அந்தியில் வேலை முடிந்து வருபவள் அலுப்பைப் போக்க வைக்கும் ஒப்பாரியிலிருந்து கிளி கொத்தும் தானியமாக சொற்களை சேகரித்து தன் அனுபவங்களை பிணைத்து காட்சிபடுத்தலே கவிதை.
அம்மம்மா, அப்பச்சி, பாட்டி, தாய்கிழவி என செல்லமாக்கப்பட்டவர்கள் அவ்வப்போது மடியில் கிடத்தி பேன் பார்த்தபடி சொல்லப்படும் கதைகளில் வாழ்வு குறித்த சித்திரங்கள், வலியை போக்கும் ரகசியங்கள், அறிந்துகொள்ள வேண்டிய பண்புகளை பிரகடனப்படுத்தாமல் கதையின் போக்கில் உணர்வோடு நம்முள் விதையாக ஊன்றி இருக்கிறார்கள். காலம், தேவைப்படும் சூழல் அறிந்து நம்முள் நினைவாக உணர்த்தும். ஸ்ரீநேசன் கவிதைகளுக்கும் நினைவில் உணர்த்தும் தன்மை உண்டு. ' மூன்று பாட்டிகள்' தொகுப்பின் கவிதைகளிலும் உணர்ந்துகொள்ள முடிகிறது.
...................
வேர்விட்டு லயிக்கும் பெரும் சந்தர்ப்பத்தை
நழுவவிட்டுக் கொண்டிருக்கும் மனதின் இழப்புணர்வோடு
ஆண்டு புதிதென பிறந்தெழும்
தினத்தின் இவ்வதிகாலைப் பொழுதில்
எமக்காக கொஞ்சம்
விரைந்து உதிக்கலாம் சூரியனே நீ.
நம்மை தேற்ற பெரிதான பிரயத்தனங்கள் தேவைப்படாது. எளிதினும் எளிய இயல்பான அன்றாடங்களின் செயல்பாடுகளே போதுமானதாக இருப்பதை இக்கவிதை சுட்டுகிறது. சூரியன் தினம் பிறப்பதுதான். அன்றைய பிறப்பு மருந்தாக மாற்றம் கொள்கிறது. வெப்பம் நோய்மை அகற்றும் மாமருந்து.
மனதில் இருக்கும் பூனையும், திடும்மென எட்டிக்
குதித்த பூனையும் ஒன்றையொன்று நின்று பார்க்கும் கணத்தில் நாமே மனதிலிருந்த பூனையாக உருமாற்றம் கொண்டிருப்போம். இந்நிகழ்வு எதிர்பாராதது. 'ஆண்டன் செக்காவை மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் வாசிப்பது' கவிதையை வாசித்துக் கொண்டிருக்கையில் நாய்களால் துரத்தப்பட்ட பூனை என்முன் பாய்ந்து எனை நோக்கிய கணம். ஒரு அற்புதம் அதுவாகவே உருக்கொண்டது. அப்படி உருக்கொண்ட அற்புதத்தை இக்கவிதையில் காண முடிந்தது. எரிந்து முடிந்த மெழுகுவர்த்தியும், எரியும் மெழுகுவர்த்தியும் பூனைகளாகியது அற்புதங்களின் புதையல்.
பெருமாத்தம்மாள்
*
படிக்கட்டோர இருக்கையில் ஒரு பாட்டி
எதையோ தவறவிட்டதான முகபாவம்
சுமக்க முடியாத புத்தக மூட்டையை
யாரோ ஒரு சிறுமி
அவள் மடியில் இறக்குகிறாள்
என்னவொரு மிடுக்கு கிழவிக்கு இப்போது
தானே பள்ளிக்குச் சென்று கொண்டிருப்பதைப்போல.
எந்தவொரு செயலுக்கும் மதிப்பீடு மாறுபட்டதாகவே இருக்கும். யாரேனும் ஒருவருக்கு அது வாழ்நாள் கனவாகவோ, ஏமாற்றமாகவோ, சாதனையாகவோ இருக்கக்கூடும். புத்தப்பையை பாட்டியின் மடியில் வைத்தல் சாதாரண செயல்தான். 'மிடுக்கு' என்ற சொல்லில் பாட்டியின் எதிர்பார்ப்பு, கனவு, ஏமாற்றம் எல்லாம் ஒரு கணம் அடைந்துவிட்ட நிறைவு, பால்யம் தொட்டு கிடைக்காத பேறு அன்று கிடைத்திட்ட மகிழ்வின் ததும்பல் 'மிடுக்கு' எனும் சொல்லுக்குள் வைத்துள்ளார் நேசன்.
சூதும் வாதும் அறியாதவர்க்களின் செயலில் இருக்கும் அன்பைக் கூட சந்தேகிக்கச் செய்யும் வாழ்வில் நாமும் இருப்பதன் அசிங்கத்தை சுட்டுவதாக உள்ளது ' கன்னியம்மாள்' கவிதை.
கோயில் பிரசாதமெனினும்
நீ கொடுக்கும் சுண்டலை
மயக்க மருந்திட்டதோ என இப்பேருந்து பயணிகள்
ஒருவரும் பெற்றுக்கொள்ள மாட்டார்கள்
உன் அன்பை
அழுகையைப்போல் அடக்கிக் கொள் பாட்டி.
நாமும் இப்படியான பேருந்துகளில் பயணித்திருக்கக் கூடும். எதேனும் ஒரு பாட்டி அழுகையை அடக்க இயலாது விம்மியபடி இருந்திருக்கக் கூடும்.
நினைவின்மையோ, கவனப்பிசகோ இல்லாமல், அறிந்தே நிகழ்த செயல் எங்கே திருட்டு என அம்பலப்பட்டுவிடுமோவென பதறுபவனின் மேன்மையை காட்சிபடுத்துகிறது மூன்றாவது பாட்டியான ஜடசியம்மாள் கவிதை. இத்தகைய மேம்பட்ட பண்புகளை கவிதைக்குள் கொண்டு வருவதால் ஸ்ரீநேசன் கவிதைகள் அபூர்வ தமிழ்குணம் கொண்ட கவிதைகள் என ஷங்கர்ராமசுப்ரமணியன் சொல்வதற்கான காரணமாக இருக்கக் கூடும். திருட்டு பாட்டிகள், மேன்மைமிகு பேரன்கள் நம்முடன் இருந்துகொண்டிருப்பதை நினைவுபடுத்துகிறது.
பச்சை வேர்க்கடலை
கிடைக்காத பருவத்தில் ஒரு மரக்கால் பைநிறைய
மாமியார் பெருமையோடு கொடுத்தனுப்பியதை
அம்மாவுக்கு கொண்டு செல்வேன்
விடிகாலை உறக்கத்தைப் பயன்படுத்தி
ஒரு கிழவி தன்னுடையதைப் போல்
என்னடைய
பையை இறக்கிச் செல்கிறாள்
தூக்க கலக்கத்தில் கவனித்துவிட்ட நான்
பதற்றமடைந்து விட்டேன்
யாரும் பாட்டியைப் பிடித்துவிடக்கூடாது
யாரும் அவமானப்
படுத்திவிடக் கூடாது.
*
தொகுப்பிலிருக்கும் நான்காவது பாட்டி தள்ளாத வயதில் தயிர் விற்று பிழைப்பதை காட்சிபடுத்துகிறது. அன்றைய தொழில் பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாதென சூரியனிடம் வேண்டுதலை வைக்கும் குரல் நம் குரலாகவும் இருக்கிறது.
பற்றற்றதெல்லாம் பண்டமாவது இயல்பு. பண்டம் எனில் விற்பனைக்கானதுதானே. சூழலைக் காக்க யானை ஒன்றின் மீது ஒன்று படுத்துக் கிடப்பதைப் போன்று நிற்கும் மலைகள் பொடிப்பொடியாக மாற்றம்கொண்டிருப்பதன் துயரைக் கூறுகிறது ' காணாமல் போகும் மலைகள்' கவிதை. மலைகளும் பண்டமாக்கப்பட்ட சூழலில் வாழ்வதை நினைக்க துயரோடு கடக்கவேண்டியிருக்கு.
சொல் தட்டையான ஒற்றை பொருள் கொண்டதல்ல. அதன் பரிமாணத்தை காட்சிபடுத்துகிறது ' சொல் சில்பம்'.
பெயர் அறியாது, உரு அறியாது குரலை மட்டும் கேட்டு இதுவாகவோ, அதுவாகவோ இருக்குமோவென அறியாத பறவையின் நிழலைத் தேடும் ' பட்சி கானம்' கவிதையில் வியப்பையும் விந்தையையும் தரிசிக்கலாம்.
கவிதை உருக்கொண்ட கணத்தின் மனவெழுச்சி வாசிப்பின்போதும் மீண்டும் உருக்கொள்ளும் மகத்தான தருணங்கள் எப்போதாவது கிடைப்பதாக நம்பப்படுவதுண்டு. ' வெயிற்சுவை' அப்படியானதொரு கவிதையாக இருக்கிறது.
அக்னி நட்சத்திரத்தில்
காயும் வெயிலை ருசித்து பார்க்கும் விசித்திர ஆசை
சிறுவன் ஒருவனுக்கு உதித்தது
களத்தில் காய்ந்த மிளகாய்மீது
காய்ந்த ஒரு துண்டு சிவந்த வெயிலை
எடுத்து வாயிலிட்டவன் கதறி விட்டான்
நன்றாய் நாக்கையது பொசுக்கி விட்டதுபோலும்
விடுவானா
பின் பனிக்கால விடியலின் புல்நுனியில் பூத்தத் துளிமீது படர்ந்த
பல்வண்ண இளமொளியைக் கனியெனப் பறித்து உண்டான்
அதுவே சில்லென்று இருந்தாலும் சப்பென்றிருந்தது
சலிப்பானா
பூக்கள் மலர்ந்த பூமியைப் பொலிவாக்கிய
இளவேனிலின் முற்றிய அந்திக்கு வந்து சேர்ந்தவன்
மலை முகட்டுப் பாறையின் விளிம்பில்
திரண்டிருந்த கூட்டிலிருந்து சொட்டிய
தேன்தோய்ந்த துளிவெயிலை
நுனிநாக்கில் ஏந்தியவன்
நடனமிடத் தொடங்கினான் இப்போது
இனிக்கிறது
இனிக்கிறது.
வாசிப்பின் முடிவில் நம்முள் இருந்தவன் வெளியேறி நடனமிட்டவாறு இருப்பதை நாமே ரசித்திருப்போம்.
மது அருந்துபவர்கள் தங்களுக்கான இடங்களை தேர்வு செய்வதில் இருக்கும் மனப்போக்கு விசித்திரமானது. தேர்வு கொள்வதில் இருக்கும் அக்கறையும் ஆர்வமும் அருந்தி முடித்த பின் சுத்தப்படுத்துவதில் இல்லாது போதல் அவனுள் இருக்கும் ஆண் எனும் மனத்ததும்பலை உணர்ந்துகொள்ள முடிகிறது. ஆனால் இப்படி சுத்தப்படுத்தாமல் விட்டுப்போய் விட்டதும் கவிதையாகிவிட்டது. செம்போத்தாக உருக்கொண்ட காலி பீர்பாட்டில் தன்னுள் எப்பொழுதும் வைத்திருக்கும் மயக்கத்தை காட்சிபடுத்துகிறது ' செம்போத்தல்' கவிதை. மிதமான மயக்கம் நாவில் கசப்புச் சுவையை நீட்டிக்கச் செய்கிறது.
தன்னைத் தானே இரண்டாக பகுத்து எதிரும் புதிருமாக இயக்கி வெப்பத்தை மலர்த்திக்கொண்டே இருக்க புதுச்சூரியனோடு வந்துகொண்டிருப்பதைக் கூறுகிறது ' சூரியனோடு வருவேன்' கவிதை.
மரம் தன்னிலிருந்து விடுவிக்கும் இலைகள் தரையடைந்து அதனதன் அளவில் சிறிதான சலனத்தை ஏற்படுத்தவே செய்யும். சில இலைகள் காற்றில் மிதந்து தூரம் சென்றடையும். சில இலைகள் நிலத்தில் பெரும் பிளவையே உருவாக்கும். கவிதைகளும் வாசகனின் மனப்போக்குக்கு ஏற்ப விளைவுகளை செயலாற்றச் செய்யும்.
ஸ்ரீநேசன் முந்தைய தொகுப்பான ஏரிக்கரையில் வசிப்பவனை'ப் போன்று இத்தொகுப்பும் நம்முள் நெருக்கத்தை ஏற்படுத்தும்.