நடவு செய்யப்படவேண்டிய பயிர்கள்
- ந.பெரியசாமி
பொட்டச்சிக்கு இங்க என்ன பேச்சு, ஆம்பளைங்க பேசிக்கிட்டு இருக்கிற இடத்தில் என்பதை இன்னமும் கேட்டுக்கொண்டு இருக்கும் சமூகத்தில்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஆண் எனும் மிதப்புச் சிந்தனை மிக நீண்ட ஆனிவேர். மனமாற்றம் செய்வதன்மூலமே அதை இற்றுப்போகச் செய்ய முடியும். கலை இலக்கிய வடிவங்களே மனமாற்றத்தை உருவாக்க முடியும். ' சீறும் பாம்பை நம்பினாலும் சிரிக்கும் பெண்ணை நம்பாதே' என்பது போன்ற ஆட்டோக்களின் பின்புறம் எழுதப்பட்டிருந்த தத்துவங்களை வாசிப்பின் மூலம் கடந்து வந்தோர் நிறைய்ய உண்டு.
"அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல்
நிச்சயம் பெண்பாற் குரிய என்ப"
தொல்காப்பியத்தின் இந்நூற்பா அச்சம், மடம், நாணம் மூன்றும் பெண்களுக்கு அடிப்படை தகுதியாக வகுத்து தலைவன் தகுதியை விட தலைவியின் தகுதி மிகுதல் கூடாது என்பது போன்று அன்று தொட்டு இன்றுவரை பெண்களை பின்னுக்கு தள்ளும் போக்கு இலக்கியத்திலும், இயல்பிலும் தொடர்ந்துகொண்டிருப்பதை இச்சமுகம் அறியாதது அல்ல. தன்னையும், தன் குடும்பச் சூழல் பின்னிய வலையையும் விலக்கி வெளியேறி சமூகத்தில் தனக்கான உணர்வுகளை உணரச் செய்யும் சவாலை பெண்கள் தொடர்ந்து செய்துகொண்டே இருக்கவேண்டி இருக்கிறது.
பெண்களுக்கு ஜீவன் உண்டு, மனம் உண்டு, புத்தி உண்டு என்ற பாரதி.
பெரியாரின் தாக்கத்தால் பால்ய விவாகம், பெண்கல்வி, கைம்பெண் கொடுமை, மறுமணம், திருமண உரிமை, காதல்மண உரிமை, உடன்பாடாக வாழும் உரிமை, சுயமரியாதை திருமணம், கருத்தடை என பெண்ணுரிமையின் அவசியத்தை வலியுறுத்திய பாரதிதாசன்.
'கற்பு' என்ற கருத்தாக்கத்தை உருவாக்கி, தாயுரிமை பறிக்கப்பட்டு, ஒருதார மணமுறை எனும் குடும்ப அமைப்பு ஏற்படுத்தப்பட்டு, குடும்பத்திற்கான பெண்களின் உழைப்பு, கூலிபெறாத அடிமை உழைப்பாயிற்று எனக் கூறிய ஏங்கல்ஸ் என நிறைய்ய ஆளுமைகள் பெண்ணியத்திற்கு ஆதரவாக இருந்துகொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
அரசவையில் முதன்மை கவியாக இருந்த ஔவையார் காலத்தில் ஐம்பதுக்கும் குறைவான பெண்கவிகளே இருந்தார்கள் என்பதில் இருக்கும் அரசியலை எழுதப்பட்ட காலமும், தொகுக்கப்பட்ட காலமும் வேறு வேறானவை என்பதிலிருந்து அறிந்துகொள்ள முடியும்.
இன்னாரென்று தெரியாது வாய் வழியாகவே இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கும், தாலாட்டு, ஒப்பாரி, வாழ்வியலோடு பிணைந்த பாடல் வடிவங்கள் பெரும்பாலும் பெண்களுக்குரியதே. அதுவே பெண்களின் புலமையை வெளிப்படுத்தக் கூடியனவாகவும் உள்ளன.
காலம் சூழலுக்கேற்ப தனக்கேயான கெட்டிப்பட்ட தன்மையில் இருந்தபோதும் அதில் சிறு கீறல்களை மொழி ஏற்படுத்திவைக்கவே செய்யும். பெண்ணை வீட்டிற்கு உள்ளே என வைத்தபோதும் அதனுள் முடங்கிப் போயிடாது, மீறல்களை வெளிக்காட்ட அதிலிருக்கும் பெருமிதத்தை பறைசாற்றுவதாக உள்ளது புறநானூறில் இருக்கும் பொன்முடியனாரின் இப்பாடல்.
ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே
வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடன்
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடன்
ஒளிறு வாள் அருஞ்சமம் முடுக்கி,
களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடன்.
வீட்டுக்கு வெளியே நடக்கும் போரிலும், போர் சார்ந்த நடவடிக்கையிலும் தான் நேரடியாக பங்கேற்க இயலாத சூழலில் "ஈன்று புறந்தருதல் என் தலைக் கடன்" என்பதிலிருக்கும் பெருமிதம் என்றைக்குமானதாக நிற்கும்.
இடிக்கும் கேளிர் நுங்குறை ஆக
நிறுக்கல் ஆற்றின் நன்று மற்றில்ல
ஞாயிறு காயும் வெவ்வேறு மருங்கில்
கை இல் ஊமன் கண்ணில் காக்கும்
வெண்ணை உணங்கல் போலப்
பரந்தன்று இந்நோய் நோன்று கொளற்கு அரிதே.
வெய்யில் மிகுந்த பாறையின்மேல் இருக்க கொண்டிருக்கும் வெண்ணையை பார்த்துக் கொண்டிருக்கிற கையில்லாத ஊமை என்பது சங்க கால மரபில் வழங்கப்பட்ட பழமொழியாக இருந்திருக்க வேண்டுமென்பதாலேயே ஊமன் என்னும் ஆண்பாற் குறிப்பு கொண்டிருக்கிறதேயன்றி, தலைவனுக்கு கையில்லாத ஊமையின் நிலை வரச் சாத்தியமில்லை. சங்க காலத்தில் தலைவனுக்கான சலுகைகள் மிகுதி. தலைவனுடனான தன் உறவின் எதிர்காலம் குறித்தும், தன்னுடைய காமம் மிகுதியாகும்போது வெளிச் சொல்லமுடியாத கட்டுப்பாடும் பெண்ணுக்கே இருந்திருக்கிறது. மேலும் வெள்ளிவீதியாரின் மற்றப் பாடல்களை பின்புலமாக கொண்டு அணுகும்போது அவர் தலைவனைப் பிரிந்த பெண்ணின் காம மிகுதி குறித்து பாடியிருப்பதை உணர முடிகிறது எனக் கூறும் கவிஞர்.மனோமோகனின் இப்பார்வை முக்கியமான ஒன்றாகப் படுகிறது.
இப்பாடல்களைப் போன்ற சங்க கால பாடல்களின் நீட்சியாக காரைக்கால் அம்மையார், ஆண்டாள் பாடல்கள் தனித்துவமாய் இருந்தன. 90 களில் நிறைய்ய பெண்கள் எழுதத் தொடங்கினர் புதுக்கவிதை மற்றும் நவீன கவிதைகளில் தன் இருப்பு, தன் காமம் , தன்னை உணர்ந்த தருணங்கள், தன்னை முன்னிருத்தல், தன் பாடுகளை வெளிப்படையாக்குதல், எழுதியவர்களின் சொந்த அனுபவமாக இருக்கும் என்பது போன்ற விஷப்பார்வைகளை ஒதுக்கிவைத்தல் என தங்களின் படைப்புகளில் பெண்கள் களமாடியிருப்பதை நம்மல் அறிய முடியும்.
மதுரை நாயகியே!
மீனாட்சித்தாயே!
படியேறி
நடை தாண்டி
குளம் சுற்றி
கிளி பார்த்து
உன்னருகே ஓடிவரும்
உன்மகளை
உன்மகனே ஏ
வழிவம்பு செய்கின்றான்
கோயிலிலும் காப்பில்லை
உன் காலத்தில்-
அழகி நீ!
எப்படி உலாப்போனாய்?
எக்காலத்திலும் இருக்கும் தீராத தொடர்துயரை எழுதியிருக்கும் இரா.மீனாட்சி தொடங்கி திரிசடை, பூரணி, கிருஷாங்கினி, ஆண்டாள் பிரியதர்ஷினி, சுகந்தி சுப்ரமணியன், உமா மகேஸ்வரி, ப.கல்பனா, கனிமொழி, சல்மா, குட்டி ரேவதி, மாலதி மாதிரி, லீனா மணிமேகலை, சுகிர்தராணி, தேன்மொழி, மு.சத்யா, சக்திஜொதி, திலகபாமா, அகிலா, அரங்க.மல்லிகா மற்றும் இரண்டாயிரத்திற்கு பிறகு நிறைய்ய பெண் கவிஞர்கள் தங்களின் மொழியின் மூலம் பெண்கள் அன்றாடங்களில் எதிர்கொள்ளும் வாழ்வியல் துயர்களை, அனுபவங்களை கவிதைகளில் அறியத் தந்தபடி இருக்கின்றனர்.
யுத்தச் சூழலின் அவலம், ஒடுக்குமுறை, பாதுகாப்பற்ற புற உலகு, அது அளிக்கின்ற வன்புணர்வுகள், பாலியல் சித்ரவதைகள், அகவயமான வலிகளைக் கொண்ட வாழ்வியலை ஈழத்து பெண் கவிகள் தங்களின் கவிதைகளில் பாடுபொருளாக்கினர்.
திருநங்கைகளின் வாழ்வியல் சூழல், அவர்களுக்கான போராட்டங்கள், அவர்களையும் விடாது தொரத்தும் பாலியல் அத்துமீறல்களை பிரியா பாபு, லிவ்விங் ஸ்மைல் வித்யா, கல்கி என கவிதைகளில் தொடர்ந்து எழுதிக்கொண்டுள்ளனர்.
நம்முள் உருக்கொள்ளும் சிந்தனைகளை அழகியலோடு உணர்வின் வெளிப்பாடாக மாற்றம் கொள்கையில் தன் சிந்தனைக்கு பொதுத்தன்மை கிடைத்திடச் செய்கிறது. பெண்களின் கவிதைகள் சமூகத்தில் பெரிதும் ஈர்க்கப்பட்டமைக்கு இதுவும் காரணமாகிறது.
அக்னிப் பிரவேசம்
என் சத்தியத்தை
நிரூபிக்கவல்ல.
நீ தொட்ட
கறைகளைக் கழுவ.
கனிமொழியின் இக்கவிதை ஆண் தொடுதல் என்பது எப்பொழுதும் பெண்ணுக்கு சுகமானதல்ல. உன் தொடுதலை விடவும் தீயின் தொடுதல் சுகமானது. அது என் விருப்பமற்று தொட்ட உன் கறையை கழுவக்கூடியது என்பதை உணர்த்துகிறது.
பெண்களின் கவிதைகளை எழுதும் நபர்கள் சார்ந்து பார்ப்பது அபத்தமானது. ஆனால் இந்த அபத்தத்தை தொடர்ந்து செய்தபடி இருப்போரும் உண்டு. அதுகுறித்து கவலைகொள்ளாது தொடர்ந்து இயக்கவேண்டிய அவசியம் பெண்களுக்கு தேவையான ஒன்றாகிறது. அன்றாடங்களில் பெண்களுக்கு எதிரான சம்பவங்கள் நிகழ்ந்தபடியேதான் இருக்கின்றன. அதிலிருக்கும் அபத்தத்தை உணர்த்தி குற்ற உணர்வை உருவாக்கும் கவிதைகள் வந்தபடிதான் இருக்கிறது.
என்றைக்கேணும் ஒருநாள்
நான் காணாமல் போய்விட்டால்
அடுப்படியின் பரணிலோ
சிலிண்டரின் மறைவிலோதான்
முதலில் தேடுவார்கள் போலும்.
மு.சத்யாவின் இக்கவிதைபோல் அவரின் வேறு கவிதை ஒன்றும் வாசிப்போரை குற்ற உணர்வு கொள்ளச் செய்யும்.
ஒரு நாளேனும்
வாழ வேண்டும்
நான் நானாக...
தனி உடமை சமூக ஒழுங்கு நீடிக்க, ஆண்- பெண் பால்கள் தங்கள் சுதந்திரத்தை இழந்தன. தனி உடமையானாலும், பொது உடமையானலும், பெண் ஆணின் தனி உடமையாக, உடமையைப் பாதுகாக்க பலி கொடுக்கப்பட்டவளாகத் தொடருகிறாள் எனும் ராஜ் கௌதமன் கூற்று என்றைக்குமானதாக இருக்கிறது.
உறவுகளுக்குள் இயல்பாக இருக்கவேண்டிய செயல்பாடுகள் அதிகாரத்தின் பொருட்டாக மாறிப்போவதன் துயரை சல்மாவின் இக்கவிதை வெளிப்படுத்துகிறது.
உனக்கும் கூடப்
புகார்கள் இருக்கலாம்
என் நிலைப்பாடு
காலத்தாலும்
வரலாற்றாலும்
தெளிவாக்கப்பட்டிருக்கிறது
உன்னிடமிருந்து
கலங்கலானதே எனினும்
சிறிது அன்பைப் பெற
உனது குழந்தையின்
தாய் என்னும் பொறுப்பை
நிறைவேற்ற
வெளியுலகில் இருந்து
சானிட்டரி நாப்கீன்களையும்
கருத்தடை சாதனங்களையும் பெற
இன்னும் சிறு சிறு உதவிகள் வேண்டி
முடியுமானால்
உன்னைச் சிறிதளவு அதிகாரம் செய்ய
நான் சிறிதளவு அதிகாரத்தை
ஸ்திரப்படுத்திக்கொள்ள
எல்லா அறிதல்களுடனும்
விரிகிறதென் யோனி.
ஆண் எழுத்து முதல் தரமானது என்றும், பெண் எழுத்து இரண்டாம் தரமானது என்றும் இப்போதும் பலர் நம்புகிறார்கள். அதற்காக, பெண் என்கிற அடையாளத்தை கைவிட முடியாது. காரணம், ஒரு பெண் எழுதுவது என்பது ஓர் அரசியல் செயல்பாடு. தனக்கான வெளியைக் கண்டடைவதற்கான கூட்டுச் செயல்பாடு. இந்தியாவில் இருக்கும் 65 கோடிப் பெண்களுக்கும் 65 கோடிக் கதைகள் இருக்கும். பெண்ணின் வலியை, தன்னுணர்வை ஆண் எழுதுவதை விட பெண் எழுதுவதுதான் சரியாக இருக்கும். அந்த எழுத்து ஆண் மனத்தையும், ஆணாதிக்கம் நிறைந்திருக்கும் பெண் மனத்தையும் தொந்தரவு செய்கிறபோது, அதற்கு எதிர்மறை விமர்சனம்தானே கிடைக்கும்? அதில் சாதியமும் சேர்ந்து கொண்டால் சொல்லத் தேவையே இல்லை எனக் கூறும் சுகிர்தராணி தனக்காக, தன் சமூகத்திற்காக, மட்டுமல்லாது தன் கடவுளுக்காகவும், கடவுளாகி கவிதை படைத்தலை நிகழ்த்திக் காட்டியுள்ளார்.
கடவுள் எனும் நாத்திகன்
***************************
எப்போதிலிருந்தோ
சாளரமற்ற அறைக்குள்
நின்று கொண்டிருக்கரேன்
ஆசுவாசமாய் கால்நீட்டி
அமர முடியவில்லை
அன்று கடுமையான பசி எனக்கு
பாலும் தேனும் பழமுமாய்
என் மீது கொட்டிக் கவிழ்க்கையில்
சுவைக்க முயற்சிக்கிறேன்
நுனி நாவும் வெளியே வரவில்லை
எனதறைக்கு வெளியே நிற்கும் உங்களை
உள்ளழைக்க நினைக்கிறேன்
செதுக்கப்பட்ட வாயைப்
பிரித்தெடுக்க முடியவில்லை
உச்சிக் காலப் பூசையின்போது திரைமறைவில்
ஆடை அணிவிக்கப்படுகையில்
கூச்சமாகத்தான் இருக்கிறது எனக்கு
எனினும் எனதிரு கைகளால்
அவயங்களை
மறைத்துக் கொள்ள இயலவில்லை.
லீனா மணிமேகலையின் கவிதைகள், பழமைவாதத்துக்கு எதிராக பேசுபவை. நவீனத்துவம் மிக்கவை. மொழியாலும் செயல்பாட்டாலும் தனித்து நிற்பவர். எதிர் செயல்பாட்டை உரத்து பேசும் அவரின் கவிதையொன்று...
அபதாரம்
இறுதியில்
காவல் அதிகாரி
என் கவிதைகளை பிடித்துக் கொண்டு சென்றார்.
விசாரணையின் போது அவர்
கண்களை கட்டிக் கொண்டிருந்தார்
ஆடையில்லாத என் கவிதைகளைக் காண
அவருக்கு அச்சமாக இருந்ததாம்.
குற்றங்களை விளைவிப்பதே
தன் தலையாயப் பணி என்பதை
என் கவிதைகள் ஒத்துக் கொண்டதால்
அபதாரம் அல்லது சிறைதண்டனை
பிணை இல்லையென்று ஆணையிட்ட நீதிபதி
தன் கண்களோடு காதுகளையும்
பொத்திக் கொண்டிருந்தார்.
என் கவிதை பேசிய
சொற்களின் புதிய அர்த்தங்கள்
அவரை திடுக்கிடச் செய்தனவாம்
அபதாரம் கட்ட பணம் இல்லாததால்
சிறையிலடைக்கப்பட்ட என் கவிதை
கம்பிகளை மீட்டிக் கொண்டு
சதா பாடல்களை இசைத்தபடி இருந்தது
நாளடைவில் மற்ற கைதிகளும்
ஆடைகளை களைந்தனர்
அவர்கள் பேசத் தொடங்கிய புதிய மொழியால்
அதிகாரிகள் மனம் பிறழ்ந்தனர்
சிறைச்சாலைக்குப் பிடித்த பைத்தியம்
மெல்ல நகரமெங்கும் பரவியது
நிர்வாணம் பெற்ற அந்த நகரத்தில்
அதன் பிறகு
அரசும் இல்லை
குடும்பமும் இல்லை
கலாச்சாரமும் இல்லை
நாணயங்களும் இல்லை
விற்பனையும் இல்லை
குற்றமும் இல்லை
தண்டனையும் இல்லை.
தொந்தரவு செய்ததில்லை பெண்களின் மௌனம். சக பாலினத்தவரையும் என்பதுதான் அதிலிருக்கும் பெரும் துயரம். அனைத்து வகையான வன்முறைகளையும் நிகழ்த்திப் பார்க்கும் நிலமாக இருக்கச்செய்யப்பட்டிருக்கும் பெண்கள் தம் எதிர்ப்பை துயரை அரசியலாக்கவேண்டும். பெண்ணாக தன் இருப்பு குறித்த தெளிவான புரிதல், குடும்பச் சுமை, பாலியல் அத்துமீறல், பொருளாதார நெருக்கடி, பாதுகாப்பின்மை, பதற்றம், மன உளச்சல் என இவற்றின் மூலமாகவே படைப்பு வெளியை கட்டமைக்க வேண்டிய நிர்பந்தம் அவர்களுக்கு உள்ளது.
போடா நக்கியாரே எனத் தொடங்கி கெட்டவார்த்தைகளால் பொதுவெளியில் திட்டுவது வேண்டுமென்றே செய்வது அல்ல. ஆண் எனும் தமிழ் மலைபோல் உயர்ந்து நின்று தாக்குதலைத் தொடுத்தபடி இருப்பதால் வலி தாளாது மலையை பொடியாக்க கெட்டவார்த்தைகளை பிரயோகிக்க வேண்டியதாகிவிடுகிறது. ஒடுக்கப்பட்டவர்கள், சிறுபான்மையினர் என்ன ஆயுதத்தை கையில் எடுக்கவேண்டும் என்பதை தீர்மானிப்பது அதிகாரம். அதுதான் இங்கேயும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.
வெங்காயம் வெட்டித் தருவதையும், டீ போட்டு தருவதையுமே பெண்ணுக்கு பேருதவி செய்கிறோம் என மிதப்போடு இருப்பவர் தொடங்கி ஒரு பொருளை தள்ளி வைப்பதில் கூட ஆண் பெண் பேதம் பார்ப்போர் வரை பெண் நம்மை அண்டி இருக்கிறாள், அதனால் அவள்மீது அதிகாரம் செலுத்தும் முழு உரிமையும் நமக்கானதென நினைத்து செயல்பட்டுக் கொண்டிருப்போர் மத்தியில் பெண் எவரையும் அண்டி வாழாது பொருளாதார தன்னிறைவோடு இருக்கவைக்கும் சமூக அமைப்பே தற்போதைய தேவையாக இருக்கிறது. அதற்கான முன்னெடுப்புகள் காலத்தின் கட்டாயம். எங்கும் சமநிலை, எதிலும் சமநிலை என்பதே இப்போதைய தேவை.
அரளிவிதை பைகள்
*
மருத்துவச்சி வந்தாள்
சூலுற்றவளை நிர்வாணித்தாள் மெல்ல
அகட்டிய காலின் இரு உள் தொடைகளிலும்
சாம்பல் உதிரும் சூடுகள்
கண்களாய்
கனன்று கொண்டிருந்ததைக் கண்டாள்
அதிர்ச்சியில் காதுகளைப் பொத்திக் கொண்டாள்
' இன்னும் அவனுக்கு நீ மனைவி?'
நவீன கவிதைகளின் எல்லைகளை தகர்த்து, பேசாத பொருளை பாடுபொருளாக்கி அதிர்ச்சி கொண்டோரின் சொற்களை செவிகொள்ளாது, தன் நிலைப்பாட்டில் சமரசமின்றி இயக்கும் குட்டிரேவதியின் இக்கவிதை வாசிப்போரை வலிகொள்ளச் செய்கிறது. பால்கள் இணைவுகொள்ளும் கணம் மகிழ்வு நிறைவுகொள்ளும். தொடைகளில் சூடு வைக்கும் ஆணின் வக்கிரம் மனிதத்தன்மையற்றது. மனிதனற்ற மணிதர்களையும் சகித்து வாழ்ந்துகொண்டிருக்கும் பெண்ணின் பாடுகளை காட்சிபடுத்தியுள்ளார்.
கவிஞர்.தி.பரமேசுவரியின் இக்கவிதை சமூகத்தின் பெரும்பான்மையான பெண்களின் மனசாட்சியாக பார்க்கலாம்.
“காலையில் எழுகையிலே
ஆயிரம் கைகள் முளைக்கும்
தோசை சுடுவாள்
துணிமணி துவைப்பாள்
கத்தும் குழந்தையைத்
தட்டிச் சமாளிப்பாள்
அலுவலகம் கிளம்பும்
மறதிக் கணவருக்கும்
மூளையாய் இருப்பாள்
எல்லாம் முடித்து
அலுப்புடன் அமர்ந்து
டிவி காம்பியருக்கு
பாவமாய் பதில் சொல்வாள்
'ஹவுஸ் வொய்ப்தான்' நான்! “
பேய் பிடித்தலும், சாமியாடலும் பெரும்பாலான பெண்களிடையே காண முடியும், மனம் சார்ந்த செயல்பாட்டு விளைவுகளே இப்படியாக உருக்கொள்கிறது. போயை அல்லது சாமியை சாக்கிட்டு தன் மனப்பாரங்களை இறக்கிவைத்துவிடுகிறார்கள். மிகவும் பலவீனமானவள் எனச் சொல்லப்படுபவர்கள் கூட மிக எளிதாக சில செயல்களை செய்துகாட்டு விடுவர். கவிஞர்.சுஜாதா செல்வராஜ் இம்மனப்போக்கை கவிதையாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
பேயாட்டம்
கொடுமைக்கு வாக்கப்பட்டவள்
நெருப்பை பொங்கித்தின்பவள்
மஞ்சள் குளியலில் காயம் ஆற்றுபவள்
பொறந்தவீடும் கதவடைத்துக்கொண்ட
பாதம் பழுக்கும் உச்சி வெயில் பொழுதொன்றில் குத்துப்பட்டு செத்துப்போன முனியாண்டியைக் கூட்டிக்கொண்டு வீடுவந்து சேர்கிறாள்
கெட்டவார்த்தையைக் காறி உமிழுமவள் தலைவிரித்து பேயாட்டம் போடுகிறாள்
நெஞ்சை நசுக்கும் பாரங்களை
எல்லாம் திசைகள் தோறும் தெறிக்கவிடுமவள் வீடு அதிர நடந்து பார்க்கிறாள்
கைநிறைய சோறு வாரித்திங்கவும்
கால் பரப்பி கூடத்தில் தூங்கவும் முனியாண்டியைத் தான் துணைக்கு நிறுத்துகிறாள்
சுருட்டும் கருவாடும் சாராயமும்
தட்சணையாய் கேட்கும்
பூசாரியைக் கூட்டிக்கொண்டு
புறப்பட்டு வருகிறானாம்
அவள் பொறந்தவன்
அடிபட்டுச் சாகத்தான் பொறப்பெடுத்தேனா உங்கக் கோடித்துணிக்குத்தான்
உயிர் வளர்த்தேனா
சங்கறுத்து மாலையா போடுவேன்டா சாத்திரத்தில் மூத்திரத்தப் பெய்வேன்டா
தூக்கிக்கட்டிய சேலையும்
சிவந்து தெறிக்கும் விழிகளுமாய்
வானம் அதிர முழங்குகிறான் முனியாண்டி
அடங்கி அமிழ்கிறது வீடு
புலர்ந்து வருகிறது பொழுது.
விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் யாராகினும் ஒருவரால் தொந்தரவிற்கு ஆட்பட்டுக் கொண்டே இருக்கவேண்டிய சூழல் பெரும்பாலான பெண்களுக்கானது. அத்துயரின் கண்ணீர் மழைக்கு ஒப்பானதாக பார்க்கப்படுகிறது நறுமுகை தேவியின் இக்கவிதை.
துயரத்தின் கோப்பையை
யாரேனும் நிரப்பிக் கொண்டே இருக்கிறார்கள்.
ஒருவரின் சிரித்த பகல்பொழுதின்
இறுதிக் கணத்தைக் கண்ணீரில்
நிரப்புபவர்கள் எங்கேயும் இருக்கிறார்கள்
நம்மைப் பற்றிய நோய்மையான
மதிப்பீடுகளைத் தற்செயலாகக் அவர்கள் கொட்டி விடும்போது
என்ன செய்வதென்று தெரியாமல்
நம் மூளை தடுமாறுகிறது
அனிச்சையாகப் பெருகும்
கண்ணீரைத் துடைத்து விடும் வழி தெரியாமல்
வெளியே பொழியும் மழையும் தேம்பத் துவங்குகிறது.ண
எனது வாழ்க்கை
எனது குழந்தைப் பருவத்தோடு
முடிந்து போனது. பின்னர் என் வாழ்க்கையை
நான் வாழவேயில்லை.
காற்றின் ஸ்பரிசம் படாத
நீர்க்குமிழி போல் இருக்கிறது
அதைப் பற்றிய என் துக்கம்.
எனும் பொன்முகலி கவிதை கடந்து வந்த குழந்தை பருவம் எல்லோருக்கும் ஏக்கமானதுதான். அதுவும் பெண்களுக்கு மிகப்பெரிய ஏக்கமான காலமாக இருக்கும். பேதம் தெரியாது விரும்பியபடி திரிந்த நாட்கள் என்றுமே திரும்பி வராதது.
வளர்ந்த சமூகம் என பெருமைபேசிக்கொண்டிருக்கிறோம். சிறார் தொடங்கி செத்து மடயப்போகும் கிழவி வரை பாலியல் சீண்டல் செய்திகளை பார்த்து தொலைக்கவேண்டி இருக்கிறது. சுய ஒழுங்கும், கட்டுப்பாடும் இல்லாத சமூகத்தை எப்படி வளர்ந்த சமூகமென சொல்வதெனத் தெரியவில்லை. தேவசீமாவின் இக்கவிதை பாலியல் சீண்டல்கள் இல்லாத வாழ்வை பெண்களுக்கு கொடுக்க கூடும்.
பட்டாம்பூச்சி
ஒரு கொடுக்கோ
கொஞ்சம் விஷமோ
கொடுத்து இருக்கலாம் கடவுள்
தொடுமுன்
ஆயிரம் முறை
யோசித்திருப்பார்கள்.
ஆதியிலே பெண் இருந்தாள்
எல்லாவற்றையும் முதலில் அறிந்தவளும் அவளே
உதிரத்தின் முதல் வாசத்தை காற்றில் பரப்பியவள்
அதனைச்சுத்தப்படுத்தி பரிசுத்தத்தைக் கற்றுக்கொடுத்தவள்
முதல் பசியாற்றியவளும் அவளே,
வேட்டையாடியவள்,
உணவை அறிமுகப்படுத்தியவள்
உயிர் கொடுத்தவள்
உங்களுக்கு வலிமையை கற்றுக்கொடுத்தவள்
இன்னும் இன்னும்
ஆதலால் வழிபாட்டுத் தெய்வமாக ஆக்கினீர்கள்.
உங்கள் குறைகள் எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டாள்
சகிப்பின் பெருவழி அவளிடமிருந்தே தொடங்கியது.
சந்திரா தங்கராஜின் இக்கவிதை பெண்ணின் பெருமை பேசுவது மட்டுமல்ல, அதை இழந்து தவிக்கும் துயரமும் இக்கவிதையில் வெளிப்படுகிறது. வேறு வழியில்லை சில உண்மைகளை செவிடாக நடிக்கும் இச்சமூகத்தின் காதுக்குள் உரத்து பேசவேண்டியதும் அவசியமாகி இருப்பதை உணர்த்துகிறது.
நீ தான் என் உயிர், நீ இன்றி நான் இல்லை என உருகுபவன் கூட நிலம் பெயர்ந்து காதலின் நிலத்தில் தன் வாழ்வை தொடங்கமாட்டான். பெண் காலகாலமாய் தன் பால்யத்தில் மகிழ்வுகொண்டு வாழ்ந்த நிலத்தை விட்டு வெளியேற வேண்டிய நிர்பந்தத்தை வேறு வழியற்று ஏற்றுக்கொண்டு வாழ்வதில் தொடங்கும் விட்டுக் கொடுத்தல் புதைகுழி வரை நீடித்திடவே செய்கிறது.
இனி மகான்கள் பிறந்து பெண்களின் நிலையில் மாற்றங்கள் செய்திடப் போவதில்லை. பெண்கள்தான் மாற்றங்களுக்கான பயிர்களை நடவு செய்யவேண்டும். நிலம்போல் விதை தாங்கி முளைப்புகொள்ளச் செய்து அறுவடை வரை தாங்கி இருப்பதை ஒத்திருக்கும் வாழ்வில் குழந்தைகளிடம் ஆண், பெண் பாகுபாடற்ற மனப்போக்கை வளர்த்தெடுக்க முயற்சி செய்தால், வரும் காலத்திலாவது வேறான வாழ்வு கிடைக்கக் கூடும்.