Wednesday, May 31, 2023

நன்றி: தமிழ்வெளி

 


அன்றாடங்களின் கவிக்கூடு
- ந.பெரியசாமி


தன் அன்றாட அனுபவங்களை மொழியின் நுட்பத்தோடு பிணைத்து நம்முள் இருக்கும் கித்தானில் ஓவியமாக்கி விடுகின்றன எம்.டி.முத்துக்குமாரசாமியின் 'ஒரு படிமம் வெல்லும் ஒரு படிமம் கொல்லும் தொகுப்பின் கவிதைகள். கண்ணிமையின் அசைவுகள், மருள்த் தோற்றங்கள், நீ நான் நிலம், பித்து பிறை பிதா, கர்மவினை, புத்துயிர்ப்பு, சிதறல்கள் குறுங் கவிதைகள், நகரம் என எட்டு பகுதிகளை உள்ளடக்கிய தொகுப்பாக வந்துள்ளது. ஒவ்வொரு பகுதி கவிதைகளும் தனக்கேயான பிரத்யோகத்தன்மையை கொண்டிருப்பது சிறப்பு. 

நிகழும் சம்பவங்களை எம்.டி.எம் கவிதையாக உருமாற்றுவதன் அழகு நம்மை வசீகரிக்கிறது. இதிலெல்லாம் கவிதைகள் உள்ளதாவென வியப்பூட்டவும் செய்கின்றன. எழுதிப் பார்த்தலின் மூலம் வெளிப்படும் மனச்சித்திரம் கட்டமைப்போடும், சிதறியும் உருவாகிக் கொண்டும் இருக்கிறது. மேகத்தின் துண்டு போல அலைவுற்றபடியும், வாழ்வின் பூரணத்தன்மையுடனும் கவிதைகள் இருக்கின்றன.

தன்னை அழித்துக்கொண்டவனால்தான் தன்னை அறிந்துகொள்ள முடியும். 'தன்'னோடு இருக்கையில் பிரகாசிப்பவன், 'தன்'னற்று இருக்க தீபச் சுடராக இருக்கிறான். மாயாத் தீச்சுடருக்காக தியானிக்கும் எரிந்த திரியாகவும் இருக்கவேண்டி இருக்கிறது.

எதுவொன்றையும் கண்டு அதனுள் உணர்ந்து வாழ அதற்கான மனபோக்கு அவசியம் என்பதை  உணர்த்தும் கவிதைகளைக் கொண்டு நம்மை வசீகரிக்கிறது. தொகுப்பின் முதல் பகுதியாக இருக்கும் ' கண்ணிமையின் அசைவுகள்'.

பார்ப்பது எல்லாம் வாழ்வது என்றாகிவிடாது. ஆற்றை பார்ப்பதற்கும், ஆற்றோடு வாழ்வதற்குமான அனுபவம் அவரவர்களுக்கானது. தான் வாழ்ந்த ஒன்றை, அதிலிருக்கும் ஒளிர்வுகளை மெல்ல நம்முள் இறக்கி வைத்தபடியே செல்வது அசாத்தியமிக்கதோர் கலை. அக்கலை எம்.டி.எம்மிற்கு லாவகமாக கைகூடியுள்ளது. பொருநை நதியோடு நம்மையும் பயணிக்கச் செய்திடுகிறார். பொருநைக்கான துயர்கள் நமக்கானவையாக மாற்றம்கொள்ளச் செய்கிறார்.  நம்முள்ளும் இனி பொருநை ஓடிக்கொண்டே இருக்கச் செய்கின்றன கவிதைகள்.

' நீ நான் நிலம் ' பகுதியின் கவிதைகள் இழப்பின் நினைவுகளில் நம்மை சுழன்றாடச் செய்கின்றன. பித்தேற்றும் காதலை நம்முள் காட்சிபடுத்துதல், ' கையில் கிடைத்த கனியும்'/ ' மரத்தில் தேங்கிய காயும்' நமக்கு கிடைத்த தரிசிப்புகளை காட்சிபடுத்துகின்றன.

குரல் எனும் மாயக்கிணறு நம்மை உள் இழுத்தபடியே இருக்கும். திருச்செந்தூர் கவிதையில் வரும் குறத்தியின் மஞ்சள் பூசிய முகம் சொல்லும் சேதி நமக்கானதாகவும் இருக்கிறது. தலைமேல் விழும் தளிர் ஒன்றின் ஆசி எளிதில் கிட்டுவதில்லை. வனம் நம்மால் அழிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. வெட்டப்பட்ட மரங்கள் பயன்கொள்ளும் பொருள்களாக மாறி அதன் ஒளிர்வை தன்னுள் வைத்துக்கொண்டே இருப்பதை ' வனநினைவு' கவிதை சுட்டுகிறது. இதன் நீட்சியாக இருக்கிறது' முகத்தை துடைத்துக் கொள்' கவிதை. 

' காலம் இனியொரு நிலமற்ற கடைத்தெரு' எனும் வரிகள் நம்மை இம்சிக்கவே செய்கின்றன. அழிவும் உருவாக்கமும் இயல்புதான். எதை அழித்து எதை உருவாக்குகிறோம் என்பதையும் கணக்கில்கொள்ள வேண்டியிருக்கிறது. எவ்வித சிரமத்திற்குள்ளும் யோசிப்புகளை உட்படுத்தாது மாற்று குறித்த சிந்தனையை உருவாக்காததுதான் நீர் நிலம் வனம் சுருங்கிக்கொண்டே இருக்கும் சூழல் நம்மை கொன்று அழிக்கும்.

அப்பாக்களுக்கும் மகன்களுக்குமான
பிணைப்பு கொஞ்சகாலம் மட்டுமே. குறிப்பிட்ட காலத்திற்குப் பின் ஒருவித விலகல் வந்துவிடுவது இயல்பாகிவிடுகிறது. கேள்விக்கான பதில், பதிலுக்கான கேள்வி என்று உரையாடல் நேரம் மிளகாகி விடுகிறது. அப்பாக்களின் இறப்பிற்குப் பின் அவர்களுடனான உரையாடல் நினைவின் சங்கிலியாக கோர்த்துக்கொண்டே இருக்கும். அப்பாக்களிடையே இருந்த புதிர்கள் நம்முன் காட்சிகொள்ள பெரும் வியப்பாக உருக்கொள்ளும். அவர்கள் பயன்படுத்தியவைகளை அவர்களாகவே நடமாடும் உணர்வை உருவாக்கும். இவ்வனுபவங்களை உணர்வுபூர்வமாக கொண்டுள்ளன ' பித்து பிறை பிதா' பகுதியிலிருக்கும் கவிதைகள்.

"ஒரே ஆறுகளில் காலடி எடுத்து வைப்பவர்கள் மீது வெவ்வேறு மற்றும் எப்போதும் வேறுபட்ட நீர் கீழே பாய்கிறது" எனும் ஹெராக்லிட்டஸ் கூற்று நமக்கும் தெரிந்ததுதான் எனக்கூறி ஆற்றுக்கும் ஆடிப்பெருக்குக்குமான முடிச்சை காட்சிபடுத்துதலில் நாமும் நம் நினைவுகளில் தேங்கிக் கிடக்கும் ஆடிப்பெருக்கில் வாழச்செய்கிறது கவிதைகள்.

மொழிக் கடலில் கவிதைகளை கைப்பிடி உப்பாக கரைத்து கர்மவினையாற்றியபோதும் சமயங்களில் கரையொதுங்கி வேடிக்கை பார்ப்பவர்களாகவும் இருப்பதை நினைவுபடுத்துகின்றன ' கர்மவினை' பகுதி கவிதைகள்.

உலகம் அதனதன் போக்கில் இருந்து கொண்டிருக்கையில் நம்முள் துளிர்க்கும் கேள்விகள், வலிகள், மாற்றங்கள், மனம் சமாதானம் கொள்ள நாமே உருவாக்க வைத்துக்கொள்ளும் தத்துவங்கள், பழைய சுவர் கடிகாரமாக சோர்வுற்ற மனதிற்கு சாவி கொடுப்பது போல் நம் வாழ்விலிருந்து நம்மை உயிர்த்தெழச் செய்யும் காரணிகள் உருவாகத்தானே செய்கிறது என்பதை 'புத்துயிர்ப்பு' பகுதி கவிதைகள் காட்சிபடுத்துகின்றன.

'அகிம்சையின் உருவே ஆன நீ'  கவிதை நாம் அன்றாடம் எதிர்கொள்ளும் நம் போலிமை முகமூடியை கிழித்துக் கொண்டே இருக்கிறது.

ஒற்றைப் பொருளை மட்டும் சுமந்துகொண்டு இராது, வாசிக்கும் போதெல்லாம் வெவ்வேறாக தன்னை புதுப்பித்துக்கொண்டே இருக்கின்றன குறுங்கவிதைகள்.

நம் இயலாமையை அப்படியே வைத்திருந்தால் அது பெரும் விலங்காகி விழுங்கிவிடக் கூடும். ஏதோவொன்றில் அதை கடத்தி கடந்து விடுகிறோம்.

இறப்பின் ஊர்வலத்தில் ஒவ்வொருவர்க்குள்ளும் இறந்தவர்கள் குறித்த நினைவு இருந்து கொண்டே இருப்பதை கூறும்

"பாடைக்கு வீசிய பூவிதழ்களின்
சாலைச் செவ்வந்தி மஞ்சள்
நடுவே தனித்து கிடக்கும்
வாடாமல்லி"

 என கவிதையில் வரும்
வாடாமல்லி, நபர்கள் குறித்து நம்முள் படிந்து கிடக்கும் நினைவின் துளியாகவும் பார்க்க முடிகிறது.

குறுங்கவிதைகளின் சிதறல்கள் நம்முள் ஒளித் துண்டுகளை உருவாக்கிச் செல்கின்றன.

நம்முள் கிடக்கும் மேகங்கள், வேட்கையின் பரிணாமங்கள், ஒன்றை உள் வாங்குதலின் ரகசியம், அன்றாடங்கள் கவிதைகளுக்குள் உலாவுதல், தெருவோர தீர்க்கதரிசிகளை அடையாளப்படுத்தல், ஏரி ஏரியற்று போவதன் துயரிலிருந்து விடுதலையை அடையாது சிக்குண்டு கிடத்தல், விடியோ பார்த்து சமைத்துக் கொண்டு கார்ப்ரேட்டுகளை கொழுக்கச் செய்யும் ஸ்கூட்டிப் பெண்கள், ரப்பர் முலைக்காம்புகளை இன்னமும் சப்பிக் கொண்டிருக்கச் செய்யும் பழக்கப்படுத்தப்பட்ட வாழ்வு என இளைப்பாறவும், எதிர்கொள்ளவும் கண்முன் நீண்டு கிடக்கும் வாழ்வின் நிறங்களை எம்.டி.எம் நமக்காக மாற்றம்கொள்ள வைத்திடுகிறார்.

சக மனிதர்கள் எல்லா காலத்திற்கும் நம்பத் தகுந்தவர்கள் இல்லை. நம் பலவீனங்களை அறிந்தவர்கள் எக் கணத்திலும் நம்மை கேலி படுத்தக் கூடும். இதை அறிந்தவர்கள் தங்களின் சுக துக்கங்களை நம்பிக்கையோடு மரங்களிடையே பகிர்ந்துகொண்டிருப்பதை கண்டதுண்டு. அந்நாட்களின் நினைவில் இருக்கச் செய்கின்றன கவிதைகள்.

இன்று நெகிழித்தாள் சாப்பாட்டு இலையான காலம்.  வாழை இலை, தையல் இலை எல்லாம் கனவுக்கும், கவிதைக்குமான கருப்பொருளாக மாறிப்போய்விடும் போலும். 'தையல் இலை' கவிதை அத்தனை நெருக்கமானதாக இருந்தது.

மரத்தின் அடியில் கட்டப்பட்டிருக்கும் திட்டில் நிறைய்ய பேர் அமர்ந்திருப்பர். மரம் உதிர்க்கும் இலைகள் எல்லோர் மீதும் பட்டுச் செல்லும். யாரோ ஒருவர் தொடுவது போன்றும், தன் காதலின் ஸ்பரிசம் போலும், நதியில் மிதப்பது போன்றும், சிட்டுக் குருவியொன்று தோல் அமர்ந்தது போன்றும் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறான உணர்வுகளை உருவாக்கிவிடுகிறது. ' நகரம்' பகுதியின் கவிதைகளை இப்படியாக பார்க்கலாம். அன்றாடத்தின் நிகழ்வுகள் ஒன்றுபோல் சுழற்சியாக இருந்தபோதும், வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் வேறானதாகவே இருக்கும். 'நகரம்' கவிதைகள் அனுபவங்களின் மொக்கு வாசகர்கள் தேவைக்கேற்ப மலர்த்திக் கொள்ளலாம். 

சிற்பிகள் தான் தேர்வு செய்த கல்லில் வடிவமைக்கப்பட்ட சிலையின் கண் திறப்பிற்கு ஒப்பானது கவிதைகளுக்கு தலைப்பு வைப்பதும். சிலர் கவிதையின் அச்சை தலைப்பில் வைப்பர், சமயங்களில் கவிதையை திறக்கும் சாவியாகவும் தலைப்பு இருக்கும். ஒவ்வோருவருக்கும் ஒவ்வொருவிதமான அனுகுமுறை உண்டு. இத்தொகுப்பில் எம்.டி.எம் கவிதையின் தொடக்க வரியை தலைப்பாக வைத்துள்ளார். சரி தவறென சொல்லத் தெரியவில்லை. ஏதாவது காரணம் இருக்கக் கூடும். 

வெளியீடு: தமிழ்வெளி


No comments:

Post a Comment