Tuesday, May 3, 2022

அம்ருதா 2019

 


நெளிந்து கொண்டிருக்கும் பாம்பு
ந.பெரியசாமி


நீர் ஓட்ட ஆற்றுக்கரை
செழித்த வயலின் ஓரம்
அடர் வனத்தில் இருப்பதை
ஒத்ததாகவோ
போலவோ
இல்லை.

மரத்தை வரைந்திருந்தான்.

பச்சைக்கிளி
சிட்டுக்குருவி
காகம்
புறா
எப்பறவையை பிறப்பிப்பான்
மனதின் அடுக்குகள்
ஆர்வத்தை கிளறிட
பாம்பொன்று நெளிந்தோடியது
தொங்கத் துவங்கின வௌவ்வாள்கள்.

கருப்பு  பிடிக்குமா
அபத்தமாக கேட்டது
வளர்ந்த வயது.
0
ஏக்கப் படலம்
ந.பெரியசாமி

மாலை போர்த்தி
பாதம் வணங்கி நிமிர்கையில்
அந்திமக் காலத்தில் அருந்தியிராத
ஏக்கத்தின் படலம்
மூடிவைத்த கண்களில்.
உதடுகளில் துரு படிந்துகொண்டிருக்க
நினைவுகளில் அவருடனான நாட்கள்
இறந்த காலமாகிக் கொண்டிருந்தது
பறை இசையுடனான ஒப்பாரியை
உடன் மனதுள் இட்டவாறு
பெருத்த டயரில் அடுக்கியிருந்த
கட்டைகளுக்குத் தின்ன
கொடுத்துத் திரும்பினோம்.

பத்திருபது பாட்டில்கள்
சாராயத்தை சுமந்தவாறு
மகிழ்ச்சியோடு வந்தார்
நெடுநாட்களுக்குப் பிறகு
நேற்றைய கனவில்
தாத்தா.


Monday, May 2, 2022

அம்ருதா 2018

 1

சொட்டும் ஒலிகளால் 
நிரம்பும் பாத்திரம் வழிந்தது
நிலம் உறிஞ்சி குளிர்ந்திட
தழைத்தது விருட்சம்.

பின்பொரு நாளில்
நின்றிருந்தவனின் தலையில்
ஒலிச்சொட்டுகள்
சிலிர்த்த உடலுள்
ஒளியின் நடனம்.

2. பலூன்
காற்றடைக்க பறந்தாடுவதற்கும்
நிரப்புகையில்
வெடித்து துக்கடாவதற்கும்
மத்தியில் 
ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறது வாழ்வு.

Wednesday, April 27, 2022

கவிதைகள்

 1. ழினோவா

பதினெட்டு  அகவைக்கேற்ற
கச்சிதத் தோற்றம்
வசீகரிக்கும் உடல்வாகு.
ஆம்  இல்லை பார்க்கலாம்
மிகச் சொற்பமான வார்த்தைகளே கிடைக்கும் பதிலாக.
மௌனித்திருப்பவனும் அல்ல.
தன்னுடன் முளைத்த காமிராவால்
காடு மலை நதிகளோடு
கதை பேசிக்கொண்டிருப்பவன்.

அன்றும் அப்படித்தான்
லயிக்கும்  அடர் கரும் வண்ணத்தை
பிம்பமாக்கி உரையாடியவனின் உடல் மெல்ல
நீலமாகிக் கொண்டிருந்தது,
புன்னகை மாறா இதழ்களுடன்.

2. திராட்சை தோட்டம்  சுமந்தவன்
*

தாங்க இயலாத வலிகளை
கண்ணீரில் வழியச் செய்தான்.
ஈரமேறிய மண்ணை பிசைந்து
சிறு சிறு உருண்டைகளாக்கினான்.
செல்லும் இடம்தோறும் சுமந்தே திரிந்தான்.
பாரம் அழுத்த
சோர்வுற்ற கணங்களில்
தூக்கி எறிய முயற்சித்தான்
இயலாதிருக்க சுமந்தே பழகினவன்
பனிப்பொழிவு நிறைந்த அதிகாலையில்
உடலில் கவிழ்ந்த வலியை சகிக்காது
வீசி எறிந்தான்.

உருண்டைகள்
திராட்சை தோட்டமொன்றில்
கனியாகியதைக் கண்டு
சமாதானம் கொண்டவன் நினைவில்
பருக நினைத்த பானம் அலையாடிக் கொண்டிருக்கிறது.


Tuesday, April 26, 2022

நன்றி: காலச்சுவடு



1.நிலவு காயும் வெளி

இன்று
கைகளுக்கு நீளும்
தன்மை கிடைத்தது.
நேற்றின் உடையில்
போதை ஏற்றியவளின்
ஜன்னலைத் திறந்தேன்
இன்றும் நேற்றின் உடையோடிருக்க
மகிழ்ந்தேன்.
ஒரு கணம் புத்தி
ஆசை கொண்டது.
நிர்வாணம் 
ததும்பும் நீரோடையின் குளிர்ச்சியைத் தரும்.
அறிந்திருந்தும்
செய்யாதிருக்கச் செய்தது இன்னொரு.
*

2. நிழலை புதைத்த நிலவு

குத்துக்காலிட்டு அமர்ந்தவாறு
பறித்த ஊற்றிலிருந்து
நீரை சேந்திக் கொண்டிருந்தவர்களைக் கடந்து
தொலைவாக இழுத்துச் சென்றாள்.
ஈச்ச மரத்தின் நிழலில்
எதிரெதிராக அமரச் செய்து
வானத்தை குவித்து கரைகட்டினாள்.
கொண்டுவந்த நிலவை
கிச்சுக்கிச்சா தாம்பூலம் கியாக்கியா தாம்பூலமென
ராகமிட்டவாறு ஒளித்தாள்.
கண்டுபிடிக்க கைகளை
மேகமாக்கி குவித்தேன்
வேறு இடத்திலிருந்து வெளியேற
தோல்விக்கு புன்னகையை பரிசளித்தாள்.
தொடர்ந்த விளையாட்டில்
பெற்றுக் கொண்டிருந்தேன்
புன்னகையை மட்டுமே.
தொடர் வெற்றியின்
சோர்வை விலக்க
நிலவை என் வசமாக்கினாள்
ராகமிட்டவாறு
ஆழ ஊன்றி அவளைக் கண்டேன்
நமட்டுச் சிரிப்பில்
ரகசியம் அறிந்தாற்போல்
குவித்த கைகளுக்குள் மரமிருக்க அதில்
தன் நிழலை புதைத்துக் கொண்டது நிலவு.
*

3. பகடையாட்டம்
தாயம்
ஆறு ஐந்து இரண்டிற்கு
வெட்டுண்டு
கட்டைகள் உருண்டோட
விழும் எண்ணிக்கைகள்
எதிர்வரும் காயை ஏமாற்றி
மலை மலையாக தாவி
நின்றிருந்த விருட்சம்
காலத்தை கனியாக்கியது
தாயம் இடாமலே.
குரல்கள் கலைந்து போக
ஆட்டக் களத்தில்
காய்கள் கனிகளாகவும்
கனிகள் காய்களாகவும்
மாற்றமடையும் கோடையின் கானல்.
*
4. குடை

வானம் சிந்தத் துவங்கியது.
சட்டைப் பையின் கவிதையிலிருந்து
வெளியேறிய குடையால்
எரிச்சலடைந்தவன் 
மடக்கி எறிந்தான்.
துளிகள் மீண்டும்
உடலுள் பூத்துக் கொண்டிருக்க
கவிதையின் இறுதி
வரியிலிருந்த பெண்
துப்பட்டாவை விரித்தாள்.
பிணைந்த வெப்பம்
ஈரத்தை உலர்த்திக் கொண்டிருந்தது.