஜா தலைமையில் மாற்று நாடக குழுவினரின் பறை, செண்டை இசை நிகழ்ச்சி பார்வையாளர்களுக்கு பெரும் துடிப்பை உண்டாக்கியது.
22ம்தேதியும் நடுகல் அறிஞர்களின் கட்டுரை வாசிப்பு தொடர்ந்தது. பின் சிறப்பு விருந்தினராக வந்திருந்த தியோடர் பாஸ்கரன் உரையாற்றினார். அவரைத் தொடர்ந்து தார்வாட் கன்னட ஆய்வு மையம் கர்நாடக பல்கலைக்கழகத்தில் இயக்குனராக இருந்து ஓய்வு பெற்ற ஷதக்ஷரய்யா உரையாற்றினார். கர்நாடக பகுதி தொல்லியல் ஆய்வு குறித்து அறிந்துகொள்ள ஏதுவாக இருந்தது.
முன்னாள் காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர் கே.எ.மனோகரன் மற்றும் பெருமாள் மணிமேகலை பொறியியல் கல்லூரிச் செயலாளர் குமார் தலைமையில் பேராசிரியர் கோவிந்தன் நினைவு அறக்கட்டளை சொற்பொழிவு நிகழ்வு தொடங்கியது. நடுகற்களில் இருந்த கல்வெட்டுகளை திரையிட்டு அதை வாசித்துக் காட்டி அவற்றில் இருக்கும் ஈர்ப்பான சொற்களை குறிப்பிட்டு அதனோடு தொடர்புடைய சங்க இலக்கியப் பாடல்களை கூறினார் தமிழகத் தொல்லியல் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற முனைவர் இர.பூங்குன்றன்.
வரலாறு மன்னர்களுக்கானது மட்டும் அல்ல. மக்களுக்கானதும்தான் என்பதை உணர்த்தும் நடுகற்களின் முக்கியத்துவம் அறிந்து ஆதிக்கும் ஆதியில் வாழ்ந்த நடுகல் நாயகர்களோடு அலைந்து திரிந்த அனுபவத்தைத் தந்தது நிகழ்வு.
No comments:
Post a Comment