Thursday, January 22, 2015

நன்றி நாணற்காடன்


தோட்டாக்கள் பாயும் வெளி- ந.பெரியசாமி

நினைவை நனைத்து ஓடுகிறவன்.

பூக்களில் இருக்கும் அமைதி விதவிதமான பூக்கள் விற்கப்படும் மார்க்கெட்களில்

இருப்பதில்லை. ஜனத்திரளும், விலை பேசும் சம்பாசனைகளும், எடைத் தட்டுகளின் களக்

களக் சத்தங்களும், பூ மார்க்கெட்டின் நிதர்சனம். அவ்விடம் அப்படி தான் இருக்கிறது.

அப்படி தான் அவ்வளவு அமைதியற்று தான் இருக்க வேண்டும் போல அவ்விடம். அந்த

நெருக்கடிகளுக்குள் கடைவிரித்து கொட்டிக் குவிக்கப்பட்டிருக்கும் பூங்குவியலின்

எந்தவொரு பூவை உற்று கவனித்தாலும் அவற்றின் பதற்றம் நிறைந்த முகமே காண

முடிகிறது. யாரேனும் விலை கொடுத்து நம்மை வாங்கிப் போக மாட்டார்களா...என்ற

ஏக்கம் பூக்களின் கண்களில் நிறைந்திருக்கின்றன. இவ்விடத்தை விட்டகலும் நொடிக்காக,

தாயைத் தொலைத்த குழந்தையென திருதிருவென முழித்துக்கொண்டிருக்கின்றன

அவை. ஒருத்திகளின் தயவில் இந்தப் பூக்கள் மீட்கக் கடவது

பெரு நகரமொன்றின் ரயிலடி ஜனத்திரளாக நெட்டி நெருக்கி பிதுங்கி வழிகிற

கவிதைகளிலும் பதற்றங்கள் கூடிக்கொண்டிருக்கின்றன. புறாக்கூட்டத்தின் நடுவே

கல்வீசப்பட்டதைப்போன்ற படபடப்போடு கவிதைகள் சடசடக்கின்றன. தோட்டாக்கள்

பாயும் வெளி எத்தனை மூர்க்கமானதெனச் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

துப்பாக்கிகளின் துணையின்றி திரைப்படங்கள் நிகழ்வதில்லை இங்கு. எதிர்வீட்டுக்காரன்

எப்போதும் கைத்துப்பாக்கியோடே சுற்றித் திரிவது போலொரு மாயத்தை நமக்குள்

திரைப்படங்கள் திணித்துக்கொண்டிருக்கின்றன. மதுவாகினிகளும், அனாமிகாக்களும்

நிறைந்த பூமியின் வெளியில் தோட்டாக்கள் பாயத்தொடங்கிவிட்டன போலும்.

மதுவாகினிகளை சிறகுகளுக்குள் பொத்திப் பாதுகாக்க வேண்டும்.

மதுவாகினியின் மலர்விரல்கள் பற்றி எழுதத்தொடங்கும் எழுதுகோல் மயங்கி முயங்கி

தோட்டாக்களைத் தடவத் தொடங்கிவிட்டன.

என்றாவது நதி மேல் நோக்கியும் பாயும் என்ற நம்பிக்கையிலிருந்து ந.பெரியசாமி

தோட்டாக்கள் பாயும் வெளி.....விரிகிறது.

மெல்லிய சப்தத்தோடு இரண்டு தோட்டாக்கள்.....என்ற வரியோடு இந்தக் கவிதை

வெளி இரத்தம் சிதறிக் கிடக்கிறது.

மிகுந்த பதற்றத்தோடு தொடங்குகிற இரயிலானவன்.....கவிதை வாசிக்கும் நம்மையும்

பதற்றத்துக்குள்ளாக்குகிறது. கவிதை வளர வளர பதற்றமும் வளர்கிறது. இறுதியாக

ஓடிப்போய் நானும் இரயிலானேன் என முடிக்கும்போது தான் அவ்வளவு ஆசுவாசப்

படுகிறது மனம். ஒரு தற்கொலை நிகழாதிருக்க குழந்தைகள் தேவைப்படுகிறார்கள்.

நம்மைச் சுற்றி குழந்தைகள் நிறைவது வாழ்வை நீட்டிக்கச் செய்கிறது.

மூன்றாம் நாளில்.....இந்தக் கவிதை நாமாகவே உருவாக்கிக்கொள்ளும் தனிமையில்

ஊடுருவி உலாவுகிற மனிதர்களைக் காட்சிப் படுத்துகிறது. நான் என்பது நான்

மட்டுமல்லன் என்பதைச் சொல்லும் உன்னதத் தன்மையோடு விரிகிறது கவிதை.

ஆடு மாடுகள் அந்தரத்தில் பறந்தன/ எனத் தொடங்கும் வேர்கள் வான் நோக்கி வளர்ந்தன

என்ற கவிதை தரும் அனுபவம் அலாதியானது. காக்கைப் பாலும், குருவிப்பாலும்

கட்டியமைக்கும் உலகம் அழகானது. காக்கை மருத்துவரும், காக்கா குஞ்சின் மூத்திரமும்

மூட்டு வலியிலிருந்து நம்மைக் காக்கச் செய்யும் என நம்பலாம்.

துளிகளை அனுப்பி/சன்னல் வழியே அழைத்து/தன் ஆட்டத்தைத் துவங்கியது

மழை/......வேடிக்கை பார்க்க/ காமக் களியாட்டத்தில் மனம். மழை பற்றிய எந்தக் கவிதை

வாசித்தாலும் பொன். இளவெனிலின் பதற்றத்தைப் பெய்தபடியிருக்கிறது மழை என்ற

வரிகள் மிதந்து வந்துவிடுகிறது. மழைக்கு உயிர் கொடுத்து உலாவவிடுகிற

பெரியசாமியின் வரிகளும் இனி நெஞ்சில் நிலைத்திருக்கும்.

திடுமென நினைவு சுடுவதும், புழுதி படிந்த வயோதிக நிலமும், நினைவில் மழை

பெய்வதும், காக்காவுக்கு மற்றொரு காக்கா துணையாக இருப்பதும், வானத்திற்கு

துணையாக யாருமில்லாதிருப்பதும், நிறைந்த மூத்திரப்பையின் வலியும், பிடித்து வந்த

பசுவின் நிழலும்.....என பெரிய சாமி சொற்களால் வரைந்து காட்டும் சித்திரங்களில்

மூழ்கிப் போவது இனிமையான கவிதையனுபவம்.

தொகுப்பு முழுக்க விரவிய எல்லாக் கவிதைகளிலும் மார்க்கெட் பூக்களின் அமைதியற்ற

அல்லது பதற்றம் நிறைந்ததொரு முகம் தென்படவேச் செய்கிறது. அதுவே

இத்தொகுப்பின் அல்லது பெரியசாமியின் கவிதையுலகின் அடிநாதமாகவும்

கொள்ளலாம்.

தோட்டாக்கள் பாயும் வெளியிலிருந்து மதுவாகினிகளை கவிதைகளே காக்கக்கூடும்

என்ற நம்பிக்கை வலுக்கிறது. அந்த நம்பிக்கைக்கு பெரியசாமியின் என்றாவது நதி மேல்

நோக்கியும் பாயும்... என்ற வரிகளிலிருந்து தீ மூட்டிக்கொள்வோம்.

No comments:

Post a Comment