Tuesday, December 23, 2014

சாறற்ற சோள தக்கைகள்...

சாறற்ற சோள தக்கைகள்...
ந. பெரியசாமி

எறும்புகள் நொறுங்கிய அரிசிகளை சுமந்தவாறு அங்குமிங்குமாக ஊர்ந்துகொண்டிருந்தன. அதிசயமாக எவ்வித தீங்கும் கொடுக்காது வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவன் எனை பார்க்க எங்கப்பா போகுது என்றான். அதன் புற்றுக்கு என்றேன். புற்றுனா? வினாவினான். அதன் வீட்டிற்கு என்றேன். நாம கடையில சிநாக்ஸ் வாங்கி வந்து வீட்டில் தின்பதுபோன்றா என்றான். இது அப்படி அல்ல உணவு கிடைக்காத காலங்களில் பசியாற சேமிப்பதற்கு கொண்டு செல்கிறதென்றேன். சேமிப்பு என்றால்.... அவனும் நானும் தொடர்ந்த உரையாடல் நினைவுக்கு வந்தது வெ.வெங்கடாசலத்தின் திமிர் கவிதைத் தொகுப்பை வாசித்து முடிக்க.

எல்லோருக்கும் 'சேமிப்பு' என்பது எதிர்காலத்தின் தேவையை பூர்த்திகொள்வதற்காக இருக்க. தொடர்ந்து அவமானப்படுத்தப்படும் ஒரு இனத்திற்கு சேமிப்பு என்பது அழிக்கப்படவேண்டியதாக இருக்கிறது. 'எனது நாட்குறிப்பு' எனும் கவிதையில் இதை உணர முடிகிறது. காலகாலமாக இடமற்றவர்களாக மாற்றி, கற்பழிப்புகளை நடத்தி, உழைப்பைச் சுரண்டி, சொத்துக்களை பறிமுதல் செய்து, மலத்தின் நாற்றத்தோடு இருக்கச் செய்து, மலத்தை தின்னச் செய்து, கொத்துக் கொத்தாய் உயிரைப் பறித்து, செருப்புப்போட அனுமதி மறுத்து, துண்டுகளை தோல் ஏற்ற மறுத்து, குடிக்க நீர் கொடுக்காதிருந்து, கல்வியற்றவர்களாக மாற்றி, கையேந்தி நிற்கச் செய்து, வன்புணர்ச்சி செய்தல் என எமாற்றத்தின் வலி அவமானத்தின் வலி என வலிகளையும் அவமானங்களையும் சேர்ந்து வைத்திருப்பதைக் காணச் சகிக்காது திமிரி எழுந்து கல்விகற்று கேள்வி கேட்டு மானமும் ரோசமும் எனக்கு உண்டென  அதிர அதிர ஒலிக்கும் பறையாக இத்தொகுப்பைப் பார்க்க முடிகிறது.

உடல்நீர் வற்றி உலர்ந்து
விலா எலும்புகள் துருத்தி நிற்கும்
அந்த கறுத்தமேனி முதியவரை
டேய் என்று அதட்டியது ஒரு சிறுவன் குரல்
அந்த அதட்டலுக்கு வயது ஈராயிரமாண்டுகள்
அந்த அதட்டலை
திரும்பி முறைத்தது ஒரு பார்வை
அந்தப் பார்வைக்கு வயது கால் நூற்றாண்டு
அந்த அதட்டல்
அந்த முறைப்புமுன் முதன்முறையாக பம்மியபோது
அம்முதியவர் கண்களில் விரிந்தது புலரி.
என முடியும் திமிர் கவிதையில் இதற்கான கூறுகளை பார்க்க முடிகிறது.

விசையோடு எழுந்து கல்வி கற்று  பெரும் உழைப்பைச் செலுத்தி முன்னேற்றம் கொண்டிருப்பதை காணச் சகிக்காது கிடைக்கும் காரணங்களை புள்ளியாக்கி அழிவின் வட்டங்களை வரைந்தபடி இருக்கும் ஆதிக்க திமிரின் நீளும் பட்டியலில் என்றென்றும் நினைவிலிருக்கும் இளவரசன் திவ்யாவின் காதலை பகடையாக்கி மூன்று கிராமங்களை காவுகொண்ட கயமையை இவ்வுலகம் மறவாது. அக்கிராமங்களை நேரில் சென்று பார்க்கையில் அழிவின் துயர்களை பேசிய அப்பகுதி மக்களின் வலியை தாங்காது திரண்ட நீர்கள் எற்பட்ட கோபத்தால் உடலுறிய வெப்பத்தால் ஆவியாக்கிட நீரற்ற வெறித்த விழிகளோடு பார்த்து திரும்பிய நாட்களை நினைவூட்டின கவிதைகள். பயம் எனும் சொல்லை விதைக்க இளவரசனை பலியிட்டு வலம் வரும் காட்சியை வேடிக்கைப் பார்த்தபடி இருக்கும் வாழ்வை ஏளனமாக பார்க்கின்றன கவிதைகள்.

தொகுப்பில் நிறைய்ய கவிதைகள் எள்ளலோடு எழுதப்பட்டிருக்கிறது. அதிகாரத்திற்கு எதிரான கோபத்தின் மிக வலிமையான வடிவம் எள்ளல்கள்தான் என்பது மேலும் நிரூபனமாகியது.

துயரமும், வலியும் நிறைந்த வாழ்விலிருக்கும் அழகியலையும் அவ்வப்போது காட்சிபடுத்தும் கவிதைகள் வாசிப்பில் ஆசுவாசப்படுத்துகின்றன. 'தாத்தா கோவணம்' கவிதை தெரிந்த தாத்தாக்களையெல்லாம் கண் நிறைத்தது. அவர்களின் உருவமே அழகிய ஓவியம். பார்த்து ரசிக்கவும், வாழ்வை படிக்கவுமாக நடமாடும் சிற்பங்கள் தாத்தாக்கள் என்பதை கவிதையில் காட்சியாக்கியுள்ளார் வெங்கடாசலம்.

வளர்ந்துகொண்டே இருக்கும் நகரில் நம்மின் இழப்பை இவரும் தன் பார்வையில்பட்டியலிட்டுள்ளார். நமக்கான பட்டியலாகவும் அது  இருப்பதோடு துயரின் வடிகாலாகவும் இருக்கிறது.

எனக்காக நீ எதுவும் பேச வழியற்று இருக்க பெய்யும் கருணை மழையால் சாரு வத்திப்போன சோளத்தக்கையை மேலும் பொடிந்துபோகச் செய்யுமே ஒழிய துளிர்ப்புக்கு வழிவகுக்காது எனும் எள்ளல் நிழலாய் தொடர்கிறது.

எதுவுமற்றவன் எதை இழந்து எதைப் பெறுவது எனும் கேள்விக்கு இச் சமூகம் என்ன பதில் வைத்திருக்கிறது? தள்ளி உட்காரும் நீதியில்தான் 'இடம்' கிடைக்கும் என்பது காலத்தின் உண்மை.

கருப்பனும் சடையனும் புரண்டெழுந்து கருப்புச் சூரியனாக வலம் வந்து அவமானங்களை அழித்து பரிணாமம் கொள்ள வேண்டிய வாழ்வின் இலக்கு வெகு தூரத்தில் இல்லையெனும் இவரின் நம்பிக்கை நமக்கும் பற்றிக்கொள்கிறது.

வெளியீடு
மருதம், பெரியகாப்பன்குளம், நெய்வேலி-607802
விலை-ரூ.40

nantri:malaigal.com

Saturday, December 13, 2014

nantri:karikalan

கவிஞர் ந.பெரியசாமியின் மூன்றாவது தொகுப்பு தோட்டாக்கள் பாயும் வெளி வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.இது இவரது மூன்றாவது தொகுப்பு.இவர் இடதுசாரி பண்பாட்டமைப்பான தமுஎகச மூலமும் விசை இதழ் மூலமாகவும் செயல்பட்டு வருவது மகிழ்வையும் நம்பிக்கையையும் தருகிறது.

இன்று கவிதை சிக்கலற்ற எளியநடைக்கு வந்துவிட்டது.இதன் பின்னால் நிகழ்ந்திருக்கும் அரசியல் மாற்றமே இதற்கு காரணம். நம் சமூகத்தின் பன்மைத் தன்மை இலக்கிய வெளியிலும் அதன் பிரதிநிதித்துவத்தை கைப்பற்றியிருப்பதை நாம் அவதானிக்கலாம்..இதன் காரணமாகவே எளிய மனிதர்கள் எளிய எழுத்துக்கள் .
எளிமையே இலக்கியத்திலும் அழகு.

தோட்டாக்கள் பாயும் வெளி இத் தலைப்பும் கவிதையும் நாம் வாழ நேர்ந்த இவ்வுலகை அழகாக படம்பிடித்துக் காட்டுகிறது.ஒரு இடத்தில் மனிதன் பிரவேசிக்கத் தொடங்கியதும் அவ்விடத்தில் நிலவிய அமைதி சமத்துவம் சுதந்திரம் விலகி சுயநலம்,அமைதியின்மை,அதிகாரம்,வன்முறை போன்ற எதிர்மறை விஷயங்கள் பரவிவடும் நிலையை சிறிய இக்கவிதை துல்லியமாகக் காட்டிச் செல்கிறது.

கவிதை எழுதுவதென்பது ஒருவித பணபாட்டு அசைவு.நமது இறுகிய மதிப்பீடுகளில் கலையின் வழியாக ஒரு உடைப்பை நிகழ்தும் முயற்சி.சாதி மத இன வெறியற்ற போரற்ற அன்பும் இணக்கமும் நிறைந்த உலகை கனவு காணும் ஒரு விழைவு.பெரியசாமிக்கும் இப்படி பறந்து பட்ட கனவுகளிருப்பதை இவரது கவிதைகள் வழி அறியமுடிகிறது.இது கனவாகத் தேங்கிவிடப் போவதில்லை.ஏனென்றால் வாசிப்பவர்களின் மனங்களில் இக் கவிதைகள் எழுப்பும் கேள்விகள் ஆழ்ந்த விளைவுகளைத் தோற்றுவிக்கும் ஆற்றல் படைத்தவை..

இன்று காந்தியே வந்தாலும் பாக்கெட் பாலையே தருகிற அளவில்தான் நமது சுதேசித் தன்மை இருக்கிறது என்கிறார் ஒரு கவிதையில்.பன்னாட்டு நிறுவனங்களின் வருகையால் அழிந்த நம் விவசாயம்,இயற்கை,சிறுதொழில்,விழுமியங்கள் என விரிவாக சிந்திக்கம் வாய்ப்பை இக்கவிதை நமக்கு வழங்குகிறது.

குடும்ப உறவுகள்,அழியும் இயற்கை வளம்,பண்பாடு சார்ந்த நுண் அரசியல் என தொட்டுத் தழுவிச் செல்கிறது பெரியசாமியின் கவிதைகள்.

பெரியசாமிக்கு வாழ்த்துககள்.கவிதை ஆர்வலர்கள் வாசிக்க வேண்டிய நல்ல தொகுப்பு தோட்டாக்கள் பாயும் வெளி.

nantri:karikalan

Sunday, December 7, 2014

கரகோசம் எழுப்புங்கள்
வானவேடிக்கை நிகழ்த்தி
பட்டாசுகளை கொளுத்தி போடுங்கள்
சூழல் குறித்து
சாவகாசமாக கவலைகொள்ளலாம்
ஆங்காங்கே கும்பல் கூடி
விசில் அடித்து ஆர்ப்பரியுங்கள்
அவரவர்களுக்கும் தெரிந்த கலைகளில்
கொண்டுவாருங்கள் கொண்டாட்டங்களை
அரசுகளின் புதிய திட்டங்களை
கேள்வியற்று இப்படித்தான் வரவேற்கவேண்டும்

இல்லையேல் உங்களுக்கு
நல்புத்தி புகட்ட வேண்டி
பக்தி பாடல்களோடு பஜனை நடத்துவார்கள்...

Monday, December 1, 2014

nantri: Lakshmi Manivannan

தோட்டாக்கள் பாயும் வெளி
-------------------------------------------
ந .பெரியசாமி கவிதைகள்

வெளியீடு :
புது எழுத்து
2/205 ,அண்ணாநகர் ,காவேரிப் பட்டினம் -635112
கிருஷ்ணகிரி மாவட்டம்

பக்கம் ; 68 விலை ;ரூ 70

"ஆசை கொண்டு வாங்கிய மூன்று சக்கர சைக்கிளை வீட்டினுள் விருப்பம்போல ஓட்டித் திரிந்தேன் . வளர்ச்சி கொள்ள சற்றே பெரிய சைக்கிள் .தள்ளிப் பழகி சிறுசிறு காயங்களுடன் பெடல் அடித்துக் கொண்டிருந்தேன் .விடாபிடியாக அதனோடு பிரியம் கொள்ள நண்பர்களின் ஆலோசனையோடு தொடர்ந்தேன் .அதன் நுணுக்கங்கள் பிடிபட வீதியில் நானும் எல்லோரோடும் ஓட்டினேன் "
முன்னுரையில் பெரியசாமி கூறும் வார்த்தைகள் இவை .இத்தொகுப்புக்குப் பொருத்தமான வார்த்தைகளும் கூட .

மிதமிஞ்சிய சரளம்தான் தற்போதைய தமிழ்க் கவிதை எதிர்கொள்ளும் அவலம் .மற்றபடி பொதுச் சரடை நேர்மையுடன் எதிர்கொள்ளும் கவிதைகளால் நிரம்பி இருக்கின்றன பெரியசாமியின் தோட்டாக்கள் பாயும் வெளி .போலியான .பாசாங்குகள் அற்ற,தனது உலகம் பற்றி மிகையான பற்றுதல்கள் அற்ற கவிதைகளை இத்தொகுப்பில் பெரியசாமி எழுதிச் செல்கிறார் .இது இப்போது காண்பதற்கரிய பண்பு .எனினும் கவிதை சொல்லல் முறையில் தென்படும் அலுப்பு குறைபாடுதான் . ஒரேவகையான வாக்கிய அமைப்புகள் இதற்குக் காரணம் .லௌகீகத்திலிருந்து வெளிப்படும் இவரது கவிதைகள் முடக்கு வாதம் வந்தவற்றைப்போல உள்ளன .சில கவிதைகளைப் படித்து முடித்ததும் ஏதோ ஒரு குறைபாடு இருக்கிறது எனும் எண்ணத்தை மனதில் ஏற்றுகிறது அக்டோபர் முதல் நாளில் , நிறம் மாறும் தேவதை, எழுத மறந்த பக்கங்களில் ஆகிய கவிதைகள் இதற்கு உதாரணங்கள் .

தோட்டாக்கள் பாயும் வெளி , நட்சத்திரத்தை அறையுள் அடைத்தவள்,சங்கடை அமுது ,பாம்புகள் பாம்புகளாயின,வண்ணக்கிளி ,வேர்கள் வான்நோக்கி வளர்ந்தன ,மழை,உயிர்ப்பு ,நித்திரையை உருட்டும் பூனை ,எனது கடல் ,ஓணான் உருவாக்கிய பகை ,அணிலோடு மழை என பல கவிதைகள் சிறப்பானவை .

இத்தொகுப்பில் "நிலையானது " என்கிற கவிதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது .

கவிதை ஆகச் சிறந்த ,எளிய கலை வெளிப்பாட்டு வடிவம் என்பதில் சந்தேகமே இல்லை .அது எழுதுகிறவனின் மன ஓட்டத்தையும் காட்டித் தந்து விடுகிறது .பெரியசாமி எனக்கு நல்ல நண்பர் . அவர் கவிதையை கண்டுபிடித்தலின் விஞ்ஞானமாக மாற்றித் தரவேண்டும் என்பது ஆசை .

நிலையானது

அந்தி வேளையில்
விளையாடிக் கொண்டிருந்தனர் சிறார்கள்
தன்னிடமிருந்த சாக்பீசால் ஒருவன்
நிறைய கட்டங்களை வரைந்தான்
சிறுமி ஒரு கட்டத்துள்
தாமரை வரைந்தாள்
மற்றவள் வேறொன்றில்
சூரிய காந்திப் பூ
அடுத்து வந்தவர்கள்
மாதுளை கொய்யா மாங்காவென
கட்டங்களை நிரப்பினர் .
திடுமென கோடுகள் மறைந்து
வரைந்தவற்றை கட்டங்கள்
உயிர்ப்பிக்கச் செய்தன .
தெருவில் மின்சாரம் பூக்கச் சிரித்து
அவர்களுக்கானதை எடுத்துக் கலைந்தனர் .
எனக்கானதை நிரப்ப கட்டங்களற்று
வெறிச்சோடிப் போனேன்