Friday, May 6, 2022

பேசும் புதிய சக்தி 2018

 1. நம் மழை


உரையாடலற்றிருப்பது
சொச்ச காலம்தானே என்கிறாய்
அருகிலா இருக்கிறது
கண்ணுக்குத் தெரியும் நிலா.

வாழ்தல்
நாட்களை கடப்பதாகாது
நேற்றில் வாழ்வது
சாத்தியமற்றது- நீயும்
அறிந்த உண்மைதானே.

உன் குரலில் துள்ளும்
அணில் பிள்ளைகளை
தினம் தினம் இழப்பது
அவ்வளவு துன்பகரமானது
எளிதில் சமாதானம் அடையாததும்.

வலியை
நினைவு குணமாக்காது.

அறியாயா
நம்பிக்கையற்ற வானத்தில்
ஆயிரமாயிரம் நட்சத்திரங்கள் ஒளிர்ந்தும்
உணர முடியாது ஊனமாகிறேன்.

அன்பே உரையாடல்தானே
நம்மை எழச்செய்யும்
காத்திருக்கிறேன்.

நம் மழைக்காக.
*

2. விளையாட்டு

முதலில் எதிரியை
தீர்மானிக்க வேண்டும்.

விளையாட்டை
சொல்லித்தந்தவன்
பேசியை என்பக்கமாக காட்டி
இவன் பலமாக இருக்கிறான்
தோல்வி அடைவோம் வேண்டாமென்றான்.

மற்றவனைக் காட்டி
பலவீனனாக இருக்கிறான்
வெற்றிகொள்ளலாமென
விளையாடத் தொடங்கினான்.

எழவு நமக்குத்தான்
எதைச் செய்யவேண்டுமென்றாலும்
ஆயிரத்தெட்டு குழப்பங்கள்.
*

Thursday, May 5, 2022

அம்ருதா 2021

 1. மன அவசம்.

*
திடும்மென
நடந்துகொண்டிருந்தவனின் முன்
பொற்குவியல்
திசை எட்டும் கண்கள் சுழற்றி
தனதாக்கிக் கொண்டான்
திருடன் திருடன் என்றவாறு
கிளியொன்று பறந்த 
குழப்பத்தில்
மகிழ்வு கணம் புதைந்து
முகிழ்ந்தது
ஒரு வீச்சம்.


2.காத்திருப்பு
*
நழுவிய
கனியின் சுவையை
சொல்வதெப்படி
நடுக்கத்தில் மொழி. 

காத்திருப்பேன்
பயிற்சியோடு
மற்றுமொன்று
நழுவிடும் கணத்திற்கு.

3. இறைஞ்சுதல்

தொங்கியபடி
வீட்டின் மீது
கனிந்திருந்தது மதியம்.


இன்னும் கொஞ்சமென
மின்விசிறியிடம்
இறைஞ்சியபடி சிறுமி. 

எஞ்சிய
கதைகளை கேட்டேன்
தூங்கும்போது என்றபடி
ஓடிப்போனாள்.

Tuesday, May 3, 2022

அம்ருதா 2019

 


நெளிந்து கொண்டிருக்கும் பாம்பு
ந.பெரியசாமி


நீர் ஓட்ட ஆற்றுக்கரை
செழித்த வயலின் ஓரம்
அடர் வனத்தில் இருப்பதை
ஒத்ததாகவோ
போலவோ
இல்லை.

மரத்தை வரைந்திருந்தான்.

பச்சைக்கிளி
சிட்டுக்குருவி
காகம்
புறா
எப்பறவையை பிறப்பிப்பான்
மனதின் அடுக்குகள்
ஆர்வத்தை கிளறிட
பாம்பொன்று நெளிந்தோடியது
தொங்கத் துவங்கின வௌவ்வாள்கள்.

கருப்பு  பிடிக்குமா
அபத்தமாக கேட்டது
வளர்ந்த வயது.
0
ஏக்கப் படலம்
ந.பெரியசாமி

மாலை போர்த்தி
பாதம் வணங்கி நிமிர்கையில்
அந்திமக் காலத்தில் அருந்தியிராத
ஏக்கத்தின் படலம்
மூடிவைத்த கண்களில்.
உதடுகளில் துரு படிந்துகொண்டிருக்க
நினைவுகளில் அவருடனான நாட்கள்
இறந்த காலமாகிக் கொண்டிருந்தது
பறை இசையுடனான ஒப்பாரியை
உடன் மனதுள் இட்டவாறு
பெருத்த டயரில் அடுக்கியிருந்த
கட்டைகளுக்குத் தின்ன
கொடுத்துத் திரும்பினோம்.

பத்திருபது பாட்டில்கள்
சாராயத்தை சுமந்தவாறு
மகிழ்ச்சியோடு வந்தார்
நெடுநாட்களுக்குப் பிறகு
நேற்றைய கனவில்
தாத்தா.


Monday, May 2, 2022

அம்ருதா 2018

 1

சொட்டும் ஒலிகளால் 
நிரம்பும் பாத்திரம் வழிந்தது
நிலம் உறிஞ்சி குளிர்ந்திட
தழைத்தது விருட்சம்.

பின்பொரு நாளில்
நின்றிருந்தவனின் தலையில்
ஒலிச்சொட்டுகள்
சிலிர்த்த உடலுள்
ஒளியின் நடனம்.

2. பலூன்
காற்றடைக்க பறந்தாடுவதற்கும்
நிரப்புகையில்
வெடித்து துக்கடாவதற்கும்
மத்தியில் 
ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறது வாழ்வு.