காற்று
பெருக்கெடுத்து வீசிய போதும்
ஒலி நகராது காதருகேயே
கோடைக்குப் பின்
முதல் துளியின் ஈரம் பரவிய நிலமானேன்
குத்துண்ட விதைகளெல்லாம்
மொக்கிட்டு மலர்ந்தபடி
வெண்ணிற மேகம் சூழ இறங்கி
தேவதைகள் ஏதும் கூறிடவில்லை
உடனிருப்பவள்தான்
என்றாவதுதான் கேக்க வாய்க்கிறது
பிறழ்ச்சியில் பிறப்பிக்கும்
கொலைகாராவை...
*
நிறுத்தமற்ற பயணம்
சரியாக நினைவில் இல்லை
கச்சிதமாக சொல்ல
இது ஆய்வுக் கட்டுரையுமல்ல
பத்து பனிரெண்டு வருடமாக நீடிக்கிறது
பயணத்தில் உண்டான முகப்பழக்கம்தான்
பார்க்கையில் இதழ் அவிழ்ப்போம்
அன்றொரு நாள் என் அருகாமையை
தன் இருப்பால் நிறைத்தாள்
ரொம்ப நாளானது பார்த்தென்றேன்
கணவரது வாகனத்தில் செல்வதாக கூறினாள்
வேலையின் தன்மை குழந்தைகளின் படிப்பென
விசாரிப்புகளை நீட்டினேன்
அவளின் நிறுத்தம் நெருங்கியது
தயங்கிக் கேட்டேன்
கையிலிருந்த செல்போனை பையிலிட்டு
டிக்கட்டின் பின்புறம் எழுதினாள்
எனது எண்ணைக் கேட்டு
மீண்டும் வெற்றிடம் சூழ
அவளது எண்ணைத் தராது
நாசுக்காக மறுத்திட்டாளென நினைத்திருந்தேன்
பொய்யாக்கி பேசினாள்
பேசிக்கொண்டே இருக்கிறாள்
திருவிழா பார்த்து வந்த
குழந்தையாக...
No comments:
Post a Comment