Friday, February 26, 2016

ஞானப் பூங்கோதைக்காக ஒரு முத்தம்...


திரும்புதல். பயணத்திலிருந்து வீடு திரும்புதல் அல்ல. நினைவுகளில் மீண்டும் மீண்டும் விளைவிப்பின் நிகழ்விற்கு திரும்பிக்கொண்டே இருத்தல். வேலைக்காக, பொழுதுபோக்கிற்காக, செல்வதை மேய்ச்சல் நிலமாக்கி புறமனமாக கொள்ள, திரும்பிய இருப்பை அகமனமாக கொண்டால் திரும்புதலின் அனுபவத்தை முழுமையாக சுவிகரிக்க முடியும். நினைவில் நம்மை திரும்பச் செய்யும் வல்லமை படைப்புகளுக்கு உண்டு. பால்யம், காமம், துயரம், காலம் என திரும்பச் செய்யும் பட்டியல் நீண்டு கிடக்கிறது. திரும்புதல் என்பது மீண்டெழச் செய்யும் சாத்தியத்தை உருவாக்கும். தொடர்ந்து பயணித்தபடி இருக்க மீண்டெழுதல் அவசியமாகிறது. கண்டராதித்தனின் 'திருச்சாழல்' தொகுப்பும் திரும்புதல்களை நிகழ்த்தி மீண்டெழவும் செய்திடுகிறது.
----------------------
உண்மையாகவே தனித் தவிலடித்தபடி
நெடுங்சாலையில் நடக்கிறார்
டாரஸ் லாரியில் வந்த கடவுள்
நிறுத்தி
எறிக்கொள்கிறீர்களா எனக்கேட்டார்
அப்போது ஸ்ரீமான்
ஷண்முகசுந்தரத்திற்கு பெருமை பிடிபடவில்லை.
எனக்காகவும் கடவுள் வந்திருந்த சம்பவங்களை திரும்பச் செய்திட்டார் வித்வான் ஷண்முக சுந்தரம். நேர்ந்திட்ட அவமானங்களுக்கு திரும்புதல் நேரவிருக்கும் அவமானங்களிலிருந்து தப்பிவிக்கவே செய்யும்.
நினைவில் பால் மாற்றம் கொள்ளும் தருணங்கள் எப்பொழுதாவது வாய்ப்பதுண்டு. அவ்வாறாக மாற்றம் கொள்கையில் மாறும் பாலினத்திற்கேற்ற சுபாவங்களும் நம்மை தொற்றிக்கொள்வது ஆச்சரியமானதாக இருக்கிறது. அவ்வாறான தருணங்களில் சிருஷ்டிக்கப்படுபவை உன்னதமானதாகவே இருக்கிறது. கண்டராதித்தன் ஞானப் பூங்கோதையாக மாறுவதும், பின் ஞானப் பூங்கோதையாகவே வாழ்ந்திருப்பதும் கவிதைகளில் கண்டடைய முடிகிறது. அதுவும் திருச்சாழல் கவிதை எண்ணிக்கையற்று வாசித்த கவிதை. சாழேலோ பெண்களுக்கான விளையாட்டு. கேள்வியும் பதிலுமாக சிவபெருமானின் பெருமைகளை உரையாடுவது. சிவபெருமானை சமகாலத்தவனாக்கி அலுவலகத்தில் வேலைபார்க்கச்செய்து அவன் மீதான காதலில் தோழியோடு உரையாடுவதில் கிடைக்கும் ஞாயிறு நமக்கு இதுவரை கிடைக்காத ஞாயிறு. ஞாயிறுகள் சாழேலோ இசையோடும் கடந்துபோகும். இக்கவிதை உங்களை முத்தமிடச்செய்யும் கண்டர்.
தவிர நீ யாரிடமும் சொல்லாதே
பணியிடத்திள் உள்ளவன்தான்
என் வெளிர்நீல முன்றானையால் நெற்றியைத்
துடைப்பதுபோல் அவனைக் காண்பேன்
அதுவல்ல என்துயரம் நாளை ஞாயிறென்றால்
இன்றேயென் முன்றானை நூறுமுறை
நெற்றிக்குப் போவதுதான் என்னேடி
--------------------
திட்டமிட்டு எதுவும் உருவாவதில்லை. ஏதோவொரு மகத்தான தருணத்தில் நண்பனாவதும், எதிர்பாராது முளைவிடும் முரண்பாட்டால் மிகு வெக்கை கொண்டு எதிரியாவதும் நாம் அறியாமலேயே நிகழ்ந்துவிடுகிறது. கணித்துச் சொல்ல முடியாத மற்றொரு தருணத்தில் மீண்டும் நட்பாவதும் உண்டு. பருவமாற்றத்தில் உண்டாகும் சிறு சிறு அவஸ்தைபோல் எதிரி என்பதும் வந்து போவது. இப்படி வந்து போகும் செயலுக்காக பெரும் பிரயத்தனம் தேவையில்லை என்பதை என்றென்றைக்கும் சொல்வதாக படுகிறது 'நீண்டகால எதிரிகள்' கவிதை.
அம்மா ஓடிப்போனதை
அறியும் வயதுள்ள பிள்ளைகள்
திண்ணையிலமர்ந்தபடி
ஆள்நடமாட்டமில்லாத
தெருவை வெறித்து
வேடிக்கை பார்க்கிறார்கள்.
ஓடிப்போன அம்மாவை வேடிக்கையில் நகர்த்தி, புரனிபேசும் அப்பாவை சகித்து, தூய தமிழில் சினம் கொள்ளும் சங்கரலிங்கனாரின் குடி ரசித்து, வம்ச கீர்த்தியில் தன் வலிமிகு புகழ்பாடி, சுகந்த மலருக்காக போனவளை மீதமிருக்கும் திசையில் தொலைத்து, வானம் சென்று வளர்மதி ஆனவளின் அம்சம் ரசித்து, கழுக்குன்றின் திருக்கோலம் விவரித்து, ஆத்திரத்தில் அறிவிலியாக சினம்கொள்வதை காறி உமிழாது கண்ணீரின் வெப்பத்தில் உணரச்செய்யும் மகளின் கண்ணீரில் திரும்பினேன்.
நினைவில் வைக்கும் பட்டியல்களை அடுக்கி, காலமாற்றத்தின் காதலால் சலசலக்கும் சில்லிட்ட காற்றை சுகித்து, நினைவின் பிசகோடு ஏகாம்பரமாக எதிரொலித்து, பொரி உருண்டைக்கு மேலெழும் பாதாள பைரவியை தரிசித்து, பேரன்பின் பந்தை பரிசளிக்க உண்டான சிலிர்ப்பில் ஊர் கடந்தேன்.
யோக்கியதை குறித்த நையாண்டி குறிப்பை ரசித்து, மகுடம் சூட்டி கொண்டாடும் பிழையான வாழ்க்கைக்காக வெட்கித்து, எல்லா குடுவையிலும் நிரம்பிக்கொள்ள ஏதுவான பதத்தோடு இருப்பதைக் கூறி, துக்கம் கொள்ளும் சூழலுக்குத் திரும்பி, நாட்களைத் தள்ளி விளையாடும் சிறுமியிடம் ஞானமடைந்தேன்.
விதியைத்தொலைப்பது போல
வாழ்ந்துகொண்டிருக்கிறாள் நித்யா
அவளைச் சாந்தப்படுத்துவதற்காக
நாளையெனப்பிறக்கும் நாட்களையெல்லாம்
உச்சி முகர்ந்து முத்தமிட்டு அவள் வசிக்கும்
வீதி வழியாக அனுப்பி வைக்கிறேன்.
அந்த துக்கத்திலும் முல்லை மணம் கமழும்
அந்திகளோடு கண்துஞ்சும் இரவுகளை
எனக்காக அனுப்பி வைக்கிறாள்
எனக்கோ அந்த இரவுகளின் மீது லேசான கிறக்கம்.
தசையால் மட்டும் உருவாகும் காதலும் காமமும் இன்பம் எய்திட்டது போன்ற பாவனையை மட்டுமே கொடுத்திடும். இப் பாவனை இன்பம் எதையும் முழுமைகொள்ளச் செய்யாது. உள்ளொளி உணர்வில் கலந்து மேலெழும் காதலும் காமமுமே முழுமை கொள்ளச் செய்யும். சீதமண்டலம், கண்டராதித்தன் கவிதைகள் என முந்தைய இரண்டு தொகுப்புகளின் நீட்சியாகவே இத்தொகுப்பிலும் நித்யா கவிதை உணர்வின் தாளாத தகிப்புகளைக் கொண்டதாக இருக்கிறது.
மேலேறும் பாதைகளில் எல்லோருக்கும் தெரிந்தபடி இருப்பதை உரக்கப் பேசியபடி இருக்காமல் இடர்பாடுகளோடு சரிந்த பாதைகளில் இருக்கும் மானுடத்தின் மீதான பிரியத்தை என்றென்றைக்கும் வலியோடு வைத்திருக்கும் வரிகளை எங்கு வாசிக்க நேர்ந்தாலும் அது கண்டாதித்தனின் தனித்த மொழியை நினைவூட்டவேச் செய்யும்.
வெளியீடு
புது எழுத்து
2/205, அண்ணா நகர், காவேரிப்பட்டினம்-635112
கிருஷ்ணகிரி மாவட்டம்.
விலை-ரூ.70.
நன்றி - கணையாழி பிப்ரவரி 16

Wednesday, February 24, 2016

ஸ்ரீநிதியான கணங்கள்...


எல்லோரும் வெறித்து பார்த்தபடி இருக்க, ஆளாளுக்கு பாலை மாற்றி மாற்றி ஊற்றினர். எந்த பலனும் இல்லாது போயின. அந்நேரத்தில் தன் சைக்கிளின் பெல்லை அடித்தவாறு இறங்கிய தபால்காரர் வாசலிலிருந்து கத்தியபடி வந்தார். ஆத்தா உங்க பேரன் புறப்பட்டானாம் பொங்கலுக்கு வந்துவிடுவான் என்றபடி கடிதத்தை நீட்ட ஜிங்கென கிழவி எழுந்து ஒட்கார்ந்தது. அடேய் கிழவி உசுரு மிலிட்டிரிப்பேரன் கடிதாசியில் இருக்குவென உரக்கக் கூற எல்லோரும் சிரித்து அவரவர் வேலையை பார்க்க சென்று விட்டார்கள். கடிதம் உயிர் எனும் வார்த்தைகள் என்னுள் ஆழமாக பதிந்தது. கடிதம் உயிர்தான் என்பதை எனக்கு வந்த சில கடிதங்கள் உணர்த்தியபோது அதன் மேன்மை உணர்ந்தேன். கடிதம் எழுதும் சிறுவயது பழக்கம் தொடர்ந்து நிறைய்ய நண்பர்களுக்கு கடிதம் எழுதச்செய்தது. கவிதைகள் எழுதத் துவங்கி அது இதழ்களில் பிரசுரமாகத் துவங்கிய பின் நிறைய்ய கடிதங்கள் வர அவ்வளவு உற்சாகமும் பூரிப்புமாக இருக்கும். சிலரின் கையெழுத்துக்களை பார்த்துக்கொண்டே இருக்கத் தோன்றும். சில கடிதங்களைத் திரும்பத் திரும்ப எடுத்து வாசிப்பதும் இன்னும் தொடர்ந்தபடி இருப்பதை உணர்த்தியது யாசகனின் ''கடவுளின் நூறு முத்தம்'' எனும் கடிதங்களின் தொகுப்பு.
யாசகன் தன் மகளுக்காக எழுதுவதாக நினைத்து அவருக்கு அவரேவாகவும், அவருக்கும் நமக்குமாகவும், அவருக்கும் காலத்திற்குமாகவும், அவருக்கும் சூழலுக்குமாகவும் எழுதப்பட்ட கடிதங்களாகவே இருக்கிறது ''கடவுளின் நூறு முத்தம் '' தொகுப்பு. யாசகனின் மகளான ஸ்ரீநிதிக்கு இப்புத்தகம் பெரிய பொக்கிசமாக இருக்கக்கூடும். தன் அப்பாவின் காலம் குறித்து ஸ்ரீநிதி அறிய முற்பட்டால் அவரின் இயல்பு, அவர் எதிர்கொண்ட இன்னல்கள், சூழல் மாற்றம், நண்பர்கள் என விரிந்துகொண்டே போகும்.
அவரை கவிதை எழுதத் தூண்டிய சம்பவங்கள், அவருக்கு பிடித்த கவிதைகள், அவரை மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டிய கவிதைகள் என இத்தொகுப்பு கடிதங்களின் தொகுப்பாகவும் அவரின் கவிதைத் தொகுப்பாகவும் உள்ளது.
யாசகனின் சொந்த நிலமான வேலூரின் வெப்பத்தை தொகுப்பில் பத்திரமாக அடைகாத்து வைத்துள்ளார். அவர் செல்லும் வேறு நிலங்களில் இருக்கும் குளிர்ச்சியை அனுபவிக்கும் போதெல்லாம் அவர் ஊரின் வெப்பம் பெருமூச்சாக வெளிப்பட்டவாறே இருக்கிறது. அவரின் ஆசையாக மட்டும் இல்லாது இச்சூழல் என் மக்களுக்கும் இல்லையே என அவரின் அக்கறை நமக்கு அவர்மீதான மதிப்பை ஏற்றுகிறது.
தான் வாசித்த , நேசித்த மனிதர்கள் குறித்த கடிதங்களில் வழியும் உணர்வெழுச்சி நமக்கான மனிதர்களின் நெகிழ்சியாகவும் உள்ளது. இவர் வாசித்த புத்தகங்கள் குறித்த கடிதங்கள் ஏனோ நமக்காக எழுதப்பட்டது போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றன. நாம் அப்புத்தகத்தை வாசித்த சூழல், எதிர்கொண்ட விதம், காண்போரிடம் அது குறித்து பேசித்திரிந்த நாட்கள் என நமக்கான வாழ்வையும் இக்கடிதங்கள் பத்திரமாக வைத்திருக்கின்றன. சில புத்தகங்களை திரும்பவும் மறுவாசிப்பு செய்யத் தூண்டுகின்றன. 'ஜன்னலில் ஒரு சிறுமி', மற்றம் கமலாலயன் மெழிபெயர்த்த மேரி மெக்லியோட் பெத்யூனின் ''படித்ததும், வாழ்ந்ததும்'' என இவ்விரு புத்தகத்தை மறுவாசிப்பு செய்தேன்.
ஆசை கொள்ளுதல் என்றும் இறுதியற்றதல்ல, மாற்றங்களை உடையது. ஓர் ஆசை நிறைவுகொள்ள மற்றொன்று துளிர்க்கும். ஜன்னலில் ஒரு சிறுமி வாசித்தபோது அப்படியானதொரு பள்ளியின் தொடர்பிலிருக்க ஆசை எழுந்தது. டோட்டோசன் என்றென்றைக்கும் நினைவில் இருக்கும் பெயராக இருக்கிறது. பள்ளி செல்லும் எல்லா குழந்தைகளையும் டோட்டோசன்னாக இருக்க வேண்டும் என்ற ஆசையுண்டு. அரசியலும் ஆசைமிகுந்தோறும் அதன் தடை கயிறுகளை சுழற்றியவாறு இருக்க அரிதினும் அரிதாகத்தான் டோட்டோசன்கள் இருப்பார்கள். எல்லாவற்றையும் மீறி ஒருவித சந்தோசம் ஏற்படத்தான் செய்கிறது. இந்த வாசிப்பு பழக்கம் இருப்பதால்தானே டோட்டோசன்னை அறியக் கண்டோம். இல்லையெனில் வேறு எங்கே அறிந்திருக்க போகிறோம். யாசகனின் இக்கடிதங்களால் டோட்டோசன்னின் விரல் பற்றிக் கிடக்க முடிந்தது.
'தன்'னில் உழன்று வாழும் வாழ்வில் எது எச்சியிருக்கப்போகிறது. தன் குடும்பத்திற்காக படித்து, வேலைபார்த்து, சொத்துசேர்த்து, தன் குடும்பத்தாரின் மகிழ்விற்காக மட்டும் அரும்பாடுபடும் பொழப்பை கேலியாக்குகிறார் மேரி. தன் பள்ளியில் படித்து வெளியேறுபவர்களை சமூக சேவை செய்யும் மனநிலையோடு வெளியேற்றுவது அசாத்தியம்தான். பள்ளிக்காக அவர் படும் பாடுகள் சித்திரங்களாக ஓடின.
எட்டுவயதிலிருக்கும் ஸ்ரீநிதிக்கு இக்கடிதங்கள் இப்பொழுது வாசிப்பதற்கான கடிதங்கள் அல்ல. அவருக்கான காலத்தில் இதை வாசிக்கவோ அல்லது கடந்துபோகவோ வாய்ப்புண்டு.ஆர்வத்தில் அவர் வாசிக்கத் துவங்கினால் பெரும் துணையாக இக்கடிதங்கள் இருக்கும். ஸ்ரீநிதி இக்கடிதங்களை தவிர்த்துவிடாது வாசிக்க வேண்டும் என்றே மனம் விரும்புகிறது.
நன்றி - புத்தகம் பேசுது

Wednesday, December 30, 2015

வெள்ளிக்கிழமை சுவரின் பளிச்சிடல்கள்...


புதுப்பட போஸ்டரை தாங்கி நிற்கும் வெள்ளிக்கிழமை சுவர்போல் பளிச்சிடுகிறது மனம். அப்படியானதொரு வல்லமையை கொண்டிருக்கிறது மொழி. அதுவும் கவிதைகளில் பல சித்துகளைச் செய்துடுகிறது. சொல்லப்பட்ட விதம், முடிப்பு, துவக்கம், எடுத்துக்கொண்ட பாடு பொருள் என ஏதோவொன்றில் தன் மாயத்தை வாசிப்பவனுக்கு கடத்திடுகிறது விரல் படும் தேன் மனதை இனிக்கச் செய்திடுவதுபோல்.  'அழகான ஆறு என்றான் சித்தார்த்தன்' தொகுப்பில் காலதச்சனும் வெள்ளிக்கிழமை சுவர்போல் பளிச்சிட செய்திடுகிறார் அவரின் மொழியால்.

விடுமுறை நாட்களின் நிகழ்வுகளை பட்டியலிட்டு, பத்துநிமிடம் மிஸ் என கெஞ்சும் சரஸ்வதியை ஆட்டோவில் பயணிக்கச் செய்து, சுயம் அப்பாவின் இறப்பை மறக்கச் செய்யும் எனும் உண்மை கூறி, ஆம்புலன்ஸ் அலாரத்தை இசையாக்கி ரசிக்கப்படும் இடங்களைக் கூறி, பூங்காக்களும் காத்திருக்கும் ஏர்போன் மாட்டிய தேவதைகளை மனதில் ஓடவைத்து, ஒரு ஆண்டின் 365 திடுக்கிடலை நாமும் உணரச் செய்திடுகிறார்.
எழுத்து ஒருவரின் சுபாவத்தை வெளிக்காட்டிவிடும். காலதச்சனின் மிருதுவான சுபாவத்தை அவரின் வரிகளிலிருந்து கண்டடைய முடிகிறது.

நெளிச்சிரிப்பில் பின்தொடரச் செய்து, தவறவிடும் கண்ணாடிக் குவளையின் உடையும் சப்த இடைவெளியை உதடுகளாக காட்சிபடுத்தி,  மதுமிதாவிடம் இருந்து பச்சைக்கிளியின் பரிசளிப்பை எதிர்பார்த்து தன்னை பிளந்து உண்ணக் கொடுக்கும் தயார் நிலையில் இருப்பவனுக்கு கருங்கிளியும், முகத் திருப்பலுமே கிடைக்க மூச்சு முட்டக் கிடந்து, அந்தி நடையில் எள்ளுப் பூக்களிடம் மனம் கொடுத்து, அம்மாவின் நினைவு, திருடிய கைக்குட்டை, மறைத்த மதுப்புட்டி, மறந்தபோன ஸ்னாக்ஸ், பிச்சைக்காரனின் ஏந்திய கையென மாறும் நினைவு அடுக்குகளின் காட்சியோடு நடை முடித்திருப்பது நம்மின் நடை நினைவுகளையும் காட்சிபடுத்தின கவிதைகள்.

எவ்விதமான மெனக்கிடலுமற்று இயல்பாகவே சொல்லப்படும் காட்சியில்  நமை லயித்துவிடச் செய்திடுகிறார் காலதச்சன்.

பசும்புல்லின் நுனியில் பாறைகளை இறக்கி வைத்து, வண்ணத்துப்பூச்சியின் மேலமர்ந்து சவாரி செய்து, நிசப்தம் உள்ளவரை நறுமணம் வாழும் எனும் உண்மையை கண்டடைந்து சுஹாசினியின் புன்னகையில் ஓய்வுகொள்கிறார்.

வேறுவேறான பார்வைகளை கண்டடைய தொடர் பயணம்  அவசியமாகப்படுகிறது. காலதச்சனும் தன் நெடிய பயணத்தில் கண்டடைந்த பார்வைகளை கவிதைகளில் நமக்கு கடத்த முற்பட்டுள்ளார்.

எதுவுமற்ற வீட்டில் எல்லாமும் இருக்கம். எல்லாமும் இருக்க ஏன் பூட்டிச் செல்ல வேண்டுமெனும் கேள்வியோடு, பால்யத்தின் மரக்குதிரையில் பயணித்து, அழகான ஆறு என்றான்/சித்தார்த்தன்/தோணிக்காரன்/தலையசைத்தானெனும் சமூக உண்மையை கண்டடைந்து, என்றுமே எனக்கு வாழக்கிடைக்காத உங்களின் சௌகரிக வாழ்வை கொஞ்சம் நானும் வாழ்ந்து பார்க்கிறேன் என அனுமதி கோரி, நீல வயலையும் பச்சை வானையும் தொடும் நாரையை ரசித்து, குழந்தைகளின் கேள்விகளுக்கு குட்டுகளை பதிலாக்குபவர்களை பரிகாசப்படுத்தி, பீங்கான் லில்லி பூக்கள் மணக்கும் தருணம் அறிந்து, தூக்கிட்டுக் கொண்டவனின் முந்தைய நாட்களின் கருணையை வியந்து, உறக்கத்தில் நடப்பவனின் வலியை நகைமொழியோடு பதியவைத்து, பெயரற்று எண்களாக மாறிக்கொண்டிருக்கும் அபத்தத்தை உணர்த்திடுகிறார்.

சினிமா மொழியும் காலதச்சனுக்கு பரிச்சயம் என்பதால் ரசிக்கத்தக்க நிறைய்ய காட்சியமைப்புகளை தொகுப்பில் நாம் கண்டடையச் செய்துள்ளார்.

வெளியீடு
மலைகள்
119, முதல்மாடி, கடலூர் மெயின் ரோடு
அம்மாப்பேட்டை, சேலம்-636003
விலை-80

நன்றி-மணல் வீடு

Monday, November 16, 2015

கசாப்பு கடையிலிருந்து மீண்ட ஆட்டுக்குட்டிகள்

ஆட்டுக்குட்டிகள் ஆண் இல்லா வீட்டின் அதிசயங்களை அறிந்தவை. எதையாவது சாக்கிட்டு வெளியேறியபடியே இருப்பவன் அறிந்திருக்க வாய்ப்பில்லை. வீட்டில் பெண்களுக்கும் குழந்தைகளுக்குமான ஆட்டின் உறவை. தன் துள்ளலில் காதலை வெளிப்படுத்தும் ஆட்டுக்குட்டிகளுக்கு முத்தப் பரிசுகள் கிடைத்தபடியே இருக்கும். குழந்தைகளைக் போல் மென்மையானவை. பெண்களை மகிழ்விக்கும் நுனுக்கங்களை கற்றவை. இயேசுவிற்கு ஆதனால்தான் ஆட்டுக்குட்டிகளின் மீது அத்தனை பிரியம் போலும். எஸ்.சுதந்திரிவல்லிக்கும் ஆட்டுக்குட்டிகள் மீது வெகுவான பிரியம் போலும்.தன் அன்பை சமர்ப்பனத்தில் வெளிப்படுத்தியுள்ளார். தொகுப்பில் நாய், ஆட்டுக்குட்டி, பூனை, மைக்குட்டி(கம்பளிப்பூச்சி) என வீட்டிலிருக்கும் சக ஜீவிகள் குறித்தும் கவனப்படுத்தியுள்ளார்.

ஆடு, பூனை, நாய் மூன்றும்  வீட்டில் இருக்கம் பெண்களுக்கு நெருங்கிய தோழமைகளாக இருக்கிறது. அன்பையும் துயரையும் அவைகளுடனான உரையாடிலில்தான் பகிர்வு கொள்கிறார்கள். பெண்ணின் ரகசியம் காக்கும்  ஜீவிகளாகவும் அவைகள் இருக்கின்றன.
குலதெய்வங்களுக்கு நேர்த்திக் கடனுக்காக ஆடுகளை, கோழிகளை பலிகொடுப்பதே வழக்கம். அவைகளின் சம்மதத்தோடுதான் பலியிடுகிறோமெனும் பாவனையில் நம்பிக் கிடக்கிறோம். நீர் தெளிக்க துள்ளுவது சம்மதத்தின் அறிகுறியாக மாற்றியது மனிதனின் தந்திரம். இத்தந்திரம் பெண்கள் மீதும் இச் சமூகம் தொடர்ந்து ஏற்றிவைத்துள்ளது. ஏதேனும் ஒரு தந்திரத்தை கையாண்டு அவர்களின் விருப்பங்களை நீர் தெளித்து துளுத்ததாக கணக்கிட்டு அவர்கள் விரும்பாமலே வேறு இல்லங்களுக்கு பலிகொடுத்து தன் கடமையை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். பெண்களுக்கும் ஆட்டுக்குட்டிகளுக்குமான பந்தத்தின் கன்னி இதுவாகக்கூட இருக்கக்கூடும். பிடித்த பெயரை வைத்து பிடித்த மாதிரி அழைத்து அவைகளோடு உறவாடி இருப்பவர்களுக்கு அவர்களின் உலகம் குறித்த புரிதல் இருப்பதால் சுதந்திரவல்லியின் கவிதைகளை நெருக்கமாக உணர முடிகிறது.

நாம் அக்கறையோடு விரும்பிப் பார்க்கும் தொழிலாக இருந்தாலும் சுமத்தப்படும் அழுத்தத்தின் காரணமாக நமக்கு அதன் மீதொரு வெறுப்பு உண்டாவது இயல்பு. ஆசிரியராக இருப்பதைவிடவும் ஆடு மேய்ப்பது ஆத்ம திருப்தி அளிக்கிறதெனும் சுதந்திரவல்லியின் வரிகளில் நம் பனியின் அழுத்தத்தையும் கழற்றி வைக்க முடிகிறது.

தொகுப்பிலிருக்கும் 'குட்டி நாய்' கவிதையில் சங்கலியால் கட்டப்பட்டிருக்கும் குட்டி நயை இஷ்டம்போல் எல்லா நாய்களும் புணர்ந்து போகும், பலவீனங்களை தமக்கு சாதகமாக எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொள்ளும் பலமானவர்களின் அறம் குறித்த கேலியாகவும் அக்கவிதையை உணர முடிகிறது.பப்பியோடு நமக்கும் ஒரு பந்தத்தை ஏற்படுத்துகிறது பப்பி கவிதை.

குறைகள் குறித்த புகார்பட்டியலோடு வாழ்வு இயல்பாக நகர அருகாமை பிசாசாகவும், தொலைவின் நீளம் இஷ்ட தேவதையாகவும் தோற்றம் கொள்ள, வீசிய மாங்காய் உண்ட முதல் காதலின் நினைவுகளோடு, மின்மினி வண்ணத்துப்பூச்சி தட்டான்கள் சிலந்தி ஈசலின் வண்ணங்களோடு காத்திருக்கம் புணர்ச்சியின் வண்ணங்களை வெளிக்காட்டி ஆசைகளை நிறைவேற்றிப் பார்த்த புகை சூழ்ந்த இருளின் இன்பம் சுகித்து, தன்னை திருடுபவனுக்காக காத்திருந்த நாட்களின் நினைவுகளை கவிதைகள் காட்சியாக்கும் அக உலகில் நாமும் நம்மை கண்டடைய முடிகிறது.

சதா சந்தேகத்தோடும், அவநம்பிக்கையோடும் இருக்கும் ஆண்கள் மீது ஒற்றை செருப்பை வீசியதுபோல துவங்கிய 'ஒற்றை விழி' கவிதை துவங்கி, பக்கத்து வீட்டு சண்டை பார்க்க காத்திருக்கும் ஜன்னல் அறைந்து, அதிகாரிகளின் மோப்பக் கண்களை குருடாக்கி, ஞானி ஞானியாக இருக்க, சூன்யம் சூன்யமாகவே இருக்கட்டுமே அதனால் என்னவாகிடப்போகிறதென சலிப்படைந்து, நிஜம் இழக்க சாயல்களாக வாழும் அவலம் கூறி, கொல்லும் போதையின் வன்மத்தால் வெளிப்படும் வார்த்தைகள் வலி உணர்த்தி, விரல் நகங்கள் கத்திகளாக மாறும் காலத்திற்காக காத்திருக்கம் நிலை கூறி, குழந்தைகளையும் கிழிக்கும் போதை முட்களின் கூர்மையை காட்சியாக்கி, இசக்கியை பொறாமை கொள்ளச் செய்து பேய் பாதையில் பயணித்து பட்டனம் செல்ல அங்கும் விருப்பம்போல் வாழ இயலாது போக ரயிலின் நினைவுகளோடு கிராமம் வந்து சேர்ந்ததாக ஒரு கதையை நாம் கண்டடைய முடிகிறது தொகுப்பில்.

'முதிர் கன்னி' கவிதை கடவுளை காதலனாக்கி பாசுரம் பாடிய ஆண்டாளை போற்றும் இச் சமூகம் தன் கண்ணனுக்காக காத்திருக்கும் முதிர்கன்னியை ஏலனப்படுத்தும் அவலத்தை நினைவூட்டுகிறது.

எஸ்.சுதந்திரவல்லியின் பட்டணத்து ரயிலை மட்டும் கிராமத்தை நோக்கிக் கொண்டு வந்து சேர்த்தாள் தொகுப்பு நம் உடன் வாழும் பெண்களை மேலும் புரிந்துகொள்ளவும் உதவுகிறது.

வெளியீடு
சிலேட் பதிப்பகம்
விலை-ரூ.50

நன்றி - படிகம்