அழிவுகளின் சாட்சியாக நிற்பவன்
அழிவுகளின் சாட்சியாக நிற்பவன்
இவ்வாண்டுத்
துவக்கத்தில் வெளியான கவிதைத் தொகுப்புகளுக்கு சேலத்தில் விமர்சன அரங்கு ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது.அதில், நான், ந.பெரியசாமியின் ‘மதுவாகினி’ தொகுப்புக்கு
கட்டுரை வாசிப்பதாக இருந்தது.ஆனால், அப்போதைய சூழலில் அதற்கு வாய்ப்பில்லாமல்
போனதால், இப்போதுதான் எழுதவும் முடிந்ததால், சுருக்கமான,மேலோட்டமான என் விமர்சனக் கருத்துக்கள் இதோ:
பெரியசாமியின் மதுவாகினி தொகுப்பை பொதுவாக நான்கு விதமான கவிதைகள் நிரம்பியதாகவே பகுத்துக்கொள்கிறேன்.
1. சுற்றுச்சூழல் அழிவு குறித்தும், இயற்கையோடியைந்த வாழ்விலிருந்து விலகிய இயந்திரமயமான, நகரவாழ்க்கை குறித்தும், கொள்ளும்
பதற்றம், கவலை
2.திருநங்கை, திருநம்பிகளின் மீதான கவன ஈர்ப்பு,அன்பு
3.காதல் மற்றும் கடந்த காலத்து நினைவு கூரல்
4.குழந்தைக் கவிதைகள் அதாவது பிள்ளைத் தமிழ்
இவை தவிரவும் அறிதலை நோக்கிய கவிதைகள்,அகவயமான கவிதைகள் என்றும் உள்ளன.
பெரியசாமியின் கவிதைகள் கையாளும் களம் மற்றும்
அவற்றில் அவர் செயலாற்றியிருக்கிற விதம் நேரடியான சமூகக் கவிதைகளாகவே இருக்கின்றன.
எளிதில் பலரும் எழுதிவிடலாம் என்றே எண்ணத் தோன்றுகிற மாதிரியான களத்தேர்வுகள்
மற்றும் செயல்படுத்தியிருக்கும் விதம். ஆனாலும்,கவிதைகளில் வெளிப்படும் அவருடைய உணர்வுகள், கவலைகள்
உண்மையானவை. அவையே தேவையானது. தன்னுடைய வாழ்வனுபவங்களிலிருந்தும், பார்வைகளிலிருந்தும் சுயமாக அவற்றை
முன்வைக்கிறார்.
பெரியசாமியின் கவிதைமொழி வாசிப்பில் சற்று
அயர்ச்சியளிக்கிறது. நவீன கவிதைகளுக்கென்றே ஒரு மொழி நடையை நாம்
கற்பித்துகொள்வதாலேயே இப்படியொரு மேடைச் சம்பிரதாயமான அல்லது சன்னதம் வந்தாற்போன்ற
மொழியை கைக்கொள்கிறோமோ என்று தோன்றுகிறது. பெரியசாமியின் கவிதைகளை வேறு
எந்தமாதிரியான மொழியில் எழுதலாம் என்று கேட்டால், அதற்கு என்னிடம்
விடையில்லை.இன்னும் கொஞ்சம் எளிமையாகவே எழுதலாம் என்பது மட்டும்தான் என்னால் சொல்ல
இயன்றது. ஏனெனில், அவரின் கவிதைகள் எளிமையானவை மற்றும் நேரடியானவை.
மதுவாகினி கவிதைகள் பொதுவாக நன்றாக உள்ளன.அதில் ஒரு பித்து
நிலை இருக்கிறது. அதுவே அவைகளுக்கு சிறப்பு சேர்க்கிறது. குழந்தைகள் கவிதைகளும்
அதேபோல் நன்றாக உள்ளன.
’வருத்தப்பட்டு பாரம் சுமப்போரே’ என்று தொப்பைக்காரர்களை பகடி செய்கிறார்.கவிதை
முழுவதுமே பகடியோடு நன்றாக வந்திருக்கிறது.தொகுப்பில் சற்று தனியாக தெரியும்
கவிதையிது.அதேபோல் ’தீட்டுறிஞ்சி’ கவிதையும் தனித்துத் தெரிகிறது.
நல்ல நல்ல கவிதை அனுபவங்கள், காட்சிகளை கவிஞனுக்கேத்
தேவையான விழிப்புணர்வோடு இருந்து கண்டடைந்து கவிதைகளில்
பதிந்திருக்கிறார்.சிலவற்றை இன்னும் சற்று வேறுவிதமாக சொல்லியிருக்கலாம் என்று
தோன்றுகிறது.
பொன்.வாசுதேவன் எழுதியுள்ள பின்னட்டை வாசகங்கள்
பொருத்தமான, நெருக்கமான விதத்தில் தொகுப்பை முழுதும் நன்கு உள்வாங்கி,
அணுகியிருக்கிறது.
தொகுப்பிலுள்ள கவிதைகளை மீண்டும் மூன்றுவகையில்
அடையாளப்படுத்துகிறேன்.
- நல்ல கவிதைகள் அல்லது இன்னும் சற்றே வேறுவிதமாகச் சொல்லியிருந்தால் இன்னும் மேன்மையாகத் தோன்றும் கவிதைகள். எடுத்துக்காட்டாக, புலிவால் பிடித்தகதை, தோத்தாங்கோழி,மெய்வருத்தம்,கனவு வேட்டை,பன்றிகளின் இருப்பைத் தேடும் மதுவாகினி,புதைகுழி, எளியவர் என் கடவுள்...
- நல்ல கரு, உணர்வு, உள்ளடக்கம் ஆகிய சிறப்புகளோடிருந்தும், கவிதையாக்கத்தில் தேக்கம் கண்ட கவிதைகள் எ.டு கசப்பு, மழைக்கு பசியாற்றினோம்...
- மோசமான கவிதைகள் ( ஆமாம், மோசமான கவிதைகள் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது) எ.டு. ’கதாசிரியனுக்குப் பின்’ போன்ற பொதுவாக, நேரடியான அரசியல் கவிதைகள்.
எல்லாத் தரப்பு படைப்புகளுக்கும்
வாசகர்கள் இருக்கிறார்கள். அதாவது, படைப்பாளர்களின் தரத்துக்கு இணையாக வாசகர்களின்
தரம் இருக்கும். எனவே, வாசகர்களின் இருப்பு பற்றிய கவலைக்கே இடமிருக்காது.அதேசமயம்,
நாம் யாரிடம் பேர் வாங்க வேண்டும் என்று நமக்கு ஒரு இலக்கு இருக்கும் அல்லவா? அதை
நோக்கிய தீவிர செயல்பாடுகளே படைப்பாளிகளுக்கான தொடர்ச்சியான உத்வேகத்தை அளிப்பது.
இப்படியெல்லாம் எழுதிவிடுவதால்,
நான் பெரிய இவன் என்றெல்லாம் காட்டிக்கொள்வதாக ஒரு தோற்றம் உருவாவதையும்
உணரமுடிகிறது.ஆனால், மேலே சொன்ன கருத்துக்கள் எனக்கும், என் தொகுப்புக்கும்
பொருந்தும் என்பதனால், நான் இப்படி முடிக்கிறேன்
’’நண்பா, பெரியசாமி! நாம் இப்போதைக்கு
நம்முடைய இடம் எது என்பதை தெளிவாக அறிந்துகொள்வோம்.பிறகு, அங்கிருந்து
மேலேறுவோம்’’
No comments:
Post a Comment