Saturday, April 22, 2017

 Ramesh Kalyan.
நான் நெருங்கிய உறவினர் ஒருவர் வீட்டிற்குச் சென்றிருந்தேன். அவர்கள் வீட்டில் மூன்று வயது குழந்தைச் சிறுமி. மிகச்சுட்டிக் குழந்தை அவள். கண்களும் மூக்கும் கன்னக்கதுப்பும், மென்மையான விரல்களும், சின்ன கொழுக்முழுக் கால்களும், கால்விரல்களில் நெற்றிப்பொட்டு அளவுக்கு சிறிய கால்விரல் நகங்களுமாக ஒரு குட்டி தேவதை போல இருந்தாள். குழந்தையை முத்தமிடும் ஆவலைக் கட்டுப்படுத்த இயலாத அளவுக்கு அழகுமு சுட்டியும். அந்தக் குழந்தையை நெற்றியோடு முத்தி மிருதுவாக எங்கள் வீட்டு குழந்தைகளைப் போலவே கொஞ்சிய போது அது விரும்பாத்து போல விடுவித்துக்கொண்டது. எங்கள் வீட்டுச் சிறுமி அதைக் கொஞ்சினாலும் அப்படித்தான். தூரமாக இருந்து ஒரு கண்ணாடி பொம்மை போலத்தான் அக்குழந்தை பழக்கமாயிருந்தது. அவ்வீட்டில் அவளை கொஞ்சுவதற்கு ஆளில்லை. இருந்தவர்களுக்கு கொஞ்சத் தெரியவும் இல்லை. எனக்கு வருத்தமாக இருந்தது.
மற்றொரு வீட்டில் ஒரு நான்கு வயது குழந்தை பளிச் பளிச் சென பேசியது. சற்றும் வார்த்தைகளில் பிசிறில்லை. காப்பி குடித்த தம்பளர்களை சமையலறையில் வைப்பது, தண்ணீர் பாட்டிலை காலில் இடறாமல் ஓரமாக வைப்பது என்றிருந்தது. அவளது பொறுப்பை அனைவரும் ரசித்தனர். தொலைக்காட்சி சீரியல்களின் பெயர்களை சொல்லி பாத்திரங்கள் என்ன பேசும் என்பதை சொல்லிக்காட்டியபோது, அனைவரும் சிரித்துக் கொண்டிருந்தனர். பேசும் பேச்சும் முதியவர்களின் பேச்சுப்போல இருந்தது. எனக்கு வருத்தமாக இருந்தது.
குழந்தைகளை தனித்தொட்டிலில் இடுவதும், கன்னத்தை சிறுமென் கிள்ளலின்றி தொட்டுக்கொஞ்சுவதுமாக, குழந்தையோடான நெருக்கங்கள் மிக அமரிக்கையாக மாறிக்கொண்டிருக்கிறது. கிராமங்களில் குழந்தையோடு விளையாடுகையில் கொன்னுடுவன் கொன்னு என்று சொல்லிக் காட்டி சிரிப்பார்கள். இதை “கொன்னுவிரல் காட்டி“ என ஒரு கதையில் எழுதுவார் (கண்மணி குணசேகரன் என எண்ணுகிறேன்). இத்தகு விளையாடல் இல்லாத குழந்தைப்பருவம் குழந்தைகளுக்கு அல்ல பெற்றவருக்கும், மற்றவருக்கும் பேரிழப்பு. கிராமங்களில் கூட இவை தேய்ந்துவருகின்றன.
குழந்தைகளின் உலகம் கடவுள்களில் உலகத்திற்கு மிக நெருக்கமானது. அங்கே விதிகளும் சட்டதிட்டங்களும் இல்லை. அவை கலைத்துப்போடுவதுதான் அவற்றின் ஒழுங்கின் அழகு. குழந்தைகளின் உலகில் நாம் நுழைவது மிக கடினம். அவற்றை குறைந்தபட்சம் ரசிக்கவாவது தெரியவேண்டும். சுவற்றில் கிறுக்குவதற்கு ஒரு குழந்தை வேண்டும், கோலத்தைக் கலைக்க ஒரு குழந்தை வேண்டும் என்று சொல்வதுண்டு. அதுதான் குழந்தைகளின் மிகப்பெரிய சந்தோஷம். சுவற்றில் கிறுக்கும் குழந்தையைக் கண்டிக்கும் பெற்றோர்களை நான் கண்டித்திருக்கிறேன். அதைவிட பெரிய வாழ்வியல் சுவை எது. “சிறு கை அளாவிய கூழ்“ என்ற வள்ளுவன் எவ்வளவு கவித்துவமாக குழந்தையை ரசித்திருக்கிறான்!
இப்படியான கூழ் அளையும் சிறு கைகளை பலவித தருணங்களில் வார்த்தைகளால் படம் பிடித்திருக்கிறார் பெரியசாமி தனது குட்டி மீன்கள் நெறிந்தோடு நீலவானம் கவிதைத் தொகுப்பில். முதலில் இப்படி ஒரு முயற்சிக்கு பாராட்டுக்கள் நண்பரே. உங்கள் கவிதையின் இந்த பார்வை மிக அத்தியாவசியான பார்வை, அதுவும் இன்றைய சூழலில்.
குழந்தைகளில் உலகை பெரியவர்கள் பார்க்கும், பார்க்கவேண்டிய தருணங்களை கனிந்த. ஏக்கம் மிகுந்த மற்றும் தவிர்க்கவியாலாத நிலைமைகளில் பல படிகளில் இருந்து பார்க்கும் கவிதைகள் பல இதில உள்ளன. பலவற்றை நாம் கேட்டிருப்போம். கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அதில் நாம் காணாதவற்றை, காணவேண்டியதாக பெரியசாமி காண்கிறார். சொல்கிறார்.
அலெக்ஸ் மரம் என்ற கவிதையில் பட்டியிலிருந்து துள்ளிவரும் கன்றுக்குட்டி போல வந்த சிறுவன் ஆலமரத்தை வரைந்து காட்டி இது அலெக்ஸ் மரம் என்கிறான். இது ஆலமரம் என்று சொல்லும்போது, அதை இப்படி எழுதுகிறார் –
ஆலமரம் அழகென்றேன்
இல்லப்பா அலெக்ஸ் மரம் என்றான்
சரி செய்யும் பதட்டத்தில்
மீண்டும் வலியுறுத்தினேன்.
ஏற்க மறுத்தவன் கூறினான்
என் மரம்
என் பெயர்தான்
எவ்வளவு அழகான கவிதை இது. நம்மை குழந்தைகளின் மனதுக்கு அருகில் சென்று அவர்களது பால்வாசம் உணரவைக்கும் நெருக்கம் இதில உணரமுடியும். குழந்தைகளிடம் தான் என்ற ஒன்று முளைவிடும் அற்புத தருணம் அது. அங்கிருந்துதான் அவர்களது உலகம் பிறக்கிறது. பார்வை தொடங்குகிறது. இதைவிட தனது உருவாக்கம் என்ற சந்தோஷமும், அதில அவன் தன்னையோ காண்பதும் எவ்வளது அழகாக தெரிகிறது.
பள்ளிக்கூடம் என்ற கவிதையில் சோப்பு விளையாடி பூனை மீது பழிபோடுவாள், விருந்தினரின் செருப்புகளை ஒளித்து விளையாடுவாள், நாயின் மீது பழிபோடுவாள். வண்டி சாவிகளை, ரிமோட்களை தலையணைக்குள் மறைத்து விளையாடுவான் அந்த சிறுமி.
“கொஞ்ச நாட்களாக
குறும்புகள் ஏதுமற்றிருந்தாள்.
மாதம் ஒன்றுதான் ஆகியிருந்த்து
அவளை பள்ளிக்கு அனுப்பி“ என்று முடிகிறது கவிதை. தற்போதைய இறுக்கமான கல்வி சூழலை இதைவிட அழகாக சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. இப்போது பள்ளிக்கூட துவக்க காலம் என்பதால் இந்தக் கவிதையை ஜெராக்ஸ் எடுத்து எனக்கு தெரிந்த எல்.கே.ஜி குழந்தைகளின் பெற்றோர்களிடம் தரலாம் என்றிருக்கிறேன் (பெரியசாமியின் அனுமதி பெற்று).
யானைக்கு மற்றொரு யானை துணை. காக்காவிற்கு மற்றொரு காக்கா துணை என்று மாலைப்பொழுதொன்றில் பேசிய சிறுமி, ஒரு தாளில் படம் வரைந்து அனுப்புகிறாள். துணைவானம். சூரியன். நட்சத்திரம் என்று. யாவரும் கண்டு கொண்டிருப்பது அவளனுப்பிய துணைகளைத்தான் என்று முடியும் கவிதையில் – அவள் அனுப்பிய என்ற வார்த்தையில் அவள் இப்போது அருகில் இல்லை. தனது அபிலாஷைகளை சித்திரங்களாக்கி அனுப்புகிறாள் என்று உணரும்போது மனம் கனக்கிறது.
”வெற்றுத்தாளை வனமாக்கியவள்” என்ற அட்டகாசமான கவிதை. சிறுமி காகிதத்தில் மேகங்கள், வேடர்களுக்கு சிக்காத பறவை, மரம் நிலவு என முடித்து நதியை வரைய வேறொரு தாளை எடுக்கும்போது –
“சனியன் எப்பவும்
கிறுக்கிகிட்டே இருக்கு
அப்பாவின் குரல் கேட்டு அதிர்ந்தாள்
ஒரு நதி
துவக்கத்திலேயே வறண்டது” என முடிகிறது கவிதை. எவ்வளவு நல்ல கவிதை.
பூனையாவாள் என்ற கவிதையில் உணவு ஊட்டும்போது காக்கை குருவி நிலா என சொல்லி ஊட்டும்போது துப்பும் குழந்தையோடு போராடும் பெண்ணைச் சொல்லி –
அம்மா
நினைவில்
அம்மா என்கிறது கவிதை. தனது குழந்தைக்கு உணவு ஊட்டும்போது தன்னுடைய அம்மாவை நினைக்கையில் ஊட்டும் அம்மா சட்டென குழந்தையாவதை உணர்கிறோம். மிக அழகிய கவிதை இது. ஆனால் அப்படியான அம்மாக்கள் இன்று அரிதாகி வருவதையும் வேதனையுடன் நினைவுகொள்ள வேண்டியிருக்கிறது. குறைந்தபட்சம் மொட்டை மாடிக்கு கூட குழந்தையை கொண்டு வருவதில்லை. திருஷ்டி படும் என்றும், காற்றில் தூசு படும் என்றும் காரணங்கள். தொலைக்காட்சியின் டிஜிடல் உருவங்களில் தங்களை இழந்துகொண்டிருக்கும் இன்றைய குழந்தைகள் பரிதாபத்திற்குரியவர்கள்.
“தன் பிரசன்னத்தால்
எல்லோரும் சூழச்செய்தாள்
குட்டி தேவதை“ - என்று ஒரு வரி வருகிறது. பிரசன்னம் என்ற வார்த்தை தெய்வீகம் சம்மந்தப்பட்டது. மிக கவனமாக போடப்பட்டிருக்கும் இந்த வார்த்தான் இந்த தொகுப்பின் மையப்புள்ளி. கடவுளர்கள் குழந்தைகள் உருவாக உலவி நெகிழும் காலங்களில் நாம் குழந்தைகளையே பார்க்காத குருடர்களாக இயந்திரமாக உழலும்போது கடவுளை எங்கே பார்க்கமுடியப் போகிறது.
நல்ல பல கவிதைகள் உள்ள இதில், பவனி, எழுத மறந்த பக்கங்கள், வெளியே மழை பெய்தது போன்ற சில கவிதைகள் சாதாரணமாக நிற்கின்றன. பெரும்பாலான கவிதைகளில் குழந்தைகள் வரையும் ஓவியங்கள் அதிகம் இருக்கின்றன. இது பெரிய குறையல்ல. எண்ணிக்கை குறைவான தொகுப்பில் இதன் பொருண்மை கூடுதலாக தெரிகிறது. அவ்வளவே.
சிக்கலில்லாது, மென்மையாக அனுபவங்களை அடுக்கி, ஒரு அழகிய பார்வையை கொண்ட கவிதைகள் உள்ள தொகுப்பு.
குட்டி மீன்கள் நெளிந்தோடும் நீலவானம்
ந.பெரியசாமி Periyasamy Periyasamynatarajan
தக்கை வெளியீடு, சேலம்.

No comments:

Post a Comment