Monday, February 20, 2012

பயணத் துணை

தேரியின் சிவந்த மண்ணில்
மரங்களும் பறவைகளும் பார்த்திருக்க பசியாறினோம்
மேல்தளம் இருந்தவர்கள்
ஒன்றிரண்டு படியேறியவர்கள் குறித்து
நம்பிக்கையை நதியாக்கினர்
முதல் படியில் இருப்பவனுக்கு தேவைப்படும் கவனத்தையும்
பிடித்துக்கொள்ள வேண்டிய கைப்பிடிச் சுவற்றின் ரகசியங்களையும்
அன்பால் செலுத்திக் கொண்டிருந்தனர்
அருகிருந்த நெல்லி
மெல்ல மெல்ல பெருக்கத் துவங்கியது
தன் துவர்ப்பை இழந்து விடாது
சற்றைக்குப் பின் மதுக்குடுவைகள் வந்தமர
அறை அன்பின் தேவாலயமானது
பல்படாது செய் நேர்த்தியோடு செயலாற்றுபவனென்றும்
இத்தனைபேர் இருக்க எனக்கென்னடாவென
ஆசுவாசப் பறவைகளை மிதக்கச் செய்தும்
இதேதான் பற்றிக்கொண்டாய்
விட்டுவிடாது தொடரென்றும்
வார்த்தைகள் குழைந்து குழைந்து
பூ முத்தங்களாக மிளிர்ந்து அடங்கியது
பயணிக்கிறேன்
மயில்தோகையின் வருடல்களோடும்
ஓயாது கூவிய சேவலின் இசையோடும்...

நன்றி: நவீனவிருட்சம்

No comments:

Post a Comment