Wednesday, May 30, 2012

நீ மட்டுமல்ல...

உன் வாசத்தின் தேசம் நெருங்க
பசுவின் மடியென புடைத்திருந்தன மரங்கள்
ஹுசேனின் ஓவியமாய்
ஊரின் முகப்பில்
உரித்து தொங்கவிடப்பட்ட மாடு
வரையத் தொடங்கியவனின் கோடுகளாய்
ஒழுங்கின்மையின் அழகில் தெருக்கள்
சுவரில் வழியவிடப்பட்டிருந்தன வீடுகள்
குழந்தைகளுக்கான நிறங்களை
ஒன்றிரண்டு பாழடைந்த வீடுகளும்
புராதனச் சின்னங்களாக
கதாமாந்தர்களின் ஒத்திகையை நினைவூட்டும்
வசிப்போரின் உடல்மொழி
வேறெதுவும் தெரியாதுபோலும்
தாய்மை கனிந்த வார்த்தைகளைத் தவிர
ஐயம் வேண்டாம்
கினற்று தவளையல்ல நான்
ஏன் மதுவாகினி
உன் வாழ்விடமும்
இவ்வளவு பேரழகாய் இருக்கிறதே...
0

நிறுத்தங்களற்ற பெருமைகள்

பார்வையின் ஈரம் மலர்த்தும்
வறண்ட பூக்களையுமென்றான்

தொட்டுச் செல்ல நாணத்தால்
உடல் சுருங்கும் செடிகளென்றான்
மற்றவன்

துப்பும் எச்சில் துளிர்க்கச் செய்யும்
மலட்டு விதைகளையுமென்றான்

உதிரும் ரோமங்கள்
உருவாக்கும் வலிமையான கயிற்றை
இது மற்றவன்

என்னில் பிறக்கும் வார்த்தைகள்
பாடமாகும் பள்ளியிலென்றான்

மற்றவனோ
தன் கனவு பிதற்றல்கள்
காவியமாகும் காலத்தாலென்றான்

இப்படியாக தொடர்ந்த
இருவரின் உரையாடல்களின்
வீச்சம் தாளாது இடை புகுந்தவன்
வாயடைக்கச் செய்தான்

நான் பெய்யும் மூத்திரத்தில்
மீன்கள் பறந்து வருமென...
0

காத்திருப்பு

விரிந்து கிடக்கும் பாலை நிலத்தில்
கையளவு நீரை கண்டடையும்
தவிப்புக்கு ஒப்பானது
வாழ்வின் துணையை அடைவதும்
தாகமற்றிருக்கலாமெனும்
நிம்மதி மூச்சுவிட
காத்திருந்தது போல்
ஏதோவொரு ரத்தபந்தம்
தன் மரணத்தால் நிகழ்த்தும் தள்ளிவைப்பு
பொதிந்து கிடக்கும் பழமையின் நாளை
மீண்டும் கண்டடைய
மண்டபங்கள்
மாய பூதங்களாக மறைந்து போக
கணக்கத் துவங்குகிறது உடல்
நுரைத்து நுரைத்து பொங்கும்
காதலாலும்...
காமத்தாலும்...
0

சிலை படிந்த பிசுக்கென...

சிரட்டையுள் தேங்கிய மழைநீர்
தாழம்பூவை சுகித்துக்கிடக்கும் நாகம்
பெரும் வனம் நுணுக்கி விதைகளாக அடைக்கும் பழம்
பூக்களை தன் உருவமாக்கும் வாசனை
கவிதைகளின் கூடு அடைந்த வார்த்தைகள்
முகவரியால் உயிர்துளிர்க்கும் கடிதங்கள்
தன் திறப்பால் உலகை விரிக்கும் கடவுச் சொல்
சிலைகளில் படிந்த எண்ணை பிசுக்கு
பாறைகளில் உறங்கிக் கிடக்கும் சிற்பம்
கண்ணீரில் நொறுங்கிக் கிடக்கும் உப்பு
தூக்கம் பிறப்பிக்கும் கனவு
நீரின் உயிராய் படிந்த பாசி...

இப்படித்தானே மதுவாகினி
அகம் பிணைந்து கிடந்தோம்
புறம் அறியா காலத்திலும்...

நன்றி: உயிர் எழுத்து

No comments:

Post a Comment