Wednesday, June 22, 2016

கதை மாந்தரான கனவுகள்

கதை மாந்தரான கனவுகள்


சிகரெட்டின் வெளிச்சம் மட்டுமே உள்ள அறையில் மது அருந்தினோம். கடைசி புகையை இழுத்து இருட்டாக்கினாள். லைட்டரின் ஒளியில் அவளின் முகம் பிரகாசித்தது. எதையோ பேசியபடி இருந்தோம் அம் மீச்சிறு வெளிச்சத்தில்...

தன்னுடைய மொழிபெயர்ப்புப்  புத்தகமென நீட்டினார். ஆர்வம் பொங்க கைகளை நீட்டினேன். தராமல் மீண்டும் பையில் வைத்துக்கொண்டார். வேறு நிலத்தின் கலாச்சாரம் பண்பாடு மொழிப்பற்று என பேசிக்கொண்டே இருந்தார். நான் புத்தகத்தை பெற மீண்டும் கைகளை நீட்டினேன். மொழியை பயன்படுத்த தெரியாதவர்களுக்கு இது பயன்படாதென மறைந்தார்...

படுத்திருந்தேன். குழந்தைகள் கும்பலாக வந்தனர். அவரவர் கையில் ஜாமெண்டரி பாக்ஸ் கருவிகள். ஒவ்வொருவரும் தனக்குப் பிடித்த கோடுகளை வரைந்தனர். குறும்புக்கார சிறுவன் குறியில் அம்பு பாய்ச்சி விளையாடினான். வெளியேறிய இரத்தம் ஓவியமாகிக்கொண்டிருந்தது...

பழைய கட்டிடம் ஒன்றினுள் நுழைகிறேன். அங்கிருக்கும் காவலாளியை ஏமாற்றி அரிதான நாணயங்களோடு வெளியேறுகிறேன். எதிரில் சைரன் ஒலியற்று ஜீப் ஒன்று வந்தது. உள்ளிருந்து நீண்ட குழாயிலிருந்து வெளியேறிய சிறு குண்டு என் உடலில். நாணயங்கள் இரத்தத்தில் மிதக்கத் துவங்கின...

தெருவில் சித்திரம் தீட்டியபடி இருந்தவனை அழைத்து வந்தேன். எனது ஆடைகளை அணியக் கொடுத்து பசி மறக்க சோற்றை கவளம் கவளமாக ஊட்டினேன். வீடு சித்திரங்களின் வசிப்பிடமாக மாறிக்கொண்டிருந்தது...

இப்படியாக எனக்கு வேறுவேறான கனவுகள் வந்துகொண்டே இருந்தன. தமிழவனின் 'நடனக்காரியான 35 வயது எழுத்தாளர்' தொகுப்பை வாசித்துக்கொண்டிருந்த நாட்களில். எனக்கு சாத்தியப்படாத சூழலைக்கொண்ட சம்பவங்கள் என்னுள் குறுக்கீடு செய்தமையால் இக் கனவுகள் வாய்த்திருக்கக்கூடும் என நினைக்கிறேன். ஒரு பிரதியால் வாசகனின் கனவுத் தன்மையை மாற்றம் செய்ய முடிவது மகிழ்வுக்குரியது. நம் மொழி பற்பல பரிமாணங்களோடு பயணித்திருக்கிறது இத் தொகுப்பில்.

இத் தொகுப்பின் கதைகளில் கனவும் ஒரு கேரக்டராக வந்தபடி இருக்கிறது. உரையாடல்களாலும் சம்பவங்களாலும் மட்டுமே கதை நகராது கதை மாந்தர்களின் மனநிலை, சூழலின் மாற்றத்தோடு கொள்ளும் குறுக்கீடுகளே கதைகளின் மையமாகவும் இருக்கிறது. மொழி, கலாச்சார மாற்றம், பண்பாட்டின் மாற்றம், புதிய தலைமுறைகளின் மனவோட்டம், மொழி குறித்த பெருமிதம் அற்றுப்போன வாழ்வு என தோய்வற்ற சொல்லாடலில் புதுபுதுப்புதுக் காட்சிகளை தந்தபடியே இருக்கின்றன. மேம்போக்கான மனநிலையோடு இக்கதைகளை அனுகினால் நம்மை ஏமாற்றம் கொள்ளச் செய்யும். சில கதைகளின் கரு பழையதாக இருந்தபோதும் தமிழவன் தனக்கான உத்தியால் அதற்கு வேறு தன்மையை ஏற்படுத்திவிடுவதால் எவரும் நிராகரிக்க முடியாத தளத்திற்கு சென்றுவிடுகின்றன.

வாழ்வை அதன் போக்கிலேயே வாழ்ந்து தேடலற்று இருப்பதை வேற்றுப் பிரதேச வாசியின் குரலில் கேலி செய்கிறார் 'உங்களுக்கு பாரம்பரியம் இல்லையென்பது உண்மையா?' கதையில். 'புரிந்து கொள்வாய் இறுதியாக' கதையில் தன் திருமண வாழ்வின் சாட்சியங்களை காட்ட மறுத்து, காதல் வாழ்வின் நினைவுகளில் வேறு வாழ்வை கலந்திட விரும்பாது வர்ஸாவில் வாழும் அன்னா நம் நினைவிலும் இருப்பாள். இவ்விரு கதைகளிலுமே கதை மாந்தர்களின் உரையாடல்கள் மட்டுமல்லாது கதை நிகழும் இடத்தின் பின்னணியும் கதையில் காட்சிப்படுத்தப்பட்டுக் கொண்டே இருப்பதால் நல்ல சினிமாவைக் கண்ட நிறைவைத் தந்தன.

அடுத்தடுத்த வாசிப்புகளை செலுத்திய பின்னரே தன்னுள் இருக்கும் புதிரின் கண்ணியை காட்டத் துவங்கும் 'நால்வரின் அறையில் இன்னும் சிலர்' கதை. குற்றம், குற்றத்திற்கான காரணிகள் ஒற்றைத் தன்மையோ, பொதுத் தன்மையோ கொண்டதல்ல. மாறாக குற்றவாளிகள், குற்றவாளிகளாக ஆக்கப்படுபவர்களின் மனவோட்டத்தின் கூறுகளோடு தொடர்புடையது என்பதாக என் வாசிப்பில் கண்டேன். வேறு வாசகனுக்கு வேறான அர்த்தத்தையும் இக் கதை தரக்கூடும். அதற்கான மாயங்களோடுதான் அக் கதை இருக்கிறது.

விலாவழி குழந்தை பிறப்பு போன்ற கற்பனைகளை நிஜமென பாவிப்பவர்களின் மீதான எள்ளலோடு, அவரவர்களும் தன் சார்ந்த வேலைகளோடு இயல்பான வாழ்வை வாழ்ந்துகொண்டிருக்க அறிவைத் தேடும் அரசனின் நிலையைக் கூறும் 'ஹர்ஷவர்த்தனின் அறிவு' கதைகள் சுவாரஸ்யமான நகர்வு.

பெற்றோர்கள் வேலை பார்க்கச் செல்ல தனித்து விடப்பட்ட குழந்தைகளின் மன உலகை சித்தரிக்கும் 'மூவரும் மௌனமானார்கள்' வாசிப்பின் இறுதியில் நம்மையும் மௌனமாக்கி விடுகிறார். இது போன்ற கதை ஏற்கனவே சினிமாவிலும், கதையிலும் பயன்படுத்தப்பட்டிருந்த போதிலும் தமிழவன் சொல்லியிருக்கும் உத்தி நம்மை பதட்டமடையச் செய்கிறது.

தங்களின் பொறுப்பற்றத் தன்மையால் வளம் சேர்க்க வேண்டிய மொழியை கண்டுகொள்ளாது தங்களுக்குள்ளான ஈகோக்களை சாந்தப்படுத்த மொழிக்கு துரோகம் செய்தபடி இருக்கும் நிறுவனங்களின் கேடுகளை விவரிக்கிறது 'மொழிபெயர்ப்பு நிறுவனம்'.

'அவனுக்கு என்னைப் பார்க்கிறபோது பார்வை இல்லாது போய்விடுகிறது பார்' எனும் 'அற்புதம்' கதையில் வரும் சொல்லாடல் தலைமுறைகளினிடையே ஏற்படும் மனச்சிக்கலை காட்சிப்படுத்துகிறது.

நம்மால் வெற்றிகொள்ள இயலாது போன செயலை, வேறு யாராகினும் வெற்றிகொண்டு தேர்ந்தவராக வலம் வருவதை சகிக்காது அவர்களின் மீது தொடர்ந்து சந்தேகப்பட்டவாறு இருப்பதை சித்தரிக்கிறது 'ஹெமிஸ்ட்ரி பாடம் புரியுமா?' .

என்றைக்காவது தட்டுப்படும் வித்தியாசமான நபர்கள், அவர்களின் செயல்பாட்டால் நம் வாழ்வில் தினசரி குறுக்கீடு செய்தபடியே இருக்க, என்றும் நம் நினைவில் தங்கிப்போய்விடுவதைக் கூறுகிறது 'யாருக்கும் தெரியாது' கதை.

ஒன்றைப்பற்றிய தொடர் நினைவால் இயல்பின் சமன் கலைய தானே அந்த நினைவாக மாற்றம் கொண்டு விடுவதை விவரிக்கிறது 'கொலை செய்யாதிருப்பாயாக'.

மொழியின் உணர்வுகளைத் தூண்டி அரசியல் நடத்தி உணர்வுப் பிச்சையில் உல்லாச வாழ்வை அடைவோர் நம் சிந்தனையை மட்டுப்படுத்தி விட்டதைச் சுட்டி ஒரு மொழி தொலையும் போது அவற்றுடன் நம் வாழ்வும் தொலைந்து போவது குறித்து கவனிப்பை உண்டாக்கும் கதையாக வந்துள்ளது 'மொழி'.

பதிலற்ற, பதில் கூற விரும்பாத கேள்விகளை தேர்வு செய்தபடியே இருக்கும் 'நடனக்காரியான 35வயது எழுத்தாளர்' என நம் நினைவில் காட்சிகளாக படிந்து நம்முடன் அடிக்கடி உரையாடலை நடத்தும் இத்தொகுப்பின் கதைகள்.

சில சொற்கள் கவிதையிலோ கதையிலோ வாசிக்க ஏனோ ஒரு வித அசூசை ஏற்படுவதுண்டு. 'மொழி' கதையில் கண்களுக்கு பட்டாம்பூச்சியை உவமையாக்கி இருப்பதைப் பார்த்து சலிப்பேற்பட்டது. தமிழவனிடம் நான் பட்டாம்பூச்சிகளை எதிர்பார்க்கவில்லை.

இத் தொகுப்பின் கதைகளில் உரையாடலின் போது இது அவன், அவள் இது, அவன் கூறினான், இவள் கூறியது என கதை சொல்லியும் கதையின் மாந்தர்களோடு கலந்திருப்பது ஆரம்பத்தில் இடையூராக தோன்றினாலும் அடுத்தடுத்த வாசிப்புகளில் கதைப்போக்கில் கதைமாந்தர்களோடு கதைசொல்லியும் இணைந்துகொண்டிருப்பது ரசிக்கத்தக்கதாக உள்ளது.

வெளியீடு
புது எழுத்து
2/205. அண்ணா நகர், கவேரிப்பட்டிணம்-635112.

நன்றி-தீராநதி

Thursday, June 9, 2016

வாசல் தெளிப்பின் மணம்...
அதிகாலையில் அம்மா தெளிக்கும் சாணத்தின் மணம் நிலத்தின் மணத்தோடு சேர்ந்து வெளியேற விழிப்பை ஏற்படுத்தும். பெரும்பாலான குடும்பங்களில் வாசல் தெளிப்புக்குப் பின்னரே வீட்டிலிருக்கும் ஆண்களை வெளியேற்ற அனுமதிப்பார்கள். வீட்டையும் நிலத்தையும் என்றும் நினைவில் வைத்திரு என்பதாகப்படுகிற பழக்கம் இது. கதிர்பாரதியின் ஆனந்தியின் பொருட்டு தாழப் பறக்கும் தட்டான்கள் தொகுப்பை வாசித்த பின் அம்மாவின் வாசல் தெளிப்பு மணம் நினைவிற்கு வந்தது.
கை விரல்களால் வீடு கட்டும் வித்தை கற்ற குழந்தைகளின் துள்ளல்களையும், கண்டிஷன்களின் சொற்கள் மிதக்கும் வாடகைவீட்டில் வெளியைச் சுருக்கி இறகு பந்தாடும் குழந்தைகளின் துயரையும் நமக்கானதாக்கிவிடுகின்றன கவிதைகள்.
வீடு
இரு கைவிரல் நுனிகளை
கோபுரமெனக் குவித்து
விடுன்னா இப்படித்தான் இருக்கும் என்று
புன்னகைக்கிற திலீபன்
மழை பெஞ்சா நனைஞ்சுடும்
அப்போ வீட்டை மூடிடணும் என்று
இரு உள்ளங்கைகள் வரை
ஒட்டவைத்துக்கொள்கிறான்
நனைந்தும்
நினைந்தும்
வாழ்வதற்கு
போதுமானதாக இருக்கிறது
இந்த வீடு.
தொகுப்பிலிருக்கும் திலீபன் குறித்த கவிதைகள் நம்மோடிருக்கும் குழந்தைகளின் உலகத்தையும் நினைவூட்டியபடி இருந்தன.
வெள்ளந்தியான மனம் நிறைந்திருப்போரும், உள் ஊறும் வன்மத்தை புன்னகையுள் ஒளித்து வைத்திருப்போரும் தம்தம் நிலைக்கேற்ப இப்புவியை விளையாட்டுக் களமாக்கி புள்ளிகளை சேகரிக்கும் சூட்சுமத்தையும். ஊர்ப்புறத்திற்கும் நகரமயமாக்கலுக்குமான மாற்றத்தில் சிக்குண்டவர்களின் மனப்பிறழ்வுகளை காட்சிபடுத்தியும் செல்கின்றன கவிதைகள்.
தேவனின் படைப்பில் உன்னதமானது பெண்ணெனக் கொண்டாடி, அவள் வராத கோடையில் பொசுங்கி, அருகில் வந்தவளின்பால் ஏற்பட்ட இன்பத்தைவிடவும் வந்து விடுவதாக நம்பிக்கை ஏற்படுத்திக்கொண்டிருப்பதால் ஏற்படும் இன்பத்தை சுகித்தும், மழையை மார்பகமாக்கி தாகம் தணிப்பவனின் பெரும் காதலை முத்தத்தின் வழியாக வெளிப்படுத்தியவாறு இருக்கின்றன பெரும்பாலான கவிதைகள்.
உழவு மாடுகள், இறாபுட்டி, குலசாமிகளின் கதைகள், நீர்முள்ளிப் பூக்கள் நிறைந்த கனவு, பயிர்களின் பருவங்களுக்கேற்ற பாடல் என எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருந்த தாத்தாவின் உப்பு படிந்த உடலில் கிடந்து வளர்ந்தவன் தன்னிடம் ஏதும் இல்லாது போவதும், தாத்தா உயிராக நினைத்த நிலமும் மெட்டோபாலிடல் அரசியலுக்கு பலியாக்கப்படுவதும், விடுதலை உணர்வையும் நிம்மதியையும் தரும் நிலம் பெரும் கனவானதாகிவிட, சொந்தமாக ஒதுங்க ஒரு செண்ட் நிலமும் அதில் சிறு வீடும் கட்டவதற்காகவே வேலை ஓய்வுபெறும் வரை உழைக்க வேண்டியிருக்கிற அவலத்தையும் கிளறிவிடுகின்றன கவிதைகள்.
.............................
என் தாத்தாவிடம்
கண்ணீரும் தாகமும்கூட இருந்தன
மயக்கமுற்று நிலத்தின் மடியில் வீழ்ந்தவருக்கு
டமக்கரான் போத்தலில் தண்ணீர் வந்தது.
அதை முகத்தில் தெளித்து அவரைப் புதைத்தபோது
அழுது அரற்ற அவர் பாடல் இல்லை எம்மிடம்.
பெறவேண்டிய உரிமையை பெரும் கனவாக்கி அதைநோக்கி நமை ஓடவைக்கிறது எஜமானர்களின் உலகம். கொஞ்சமான எஜமானர்கள் குரங்காட்டிகளாக இருந்து நமை குட்டிக்கரணம் போட வைத்து வேடிக்கைக் காட்டி அவர்களின் தட்டை நிரப்பி உல்லாச வாழ்வு வாழும் பல மல்லையாக்களை நினைவூட்டுகின்றன கவிதைகள்.
என்னவாகப்போகிறதோ எனும் பதட்டத்தில் வாசித்துக்கொண்டிருக்கையில் சிறுவன் சேனலை மாற்றிவிட ஆசுவாசம் அடைந்து ரசித்திடச்செய்தது 'மெய் நிகர் தீபம்'.
மொட்டைமாடியின் முத்தத்தை கடன் வாங்கி ஒளிர்ந்த கற்கள் நட்சத்திரமாகினவெனும் வரிகள் என்றும் நினைவிலிருக்கும்.
தொகுப்பில் பெரும்பாலான கவிதைகளில் ஆனந்தி மிளிர்கிறாள். ஆனந்தியின் பொருட்டு காதல் மிகுவதும், காதல் மிகுந்து சரணாகதி அடைவதும், சரணாகதி மிகுந்திட காமம் பிறப்பதும், காமம் பிறக்கையில் பெண் நிலமாக மாறுவதும், நிலம் என்பது சொத்து எனும் வஸ்துவாகிவிடுவதால் சொந்தமாக்கி உரிமை கொண்டாடுவதும், உரிமை அதிகாரமாக மாற்றம் கொள்வதும் கவிதைகளின் போக்கில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.
நெடும் காலத்தின் நீட்சிதான் ஆண் எனும் அதிகாரம். அது நீண்ட ஆணி வேராக புதைந்து கிடக்கிறது. நம் வாசிப்பும் சக ஜீவிகளின் மீதான கரிசனமும் சிறிது சிறிதாக அதை பட்டுப்போக செய்துகொண்டிருக்கிறது. அது முற்றாக பட்டுப்போக வைக்கவும் முடியும். 'ஒரு குளத்துக் குரவையாக' கவிதையில் வரும் 'அதிகாரம் என் சொற்களில் மட்கி எருவாகும்' எனும் வரி அதற்கான நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
வெளியீடு- உயிர்மை பதிப்பகம்.
nantri:malaigal.com

Thursday, April 21, 2016

கனிவின் உருவானவளே...



நேரங்களை துல்லியமாக்கும்
உனதழைப்பு
நாள் கழிய நாள்
வாரம் கழிய வாரமென்றிருந்தது
எப்போதவதுதான் என்றான போதிலும்
முன்பிருந்த குளிர்மையும் இல்லை.

நிகழ்ந்துகொண்டிருக்கும்
காதல் பலிகள் குறித்த
உன் வார்த்தைகளின் வலியை மறக்கடிக்க
சந்திப்பு காலங்களில் நிகழ்ந்த
சம்பவங்களை நினைவூட்டுகிறேன்
மாற்றிடுகிறாய் பேச்சை.
உன் சாயலைக் காட்டி
ஏமாற்றும் நிழலைக் காணுமென் விழிகளில்
நமக்கேயான பொழுதுகளின் சித்திரங்கள்.
காலங்களில் படிந்த உன் சொற்களை
தேன் எடுக்கும் ஈக்களாக
சேகரிக்கத் தொடங்கினேன்
உருவானது பெருங்கூடு
துயர் நிரம்பிய நாட்களில்
கூட்டை கசிய வைத்திட
ஓடும் இனிப்பின் நதியில்
மிதந்து கிடக்கிறோம்.
nantri:theeranathi

Tuesday, March 1, 2016

மகிழ்வின் ஊஞ்சலாட்டம்


நம் உடலில் இருந்து பிரியும் நிழல் எத்திசையில் எவ்வளவு உயரத்தில் விழவேண்டும் என்பதை நம்மால் தீர்மானிக்க இயலாது. அது நம் கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்டது. நம் உடலில் இருந்துதானே வந்தது என்பதற்காக அதை நாம் எதையும் செய்ய இயலாது. அதன் போக்கு வேறானது. அதுபோல்தான் நாம் கானும் உலகிற்கும், காணத் துடிக்கும் உலகிற்குமான போக்குகள் வெவ்வேறானவை. இரண்டிற்குமான நீண்ட சுவர் கண்ணுக்குத் தெரியாமல் எழுப்பப்பட்டிருக்கிறது. அதன் மீது ஏறி நின்று காணாததை கண்டதுபோலவும், கண்டதை காணாதது போலவும் வாழ்ந்துப் பார்க்கிறோம். நம் வாழ்வு அகம்-புறம் எனும் இரட்டைத் தன்மையிலான உருண்டை. ஷாஅ வின் 'கண் புகாவெளி' தொகுப்பின் பெரும்பாலான கவிதைகளில் இந்த இரட்டைத் தன்மையிலான உருண்டையை உருளவிட்டிருக்கிறார். அண்மை-விலக்கம், இருத்தல்-இல்லாதுபோதல், மேல்-கீழ், நிஜம்-நிழல், வறட்சி-ஈரம், அடி-அந்தரம், ரகசியம்-அ ரகசியம் இப்படியாக அவ்வுருண்டையை பிரித்துப் பார்க்க தெரியும் அர்த்தங்களின் சுவையை அனுபவிப்பின் மகிழ்வில் ஊஞ்சலாடச் செய்கின்றன கவிதைகள்.
இயல்பான வாழ்வு என நாமாக நினைத்துக்கொண்டிருக்கும் இயல்பு வாழ்வில் ஏதாகினும் ஒரு சொல் அல்லது செயல் என ஏதோவொன்று அலைவு கொள்ளச் செய்யும். அவ்வாறு அலைவு கொள்ளும் தருணங்களை ஷாஅ கவிதையாக்கியுள்ளார். 'உள்ளே பந்து', கவிதையில் உருண்டபடி இருக்கும் பந்து, 'மணப் பொந்து' கவிதையில் மனம் குடையும் மரங்கொத்தி, 'உள் திரும்பிய அறை' கவிதையில் ஒளிவெளி, 'புன்னகை' கவிதையில் படபடக்கும் தாள், 'அறிமுகம்' கவிதையில் முகம், 'மனதில் நீச்சல்' கவிதையில் பழகா நீச்சல் என தொகுப்பில் தொடர்ந்தபடி நிறைய்ய கவிதையில் காண இயலும்.
முதல் பார்வைக்கு எரிச்சலூட்டும் சிலதுகள் அதனை நாம் உள்வாங்க மிகவும் பிடித்தமானதாக மாறிப்போவதுண்டு. கண் புகாவெளி தொகுப்பிலிருக்கும் 'யுவள்' கவிதை முதல் பார்வைக்கு எரிச்சலூட்டும் வடிவமைப்பாக இருக்க, அக் கவிதையை வாசித்தபின் அவ் வடிவமைப்பாளரிடம் மனதார மன்னிப்பு கோரினேன். அக்கவிதையை வாசித்த பின் அவ் வடிவமைப்பிலிருந்து நல்ல வடிவான பெண்ணொருத்தி எழுந்து வந்தாள். நினைவில் நிரந்தரமாக ஒரு உருவத்தை ஏற்றிவைத்துவிட்டது அப்பக்கம். ஷாஅ விற்கு அப்பக்கம் மேகலை என்றாள் எனக்கு அது மதுவாகினி.
நாம் நம் மொழியுடன் விளையாடிப் பார்க்க முயல்வதுண்டு. அவ்விளையாட்டு சில நேரங்களில் சுவாராசியமாகவும், பல நேரங்களில் சலிப்பையும் ஏற்படுத்தும். அதற்காக நாம் விளையாண்டு பார்க்காமல் இருப்பதில்லை. வெறும் சொற்களோடு விளையாட்டு நின்றுபோகாது சம்பவங்களோடும் இருக்க அவ்விளையாட்டு அதற்கான விளைவிப்பை ஏற்படுத்தத்தான் செய்யும். இத் தொகுப்பில் ஷாஅ 'பூனையும் மதிலும்', 'ஞாயிறு', 'முக்கிய பாடன்' 'மீன் கலை', 'போ' போன்ற கவிதையில் தனக்கான விளையாட்டை நிகழ்த்தியிருக்கிறார்.
போ
கும்
போது
ஆற்றை கடக்கிறது பாலம்
நதியுடன்
போ.
நேசிப்பு பொதுவானது. அதற்கு உயர்தினை, அஃறினை என்ற பாகுபாடு கிடையாது என்றே நினைக்கின்றேன். ஆண் பெண்ணை நேசிப்பதும், பெண் ஆணை நேசிப்பதும் போன்றே வேறு உயிரினங்களின் மீதான காதலும். ஷாஅ மலைகள் மீதான நேசிப்பு மிக்கவர் போலும் 'மலைகளின் குரல்' கவிதையில் அவரின் காதலை தரிசிக்க முடிகிறது.
-------------------------
-------------------------
வந்து
மேல் நுரையென
படிந்து
வாஞ்சையோடு அழைக்கின்றன
மலைகள் அழைத்துச் செல்லும் இடமும்
மலைகளுடன் நான் போய்ச் சேரும் இடமும்
இந்த முகம் பார்க்கும்
கண்ணாடி தீர்மானிக்கும்போது
அறிந்துகொள்வேன்.
திடுக்கிடல்களும் ஆச்சரியங்களும் சொல்லி வைத்து வருவதில்லை. அதன் நேரம் மர்மமானது. எக்கணமும் நிகழக்கூடியது. ஏற்படுத்தக்கூடிய திடுக்கிடல் உண்டாக்கும் ஆச்சரியங்களை விட எதிர்பாராது சம்பவிக்கும் திடுக்கிடலின் அனுபவம் அலாதியானது. ஷாஅவிற்கு ஏற்பட்ட ஒரு ஆச்சரியத்தை கவிதையாக்கியுள்ளார். அதை நாமும் அனுபவித்து உணரத்தக்கவகையில் கவிதையாகி இருப்பது தனிசிறப்பு. மாடியில் காயும் துணி எடுக்கச் செல்கிறார். துனியின் நிழல் வீட்டின் பின்புறம் உள்ள மலையில் படிந்திருக்கிறது. அது இவருக்கு மலை சட்டை அணிந்திருப்பதுபோல் இருக்க திரும்பிவிடுகிறார். 'தலை பொருத்தம்' கவிதை ஷாஅ வை நினைவில் வைத்திருக்கச் செய்யும்.
காயப்போட்ட துணி எடுக்க
மொட்டை மாடி போனேன்
தூரத்து மலைகள்
என் சட்டையை அணிந்திருந்தன
ஒன்றையும் கழற்றத் தோன்றவில்லை
பேசாமல் தலையை கொய்து
மலைமேல் வைத்து
அவசரமாக படி இறங்கினேன்...
------------------------------------------
அலர்ஜி - ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றில் ஏற்படுவதுண்டு. எல்லோருக்கும் ஒத்தமாதிரி பெரும்பாலும் இருக்காது. ஆனால் பள்ளிக்கூடத்தின் மீதான அலர்ஜி மட்டும் எல்லோருக்கும் பொதுவானதாக இருக்கிறது. எல்லா படைப்பாளிகளும் வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் தங்களுக்கு பிடித்தமான வடிவங்களில் அதை பிரதிபலிக்கச் செய்கிறார்கள். வீச்சான மாற்று ஏதும் இல்லாததால் நாமும் அந்த செக்கில் நம் பிள்ளைகளைப் போட்டு சுழல வைத்துக்கொண்டு இருக்கிறோம். இத் தொகுப்பில் ஷாஅ வும் தன் பங்களிப்பாக 'படிக்காத பாடம்' கவிதையில் வகுப்பறையில் இருக்கும் முயல்களுக்கான தன் கரிசனத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
முழுமையடையாது தெளிவின்மையோடிருக்கும் கனவை ஒரு நிறை குடமாக்கி, வெளியெங்கும் சிதறும் துளியின் மையத்தை காட்சிபடுத்தி, களவு போன மலை குறித்து மழையோ மழையென்று கவலைகளை பொழிந்து, எதிரெதிர் நிலைகளின் இருப்பை இல்லை எனக் கூறுவதன் மூலம் இருப்பின் கவனத்தை அதிகப்படுத்தி, தான் தொலைத்ததைத் தேடும் பயணத்தில் முன்னர் தொலைக்கப்பட்டவைகளின் காலப்பொதியில் சுழன்று, ஆறுகள் நனையாது நதியாகும் காட்சியில் ஓடி, ஈரம் பட்ட தாளில் எழுதி, ஆச்சரியத்தில் நட்சத்திரம் அறிந்த கதைகேட்டு, வீட்டின் உயிராக கிடந்து, இலையிடம் கற்ற பாடங்களை அசைபோட்டபடி நம்மையும் இருந்திடச் செய்திடுகிறார் ஷாஅ தன் கண் புகாவெளியில்.
வெளியீடு
காலச்சுவடு பதிப்பகம்
நன்றி- மலைகள்.காம்