Sunday, January 1, 2012

வாசமற்ற வாழ்வு

அதுகளின் மொழி
எனக்கெப்படித் தெரியுமெனும்
வியாக்கியானங்களை விலக்கிவையுங்கள்
அன்பின் வயப்பட பரிச்சயமாகும்
அடர்ந்து கிடந்த அந்திமந்தாரையில்
அமர்ந்திருந்த தட்டான்களின்
உரையாடலின் கவலைப்பாடிது
துரத்த துரத்த போக்குக்காட்டி
களைப்புறும் கணம் கையுள் சிக்க
சிறு சிறு கல் தூக்கச் செய்யும்
தண்டனையிட்டு மகிழ்ந்திட்ட
மழலைகளின்
வாசனையற்றுப் போனதே
நம் வாழ்வு...

Thursday, December 22, 2011

எதிர்விசை

இரு நாட்களை
அருகருகே உறங்கச் செய்தேன்
ஒன்று முன்னோக்கி உருள
மற்றதோ பின்நோக்கி உருண்டது
ஒவ்வொரு விசைக்கும்
எதிர்விசை
சமமானதுதான் போலும்...

Friday, December 16, 2011

முகம்

ஊரின் முகத்தை தீர்மானிக்க
அலையத் துவங்கினேன்
மேற்கிலிருந்து பார்க்க கிழக்கும்
கிழக்கிலிருந்து திரும்ப மேற்கும்
வடக்கிருந்து வர தெற்கும்
தெற்கிருந்து இறங்க வடக்குமென
எதிரெதிர் துருவங்கள்
முகப்பாய் மாற்றம்கொள்ள
தோல்வி பனிபோர்த்த வீடடைந்தேன்
நிலைக்கண்ணாடி
ஒற்றைத் தன்மையோடு தொங்கவிட்டது முகத்தை...

Monday, December 12, 2011

தரக்குடும்பம்




இரவை புணர்ந்தெழுந்ததும்
தொங்கவிடப்பட்ட வெள்ளை துணி மூடி
கொட்டாவி இறுமலை முடித்து
மூக்கின் துவாரங்களில்
காற்றோடு கணநேரம் பயிற்சித்தேன்
கற்பிக்கப்பட்டதை பிசகிடாது
பல் துடைப்பத்தில் பற்பசை இட்டேன்
குறுக்கும் நெடுக்குமாக அசைக்க
நினைவு உறுத்தியது
அய்யய்யோன்னு தலையிலடித்து
மேலும் கீழுமாக அசைத்து துலக்கினேன்
தர முத்திரையிட்ட
சோப்பு ஷாம்புகளால் உடல் கழுவினேன்
துணையாளும் அவங்களுக்கான அட்டவணையின்படி
ஸ்டிக்கரால் பெயரிடப்பட்ட டப்பாக்களிலிருந்து
வெகு எளிதாக சமைத்து முடிக்க
கொடுக்கப்பட்ட காலத்திற்குள் தயாராகி
காலனிகளின் அணிவகுப்பிலிருந்து
எனை பெயர்த்து வெளியேறினேன்
வெளிச்சுவற்றில் மின்னிக்கொண்டிருந்தது
என் தினக்கூலியை உத்திரவாதப்படுத்திக்கொண்டிருக்கும்
ISO தரச்சான்று இல்லமெனும்
பாலிமர் சீட்டில் பொறிக்கப்பட்ட
பச்சை எழுத்துக்கள்...