Thursday, February 28, 2013

உயிர்ப்பு

நேற்றைய மழை முழுதையும்
சுவடற்று குடித்தேன்
உடல் ஊறிய வெப்பத்தை
வாசனையாக்கி வெளியேற்றினேன்
என்னுள் தவிப்பாய் படரும்
வேர்களுக்கு முலை காட்டினேன்
ஆற்றின் மணல் பரப்பை
சிறிது ஈரமாக்கினேன்
குளம் குட்டைகளில்
கொஞ்சமாய் தேக்கி காட்சிப்படுத்தினேன்
உயிர் நீரை உறிஞ்ச
உடலெங்கும் இட்ட துளைகளுக்கும்
நீர் வார்த்தேன்
பாறைகளில் ஈரப்பசை ஒட்டினேன்
பழுப்பான என் குழந்தைகளை
பச்சையாக்கினேன்
இயல்பாகிப் போனது
மழை வரும் நாளில் நான்
மண்ணின் உடலாகிக் கொண்டிருப்பது.

நன்றி: வெயில்நதி

Friday, February 22, 2013

எனது கடல்

முதுகை கிழித்தது நத்தை
பிரதேசம் கடலாக விரிந்தது
கரை ஒதுங்கி அதிசயித்தேன்
என் வாசம் நுகர்ந்த அலை
அடுத்தடுத்து நெருங்க
கடலடைந்த நாட்கள் காட்சியானது
சிறார்கள் அலைகளைத் தாண்டி ஜெயித்தனர்
ஒருவன் மூதாதையரை
பிண்டமாக கரைத்துக்கொண்டிருந்தான்
ஈர யுவதிகள் சங்கு சேமித்தபடி
கடலை உறிஞ்சியபடி தனித்திருந்தவன்
அருகழைத்து கையளித்தான்
பிடி உப்பின் வெப்பத்தில்
கடல் காய்ந்தது.

Friday, February 15, 2013

காகமாதல்

எல்லோர் மீதும் என்ன கோபம்
தினமும் இந்த காக்கா
கா-விட்டுச் செல்கிறது
கேட்டவனின் தலை கோதி
முத்தத்தை பதிலாக்கினேன்
காத தூரம் நகர்ந்து
காக்காவானேன்...

Thursday, January 31, 2013

அவ்வப்போது உதிரியாகப் படித்திருக்கிறென். ஆனால், தொகுப்பாக ந.பெரியசாமியின் கவிதைகளைப் படிக்கும்போது, உயரத்திலிருந்து தவறிவிழப்போகும் குழந்தையைப்போல நமது கவனத்தை ஈர்க்கிறது.
மனதோடு நேரடியாக எந்த இடைஞ்சலுமின்றி பேசுகின்றன இவருடைய கவிதைகள்.
உணர்வின் கொந்தளிப்பை தணித்து, அதை உருமாற்றி நிதானமாக மனதோடு பேசுகின்றன.
அது நம் மனதோடு பேசும் முறைகளினால்,
யாராலும் உதறிவிட்டுக் கடந்து செல்ல முடியாதென்ற ஒரு கட்டாயத்தை உருவாக்கி விடுகிறது.

அக்கறை, அன்பு, கருணை போன்ற வற்றுக்கு நிதானமான உணர்வுநிலையுடன்கூடிய இடம் வாழ்வில் அனைத்து தருணங்களுக்கும் அவசியமானது என்ற செய்தியை மிக அழகாக புனைந்து காட்டியிருக்கின்றன.
ந.பெரியசாமியின் ”மதுவாகினி”


nantri: Riyas Qurana