Friday, May 24, 2013

தாய்மையும் உலகமும் பெரியசாமியின் ’மதுவாகினி’
பாவண்ணன்

பெரியசாமியின் இரண்டாவது  கவிதைத் தொகுதி மதுவாகினி. சிக்கலற்ற இயல்பான சொற்செட்டுகளோடும்  வசீகரமான கற்பனையோடும் இருக்கின்றன  அவருடைய கவிதைகள். புறக்காட்சிகளில் இயல்பாகவே ஈடுட்பாட்டுன்  படியும் மனம்கொண்டவராக  உள்ளார் பெரியசாமி. இந்த ஒன்றுதலால் உள்ளோங்கியெழும்  அனுபவங்கள் பெரியசாமியிடமிருந்து அழகான கவிதைகளாக வெளிப்படுகின்றன.

குழந்தைக்குச் சோறூட்டும் மனைவியைப் பார்த்து, தன்  தாயை நினைத்துக்கொள்ளும் கணவனைப்பற்றிய சித்திரத்தைக்  கொண்ட ‘பூனையாவாள் அம்மா’ கவிதை நல்ல வாசிப்பனுபத்தைக் கொண்ட ஒன்றாகும். எல்லாக்  குழந்தைகளும் இயல்பாகவே  உணவுண்ண அதிக நேரம் எடுத்துக்கொள்கின்றன. அதற்கு உளவியலாளர்கள் சில  காரணங்களை முன்வைக்கிறார்கள். பிறந்த குழந்தையை, அதன் பக்கத்திலேயே இருந்து கவனித்துக்கொள்கிறாள் தாய் . தொடக்கத்தில் ஒரு நாளின் தொண்ணூற்றியைந்து விழுக்காடு நேரத்துக்கும் மேல் குழந்தையின் அருகிலேயே செலவழிக்கிறாள் தாய். வயிற்றுக்குள் சுமந்து பார்த்துக்கொண்டதுபோலவே பக்கத்தில் இருந்து பார்த்துக்கொள்கிறாள் அவள். அவள் உடல்மணத்தாலும் ஆடைகள் மணத்தாலும்தான் தாயை அடையாளம் வைத்துக்கொள்கிறது குழந்தை. குரல் அடையாளமும் தொடுகை அடையாளமும் அடுத்தடுத்து உருவாகின்றன. முக அடையாளம் இறுதியாகவே உருவாகிறது. தாய்ப்பாலில் இருந்து மாறி உணவுண்ணும் பருவத்துக்கு குழந்தை அப்போது வந்து சேர்கிறது. தொடக்கத்தில் தொண்ணூற்றியைந்து விழுக்காடு குழந்தையின் அருகில் செலவழித்த தாய்க்கு அதே அளவு நேரத்தைத் தொடர்ச்சியாகசச் செலவழிக்க முடிவதில்லை. வீட்டுப் பொறுப்புகள் முக்கியமான காரணம். எண்பது, எழுபது, அறுபது, ஐம்பது என அந்த நெருக்கம் குறைந்துகொண்டே வருவதைத் தவிர்க்க முடிவதில்லை. ஆனால் குழந்தைகளால், அந்த மாற்றத்தைத் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. எப்பாடு பட்டாவது, தன் தாயை தன்னருகில் அதிக நேரம் வைத்துக்கொள்ள குழந்தை நினைத்துக்கொள்கிறது. அழுகையின் மூலம் முதலில் அது தன் எண்ணத்தைச் சாதிக்க நினைக்கிறது. அல்லது சிரிப்பின் மூலமோ விளையாட்டின் மூலமோ தன் விருப்பத்தைச் சாதிக்க நினைக்கிறது. அவையிரண்டின் வழியாகவும் தன் எண்ணங்கள் நிறைவேறுகின்றன என்பதை உணரும் குழந்தை, அவற்றையே தன் முக்கிய ஆயுதங்களாக வைத்துக்கொள்கின்றன. பொதுவாக உணவுண்ணும் பருவத்தில் குழந்தைகள் அதிக நேரம் எடுத்துக்கொள்வதற்குக் காரணம் இதுதான். அது ஒரு குழந்தைத்தந்திரம். குழந்தைக்கு உணவூட்டுவதற்காக பூனைபோலவும் மயில் போலவும் யானைபோலவும் உடல் அசைவுகள் காட்டி, குரல் வேறுபாடு காட்டி, மணிக்கணக்கில் செலவழிக்கும் மனைவியைப் பார்க்கும் இளம்கணவனுக்கு தன் குழந்தைப்பருவமும் தன் தாயின் உருவமும் ஒருசேர நினைவுக்கு வருகின்றன. தாய்மையே இந்த மானுடத்தைக் காப்பாற்றித் தாங்கிக்கொள்கிறது. பெரியசாமியின் கவிதை வரிகள் இத்திசையின் நம்மைச் சிந்திக்கத் தூண்டுகின்றன.

தாய்மையைக் கொண்டாடும் மற்றொரு கவிதை ’பன்றிகளின்  இருப்பைத் தேடும் மதுவாகினி’. தாய்ப்பன்றியிடம் முட்டிமுட்டிப் பாலருந்தும் குட்டிப்பன்றிகளைப் பார்த்து தன்முலை வருடிப் பார்க்கும் மதுவாகினியின் சித்திரம்தான் இக்கவிதை. விலங்கானால் என்ன, பெண்ணானால் என்ன, இரண்டு சூழல்களிலும் தாய்மை என்பது ஒன்றென உணர்த்தும் தருணம் மகத்தானது. வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்பது வள்ளலார் வரி. பால் ஊற்றெடுக்கும் மார்பைக் கண்டபோதெல்லாம் பாலூறும் தாய்மையும் உயர்ந்த குணம்.

பெரியசாமியின் கவியாளுமை  வெளிப்படும் சிறந்த கவிதை  ‘மழையின் பசியாற்றினோம்’. ’விசும்பின் துளிவீழின் அல்லால்  மற்றாங்கே பசும்புல் தலைகாண்பதரிது’ என்பது வள்ளுவர் வாக்கு. மண்ணின் பசியை ஆற்றுகிறது மழை. பசியாறிய மண்ணிலிருந்து உயிர் தழைத்து மேலோங்குகிறது. மழைக்குப் பசிக்காதா என்றொரு கேள்வியை முன்வைக்கிறது குழந்தை. கொட்டாங்கச்சியில் மன் இட்லிகளைத் தட்டித்தட்டி எடுத்து மழையின் முன் வைக்கிறது. உக்கிரமான பசியோடு கொட்டும் மழை அந்த மண் இட்லிகளைக் கரைத்துண்டு பசியாறி உற்சாகத்தோடு பொழியத் தொடங்குகிறது. இந்த மண்ணுலகைக் காக்கும் தாய்மையை மழை வெளிப்படுத்துகிறது என்றால், மழையின் பசியாற்றிக் காக்கும் தாய்மையை ஒரு குழந்தை வெளிப்படுத்துகிறது. குழந்தைமையின் கற்பனையோடு ஒளிரும் இக்கவிதையின் வரிகள் படித்த கணத்திலேயே மனத்தில் பதிந்துவிடுகின்றன.   குழந்தைமையின் பண்புகளோடு கூடிய ’கனவுவேட்டை’ கவிதைக்காட்சியும் மறக்கமுடியாத ஓர் அனுபவம்.

குழந்தைகள் வளரும் பருவத்தில், பெற்றோர்கள் நடந்துகொள்ளும் விதம் மிகவும் விசித்திரமானது. ஒரு கட்டம்வரைக்கும் குழந்தையின்  விருப்பத்தையொட்டி நடந்துகொள்ளும் பெற்றோர்கள், அடுத்த கட்டத்தில் பானை வனைவதைப்போல தன் விருப்பத்துக்கும்  கனவுக்கும் ஏற்றவகையில்  குழந்தைகளை வனையும்  முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். குழந்தைகளின் இயல்பான ஆர்வத்தையோ ஈடுபாட்டையோ  அவர்கள் ஒருசிறிதும் பொருட்படுத்துவதில்லை. வெற்றிப்புள்ளியைநோக்கி அவர்களைத் தள்ளிச் சென்று நிறுத்துவது தன் கடமை என்று அவர்கள் நினைக்கிறார்கள். குழந்தைகளின் கனவுகளும் பெற்றோர்களின் கனவுகளும் மோதிக்கொள்ளும் விசித்திரமான புள்ளியொன்றை ’சித்திரங்கள்’ என்னும் தலைப்பில் அழகான கவிதையாக மாற்றியிருக்கிறார் பெரியசாமி. ஒரு குழந்தை ஓவியம் பழகிக்கொண்டிருக்கிறது. ஓவியம் இன்னொரு உலகுக்கு அக்குழந்தையை அழைத்துச் செல்கிறது. இந்த உலகத்துக்குள் இருந்துகொண்டே நிறங்கள் வழியாகவும் கோடுகள்வழியாகவும் இன்னொரு உலகத்தை அது தீட்டிக்கொள்கிறது. மேகம், பறவை, வானம் என பெயர் சூட்டி மகிழ்கிறது. கிணறு வரைந்து, அதிலிருந்து பாயும் நீரால் புல்வெளி வளர்த்து மரங்கள் வளர்த்து குடிசையும் உயர்ந்தெழும்வண்ணம் செய்கின்றது. கற்பனை செல்லும் திசையில் மிதந்தவனாக மேலும் வானம், இருள், நிலவு என தீட்டிக்கொண்டே போகிறது.  அக்குழந்தையை உருப்படியான ஆளுமையாக உருவாக்கும் கனவில் உள்ள பெற்றோரின் குறுக்கீடு, குழந்தையின் கனவை தவிடுபொடியாக ஆக்கிவிடுகின்றது.

’பரிகாரம்’ என்னும் கவிதையில் காதறுந்த வீடுகள் என ஒரு புதிய சொல்லை உருவாக்கியுள்ளார் பெரியசாமி. ’காதறுந்த ஊசியும் கடைவழிக்கே வாராதுகாண்’ என்றொரு பழைய பிரயோகம் உண்டு. அந்தப் பிரயோகத்தின் தூண்டுதலால் பெரியசாமி இப்படி ஒரு சொல்லை உருவாக்கியிருக்கக் கூடும். காதறுந்த ஊசிபோலவே காதறுந்த வீடுகளும் நன்றாகவே உள்ளது. புற ஓசைகளும் அசைவுகளும் பிரக்ஞையிலேயே பதியாதபடி உறக்கத்தில் ஆழ்ந்திருக்கும் மனிதர்களைக்கொண்ட வீட்டை அடையாளப்படுத்தவே காதறுந்த வீடு என்கிற அடையாளம் உதவுகிறது. தூக்கம் கலைந்து, தன்னை வந்தடைந்த ஓசைகளையும் சொற்களையும் கேட்கும்போது அவை எவ்வகையிலும் மகிழ்ச்சியைத் தராதவையாக இருப்பது துரதிருஷ்டமானது. காதறுந்த வீடுகளே காதுள்ள வீடுகளைவிட மேலானவைபோலும். ஆனால் விழிப்பைவிட உறக்கம் உயர்வானதாக மாறுவது எவ்வளவு பெரிய துரதிருஷ்டம். அந்தத் துரதிருஷ்டத்தின் பிடியிலிருந்து விடுபடுவதற்கான வழியை யோசிக்கவைக்கிறது கவிதை.

’காது அவிஞ்சான்பட்டி’ அழகான ஓர் அரசியல் கவிதை. நாட்டுப்புறக்கதைகளின் சாயல் படிந்த இக்கவிதையில் உள்ள இயற்கைத்தன்மை மனத்தைக் கவர்கிறது.

கிணற்றில் தள்ளிவிடப்பட்டு, கால்களையும் கைகளையும்  உதறி உதறி தானாகவே நீச்சல்  பழகிய அனுபவத்தை நினைவுபடுத்திக்கொண்டு, கவிதையையும் அதுபோலவே பழகியதாக முன்னுரையில் குறிப்பிடுகிறார். ஒரு கட்டம்வரைக்கும் இது  சரி. நீச்சல் பழகியவர்கள்  ஆழச் சென்று மூச்சடக்கி தரைமண்ணைத் தொடுகிறார்கள். கிளறிப்  பார்க்கிறார்கள். வைரத்துகள்களை  அள்ளிவருவதுபோல நீர்மட்டத்துக்கு வந்து கையுயர்த்திக் காட்டுகிறார்கள். விசித்திரமான நீர்த்தாவரங்களின்  அமைப்பையும் நிறத்தையும்  காண்கிறார்கள். தரையில்  புதைந்த பல பழைய பொருள்களை  அதிசயமாகக் கண்டடைகிறார்கள். இத்தகு அதிசயக் கண்டடைதல்கள்தாம் இரண்டாம் கட்டத்தில் நிகழவேண்டும். பெரியசாமியின் கவிதைப்பயணம் சரியான திசையிலேயே செல்வதாகவே தோன்றுகிறது. அவருடைய புதிய கண்டடைதல்களை அடுத்தடுத்த தொகுப்புகளில் காணமுடியும் என்கிற நம்பிக்கையை அளிக்கிறது இத்தொகுதி.

(மதுவாகினி. கவிதைகள். ந.பெரியசாமி.  அகநாழிகை பதிப்பகம்.33, மண்டபம்  தெரு, மதுராந்தகம். விலை. ரூ.70)

nantri:malaigal.com

No comments:

Post a Comment