Monday, November 3, 2014

என்றும் ஆறாதது பிரியத்தின் காபி

ஒன்றைப்பற்றி சரியான புரிதலற்றிருக்க
அது குறித்து பொதுவான கருத்துரைப்பது அறமாகாது...

சில சம்பவங்கள் நினைவில் இறப்பதில்லை. பல ஆண்டுகளுக்கு முன் நண்பர்களோடு சின்னசேலம் ரயில் பாதையின் அருகில் விளையாடிய களைப்பகற்ற ரயில் நிலையத்தின் உள்ளிருந்த மரத்தினடியில் அமர்ந்திருந்தோம். அருகிலிருந்த காத்திருப்பு பலகையில் அமர்ந்திருந்த மூன்று பெரியவர்கள் உரையாடலில் எங்கள் கவனம் குவிந்தது. இதுங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட வெட்கம் மானம் இருக்காதா? ரயில்வே ட்ரேக் ஓரத்தில் ஒதுங்கி நடக்கக்கூட வழியில்லாம அசிங்கம் செய்து வைக்குதுங்க. ஆம்பள வராங்களேன்னு கொஞ்சம்கூட மரியாத இல்லாம ஒட்காந்திருக்காளுங்கவென திட்டியபடி இருந்தார்கள். அவர்கள் வாயில் மூத்திரம் பெய்ய வேண்டுமென்ற ஆத்திரம் எழுந்தது. அவசரமாக வெளியே வரும் மலம் அறியுமா ஆம்பளையா பொம்பளையான்னு? அவங்களுக்கு மட்டும் என்ன ஆசையா இப்படி வெளியே வந்து மலம் கழிக்க. அப்பகுதியில் பெரும்பாலானவர்களின் வீடுகளில் கழிப்பறை கிடையாது.  வேறு என்னதான் செய்வார்கள். அரசின் பொதுக்கழிவறையும் அப்பகுதிக்கு கட்டித்தரவில்லை. அப்படியே கட்டினாலும் தண்ணீர் வராது. அவர்களோடு சேர்ந்து அரசிடம் கோரிக்கை வைக்கவோ போராடவோ ஒருநாளும் வரமாட்டார்கள். அதுவும் பெண்கள் சம்பந்தப்பட்ட விசயமென்றால் போதும் கலாச்சாரம் கலங்கிப்போச்சு வெட்கம்போச்சு மானம் போச்சு என புலம்பித் திரிவார்கள். பெண்களின் வாழ்வும் வலியும் சார்ந்து எவ்வித அக்கறையும் புரிதலுமற்று ஒழுக்கம் சார்ந்து ஏதாவது கருத்து சொல்லிக்கொண்டிருப்பவர்களை பரிகாசப்படுத்துகிறது நறுமுகை தேவியின் 'சாத்தான்களின் அந்தப்புரம்'

மற்றவர்களால் உணர்ந்து கொள்ளப்பட இயலாத உணர்வும் அனுபவமும் நிறைந்த பெண்கள் மீது ஆண் சார்ந்த ஒடுக்குதலாலும் அதிகாரங்களாலும் உண்டாகும் வலியைக்கூறி எதிர்புணர்வையும் ஏற்படுத்துகின்றன பெரும்பாலான கவிதைகள்.

எதையாவது பற்றிக்கொண்டு வாழ அலைவுறாது தானே வேறொன்றுக்கு பற்றுதலாக இருக்கத் துடிக்கும் மனநிலையை வெளிப்படுத்துகின்றன கவிதைகள்.

நண்பர்களாக இருந்துகொண்டே வேற்று ஆடவர்களோடு இணைத்துப்பேசி நடைபாதையில் பள்ளம் பறித்தபடி இருக்கும் மலின யுத்தியால் மண்டை பெருத்து அலையும் கூட்டம் சகித்து, காதல் சார்ந்தோ காமம் சார்ந்தோ எழுதப்படும் கவிதைகளில் இருக்கும் பெண்ணை எழுதுபவரோடு சுருக்கிப் பார்த்து பரிகாசப்படுத்தும் கழுகுப்பார்வையை பொருட்படுத்தாது தொடர்ந்து இயங்குவார் எனும் நம்பிக்கையை ஏற்படுத்துகின்றது தொகுப்பு.

ஏமாற்றம், விரக்தியால் உண்டாகும் வலி, நிறைவேறா தன் விருப்பம் ஏற்படுத்தும் வலி, இழப்பின் வலி, காதலை சுமக்கும் வலி, பிரிவின் வலி, மறதியின் வலி, அக்கறையின்மையின் வலி, தீரா காமத்தின் வலி, முத்தத்தின் வலி, மூத்திரத்தின்வலி, நிராகரிப்பின் வலி, தோற்றப்பிழையின் வலி, ஒடுக்கப்படுவதின் வலி, செய்திகள் உண்டாக்கும் வலி, உயிர்தெழாத தேவனின் வலியென தொகுப்பில் பெரும்பாலான கவிதைகள் தகிக்கும் வலியோடு இருக்கின்றன.

தன்னை ஒப்புக்கொடுத்தல், குழந்தையின் கோபம், உயிர்த்தெழும் பிரியம், காத்திருப்பின் காதல், பிரிவின் காதல், சமாதானத்திற்குப் பதுங்கும் காதல், ஒற்றைச் சொல்லில் உலாவரச்செய்யும் காதல், செல்லக் கோபங்கள், அருந்தும் பிரியத்தின் காபி, சங்கப் பாடலில் தலைவியின் காத்திருப்பை நினைவூட்டல், கடந்த காலத்தை இன்றைய நினைவில் நிகழ்காலமாக்கல், மிதக்கும் குழந்தமையென பயணிக்கும் கவிதைகளில் ஆசுவாசம் கொள்ள முடிகிறது.

பழக பழக பாலும் புளிக்கும் என்பர். சிலரின் ஆளுமையில் வியந்து நெருக்கம் கொள்ள பூஞ்சை பூத்த அவர்களின் செயல்பாடுகளால் உடைபடும் அபிப்ராயங்கள் எல்லோருக்கும் நிகழ்வதுண்டு. 'பிம்பங்கள் உடைபடும் தருணம்' கவிதையும் அப்படியாததொன்றுதான்.

நீர் கரைத்துக்கொள்ளும். சக்கரை உப்பு என்ற பாகுபாடெல்லாம் அதற்கு கிடையாது. காதலும் அப்படித்தான் பாகுபாடற்றது. தான் இருந்தும் தன்னை இல்லாததுபோல் உணரச் செய்யும்  தன்மை காதலுக்குத்தான் உண்டு. 'திரும்பி ஓடும் கவிதை' நல்ல காட்சியைத் தந்தது.

மிதந்தலையும் பெருங்காமம், மாறத் துவங்கம் தன்னியல்பு, தலைமுறைகளின் சிந்தனைமாற்றம், தன்னை ஒப்புக்கொடுத்து மீட்கும் சிறு சிறு சந்தோசங்கள் என அனுபவங்களைத் தரும் கவிதைகளில் லகுவாக பயணிக்க முடிகிறது.

சிறு துளி உடலில் ஏற்படுத்தும் சில்லிடலில் நெகிழ்ந்து போகக் கூடியவர்கள் நாம். எப்பொழுதும் தளர்ந்த பாகு நிலையில்தான் நாமிருக்கிறோம். எதிர்பாராத கணத்தில் எதிர்பாராதவர்களிடமிருந்து கிடைக்கம் பரிசு நமை எப்படியெல்லாம் மகிழ்த்திருக்கும். அப்படியானதொரு பரிசை வாழ்நாள் முழுவதும் உடன் வைத்திருக்க ஆசைகொள்வோம். அதை பயன்படுத்த முடியாதபோதும். நம் வீடுகளிலும் இருக்கும் இப்படியானதொரு அன்பின் பரிசை நினைவூட்டியது தேவியின் 'உடை' கவிதை.

சமகால விளம்பரங்கள் குறித்த எரிச்சல், புனிதப்படுத்தப்படும் ஆணின் நிர்வானம் குறித்த ஏளனம், அரசின் மீதிருக்கும் தன் விமர்சனத்தை நய்யாண்டி மூலம் கடந்து செல்தலில் நமக்கான மனநிலையும் காட்சிபடுத்துகின்றன கவிதைகள்.

சிலருக்கு பிரியத்தைக் கூட  அன்பாய் வெளிக்காட்டத் தெரியாது. அப்படியானவர்களை 'அமுதவிஷம்' கவிதையில் தேனீக்களோடு ஒப்புமைப்படுத்தியிருப்பது சரியானதாக இருக்கிறது.

மற்றவர்களால் முழுமையாக அறிந்து கொள்ள இயலாத பெண்ணின் வாழ்வில் இருக்கும் உன்னதங்களைக் கூறும் கவிதை ஏதும் இத்தொகுப்பில் இல்லாதிருப்பது ஏமாற்றமே. கொஞ்சம் நிதானித்திருந்து சில கவிதைகளை தவிர்த்திருந்திருக்கலாம்.

கேரளாவில் கிராம வளர்ச்சி சார்ந்த திட்டக்குழுவின் தலைவராக இ.எம்.எஸ் அவர்கள் இருந்தபோது ஒரு கிராமத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் போடப்படும் விளக்கு உடனுக்குடன் உடைக்கப்பட்டுக்கொண்டே இருந்தது. யார் உடைக்கிறார்கள் என்பதை மறைந்திருந்து கண்கானிக்க அப்பகுதி பெண்கள்தான் உடைக்கிறார்கள். ஏன் என விசாரிக்க அப்பகுதியில்தான் சிறுநீர், மலம் கழிக்க பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். விளக்கின் வெளிச்சம் அவர்களுக்கு சங்கடங்களை உண்டாக்குவதால் உடைக்கப்படுகிறது என்பதை அறிந்துகொள்கின்றனர். இது தோழர் இ.எம்.எஸ் க்கு தெரியவர பெண்களுக்கு எது தேவை என்பதை அவர்கள் சார்பில் நாமே தீர்மானிப்பது எப்படி சரியாக இருக்க முடியும்? இனி ஊர் கூட்டங்களில் அவர்களையும் பங்கெடுக்கச் செய்து அவர்களின் ஆலோசனைப்படியும் செயல்பட வேண்டும் என்கிறார். இச்சம்பவத்தை கேள்விப்பட்டு நீண்ட நாளகியும் தேவியின் சாத்தான்களின் அந்தப்புரம் தொகுப்பை வாசித்து முடிக்கையில் இச்சம்பவம் நினைவிற்கு வந்தது சரியானதாகத்தான் இருக்கிறது.

சாத்தான்களின் அந்தப்புரம்
நறுமுகை தேவியின் கவிதைகள்
புது எழுத்து பதிப்பகம்

nantri:malaigal.com

Sunday, October 19, 2014

18-10-2014 தமிழ் இந்துவில் வந்த மதிப்புரையின் விரிவாக்கம்...

சொல்லப்படவேண்டிய நன்றிகள்...
-ந.பெரியசாமி


மகனுக்கு மடல் எனும் இப்புத்தகம் புதுக்கோட்டையைச் சேர்ந்த பல் மருத்துவர் நா.ஜெயராமன் ஹாக்காங்கில்  படிக்கும் தன் மகன் ஜெயகுமாருக்கு எழுதிய நான்கு கடிதங்களும், ஜெயகுமார் எழுதிய ஒரு கடிதமென ஐந்து கடிதங்களைக் கொண்டது.

கடிதங்கள் புனைவற்று உண்மைகள் நிரம்பிக் கிடப்பவை. வாழ்வின் அடுக்குகளை உரித்துப் பார்க்க ஏதுவான களம். தந்தைக்கும் மகனுக்குமான குடும்ப கடிதமாக பார்க்க முடியாது ஒரு சமூகத்தின் பரிணாமத்திற்கான சாட்சியாகவும் இப்புத்தகம் இருக்கிறது.

உயர்கல்வி எனும் தலைப்பிட்ட நீண்ட கடிதத்தில் பெற்றோரும், பிள்ளைகளும் சொல்லிக்கொள்ள வேண்டியிருக்கம் நன்றி குறித்த உரையாடல்கள், வாசிப்பவர்களையும் ஏற்றுக்கொள்ளச் செய்து சொல்லப்படவேண்டிய நன்றிகள் நமக்கும் இருக்கு என்பதை நினைவூட்டுகிறது. பொற்றோர்கள் பிள்ளைகளின் மீது வைக்கப்படவேண்டிய நம்பிக்கைகளையும் நமக்கு இக்கடிதம் உணர்த்துகிறது.

‘இந்த தேசத்தின் மீது எனக்கு எப்படி மரியாதை வரும்? இந்த தேசம் என்மீதும் என் மக்கள் மீதும் எண்ணற்ற அவமானங்களையும் இழிவுகளையும் சுமத்தியிருக்கின்றபோது இந்தியாவை என் தாய்நாடு என்று எப்படி கூறுவேன்?’ என்று டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் பகிரங்கமான குற்றச் சாட்டை நினைவூட்டி ஒருவரின் தகுதியும், திறமையும் பிறப்பு தீர்மானிப்பதில்லை என உணர்த்தி மகனின் பல் மருத்துவ படிப்பு குறித்து தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை கூறியிருப்பது நம்பிக்கையூட்டும் செயலாக இருக்கிறது. இக் கடிதத் தொகுப்பில் நிறைய்ய இடங்களில் அம்பேத்கரின் கூற்றுகளை பயன்படுத்தி இருக்கிறார். தேவையான இடங்களில் தேவையான கூற்றாக இருப்பதால் கடிதத்தின் ஒரு அங்கமாகவே மாறியிருப்பது கவனிக்கத்தக்கது.

சாக்கடையான பெரும் கருத்தியல்களை வைத்துக்கொண்டிருக்கும் இந்தியா எப்படி புனிததேசமாகும் எனும் அவரின் கோபம் நமக்கமான கோபமாகவும் இருக்கிறது. ‘தீண்டத்தகாதவர்கள்’ எனும் கூற்றுக்குள் அடங்கியிருக்கும் அவமானங்கள் இழிவுகளை சமூகத்தில் நிகழ்ந்தேறிய சம்பவங்களை நினைவூட்டி கூறியிருக்கிறார். கூடவே அச்சமூகத்தில் வசதி வாய்ப்பு பெற்று முன்னேறியவர்கள் உயர் சாதியினரின் சடங்கு சம்பிரதாயங்களில் தன்னை ஒப்புக்கொடுத்து தன் சமூகத்தை இடத்தாலும் மனத்தாலும் விலகி நடக்கும் துரோகங்களையும் விமர்சிக்கிறார். நீந்த கற்றுக்கொள்வதற்கு பயன்பட்ட சுரக்குடுக்கையை கற்றபின் உடைத்தெறியும் செயலுக்கு ஒப்பானது என்பதை வாசிப்பவர்கள் உணரக்கூடும்.

உன் பெயரைவிடவும் நீளமாக இருக்கும் பட்டங்களெல்லாம் சாதிய ஒடுக்குமுறைக்குள் சீரழிந்துகொண்டிருக்கும் ஒரு தலித் சமூகத்து சராசரி மனிதன் பெற்ற வெற்றியால்  உலக அரங்கில் நீ புகழ் பெறுகின்ற இடங்களில், மேடைகளில் இந்தியாவில் மிகமிக மோசமாக ஒடுக்கிவைக்கப்பட்ட சாதியில் பிறந்தவன் என்பதையும், தீண்டத்தகாதவன் என்ற உண்மையையும் பட்டவர்த்தமாக எவ்வித ஒளிவு மறைவுமின்றி உரத்துச் சொல். சாதிவெறி பிடித்த இந்தியர்கள் உலக அரங்கில் வெட்கித் தலைகுனியட்டும் எனும் ஜெயராமனின் கோபம் நமக்கான கோபமாகவும் மாறுகிறது.

ஒரு காலத்தில் கல்வியும், அதற்கான வாய்ப்பும் மறுக்கப்பட்ட வழித்தோன்றலான டாக்டர்.ஜெயக்குமார் ஹாங்காங் பல்கலைக்கழகத்தின் குழந்தைகள் பல்மருத்துவம் மற்றும் குற்றம்சார்ந்த பல்மருத்துவத்தில் தொடர் ஆய்வுகள், அகதிகளின் வயதுகுறித்த சர்வதேச சட்டவிதிகள் தொடர்பான விழிப்புணர்வு, மும்பையிலிருந்து வெளிவரும் இந்திய பல்மருத்துவக்கழகத்தின்(யிமிஞிகி) பத்திரிகையின் இணை ஆசிரியர். மிகச் சிறந்த ஆய்வுக்கட்டுரைகளை உலகின் கவனிக்கத்தக்க சஞ்சிகைகளில் தொடர்ந்து எழுதி வருபவர். சென்னையில் உள்ள ‘’இச்சா’’ மையத்தால் ‘’சாதனைத்தமிழர்’’ எனும் விருதினை வழங்கி கௌரவப்படுத்தப்பட்டவர். (ஞிணீtமீ ளியீ ஙிவீக்ஷீtலீ) எனும் அமைப்பைத் துவங்கி அதன் மூலம் பிறப்புச்சான்றிதழ் இல்லா உலக மக்கள் யாவருக்கும் தன் சொந்த ஆராய்ச்சியின் மூலமாக சான்றிதழ் வழங்கும் பணி என இவரின் சேவைகள் நீண்டபடி இருக்கிறது.

நம்மால் மறக்க இயலாத கொடூரமான சம்பவமாக இருக்கும் டெல்லியில் நடந்த கூட்டு வன்புணர்ச்சிக் கொடூரத்தில் ஒருவர் வளர்இளம் பிராயத்தினர். அவரை சிறார் நீதிமன்றத்தில்தான் விசாரிக்கவேண்டுமென விவாதங்கள் நடந்துகொண்டிருந்தபோது ‘இந்தக் கற்பழிப்புக் குற்றச்சாட்டில், சிறார் பிரிவில் உள்ளவனின் சரியான வயது என்ன என்பதை எனது ஆராய்ச்சியின் மூலம் மிகத்துல்லியமாகக் கணக்கிட்டுத் தரமுடியும்’ என அரசுக்கு ஜெயக்குமார் பலமுறை தகவல் கொடுத்தும் அதை அரசு கண்டுகொள்ளவேயில்லை.

இந்தியாவில் ‘கற்றவனின்’ குரலுக்கு ஏது மரியாதை. சிறந்த ஆராய்ச்சியாளர்கள் வெளிநாடு ஓடுவது சம்பளத்திற்காக மட்டுமல்ல, சுயமரியாதைக்காகவும், மேலும் தங்கள் ஆராய்ச்சிக்கான தளமும் அமைத்துக்கொடுக்கும் இடங்களைத் தேடித்தான் எனும் ஜெயராமனின் ஆதங்கத்தில் இருக்கும் உண்மையை நாமும் உணரமுடிகிறது.

மேலும் அவர் கடிதத்தில் சமூக சிந்தனைதான் ஒரு மனிதனை முழுமையாக்கும் அதற்காக நீ டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் நூல்களான 37ஐயும் படித்திட கேட்டுக்கொள்கிறார். தாய்மொழி சிறப்பு, போராட்டங்கள் ஏற்படுத்தும் விளைவுகள் நீளும் கடிதம் நம்மை தோய்வுறச்செய்யாது உடன் பயனிக்கச்செய்கிறது.

கிடைத்த வாய்ப்புகளை சரிவர பயன்படுத்திக்கொண்ட சராசரி மனிதனாகவே என்னைப் பார்க்கிறேன். சாதிப்பதற்கு 100/100 மதிப்பெண்கள் தேவையில்லை. விடாமுயற்சியும், செய்யும் வேலையில் ஈடுபாடும், கவனமும் இருந்தால் போதும் என்பதை புரிந்துகொண்டேன். ஆனால் இந்தியாவில் மட்டும்தான் ஒரு மனிதனின் அனைத்து திறமைகளும் சாதியாகப் பார்க்கப்படுகிறது. நம் சமூக விடுதலைக்காக போராடிக்கொண்டிருக்கும் எண்ணற்றவர்களுடன் நானும் ஒருவனாக இருப்பேன். இப்போராட்டத்தில் தோற்கலாம். ஆனால் முயற்சி எடுப்பதில் எந்த தோல்வியும் இருக்காது என்று நம்புகிறேன் என முடிவுறும் ஜெயக்குமாரின் கடிதம் நமக்கும் ஆறுதலாக இருக்கிறது. வளர்ந்து வளம் இளைஞர்களிடையே சமூக விடுதலைக்கான வேட்கை இருப்பதை கண்டுணர்ந்து அதை வளர்த்தெடுக்க நம்மின் பங்களிப்பும் வேண்டியிருப்பதன் அவசியத்தை இக் கடிதங்கள் உணர்த்துகின்றன.

மகனுக்கு மடல்
மருத்துவர்.நா.ஜெயராமன்
அபெகா வெளியீடு
832, கீழராஜ வீதி 2ம் தளம்,
புதுக்கோட்டை-622001
விலை-ரூ.80

Wednesday, August 27, 2014

தோட்டாக்கள் பாயும் வெளி

மாடிக்கு ஏறுகிறீர்கள்
அமைதியான சூழல் இருக்க
கொண்டு சென்ற தாளை விரித்து
பிடித்த முயலை வரைகிறீர்கள்
உணவும் வசிப்பிடமும் வேண்டி
புற்கள் சூழ்ந்த புதரை ஏற்படுத்துகிறீர்கள்
ஏனோ நிறைவுகொள்ளாதிருக்க
ஒன்றிரண்டு மரங்களை உருவாக்குகிறீர்கள்
அழகு சூழ மகிழ்ந்தீர்
கணத்தில் கவலையடைந்தீர்கள்
முயல் தனித்திருக்குமென
இணை ஒன்றை தருவிக்கிறீர்கள்
இரண்டும் முத்தமிட்டபடி
சந்தோசமாக உலவிக்கொண்டிருக்கிறது
உங்களுக்கான இடம் அற்றிருப்பதை உணர்ந்து
நிழலான மரத்தடியில்
ஒரு கல்லைப் போடுகிறீர்கள்
அமர்ந்து வேடிக்கையில் களித்திருக்க

மெல்லிய சப்தத்தோடு இரண்டு தோட்டாக்கள்.

நன்றி: கல்குதிரை

Monday, August 11, 2014

இதிகாச கட்டுடைப்புகள் காலத்தின் கட்டாயமாகிறது
-சூரிய நிலா

2004ஆம் ஆண்டு ‘நதிச்சிறை’ கவிதை நூலின் வழியாக அறிமுகமானவர் ந.பெரியசாமி. பத்தாண்டுகளெனும் நீண்ட இடைவெளிக்குப் பின்  ’மதுவாகினி’  எனும் இந்த நூலின் வழியாக தமது இலக்கிய வேட்கையைத் தீர்த்துக் கொண்டுள்ளார்.

கவிதைக்கான பாகுபொருட்கள் சமூகக் கட்டமைப்பில் ஏராளமாகயிருப்பினும், தனது கவிதைக்கான பாகுபொருளினை, தான் சார்ந்த வாழ்வியலிலிருந்தே எடுத்துக் கொண்டிருப்பது கவிஞரின் மிகப் பெரும் பலமாகவேயுள்ளது. ‘தோத்தான் கோழி’ போன்ற கவிதையில் தன்னை உருவகப்படுத்திக் கொண்டு சமூகத்தை கட்டுடைப்பது. அல்லது தன்னை உடைத்துக் கொண்டு சமூகத்தை கேள்விக்குள்ளாக்குவது என்ற இவரின் கவித்தன்மையுடன் கூடிய உசாவல் வெகு அற்புதம்.

அற்புத திருவந்தாதியில் காரைக்காலம்மை பாடுவார்...
மகிழ்திடே நெஞ்சே மானுடரில் நீயுந்
திகழ்தி பெருஞ் சேமஞ் சேர்ந்தாய் - இகழாதே
யாரென்பே யேனும் அணிந் துழல்வார்க் காட்பட்ட
பேரன்பே இன்னம் பெருக்கு

அறியாமை உடைய மனதை - மனிதர்களோடு சேர்ந்து மகிழ்வாகயிருக்கச் சொல்லும் பாட்டுதானிது.
தோத்தாத் கோழி நான்
வலியவனிடம் மட்டுமல்ல எளியவனிடமும்
என் பலத்தைக் காட்டுவேன் என்று ந.பெரியசாமி அழுத்தமாக கூறும்போது இதை அம்மையைப் போல ‘மட நெஞ்சே... மனிதர்களோடு சேர் அவர்களோடு மகிழ்வாயிரு’ என்று சொல்லத்தானே வேண்டும்.

மழையற்றும் மிகு வெப்பம் உமிழாதபோதும்
கைக் கொண்டலைகிறேன் என்கிறார்.

அதாவது குடையைக் கைக்கொண்டு அவர் அலையும் போது- பைத்தியமென தலையிலடித்து/முகத்துக்கு நேரும் / முதுகுக்குப் பின் / வசவை வீசுபவர்களுக்கு/எங்ஙனம் புரியச் செய்ய/ மழை விடாது பொழிகிறது/என் கனவு தேசத்திலென்று.

கவிஞன் தனது கனவில் கூட மழையைப் பிடித்துக் கொண்டு திரிகிறான். பிறகு ஊர் என்ன செய்யும்? சிரிக்கத்தானே செய்யும்?

‘மாமாயை’ என்னும் வனத்தில் அலைகிறன்டா
தாமாயுலகனைத்தும் தாது கலங்கிறண்டா
என்று பட்டினத்தார் பாடுவார்.

‘காது அவிஞ்சான்பட்டி’ எனும் தலைப்பில் எழுதப்பட்ட கவிதையில் அழகான எள்ளல் தன்மை துள்ளி விளையாடுகிறது. நோய் மிகுந்த நம் தேசத்திற்கு நூலகங்கள் எதற்கு? இப்படி முடிக்கப்படும் இக்கவிதை மிக இலாகவமாக எழுதப்பட்டதொரு காட்டமான கவிதை. ‘வதைகளின் ருசியறிந்தவர்கள்’ என்ற கவிதையும் மேற்படி தொனியில் எழுதப்பட்ட அற்புதமான கவிதைதான்.

இத்தலைப்பிட்ட கவிதைகளில் எழுதப்பட்ட வரிகள்-மக்கள் சீற்றத்தை உள்வாங்கி வெளிப்படுத்தும் நல்லதொரு கவிஞனை அடையாளம் காட்டுகின்றது.


ஈழ வதையில்
வழிந்த ரத்தங்களை வாக்குக்காக
மணக்க மணக்க வதக்கியபடி இருக்கிறார்கள்
ஒரே சட்டியில்
இரு அகப்பையோடு
ஆண்ட கிழவனாரும் ஆளும் குமரியும்.

ஈழப் பிரச்சினையில் எவருக்கும் அக்கறையில்லை. என்ற குற்றச்சாட்டினை இக் கவிதையில் பதிவு செய்துள்ளது பாராட்டத்தக்கது.

‘வன தேவதை’ என்ற தலைப்பிட்ட கவிதை இராமாயண தொன்மத்தை மறுபரிசீலனைக்கு கொண்டு செல்கிறது. சூர்ப்பனகை இதில் வன தேவதையாகிறாள். இக் கவிதையில் மூக்கறுப்பட்டது இராமன். அதுவும் சூர்ப்பனகையின் மேல் காதல் வயப்பட்ட இராமன். இதிகாச கட்டுடைப்புகள் காலத்தின் பட்டாயமாகின்றது. கவிதை அதை முன்னெடுத்துச் செல்கின்றது.

‘மதுவாகினி’ இவரது பல கவிதைகளில் வந்து போகும் இடுகுறிப் பெயராகவுள்ளது. காதலியாக, அன்னையாக, அஃறிணைப் பொருளாக மதுவாகினியை இவர் வடிவமைத்துள்ளார். ஒரு பெயர் பிடித்துப் போய்விட்டால் கனவிலும், நனவிலும் அது தொக்கி நிற்கும் எங்கும் உடனலையும் மனதுக்குள் உட்கார்ந்து கொண்டு மகுடி வாசிக்கும். அப்பெயர் கவிஞனுக்கு பிடித்துப் போய்விட்டது என்றால் இப்படித்தான் பல கவிதைகளில் அப் பெயர் ஒட்டிக் கொண்டிருக்கும். அதனால்தான் குளித்து வந்த மதுவாகினியின்/கூந்தலில் வடிந்த நீர்த்துளிக(ள்)ளை-

நீராடி கேசம் நீவிய துரோபதையை-ஒப்புமையாக்கியது. அந்த பெயரின் பிரேமையின்றி வேறென்ன?

கனவு வேட்டை, பொக்கை வானம் போன்ற கவிதைகளில் சிறுவர்களின் மன கிலேசங்கள் அழகாக பதிவாகியுள்ளன.

வாழ்வெனும் நீண்ட பாதையில் பயணித்து வந்த ஒரு கவிஞன். அதன் திரட்சிகளை நனவின் உக்கிரத்தோடும், மிகு கவனமாக தனது நினைவலைகளை பரப்பிச் செல்லும் உத்வேகத்தோடும் தனது - கவிதைப் படைப்பை உலகிற்கு தருகிறான். இவ்வுலகம் அதை ஏற்றுக் கொண்டால் மிகுந்த போதைக்குள்ளாகிறான். இல்லாவிட்டால் தொடர்ந்து போராடுகிறான். கவிதைகளை நாமள்ளிக் கொள்ளும் வரை கவிஞனின் போராட்டம் தொடர்ந்து கொண்டேயிருக்கும். அத்தகையானதுதான் ந.பெரியசாமியின் இவ்விரண்டாம் முயற்சி.

நன்றி: தீராநதி.