Wednesday, July 26, 2017

விநோதினி

அண்மையில் #குட்டி_மீன்கள்_நெளிந்தோடும்_நீலவானம்எனும் கவிதைத் தொகுப்பு வாசிக்கக் கிடைத்தது. தொகுப்பு முழுவதும் மழலைமையை இரசித்துச் செதுக்கிய கவிதைகள்.
"துணை வானம்" எனும் தலைப்பிலமைந்த கவிதையில் யானைக்கு யானை துணை, குருவிக்குக் குருவி துணை என்பது போன்ற வாழ்வியல் எதார்த்தங்களைக் கவனிக்குத் தொடங்கும் குழந்தை, வானத்துக்குத் துணையேதென்று வெற்றுத் தாளில் வானமொன்றை வரைந்து துணைக்கனுப்பி வைக்கிறது.
"பாம்புகள் பாம்புகளாயின" எனும் தலைப்பிலமைந்த கவிதையில், கார்டூன் படங்களில் பொம்மைகளை உயிர்ப்பித்து விளையாடிவிட்டு மீண்டும் பொம்மையாக்கி விடுதல் போல, தென்னங்கீற்றுகளில் செய்த பாம்புகளை உயிர்ப்பித்திருக்கிறார்.
"புதைந்த குரல்களி"ன் கீழே, குழந்தைகளின் நுண்ணுணர்தல் திறனைச் சரியாகப் பொருத்திக் காட்டியிருக்கிறார்.
வெற்றுத் தாளை வனமாக்கியவன்
*******************************
முயற்சியால் வெற்றி கொண்டான்
மேகங்கள் உருவாகியிருந்தன
வேடர்களுக்குச் சிக்காத
பறவைகளை மிதக்கச் செய்தான்
புற்களை உருவாக்கி
மரங்களை வளர்த்து
வீடொன்றைக் கட்டினான்
வெளிச்சம் வேண்டி
நிலவைப் பிறப்பித்தான்
நிறைவுகொள்ள
வேறு தாளை எடுத்து
நதியை உருவாக்கத் துவங்கினான்
சனியன்
சதா கிறுக்கிக்கிட்டே இருக்கு
அப்பாவின் குரல் கேட்டு அதிர்ந்தான்
ஒரு நதி
துவக்கத்திலேயே வறண்டது..
*************************
இக்கவிதையில் வெளிச்சத்திற்கென நிலவைப் பிறப்பிப்பதாகக் கூறியுள்ளார். குழந்தைகளுக்கு மட்டுமல்ல, கவிஞருக்கும் நல்ல கருணையுள்ள மனம் தான் வாய்க்கப்பட்டிருக்கிறது. நானாகவிருந்தால், சந்தேகமே வேண்டாம் கண்டிப்பாகச் சூரியனைத் தான் வரைந்திருப்பேன். தவிர, குழந்தைகளின் கற்பனைத் திறனைப் பெற்றோர்கள் வளர்க்க வேண்டுமேயன்றித் தடை போடுதல் தவறென்ற பொதுநல நோக்கும் உள்ளது.
இவை மட்டுமல்ல, இது போன்று நிறையக் கவிதைகள் இருக்கின்றன. தொகுப்பில் பெரும்பான்மையாகச் செய்தான், வரைந்தான் என்பது போன்று சுட்டியதிலிருந்து கவிதைகளுக்குப் பின்னணி இசைப்பது ஒரு அவன் தான் என்பதும் தெளிவாகிறது.
வாழ்த்துகள் அண்ணா.

பாலா கருப்பசாமி

பரலோக ராஜ்ஜியத்தில் நுழைய நீங்கள் குழந்தையாய் மாறவேண்டும் என்று யேசு சொன்னார். ஜே.கே. அறிந்ததினின்றும் விடுதலையென்றார். இரண்டும் ஒன்றுதான். இருப்பதிலேயே கடினமானது எளிமையைக் கண்டடைவதுதான். காற்றில் நடனமிடும் இலையை பற்றும்போது நடனம் மட்டும் சிக்குவதில்லை என்கிறார் தேவதச்சன். மழை இலைமீது தாளமிடுகிறது. இலை என்ன செய்கிறது எனக் கேட்கிறார் நகுலன். இரண்டும் ஒன்றேதான். இலையா காற்றா மழையா எனப் பிரித்தறியமுடியாதபடி அது நிகழ்கிறது. அந்த நிகழ்வைப் பிடிப்பதுதான் கவிஞனின் சவால்.
ந. பெரியசாமியின் குட்டி மீன்கள் நெளிந்தோடும் நீலவானம் குழந்தைகளின் உலகைத் தொடும் ஒரு முயற்சி. குழந்தைகள் குறித்தான கவிதைகளில் எழுதுபவர் யார் என்பது பெரிய கேள்வியாய் வந்து நிற்கிறது. எழுதுபவன் மறைந்துபோய், அந்த உலகத்தோடு கரையும் இடங்களில் மட்டுமே அது கவிதையாக முடியும். இந்தத் தொகுப்பில் 34 கவிதைகள் உள்ளன. இதில் நான்கு கவிதைகள் மட்டுமே சிறப்பாக வெளிப்பட்டிருக்கின்றன. கவிதை நெகிழ்ந்து குழந்தைகளின் உலகைத்தொடும் அனுபவம் இதில் கைகூடியிருக்கிறது. இந்த எண்ணிக்கையை நான் ஒரு குறையாகப் பார்க்கவில்லை. குழந்தைகள் குறித்தான கவிதைகள் மிகச் சிரமமானவை.
மழையின் பசியாற்றியவர்கள்
மழையின் பசியாற்றினோம்
ஆவல் பீறிடக் கூறினேன்
நட்சத்திரங்களாகக் கூரையில் மின்னும்
துளிகளிடமிருந்து மீண்டு.
பரிகாசமாகச் சிரித்தவனின்
கரம்பற்றி அழைத்துச் சென்றேன்
என் துளிர்த்த காலத்திற்கு.
உத்தி பிரித்து விளையாடிய காலையில்
சிறுசிறு தூறல்களும் உடனாட
மழைக்குப் பசிக்குமென
கொட்டாங்குச்சியில் தட்டி வைத்தோம்
சுடச்சுட இட்லிகளை.
கரைத்து விழுங்கி தெம்பாய்
ஊரைச் சுத்தம் செய்தோடியது
மழை.
அதேபோல், எளியவர் என் கடவுள் என்ற கவிதையையும் குறிப்பிடவேண்டும். முழங்காலளவே இருக்கும் மகளைக் குளிப்பாட்டும் ஒவ்வொரு நாளும் ஒரு கோவில் செப்புச்சிலையை, தாய் தெய்வத்தைத் தொடுவதாகவே ஒரு உணர்வை அடைவேன். பாதங்களின் மேல் சோப்போ மஞ்சளோ போடும்போது சமயங்களில் கண்ணீர்கூட வந்துவிடும். இத்தகு உணர்வை இந்தக்கவிதை அளித்தது 'வடை தூக்கும் காக்கைக் கதையில்/உறக்கம் கொள்ளும்/என் கடவுள் எளியவர். / நெற்றியில் பூசும் திருநீறுக்கே/ மலையேற்றம் கொள்ளும் / என் குடிசாமி போல"
வாஞ்சையின் கடும் ஈரம், புதைந்த குரல்கள் ஆகிய இரண்டு கவிதைகளும்கூட முக்கியமானவை. ந. பெரியசாமிக்கு அன்பும் வாழ்த்துக்களும்.

அ. ராமசாமி

அ. ராமசாமி
குழந்தைகள் குளியல்போடும் மழையின் தோட்டம்.
========================================
சொல்வோருக்கும் கேட்போருக்குமிடையே உருவான - உருவாகக்கூடிய வாழ்வின் சம்பவங்கள், கவிதையின் சம்பவங்களாதலே பெரும்பான்மையான கவிதைகளின் வெளிப்பாடு. நிகழ்காலக் கவிதைகள் உருவானதை முன் வைப்பதைவிட, உருவாகக் கூடியதைப் பற்றிய நினைப்புகளையே அதிகம் எழுதிக்காட்டுகின்றன. அந்தவகையில் அவை எதிர்காலக் கவிதைகள்.
எல்லாவகையான கவிதைகளிலும் அழைப்பின் வழியாகவே கவிதைச் செயல் நிகழ்கிறது. அந்த அழைப்பு உருவாக்கும் ரகசியத்திறப்பு கவிதையின் வாசிப்புத் தளத்தை உருவாக்கக்கூடியது. இந்தத் தன்னிலை இப்படியான தன்னிலைகளையே அழைக்கும் என்ற தேய்வழக்கில் வெளிப்படும் காதல் கவிதைகளும் புரட்சிக் கவிதைகளும் பல நேரங்களில் பாதிக் கிணறைத் தாண்டுவதில்லை.
அழைக்கும் தன்னிலை தனது இருப்பையும் அடையாளத்தையும் மறைத்துக்கொண்டு உச்சரிக்கும் சொல்திரட்டின்வழியாக வரையும் சித்திரங்கள் ஒருதடவைக்கும் கூடுதலாகவே வாசிக்கச் செய்யும். அழைக்கப்பட்ட தன்னிலையின் மீதான இருண்மை கவிதையின் நிகழ்வை இருண்மையாக்கிக் குழைத்துத் தீட்டப்படும் அடுக்கடுக்கான வண்ணச்சேர்க்கையாக நகரும்.
ந. பெரியசாமியின் குட்டி மீன்கள் நெளிந்தோடும் நீலவானம் தொகுப்பில் இருக்கும் கவிதைகள் அழைக்கும் தன்னிலைக்கும் அழைக்கப்படும் முன்னிலைக்குமிடையேயான சம்பவங்களாக இல்லாமல் மூன்றாவதொன்றை முன்வைக்கும் - வரைந்துகாட்டும் சொற்கூட்டங்களாக இருக்கின்றன. வெளிப்படையான கருப்பொருளோடு- பின்னணிக்காட்சிகளோடு பலவித உணர்ச்சிகளைத் தேக்கிவைத்திருக்கும் குழந்தைகளை - குழந்தைமைத்தனங்களை எழுதிக்காட்டும் கவிதைகளைத் தந்துள்ளார் .மழை, வானம், தோட்டம், காற்று என வெளிப்படையாகத் தெரியும் பரப்பைக் கவிதை விரிப்பதால் இருண்மை குறைந்து எளிமையின் அருகில் அழைத்துச் செல்கின்றன. குழந்தைகளைப் பற்றிய கவிதைத் தொகுப்பாக வந்திருக்கும் ந.பெரியசாமியின் தொகுப்பிலிருந்து ஒரு கவிதைமட்டும் இங்கே.
=============================================
அதன் தலைப்பு: வெளியே மழை பெய்கிறது
----------------------------------------------
கொசகொசவெனக் கட்டடங்கள் வரைந்து
சிறுசிறு புள்ளிகளை அடைத்து
பூச்சிகளின் வீடென்றாள்
கோடுகளை அடுக்கி
குட்டிகுட்டியாய் பொந்து வைத்து
எலி வீடென்றாள்
பெரிதாய் சதுரமிட்டு
தடுப்புகளில் அடுக்கி
பொம்மை வீடென்றாள்.
உயரமாக மரம் வளர்த்து
கூடொன்றை நெய்து
குருவி வீடொன்றாள்.
வேகமாக ஓடியவளை
தொடர்ந்து நகர்ந்தன.
வெளியே
மழை பெய்தது.

மீன்கள் பறக்கும் வானம்

மீன்கள் பறக்கும் வானம்

- ந.பெரியசாமியின் குட்டி மீன்கள் நெளிந்தோடும் நீலவானம் கவிதைத் தொகுப்பை முன்வைத்து

( நான்காவது கோணம் - ஏப்ரல் மாத இதழில் வெளியானது )




கவிதை மனநிலையின் மைய இழைகளை எப்போதும் சில கண்ணிகள் இணைத்தபடியே இருக்கும். அந்தக் கண்ணிகளின் வடிவங்கள் ஒவ்வொரு காலத்திலும் மாறிக்கொண்டே இருப்பன. நம் காலத்தில் அது ஒரு குழந்தையாகவும் நிற்கிறது.

பொதுவாகவே நாம் நம் குழந்தைகளைக் குழந்தைகளாகவே பார்ப்பதில்லை. நம் கனவுகளின் ஒட்டுமொத்த உருவமாக, நமது எதிர்காலத்துக்கான முதலீடாக, உற்பத்திக்காரர்களாக, நமது கட்டளைகளுக்குக் கீழ் படிந்து நடக்கும் நம் சேவகர்களாக, பிராய்லர் கோழிகளாக என பல்வேறு வடிவங்களில் அவர்களைக் காணுகிறோம்.

கவிஞர் ந.பெரியசாமியின் குட்டி மீன்கள் நெளிந்தோடும் நீலவானம் கவிதைத் தொகுப்பு குழந்தைகளைக் குழந்தைகளாகக் கண்ட கவிதைகள். குழந்தைகளின் அழகியல் தருணங்களைப் பதிவு செய்த கவிதைகள் நிறைந்த ஒரு தொகுப்பு.

குழந்தைகளையும் அவர்களின் குழந்தைமையையும் இழக்கத் துவங்கும் பருவம் ஒன்றுண்டு. அது அவர்கள் பள்ளிக்குச் செல்லும் பருவம். அரசுப்பள்ளிகளில் கூட பெரிய ஆபத்தில்லை. அங்கெல்லாம் இன்னும் ஓட்டாங்கரம் , கபடி, கோ கோ, நொண்டி என இணைந்து விளையாடுகிறார்கள். காக்காக் கடி கடித்து ஒரே மாங்காயைப் பகிர்ந்துண்ணுகிறார்கள்.. ஆனால் இந்தத் தனியார் பள்ளி மாணவர்கள் அவ்வளவு பாவப்பட்டவர்கள். ஆண்டொன்று ஆவதற்குள் அவர்களுக்கான கட்டுப்பாடுகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன.

பள்ளி வளாகத்துக்குள் ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும், தின்பண்டங்களையும் உணவையும் யாரிடமும் பகிராமல் கீழே மேலே சிந்தாமல் உண்ண வேண்டும், விளையாட்டெல்லாம் வாரத்துக்கு ஒரு நாள் ஒரு மணி நேரம் அதுவும் கணினி முன் அல்லது அறைச்சுவர்களுக்குள் என படிப்படியாக சிறகுகளைக் கத்தரித்து நடக்கவும் ஓடவும் மட்டுமே பழக்கத் தொடங்கிவிடுகிறார்கள் பறக்கத் தெரிந்த பறவைகளை.

இப்படி பிராய்லர் கோழிகளாக, பலன்களுக்காக மட்டுமே லாப நோக்கில் வளர்த்தப்படும் குழந்தைகள் தங்களது குறும்புகளை, விளையாட்டுகளை, குழந்தைத் தருணங்களை என யாவற்றையும் இழந்து விடுவதில் என்ன பிழை நேரப்போகிறது.


பள்ளிக்கூடம்

அடிக்கடி நீரிலிட்டு
புதிது புதிதாக சோப்பு வாங்க
பூனை மீது பழி போடுவாள்

விருந்தினரின் செருப்புகளை ஒளித்து
புறப்படுகையில் பரபரப்பூட்டி
நாயின் மீது சாட்டிடுவாள்

தேவைகளை வாங்கிக் கொள்ள
உறுதியளித்த பின் தந்திடுவாள்
தலையணை கிழித்து மறைத்த
ரிமோட்,வண்டி சாவிகளை

கொஞ்ச நாட்களாக 
குறும்புகள் ஏதுமற்றிருந்தாள்

மாதம் ஒன்றுதான் ஆகியிருந்தது
அவளை பள்ளிக்கு அனுப்பி

பள்ளிக்கூடங்கள் அப்பட்டமான வதைக்கூடங்களாகிவிட்டன என்பதற்கான நிகழ்கால சாட்சியாய் நிற்கிறதிந்தக் கவிதை.

குழந்தைகள் தங்கள் ஓவியங்களின் மூலம் உயிர்களைப் பிறப்பிக்கிறார்கள், இயற்கையை சிருஷ்டிக்கிறார்கள். அது கோணல் மாணலாக இருந்தாலும் ஒரு அழகுடன் இருக்கிறது. ஒரு வரையறுக்கப்பட்ட ஒழுங்குடன் அந்த ஓவியம் இருப்பதில்லை ஆகவே அது எக்காலத்துக்குமான நவீன ஓவியமாகிறது.அதன் புள்ளிகளில் , கோடுகளில், கிறுக்கல்களில் உயிர்ப்பானது ஓவியம் மட்டுமல்ல இந்தக் கவிதையும் கூட


அருவி

இறுக மூடினான்
முன்பின் கதவுகளை
திரைச்சீலைகளால் மறைத்தான்
ஜன்னல்களை
துவட்டிக்கொள்ளவென
துண்டுகளைக் கொடுத்தான்
அவனது அடுத்த கோமாளித்தனமென
பரிகசித்துக் கொண்டிருக்கையில்
சாரலில் நனையத் துவங்கினோம்

சித்திரத்தில் பிறப்பித்திருந்தான்
அருவியை 


இவரது கவிதைகளில் இருப்பதெல்லாம் குழந்தைத் தருணங்கள் தாம். அவை தரும் அனுபவங்கள் அந்தத்தக் கணத்துக்கான கொண்டாட்டங்கள். குழந்தைகள் நமது வானின் நட்சத்திரங்கள். நமது வானத்தை ஒளியூட்டி வருபவர்கள். அவர்களல்லாது நாம் ஒரு வானம் என்று யார் அடையாளப்படுத்துவது ? சொல்லப்போனால் அவர்களால் தான் நாம் வானமாக இருக்கிறோம் .

நட்சத்திரம்

நுழைந்ததும்
காத்திருந்தார் போல் இழுத்தான்
அறையுள் கலர்
கலராக நட்சத்திரங்கள்
அறிமுகப்படுத்துவதாக
நீண்ட பெயர்ப்பட்டியலை வாசித்தான்
வானில் இருத்தல் தானே 
அழகென்றேன்
எங்க டீச்சர் சொல்லிட்டாங்க
அதெல்லாம் கோள்களாம்
அப்போது பூமியிலிருந்து
ஒரு நட்சத்திரம்
வானுக்குத் தெரிகிறது

குழந்தைகளைக் கடவுளாக்கிக் கவிதையாக்குவது தொன்று தொட்டு நாம் செய்வது தான். அப்படியான கவிதைகளிலெல்லாம் குழந்தைகளின் சிறு செயல்களெல்லாம் வரங்களாக்கி படைப்புகளாக்கப்படும். ந.பெரியசாமியும் அதைச் செய்திருக்கிறார். கொஞ்சம் தனித்த தன்முத்திரையுடன்


எளியவர் என் கடவுள்

ஈரமாக்கியது நீதான்
குற்றச்சாட்டோடு எழுவார்

சமாதானம் கொள்வார்
எட்டணா சாக்லேட்டுக்கும்
மெனக்கிடாத பொய்களுக்கும்

சிறு அறைதான்
சிங்கம் உலாவ 
பெரும் வனமாகவும்
மீனாக துள்ளிட ஆறாகவும்

பூங்காக்களில் சறுக்கும் 
பலகை போதும்
புன்னகை சிறகு விரிக்க

வடை தூக்கும் 
காக்கைக் கதையில்
உறக்கம் கொள்ளும்
என் கடவுள் எளியவர்

நெற்றியில் பூசும் திருநீறுக்கே
மலையேற்றம் கொள்ளும்
என் குடிசாமி போல

கடைசி வரிகள் இதை ஒரு குழந்தைக் கவிதை என்று மட்டும் அடையாளப்படுத்தாமல் எளிய மனிதர்களின் வாழ்வியலை, அவர்களது எளிய கடவுளின் வழியாகச் சொல்கிறது.


குழந்தைக் கவிதைகளின் தொகுப்பென்ற வகையில் இது வழக்கமான தொகுப்பு தான். ஆனால் இந்தக் கவிதைத் தொகுப்பின் கவிதைகள் வழக்கமான கவிதைகள் அல்ல. இது நவீன பிள்ளைத் தமிழ். இவை குழந்தைகளை அறிவுறுத்தாத அச்சுறுத்தாத மொழியில் பேசுகிறது. மேலும், குழந்தைகளுக்கு மாறுவேடம் எல்லாம் போடாமலும், அவர்களைக் கடவுளாக்காமலும் இயல்பான குழந்தைமையைக் கவிதையாக்கியிருக்கிறார்.

இது முழுக்க முழுக்க குழந்தைகளின் உலகம் ; நாம் குழந்தைகளைக் கொண்டாட வேண்டும், இந்தக் கவிதைகளையும்