Thursday, June 11, 2015

தூய்மை ராஜாவின் வாத்துகள்

1.
தூய்மை ராஜாவின் வாத்துகள்
*
தன் வல்லமைகளை
அறிந்தே மௌனித்திருக்கும் வாத்துகளை
குளம் மிதக்கும் தாமரையின்
உருவம் பொறித்த குடுவையினுள்
நுழையச் செய்திட்டனர்.

தூசுகள் படிந்து பரனில் கிடந்த
செங்கல்நிற பழந்துணியால்
அதன் வாயை இறுகக் கட்டினர்,

தன் உளறல்களைக் காட்சியாக்கி
அற்புதம் நிறைந்ததென
மிருதங்கத்தில் பெருமிதம் இசைத்தனர்.

குணமாக்கப்படாத அவஸ்தைகளோடு
தன் வங்கிக் கணக்கெண்ணை
மனனம் செய்தபடி வாத்துகள்

உலகம் மெச்சிக்கொண்டிருக்கிறது
தூய்மை ராஜாவை.
*
2.
மழைவெய்யில்

வானின் துண்டாகக் கிடக்கும் மொட்டைமாடியில்
நானும் நியும்
இத்தருணத்திற்கான காத்திருப்பின்
காலங்களை அறியாய்.

மிட்டாய்களின் நிறங்களை ரசிக்கும்
சிறுவனாகிறேன்
மேலும் சின்னஞ்சிறுவனாவேன்
உன் ஸ்தனங்கள்
அருந்தக் கிடைக்குமெனில்
அற்புதங்கள் கனவுகளுக்கானவை
விட்டுவிடலாம்.

சீம்பால் துண்டுகளாக
உன்னுடனான சம்பவங்களின் நினைவுகள்
விழுங்கி விழுங்கி
உலகைத் தித்திப்பாக்குகிறேன்

உண்மைதான் அன்பே
இறுகத் தழுவி முத்தமிடு
நாளை உலகத்தார்
சிறுவர் சிறுமிகளாவர்
வெய்யிலும் மழையும் கலந்து பெய்யும்.

நாம் மட்டும் அறிவோம்
வெய்யில் நீ மழை நான்  என்பதை.

nantri:pudhu Ezuthu

Thursday, June 4, 2015

நிலத்தின் நிழல் மொழி

நிலத்தின் நிழல் மொழி
-ந.பெரியசாமி

கவிதையை வாசிக்கையில் நினைவில் எனக்கானதொரு காட்சியை ஓடச் செய்தால் அக்கவிதை நல்ல கவிதை என்பது என் அனுமானம். அப்படியானதொரு கவிதையோடு நெருக்கம் கொள்ள முடியும். அதற்கான திறப்புகளை அக் கவிதை கொண்டிருப்பது இயல்பு. சிலரின் தொகுப்புகளில் சில கவிதைகள் அப்படியானதொரு நெருக்கத்தை ஏற்படுத்தும். பா.வெங்கடேசனின் நீளா அப்படியானதொரு அண்மையைத் தந்தது.

எல்லா ஆண்களுக்குள்ளும் பெண் மனம் இருப்பது இயல்பு. ஆனால் அப் பெண் மனம் ஒரு படைப்பாளியாக மாற்றம் கொள்வது மகா உன்னதம். நீளா தொகுப்பில் அப்படியானதொரு படைப்பாளியை நீங்கள் சந்திக்க இயலும். பாடுபொருட்களின் மீதான அவரது பார்வை தாய்மையின் கனிவும் காதலும் சரியான புரிந்துகொள்ளலும் ததும்பித் வழிகிறது..

ஒரு படைப்பில் படைப்பாளியின் வாழ்நிலத்தின் வாசனை இருப்பது அப்படைப்பை ஒளிரச்செய்யும். கவிதை மட்டுமின்றி பா.வெங்கடேசனின் பிற படைப்புகளிலும் வாழ்விடத்தின் வாசனையை உணரலாம். நீளா தொகுப்பிலும் வாழும் நிலத்தின் தன்மை அது ஏற்படுத்தும் மாற்றம், அப்பகுதியின் இயற்கை, காவல் தெய்வங்கள் என நிறைய்ய குறுக்கீடு செய்யும் விசயங்களும் உண்டு.

பா.வெங்கடேசனுக்கும் எனக்கும் வாழ்நிலம் ஒன்றுதான். இத்தொகுப்பில் நிலம் சார்ந்த கவிதைகள் என்னை ஆகர்சிக்கின்றன. சில கவிதைக்கான தருணங்கள் அவருள் முகிழ்க்கும்போது அவருடன் நானிருந்த நிலக்காட்சிகள் இப்போதும் படர்ந்து நினைவை கிளர்த்துகிறது. சமதளமற்ற மேடு பள்ளங்களோடு இருக்கும் ஓசூர் நிலம் வெப்பங்களை தனக்குள் வைத்துக்கொண்டு எங்களுக்கு குளிர்விப்பை தரவல்லது. (அதை நாங்கள் இப்போ மாற்றம்கொள்ளச் செய்துவிட்டோம் என்பது தனிக்கதை) பலதரப்பட்ட கலாச்சார சூழல் குவியப்பெற்றது. ஒற்றைத் தன்மை இவ்வூருக்கு கிடையாது. சிறு பயணத்திலேயே மனதை மடைமாற்றிக்கொள்ள முடியும். திப்புவின் காலடித்தடங்களையும் இம் மண் தன்னுள் கொண்டுள்ளது. பாறை ஓவியங்கள், நடுகல் சிற்பங்கள், கல்திட்டை சமாதி என வரலாற்றுத் தொல்லியலின்  எச்சங்கள் இன்னும் இப்பகுதியில் உண்டு.  இந்நிலத்தின் பன்முகத்தன்மையை இவரின் தாண்டவராயன் கதையில் விரிவாக தரிசிக்க முடியும்.

வெட்கப்படுதல், வெறித்துப் பார்த்தல் எனும் இரு நிலைகள் நிர்வாணத்தில் உண்டு. பெரும்பாலானோர் இந்நிலைகளிலேயே சுருங்கிப்போவதும், இத்தனை நிர்வாணத்தை பார்த்தேன் என்ற கணக்கீடுகளில் பெருமை கொள்வதுமே நிகழ்கிறது. ஆனால் ஒரு சிலர் மட்டுமே அந்நிர்வாணத்தில் இருக்கும் ஒளிர்வை கண்டடைந்து தன் மொழியை கண்ணாடியாக்கி பிரகாசமாய் பிரதிபலிக்கச் செய்யும் ஆற்றல் இருக்கும். நீளா தொகுப்பில் பெட்டதம்மனின் நிர்வாணத்தின் ஒளிர்வை என்றென்றைக்குமாக மங்காதிருக்கும் ஒளிர்வாக மாற்றம் கொள்ளச் செய்திருக்கிறார். (பெட்டதம்மன் ஓசூர் பகுதியில் இருக்கம் ஒரு காவல் தெய்வம்) 'இடறும் காதல்' கவிதையில் வரும் பெட்டதம்மனை பார்த்துவந்த நாளின் கனவில் பெட்டதம்மன் உயர்ந்தபடியும் அகன்றபடியும் விரிந்துகொண்டே இருந்த காட்சி இன்னமும் மனம் அகலாதது.

சாமார்த்தியசாலியான கரிக்கும் பெண் எவராலும் கணிக்க இயலாத தளர்வு கொள்ளும் தருணத்தை உணரச் செய்து அவளின் முட்டாள்தனத்தை காட்சியாக்கி நிழலாய் தொடரும் மற்றொரு காதலையும் தரிசிக்கச் செய்யும் 'கரிக்கும் பெண்' கவிதையில் துவங்கிய காதல் தொகுப்பெங்கும் உணர்வின் முடிச்சுகளாக நீண்டு நமக்கான காதலில் தியானித்திருக்கவும் செய்திடுகிறது நீளா.

சில துணுக்குறல்கள் என்றாவது ஏற்படும். நம்மை துணுக்குறச் செய்த விசயத்தை மீண்டும் தரிசிக்க இயலாது போய்விடுவதும் உண்டு. அப்படியே அதைக் காண நேர்ந்தாலும் முந்தைய அனுபவத்தை மீண்டும் அதனால் ஏற்படுத்த இயலாது. முதல் காதல், முதல் முத்தம் இவைகளோடு முதல் துணுக்குறலையும் சேர்த்துக்கொள்ளலாம். 'அப்பா மயில்' கவிதை அப்படியானதொரு நிகழ்வின் அனுபவப் பகிர்வு.

ஆர்வமும் வாய்ப்பும் ஒருங்கிணைய பயணங்கள் வாய்ப்பதுண்டு. செல்லும் இடங்களின் பொதுவான அம்சங்களை மட்டுமே கண்டு வந்து சிலாகிப்பதில் மட்டுமே ஒரு பயணம் நிறைவுகொண்டுவிடாது. அப்பிரதேசத்தின் ஆன்மாவை கண்டுணர்ந்து தனக்குத் தெரிந்த கலைகளில் வெளிப்படுத்தி அதற்கானதொரு பிரத்யோக வண்ணத்தை உருவாக்கி விடுவதே நிறைவுகொள்ளும் பிரயாணமாக அமையும். தொகுப்பில் அப்படியானதொரு நிறைவுகொள்ளும் பயணங்களை நாமும் தரிசிக்க இயலும்.

 'முத்தியால் மடுவின் மோகினி' கவிதையில் பா.வெங்கடேசனுக்கு கோணங்கியோடு நிகழ்ந்த அனுபவம் பொறாமைக்கொள்ளத் தக்கது. உடன் போகாது போன வருத்தத்தை படியச் செய்தது கவிதை. முத்தயால் மடு முத்தங்கள் சூழப்பட்ட பகுதி சிறு அறுவியும் குறுகலான ஆறும் பழமையோடு ஓடிக்கொண்டிருக்கும். அப்படியான சூழலில் கோணங்கியின் உடல்மொழியோடு உரையாடலைக் கேட்பது மகா உன்னதம். என்றாவது எனக்கும் வாய்க்குமா எனும் எதிர்பார்ப்பை எதிர்படுத்திய கவிதை.

தேவதைகளின் தீராத் துயரம், காமம், வாதைகளறிந்து இரவுகளற்று இருக்கும் 'சொல்லப்படும் நிலவு' கவிதை ஹம்ப்பி பயணத்திற்குப்பின் எழுதப்பட்ட கவிதை. அப்பயணத்தில் பத்மபாரதி பாலசுந்தரம் நானும் வெங்கடேசனோடு சென்றிருந்தோம். மறக்கமுடியாத பயணமாக என்றென்றும் இருக்கக்கூடியது. கிருஷ்ணதேவராயர் கால மக்களின் காதலும் காமமும் வாதைகளும் அப்பாறைகளில் படிந்து கிடந்தது.  எங்கெங்கு காணினும் பாறைகள். துங்கபுத்திரா நதி அருகில் ஓடிய போதும் அக்காலத்தின் பாலை நூற்றாண்டுகள் கடந்தும் இன்னும் நீடித்திருக்கு. நாங்கள் சென்றது திருவிழா நடந்த சமயம். கர்நாடகப்பகுதியின் எல்லா ஆட்டவகை ஆட்டக்கலைஞர்களும் வந்திருந்தனர். ஒரு ஆட்டக்காரரின் ஆளுமை எங்களைக் கட்டிப்போட்டது. எதிர்பாரா தருணத்தில் வெங்கடேசன் நெடுஞ்சான்கிடையாக வீழ்ந்து வணங்கினார். பதறிய அக்கலைஞர் தூக்கி அணைத்தார். அக்கலைஞனின் கண்களில் அப்படியானதொரு மிளிர்தல். பரவசப்படுத்தியது அவரது ஆட்டம். அன்றைய இரவு எங்களை தக்கையாக்கியது. எங்களின் துயர்களை கண்ணீரிலும் சொற்களிலும் கரைத்தோம்.   ஹம்பி எங்களை பிதுக்கி வெளியேற்றியது. 'சொல்லப்படும் நிலவு' கவிதை வாசிப்பில் மீண்டும் அந்த இரவிற்குள் சென்றுவரச்செய்தது.

தன் மொழியின் அனுபவத்தை அகல் விளக்காக்கி அணையா நெருப்பை சுடரச் செய்வதன் மூலம் திருவாளர் ப்ரெட்டின் காதலை வாசிப்பின் மனங்களில் கடத்தும் 'திருவாளர் ப்ரெட்டின் தனிமொழி'

சமகாலத்தில் இருக்கும் சிறுவனின் கேள்விகளை ஆதிச் சிறுவனின் கேள்விகளாக்கி காலத்தை நகர்த்தும் 'நகரும் காலம்'

குரலை குறுந் துகள்களாக்கி பரணியில் சேர்க்கும் அணில் வசிக்கும் 'அணிலாடுமறை'

பார்த்திராத ஒன்றை சட்டகத்துள் படமாக்கி சுவற்றில் அறைந்துவிட தொங்கும் காட்சியில் கடவுளை ஒளிய வைக்கும் 'கடலை வரைதல்'

சக படைப்பாளியின் மனம் நோகக் கூடாதெனும் பதற்றம் தொற்றிய 'தவிர்த்த கவிதை'

தன் நிழலால் மட்டுமே தன்னை வெல்ல முடியுமெனும் நிலையை ஸ்திரப்படுத்தியிருக்கும்  'நீளா'

பீத்துணி போர்த்தி குழந்தைகளின் உலகில் நுழையும் தேவதைகளின் 'உருமாற்றம்'

நாணம் கொள்ளச் செய்யும் வார்த்தைக்கு உயிர் கொடுத்து பரிசளிக்கும் 'புத்தகம் அல்ல அவள் கேட்பது'

பருவங்களின் தன்மையை தன் இல்லக் கதவின் தாள் திறப்பில் மாற்றங்கொள்ளச் செய்யும் கருணை தேவதையை சிறுமியின் முகமாய் காட்டும் 'அடை'

இரவை அழிக்கும் மழை கூறிய கதைகளை தன் கதைகளாக கொண்டு நிற்கும் கல்யாளிகளின் 'இது எனது ஆயிரத்தோறாவது இரவாக இருக்கலாம்'

தன்னை மட்டுமே உலகமாக்கப் பார்க்கும் சகியின் நம்பிக்கை மிளிரும் 'வேற்றுலகக் கவிதை'

தன்னை நிரப்பிக் கொள்ளத் துடிக்கும் முத்தத்தின் வரலாற்றைக் கூறும் 'தனியே ஒரு முத்தம்' என நீளும் கவிதைகளோடு இருக்கும்  பா.வெங்கடேசனின் நீளா ரசனையான வாசிப்பனுபவத்தையும், பழைய நினைவுகளையும் மீண்டெடுக்கச்செய்தது. 

நீளா
காலச்சுவடு வெளியீடு

நன்றி- சிலேட்

Sunday, April 26, 2015

மாயத்தில் கவிதையாகும் யதார்த்த வெளி

தோட்டாக்கள் பாயும் வெளி- மாயத்தில் கவிதையாகும் யதார்த்த வெளி
-R.அருள்

 இன்று  எந்த கவிதைத் தொகுப்பை எடுத்துக் கொண்டாலும் இவைகள் தாம் இக்கவிதைகள்  என அஞ்சனம் கூறி கவிதைக்குள் இலகுவாக பயணிக்கலாம். காரணம் கவிதைகள் தங்களுக்கென பாடுபொருள்களை வைத்துக்கொண்டு அவைகளைச் சுற்றியே பயணிக்கின்றன. கவிதைகள் அழகியலுக்காக மட்டும் செய்யப்படுகின்றனவோ என்ற உணர்வை இவைகள்  ஏற்படுத்துகின்றன. மண் சார்ந்த கவிஞனின் அனுபவம் அரிதாகவே காணப்படுகிறது. கவிதைகள்  அறிவுத் தேடலுக்காகவும் தன சுயம் சார்ந்த  தேடலுக்ககவும் செய்யப்பட்டு தோல்வியடைகின்றன.
சிறந்த நவீன கவிதையோ அவ்வாறில்லாமல் கவிஞனின் ஆன்மாவை முன் நிறுத்தி இப்பிரபஞ்சத்தை குறிப்பாக மண்ணின் மனத்தை வாசகனுக்கு காண்பிக்கிறது. கவிஞனின் ஆன்மத்தினூடாய் பார்க்கப்படும்  இப்பிரபஞ்சத்தின் அழகியலே நவீனக் கவிதையின் இலக்கணம். கவிஞனின் ஆன்மமே  கவிதையின் வடிவம். அதனூடாய் காட்டப்படும் பிரபஞ்சமே அதன் அழகியல். கவிஞனுக்கும், கவிதைக்கும், இப்பிரபஞ்ச வெளிக்கும் மத்தியில் நடக்கும் ஊடாட்டமே ஒரு கவிதையை நவீனக் கவிதை என நம்மை அழைக்க தூண்டுகிறது. இந்த இலக்கணத்தை மீறின கவிதைகள் அனைத்தும் ஒரு எழுத்தாளனின் செய்பொருளாக இருக்குமே தவிர கவிஞனின் படைப்பாகாது.
இந்த வகையில் நா. பெரியசாமியின் தோட்டாக்கள் பாயும் வெளி கவிஞனின் ஆன்மத்தை முன் நிறுத்தி அதினூடாய் நாம் பார்த்து அனுபவிக்கிற அனுதின வாழ்வியலை அதன் சாரமற்ற நிலையிலிருந்து அழகூட்டப்பட்ட மாய உலகமாக பிரதிபலிக்கிறது. இங்கு புரட்சியாளன் என்று யாரும் இல்லை. கவிதையும் புரட்சிக்காக எழுதப்படவில்லை. தலைப்பைப் படித்துவிட்டு தொகுப்பினுள் நுழையும் பொது கவிதைகள் இலட்சியவாதியின் தோட்டாக்கள் அல்ல,  அவைகள் வெறுமனே ஒரு சாமான்ய மனிதனின் அனுபவங்களே என்ற வியப்பை தருகின்றன.
இந்த சராசரி மனிதன் பல்வேறு பரிமாணங்களில் மகளிடம் அன்பு கனிந்த தந்தையாகவும், மகனிடம் பொறுப்பு மிகுந்தவராகவும், சிறந்த வாசகராகவும், மனம் குழம்பிய குடிமகனாகவும் கவிதைகளில் சிதரிக்கக்கப்படுகிறார். "அணிலாடுமறை" கவிதையில் கவிஞன் சராசரி மனிதனாக அற்ப விசயங்களை நேசிக்கிறவனாக,

இயல்பில் எதையும்
செல்லப்பிராணியாக
வளர்க்கத் தெறியாத எனதறையுள்
எனத் தொடர்ந்து
மகளின் பிடிவாதத்தால்
கதைசொல்லும் கனிவானத் தகப்பனாக மாறுகிறார். ஆனால் கதையில் தந்தைக்குள் இருக்கும், சராசரி மனிதனுக்குள் இருக்கும் கவிஞன் வெளிப்பட்டு
சகியின் காதலை
அக்கினியில் பிரவேசிக்க செய்தவனின்
துரோகக் கோடுகளை
சுமந்து திரியும் அதன்
கதையை கூறினேன்
என பழமையின் மீது தோட்டாக்களை நவீனக் கவிஞன் வெளியேற்றுகிறான்.
         கவிதைகளில் மகனைப் பற்றி பேசும்போது மட்டும் அன்பு கனிந்தவராக இல்லாமல் பொறுப்பு மிக்க தந்தையாக வெளிப்படுகிறார். மகளை பொறுத்தவரை  தாராளமாகவும் உணர்வு பெருக்குடன் இருக்கும் தந்தை மகன் என்றதும் உணர்வுகள் அடைபட்டு "தலையணை" கவிதையில்,

மற்றொரு நாளில்
உரித்து வைக்கப்பட்ட ஆரஞ்சுகள் அருகே
சொடாபீம் அமர்ந்திருக்க
அதுவும் எனக்கென்றான்
கிழியும் வரை  வேறேதும் இல்லையென
நிபந்தனைக்குப்பின்

என கவிதையில் தந்தையின் பொறுப்புணர்வு மேலிடுகிறது. அதோடு தலையணை மேகத் துண்டாக கனவுலகில் மாயமாகிறது. இந்த சராசரி தந்தையை பார்க்கும் பொது டால்ஸ்டாயின் அன்னா கரினினாவில் வரும் சம்பவம் நினைவிற்கு வருகிறது. நாவலின் ஆரம்பத்தில் குழப்பம் மிகுந்த சூழ்நிலையில் ஒப்லான்ஸ்கி தன் மகன் மற்றும் மகளை அணைக்கும் பொது தந்தையின் மகள் மீதான அன்பு ஈர்ப்பு மிகுந்ததாகவும் அதுவே மகன்
மீது இடைவெளி கொண்டதாகவும் உணருவார் . இது அனுதின சாதாரண வாழ்வியல்  விசயமாக இருந்தாலும் இலக்கியத்தில் பிரபஞ்சமளவில் இயங்கும் மனித உணர்வாக மிளிருகிறது.
கண்டுகொள்ளாமல் விட்டுவிடும் சிறு விசயங்களை பெரியசாமி தன் கவிதைகளில் அழகியல் ததும்ப மெருகூட்டுகிறார். விலைவாசிப் பிரச்சனை சாமான்ய மனிதனின் மிகப்பெரிய எதிரி அதே நேரத்தில் அதிகம் கணக்கில் கொண்டு பேசப்படாத ஒன்று. எதைப்பற்றி பேசினாலும் அதை ஒரு பிரச்சனையாகவே எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. தன் மாய வார்த்தைகளில் பிரச்சனையை இவர் கவிதைப்படுத்துகிறார்.  "வேர்கள் வான் நோக்கி வளர்ந்தன" கவிதையில்

ஆடுமாடுகள் அந்தரத்தில் பறந்தன
அந்தரத்திலேயே தங்கின
...................
லிட்டர் ஐம்பதுக்கு விற்றது காக்கைப்பால்
மும்மடங்கு விலை அதிகம் குருவிப்பால்
...............,,..........
இப்படிதான்
காக்கை மருத்துவரை அணுகினேன்
ஒரு  மண்டலம் காக்கைக் குஞ்சின் மூத்திரம் தேக்க
குணமாகிவிடும் தீராத மூட்டு வலியுமென்றார்.

என கேலியுடன் முடிந்தாலும்  அத்தியாவசியத் தேவைகளே  பூர்த்தியாக்கப்படாமலிருக்கும் அவலத்தைதான் கவிதை தாங்கி நிற்கிறது. இதே போன்ற வலியைத்தான் "யாருடைய கைகள் அவை" நமக்கு நினைவூட்டுகிறது.
இந்த சராசரி மனிதனுக்கு தன் குடும்ப தேவைகள் பூர்த்தியாக்கப்படாதது முற்றும் பெரிய பிரச்னை அல்ல, இவனை நோக்கி அரசியல் சதியும் வாழ்க்கையை இல்பொருளாக நடந்து கொண்டிருக்கிறது என்பதை "நெட்டிலிங்கப் பூ" நமக்கு தெரிவிக்கிறது. ஓருபுறம் கறைபடிந்த அரசியல் தன் வாழ்வாதாரத்தையே கேள்விக்குள்ளாக்க அதைத் தவிர்க்க "மூதாயில்”

பெரும் மூச்சிரைப்போடு
பாட்சா மலையுச்சி
அடையும் சராசரி மனிதனுக்கு காத்திருப்பது

விந்து உறைந்த லூப்புகளும்
விட்டு சென்ற பரா ஜட்டிகளும்
..................
டாஸ்மாக் பாட்டில் நீர் உறைகளென
மாசுபட்ட சீரழிந்த சமுகமே.
இவ்வளவு பிரச்சனைகளுக்கும் மத்தியில் இவனுக்கு இருக்கும் ஒரே ஆதரவு புத்தகங்களில் உயிர் கொண்டிருக்கும் எங்கல்சும், மார்க்சும், மார்க்வேசும், போர்ஹெவும் தான். தன் "மேல்தளத்தில் அமைந்த குறு அறைக்குள்" நுழைந்த உடனே இந்த மேதைகள் இவனது அந்தரங்க உலகத்தில் புத்தகங்களில் இருந்து உயிர் பெற்று உரையாடல் நடத்த வந்து விடுகின்றனர். நிஜ உலகிலிருந்து பாலாவும்  கலந்து கொள்கிறார். இந்த உரையாலில் சராசரி மனிதன் யாரும் பொருட்படுத்தாத தன் பிரச்சனைகளை முக்கியப்படுத்தி பேச ஒரு உத்தியை கண்டுபிடித்துவிடுகிறார். இவர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் இயல்பாகிவிட்ட நிலையில் யதார்த்தத்தை மாயாஜாலமாக்குகிறார். "அக்டோபர் முதல் நாளில்" மரித்த தேசப்பிதாவை தட்டியெழுப்பி  கடைதெருவில் தன்னோடு நடக்க வைக்கிறார். சமூகச் சீரழிவை கண்ட தேசப்பிதா " ஐயோவென மயங்கி சரிகிறார் "பாகெட்  பாலை, அதுவும் கலப்படம், ஆட்டுப்பாலென கொடுத்து "இனி உங்கள் ஜனன நாளில் மட்டும் வாருங்கள்" என்று வழியனுப்பபடுகிறார்.
ஆக கவிதைத் தன் பாடுபொருளாக அன்றாட பிரச்சனைகளைத் தவிர்த்து தன் அழகியலுக்காக மாத்திரம் பொருண்மைகளைத் தேடுமானால்  அது   சமூகப்  பொறுப்பற்ற ஒரு  அழகு பொருள் மட்டுமே. அதே  நேரத்தில்  சமூகப் பிரச்னைகள் மட்டுமே கவிதையின் பொருண்மையானால் யதார்த்தம் இலக்கியத்தின் மீதான தன் பொறுப்பை உதாசீனம் செய்கிறது. இரண்டிற்குமான பொறுப்பு பரஸ்பரமானது. இவைகள் ஒன்றை ஒன்று சந்திக்கும் இடமாகத்தான் நா. பெரியசாமியின் தோட்டாக்கள் பாயும் வெளியை  நான் பார்க்கிறேன். இங்கு காண்பிக்கப்படும் புற உலகம் யதார்த்த உலகமாக இருப்பினும் கவிஞனின் ஆன்மத்தின் வழியே யதார்த்தம் மாயத்தில்  கவிதைப்படுத்தப்படுகிறது.

நன்றி-இன்மை.காம்

Thursday, April 23, 2015

நன்றி - அடவி ஏப்ரல் 2015 இதழ்

நேசங்களுடனான பெருவாழ்வின் மீதமிருக்கும் நினைவுகளும் தீர்ந்துபோகாத அபத்தங்களுக்கு எதிரான சொற்களும் நிறைந்த
அடர் வெளி :
  - ஜீவன் பென்னி



 நவீன கவிஞனினுலகு நீண்ட முகம்பார்க்கும் கண்ணாடியைப் போலவேதானிருக்கும் என்று தோன்றுகிறது – இட வல மாற்றமாக -

நிகழ்கால உலகின் எல்லா இயக்கங்களும் ஒரு வெற்றிடத்தில் நடந்துகொண்டிருப்பதாய் தோன்றுமவனுக்கு இப்பிரபஞ்சத்தில்

எப்போதுமலைந்து கொண்டிருக்கும் முடிவற்ற ஒரு புள்ளியெனவே அவன் அவனை நினைத்துக்கொண்டிருக்கிறான். எல்லா

நியாயங்களும், சட்டங்களும், போதனைகளும், சரி/தவறுகளும், நம்பிக்கையற்றே அவனுடன் எப்போதும் பழகிவருகின்றன.

நகரமயமாக்கலின் கொடூரங்கள் எல்லா சமநிலைகளையும் எல்லா விதங்களிலும் பாதிக்கின்றன. ஒரு பச்சைமரமும், பட்டாம்பூச்சியும் ஒரு

சூழலை மனிதனை ஒத்தே பாதிக்கின்றன. அதன் காரணிகளும் வழிமுறைகளும் ஒன்றாகவே பயணப்படுகின்றன. எல்லாவற்றிற்கும் ஒரே உயிர்,

ஒரே வாழ்க்கை. தன்னிருப்பிடங்களை இழப்பதற்காக நிர்பந்திக்கப்படும் இவைகளின் உடைந்த வாழியல் முறை பெருமளவில் அச்சூழலின்

காரணிகளை  பாதிக்கத்தொடங்குகின்றன. எல்லாவற்றிற்கும் ஒரு காலமும், வாழ்வும், நெகிழ்வும், மரணமுமிருக்கின்றன, மிகத்

துரதிர்க்ஷ்டமாக இவைகளின் வரிசைகளையும் காரணிகளையும் விழுமியங்களையும் ஒன்றுக்கொன்று பாதிப்பதாக முரண்படுவதாக

மாற்றிக்கொண்டிருப்பதுதான் நகரமயமாக்கல். வளர்ச்சியென்பதன் பொருட்டு தினந்தோறும் மாறிக்கொண்டே வரும் இருப்பிடசூழலின்

தொடரிணைப்புகளான இயற்கைச்சூழலும், வாழ்வாதாரங்களும் நெருக்கடிகளையே எற்படுத்துகின்றன. இவைகளை அனுபவிப்பதன்

வலிகளையும், நுண்ணுணர்வுகளுடனான வேதனைகளையும், தோரனைகளாகவும், வெறும் எழுத்து கூட்டங்களாகவும் இல்லாமல் ஒரு

பிரக்ஞையின் வழியாக தொடர்ந்து தூலாவிக்கொண்டிருக்கும் ஒரு சக மனிதனின் அகவயமான திரட்சியான தேடல்களை பெரியசாமி

கவிதைகளாக்கியிருக்கார். என்றுமே தீர்ந்திடாத காமத்தின், காதலின், நட்பின், துரோகத்தின் இடைவிடாத சொற்களையும், ஒரு

தலைக்குனிவை, காத்திருத்தலை, உறவுகளின் நிச்சயமிண்மைகளை, மதுவின் வாசனைகளை, பூவின் அகோர மரணத்தை, அரசியலின்

வெக்கங்களில்லாத சொற்களையும் விழுந்துகொண்டிருக்கும் இலைகளெனச் சொல்லிச்செல்கின்றன பெரியசாமியின் சொற்கள்.

   தொடர் வளர்ச்சிக்காகவும், பெரு வியாபார லாபங்களுக்காகவும்  அறுபடும் உறவுகளுக்கானதும், உயிர்துறத்தலுக்கும்,  தொடர்

வாழ்விற்கானதும், நினைவுகளுக்கானதுமான தொடர்ச்சியான பிரதிகள் யிவை. மயில் தோகையின் எளிய அன்புகளாகவும்

நேசங்களாகவுமிருக்கின்ற சேகரங்களேதுமில்லாத இவ்வாழ்வின் தொடர் தேடல்கள் இந்த வரிகள். ‘தன் மயக்கம்’-கவிதையின் வெளி

அளப்பரியது, சொல்லி முடிக்கப்பட்ட அவ்வரியின் மீதான நினைவுகள் திரும்பத்திரும்ப வெவ்வேறு யிடங்களுக்கு கூட்டிச்செல்கின்றன.

மேலும் எதிர்த்தனங்களின் வழியே ஒரு தேடுதலையும் உருவாக்குபவை. பூனையாகி ஒரு நினைவில் நின்றிடும் ‘அம்மா’ சார்ந்த சொற்களும்,

கடவுளுக்கான எதிர் அதிகார அரசியலின் மையமிட்டு சொல்லப்பட்டிருக்கும் ‘நரபலிகள்’ கவிதையும் கொஞ்சம் யோசிக்க வைக்கின்றன.

’மெய் வருத்தம்’ – உடல் மனமாகி இன்பங்கொண்டு முடிந்த பின் நிகழ்வதான அதிகாலை அயர்ச்சியில் அவ்வளவு அன்பிருக்கிறது, மேலும்

மனதின் புரிதலுமிருக்கிறது. தான் ஏமாந்து போகும் சூழலுக்கு மாற்றாகவே அவரின் கனவுகளில் மழையும் வெய்யிலும்

பொழிந்துகொண்டேயிருக்கின்றன. அவை தானிந்த சொற்கள், அவ்வளவு குளிர்ச்சியாகயும், அலைகளாகவும், வெப்பம் தகிக்கும்

சொற்களாகவுமிருக்கின்றன யிந்த சொற்கள். ‘நகரின் பரிசு’ கவிதையில் நிகழும்/நிகழ்ந்து கொண்டிருக்கும் சக மனிதனின் செயல்பாடுகள்

ஒரு காட்சிநிலையின் அழகியலோடு யினைந்து மனதிற்கு மிகுந்த நெருக்கம் கொள்கின்றன. ‘நமக்கல்ல’, ‘வதைகளின் ருசியறிந்தவர்கள்’

தலைப்பிட்ட இரு கவிதைகளும் நிகழ்கால அரசியல் மொழியையும் அதன் அதிகாரலாப நோக்கங்களையும் தீயிட்டுக்கொழுத்துகின்றன.

புரிதலுக்கான அன்பின் மொழிகளையும் அதன் நித்தியத்துவத்தையும் தவிப்பையும் இக்கவிதைத்தொகுப்பிலுள்ள சில கவிதைகளில்

உணரவும் புரிந்துகொள்ளவும், அனுபவிக்கவும் முடிகிறது. சிறுவயதின் பால்யகாதலியின் நினைவுகளாலான ‘மதுவாகினி’ கவிதை

மேலும் மேலும் எல்லோர் மனங்களிலும் உயிர்பித்துக்கொண்டேயிருக்கின்றன. முடிவுறாத அந்நிகழ்வுகளிலான அக்கவிதைகளின்

முடிவுச்சொற்கள் ஒரு ஓவியத்தின் அமைதியென கனமான புன்னகையுடனும், புதிர்களுடனும், மௌனமாகவுமிருக்கின்றன. குழந்தைகள்

வரைந்து கொண்டிருக்கும் சித்திரங்களின் மொழிகளையும் அழகுகளையும் ரசிக்காமல் அவர்களின் திசைகளை திருப்புவதிலும் அவற்றை

கலைப்பதிலும் நாம் கொண்டிருக்கும் வேகமும் ஆர்வமும் தான் தற்கால வாழ்வின் பெரும் வேதனைகளாகப் பரவிக்கொண்டிருக்கின்றன.

ந.பெரியசாமியின் கடவுள்கள் அவரைப்போலவே மிக எளிமையாகவுமிருக்கிறார், ஒவ்வொரு பிரார்த்தனைகளை மிக எளிதாக

நிறைவேற்றுபவராகவும் இருக்கிறார். ‘மயில்’, ‘கசப்பு’, ‘காட்சிகள்’, ’புலி வால் பிடித்த கதை’, ‘காத்திருந்த துளி’ ஆகிய கவிதைகளின் வெளியும்

அவை யுண்டாக்கும் காட்சிகளும், சிறு கவிதைப்பிரதிகளின் முக்கிய செயல்பாடான அடர் செறிவுகளான நீட்சிகளின்

சொற்களெனயிருக்கின்றன, அவை ஒரு இசையின் வடிவத்துடன் மிக நெருக்கம் கொள்ளவும் வைக்கின்றன. மதுவின் வாசனைகளின்

மீதமிருக்கும் சொற்களை உள்ளடக்கிய பிரதிகளும், சில நெருக்கமான வரிகளும் இவைகளிலுள்ளன, ஆனால் இவை வெறும்

போதையாகயில்லாமல் நிறைவான நேசத்துடனே இருக்கின்றன. முத்தங்களை பகிர்ந்து கொள்ளும் நண்பனின் கவிதைகளுக்கான

உரையாடல்கள் எப்பொழுதும் போலவே நெருக்கமாகவும் அணைத்துக்கொள்ளும் படியாகவே யிருக்கின்றன.

   தொடர்ந்து அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வாழ்வும் நிலையும் அவமானமும் வெற்றிடமும் நினைவுகளும் வெளியும் ஒரு

சகிப்புத்தன்மையும் பல கேள்வியும் தொடர்ந்து உணர்த்துதலின் வழியிலான பிரதிகளாக பெரியசாமியிடமிருந்து வெளிவந்து

கொண்டிருக்கின்றன. அவர் இவ்வாறு கலைத்துக்கொண்டிருக்கும் வாழ்நிலைக் காட்சிகளின் பிம்பங்கள் முன்னெப்போதுமில்லாத

அளவுகளினூடே எந்த யிடைவெளியுமற்று அவரின் சுயம் சார்ந்த கேள்விகளாகயில்லாமல் பொதுப்பரப்பில் கரைந்து கொண்டிருக்கும்

பிரக்ஞையின் கேள்விகளாகவும் பதில்களாகவும் எதிர் சொற்களாகவும் மையங்கொண்டுள்ளன. சற்று நீண்ட கவிதைகளின்

இயங்குநிலைகளிலாலான கவிஞரின் வார்த்தைகள் மிகப்பலவீனங்களுடனே அனுகப்பட்டும் தெரிவு செய்யப்பட்டுமிருக்கின்றன,

கொஞ்சமேனும் அக்கறையுடன் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இப்பிரதிகள் உருவாக்கும் சவால்களின் தேடல்களும் சுதந்திரங்களும் அகமன

விசாரனைகளும் உணர்வலைகளும் ரசிக்கும் படியும் பிரியங்கொள்ளும் படியாகவுமே யிருக்கின்றன, மேலும் நேசங்களுடனான

பெருவாழ்வின் மீதமிருக்கும் நினைவுகளையும் தீர்ந்துபோகாத அபத்தங்களுக்கு எதிரான சொற்களும் நிறைந்த அடர் வெளியென

பரவியுமிருக்கின்றன இக்கவிதைகள்.

மதுவாகினி –
 ந.பெரியசாமி –
அகநாழிகை பதிப்பகம் – டிசம்பர் 12 – ரூ 70/-             


நன்றி - அடவி ஏப்ரல் 2015 இதழ்