Friday, March 21, 2014

நேசிப்பிற்காக நிரம்பும் மொழி...


மீச்சிறு அதிர்வாகத்தான் இருக்கும். ஆனால் அன்றைய பொழுதையே தனக்கானதாக மாற்றிக்கொள்ளும் கவிதைகள். நிறைய்ய கவிதைகள் நிறைய்ய பொழுதுகளை தனக்கானதாக மாற்றிக்கொள்கின்றன. அப்படியான கவிதைகளும், கவி சொல்லிகளும் என் பட்டியலில் நீண்டுகொண்டேதான் இருக்கிறார்கள். இப்பொழுது வேல்கண்ணனும் இசைக்காத இசை குறிப்போடு.

முதல் தொகுப்பைப்போலவே இல்லை அத்தனை கவிதைகளும் அற்புதம் என்றெல்லாம் பொய்யுரைக்க மனமில்லை. இது முதல் தொகுப்பாகவே இருக்கிறது என்பதுதான் சந்தோசம். மாடிக்குச் செல்ல ஒவ்வொரு முறையும் தாவிக்கொண்டே இருக்க முடியாது. படிகட்டுகள் அவசியம்தானே. முதல் படிக்கட்டு என்பதால் வசதியாக இருக்கிறது ஒட்கார்ந்து பேச...

தொகுப்பை சமர்ப்பனம் செய்திருப்பவரின் பெயரை படித்ததுமே பவா.செல்லதுரையின் ‘எல்லா நாளும் கார்த்திகை’ தொகுப்பிலிருக்கும் கட்டுரை நினைவில் வந்தது தவிர்க்க இயலவில்லை.

அவன் ஒரு காட்டாறு. அவனுக்கு அடங்கத் தெரியாது. அவன் துள்ளிக்கொண்டே இருந்த ஓர் இளங்கன்று. அவன் சொடுக்கில் கூட்டம் மொய்க்கும். தன் வெடிச்சிரிப்பால் ஒளியூட்டுவான் என ராஜவேலு குறித்து எழுதியிருப்பார். தன்னை விட்டு பிரியக்கூடாதென நேசிப்பவர்களை நாம் நமக்கருகிலேயே வைத்துக்கொள்ளத் தோன்றும். தன் அண்ணன் ராஜவேலுவின் நினைவுகளை தொடர்ந்து மீட்டெடுக்க இத்தொகுப்பை அவருக்கு சமர்ப்பித்துள்ளார்.

இடது கையால் நோயை துடைத்தெறிந்துவிட்டேன் என ராஜவேலு கூறியதை நினைவூட்டியது ‘பச்சையம்’ கவிதையில் மருத்துவமனையுள் இருந்த மரத்தடியில் அமர்ந்து இளைப்பார சாய்ந்திருக்க அம்மரம் மொத்த நோயையும் உறிஞ்சிக் கொள்ளாதோவெனும் வரிகள் சத்தியமானவை. மரத்திற்கு நோயை உறிஞ்சும் தன்மை இருந்தால் மருத்துவம் ஒரு தொழிலாக மாறியிருக்காது. அச்சகம் ஒன்றில் வேலை பார்க்கையில் உடன் வேலை பார்க்கும் சிறுவன் நோய் பீடித்து இறந்துவிட்டான். அவனை புதைத்து எல்லோரும் வெளியேறிய பின் அருகிலிருந்த தோப்பில் இருந்த வேப்பமரத்தில் சாய்ந்து அவன் குறித்த நினைவோடிருந்தேன். சற்றைக்குப்பின் என் துயர் முழுதையும் உறிஞ்சிக்கொண்டு எனை வெளியேற்றியது மரம். மரம் ஒரு அற்புத சிநேகிதம்.

 ‘சுமக்கும் சாலை’ கவிதையும் துயர்பனியை போர்த்தியது.

போதாமை மிகுந்து வாழும் வாழ்வு நமது.  எண்ணுவதையெல்லாம் செயலாக்கம் செய்ய முற்படும்போது ஏதோவொன்றால் தடை பட்டுக்கொண்டே இருக்கும். ஒரு வாரத்தில் முடிக்கவேண்டும் என படிக்கத் துவங்கினால் மாதக்கணக்கிலும் முடியாது நீள்வதுண்டு. நம் இயலாமையை எது ஒன்றையாவது வைத்து நிரப்பி சமாதானமோ மகிழ்வோ கொள்கிறோம். நட்சத்திரங்களை எண்ணுவதற்கு ஆசைபடும் வேல்கண்ணன் நிலவில் ஆறுதல் கொள்வதைப்போல.

விழிகளில் சொல்லைக் கண்டடைந்து,  முத்தங்கள் சேமிப்பிற்கானவை  அல்ல எனக்கூறி, வாழ்வும் மரணமுமாய் கலந்திருந்து,  பொழுதை நிந்தித்து, மிச்ச உயிரை கன்னக்குழியில் மச்சமாக்கி, தொடர்ந்து தவம் செய்து, மீள இயலாத பாதரசமாக உருண்டோடி, கலவியின் மிச்சங்களைத் தேடி ரகசிய அழைப்பிற்காக காத்திருந்து, மதுவின் இறுதி மிடராகி சிதறி, ஒற்றைச் சுடராய் உருமாறி நின்று, தனக்கான சில துளிகளில் உயிர்த்திருந்து, கவிதையாகி நெருங்கிக் கிடந்து, புதிரை விடுவிக்கும் ஒளியாகி, பாலையிலும் பூக்களை கொய்துகொண்டிருப்பவனாகி, அரங்கேற்றாத துரோக நாடகத்தை தற்காலிகமாக ஒத்திவைக்க கோருபவனாகி தொகுப்பு முழுமையும் நேசிப்பவளுக்கான மொழியால் நிரம்பிக் கிடக்கிறது.

தொகுப்பில் காதல் கவிதைகளைப்போல அடர்ந்திருக்கிறது மௌனமும்...

மௌனத்திற்கு முகங்கள் பல உண்டு. சிலரது மௌனம் கலவரப்படுத்தும், சிலரது மௌனம் அர்த்தமிக்கதாய் இருக்கும். சிலரது மௌனம் சந்தோசப்படுத்தவும் செய்யும். மௌனத்தின்போதுதான் வார்த்தைகள் நிறைய்ய சேகரமாகின்றன. நிரம்பும் தறுவாயில் சிறு கீரல் போதும் உடைபட்டு வெளியெங்கும் வீச்சோடு தெறிக்கும். அது நமை வீழ்த்தவும் செய்யும். மௌனம் குறித்த வேறு வேறு விதமான யோசிப்புகளைத் தூண்டியது ‘மௌனம் புரிதல்’ கவிதை. மேலும் மௌன வெளியில் தீராத இசையை மீட்டிப் பார்க்கிறார். ‘ஆதியும் அந்தமும்’ கவிதையில். மௌனத்தின் சொற்களுடன் ஒரு பறவை ஒரு மிருகத்தையும் எழச் செய்கிறார். ‘வேள்வி’ கவிதையில் மலையை நீளும் மௌனத்தோடு தவம் இருக்கச் செய்கிறார். நேசித்தவள் சொல்லிக்கொடுத்தவைகளிலிருந்து புழங்கத் தொடங்கியும் கற்றறியா அவளின் மெனனம் குறித்த ‘மௌன தவம்’ கவிதை. ‘ரகசிய அழைப்பு’ கவிதையில் இருக்கும் கள்ள மௌனம்,  கவிழ்ந்த இருளில், சிணுங்கிய கொலுசொலியில், வீணையில், கடலில், பிரிவின் வலியில், கருவறையற்றவளின் விசும்பலோசை என ஓசைகளின் நிழலாக கிடக்கும் மௌனம் குறித்த ‘ஓசை’ கவிதை, மரங்களுக்கு வாய்த்திருக்கும் சிலைத்த மௌனம் குறித்த கவிதை ‘மின்மினி’களிலும்... தொகுப்பில் மௌனம் பெரும் குறியீடாக இருக்கிறது.

தொகுப்பில் ஒவ்வொரு கவிதையும்  அதன் துவக்கத்தால் தன்னை வாசிக்கச் செய்திடுகிறது. கவிதை தனக்கான வாசகனை அடையாளம் கண்டுகொள்ளும்.

அரிதினும் அரிதான சிலரின் நட்பு கிடைத்துவிடும். அவர்களுடனான சந்திப்பு உடையாடல் என பொக்கிசமாக பொழுதுகள் கழியும். அப்படியானவர்களின் திடிர் இழப்பு ஈடுசெய்ய இயலாதது. அப்படியான துயரோடு ஒருநாள் அலைந்துகொண்டிருக்கையில் பெயர் மறந்து உருவம் மட்டுமே நினைவில் இருக்கும் பால்ய சிநேகிதனின் கரம் பற்ற இழந்தவரை மீட்டெடுத்து நீராடி வெளியேறும் புதியவனானேன்.  இப்படியான தருணங்கள் எல்லோருக்கும் வாய்ப்பதுண்டு. வேல்கண்ணனுக்கு வேல்விழி கிடைத்ததுபோல.

நெய்தலில் நடைபோட்டு முல்லையில் விளையாட நினைத்து சென்றவனுக்கு விரும்பாமலே பாலை வாய்த்துவிடுவதுண்டு. நேசிப்பவள் உடன் அற்ற பொழுது பாலைதானே.’ நீ வராத மாலை’ கவிதையில் நமக்கான பாலையையும் காட்சியாக்கியுள்ளார்.

நட்சத்திரங்களின் ஆவிகளை தன் போர்வைக்குள் ஒளிந்துகொள்ள இடம் கொடுத்த ‘மிச்ச உயிர்’ கவிதை மீண்டும் வாசிக்கத் தூண்டியது.

பொய்யும் புனைவுமற்ற நிர்வாணம் பேரழகு. அதனால்தானோ என்னவோ நிர்வாணத்தை ரசித்தபடியே இருக்கிறோம். நிஜ உருவம் என்றுமட்டுமல்ல நிழல் உருவத்திலும் கூட. இத்தொகுப்பிலும் நிர்வாணத்தை உற்று நோக்கும் ஒரு கவிதை உண்டு. அதில் அருவெருப்பான...அழுகும் என்ற வரியை தவிர்த்திருக்கலாமோவெனத் எனக்குத் தோன்றியது. பேரழகில் எதற்கு அருவெருப்பும் ஆழுகும்...

அந்தரத்தில் நடனமிட்டு நகரும் சிறுமியை அதிசயித்தும், இரத்தம் தெறிக்க தன்னை சாட்டையால் அடித்துக்கொள்பவனிடம் தன் பரிதாபத்தையும் காட்டியபடி நிற்பவர்கள் காசிற்காக தட்டேந்தி வரும் சிறுமியை பார்த்ததும் செல்லை காதில் வைத்தபடி நகருபவர்களை ஏளனப்படுத்துகிறது ‘நிறுத்தம்’ கவிதை.


நம் காலத்தின் கொடுந்துயரம் ஈழத்தில் நிகழ்ந்த  கொலைகள். அந்த வதை குறித்த பாதிப்பு யாரையும் விட்டுவைக்கவில்லை.  அவரவர் அளவில் அது குறித்த பதிவுகளை வலியோடு சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள். வேல்கண்ணனும் தனக்கான வலிகளை ‘இறுதிச்செய்தி’, ‘நிழற்படம்’, ‘முள்வேலிகளுக்கு அப்பால்’ கவிதைகளில் பகிர்ந்துள்ளார்.

விரும்பியோ விரும்பாமலோ பிழைக்க நேசித்த மண்ணை பிரிந்து வேறு எங்காவது போகவேண்டியிருக்கிறது. பெரும்பாலானவர்களுக்கு இதுதான் நிலை என்பதால் அதில் படைப்பாளிகளும் தப்பவில்லை. ஆனால் எத்தனை வருடம் ஆனாலும் பிறந்த மண் வாசனையை மட்டுமே சுமந்து திரிகிறோம். போன ஊரின் மண்ணை தொட்டுப் பார்ப்பது கூட இல்லை. அதனோடு ஒட்டாமல் இருப்பதாலோ என்னவோ அம்மண் குறித்த எந்த பதிவையும் நம் படைப்புகளில் கொண்டுவராமல் இருக்கிறோம். ஆனால் இது தவிர்க்கக் கூடியது. நம்மை ஒரு விசயம் கூடவா இடையூறு செய்திருக்காது. இத்தொகுப்பிலும் காண கிடைக்கவில்லை.

அள்ளும் கை மணலில் ஓடும் நதியை தரிசிக்கும் கவி மனதை என்றென்றும் வேல்கண்ணன் தக்கவைத்துக் கொள்வார் எனும் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது இசைக்காத இசைக் குறிப்பு.


வெளியீடு: வம்சி புக்ஸ்
19,டி.எம்.சாரோன்,
திருவண்ணாமலை-606 601.

nantri:yaavarum.com

Tuesday, March 18, 2014

பூக்குட்டியின் சொந்த ரயில்

பூக்குட்டியின் சொந்த ரயில்


காத்திருக்கிறேன் பயணத்திற்காக. ரயில் வருகிறது. பஸ் டிரைவர், லாரி டிரைவர் என்பதபோல் ரயில் டிரைவர் என்ற யாரும் அழைப்பதாக தெரியவில்லை. முகப்பில் அவர் தெரியாது இருப்பதால் ரயில் என்பதே எல்லாவற்றிற்குமான பொதுப்பெயரானது போலும். ரயில் டிரைவரை மறந்து ரயிலை உற்று நோக்கினேன். அதன் முகப்பில் இரட்டைச் சடையோடு ஒரு சிறுமியின் படம் இருப்பதை பார்த்து உற்சாகம் தொற்றிக்கொண்டது. ரயில் அருகில் வர ஏறி அமர்ந்தேன். தனது புறப்பாடை ஊராருக்குத் தெரிவித்து நகரத் தொடங்கியது.
யாரோ உற்று நோக்குவதுபோல் இருக்க சட்டென திரும்பிப் பார்க்கிறேன். எதிரில் ஜன்னலோரத்திலிருந்த குழந்தை எனைப் பார்த்துக்கொண்டிருந்தது. கண் சிமிட்ட காத்திருந்தாற்போல் அவளது கண்களும் சிரித்தன. உடல்மொழியால் விளையாடத் துவங்கினோம். சிநேகிதம் நெருங்க அருகில் அழைத்தேன். தயங்கித் தயங்கி அம்மாவின் அனுமதியோடு வந்தவளிடம் பெயர் கேட்டேன். ரோஜா என்றாள். அம்மா அப்பா பெயர் கேட்க ரோஜாப்பா, ரோஜாம்மா, ரோஜாஅண்ணன், ரோஜா தம்பி ரோஜா வீடென விடாது கூறியவாறு பெரும் ரோஜாவனத்தையே தன் கைகளால் காட்சியாக்கினாள். எனக்கும் என் பக்கத்து வீட்டுக்காரர்கள் நினைவு வந்தது. பத்தாண்டு ஆகியும் இன்னமும் முகில் அப்பா முகில் அம்மா என்று அழைப்பது. தனாக சிரிப்பதை பார்த்து லூசா அங்கில் எதுவுமே சொல்லாம சிரிக்கிறிங்க என்றாள். அதற்கும் சிரித்து ஒரு முத்தமிட வேண்டினேன். ஆங்.... அஸ்க்கு.... நான் தரமாட்டேன் என்றாள்.
எப்படியாவது முத்தம் பெற்றுவிட வேண்டுமென அவளோடு உரையாடலை துவங்கினேன். ரோஜாவிற்கு பூக்குட்டியென பெயரிட்டேன். அவளுக்கும் பிடித்துப்போக சந்தோசமானாள். பூக்குட்டிக்கு என்ன வேண்டுமென கேட்க, எதையும் யோசிக்காமல் டக்கென கரடி பொம்மை என்றாள். நெடுநாளாக பெரிய கரடி பொம்மை கேட்டு அடம்கொள்ளும் என் மகனின் நினைவு வர வாங்கும் சக்தியற்று வாழ்வது குறித்த கவலையில் சுருங்கினேன். பூக்குட்டியின் கவனத்தைத் திருப்ப சோட்டா பீம் குறித்து உரையாடினேன்.
இம்முறையும் பூக்குட்டி முத்தம் கொடுக்க மறுத்துவிட்டாள். பாரதியின் மீசை, சூ அணிந்து வந்த வள்ளுவர், பெரியாரின் தடியென நிறைய்ய கதைகளை சொல்லத் துவங்கினேன். நிறைய்ய கேள்விகளோடு ஊம் கொட்டிக்கொண்டிருந்தவள்.டக்கென பிரகாசமானாள். அறுந்த புலி வாலைத் தைக்க குண்டூசி தேடிக்கொண்டிருந்த முயலின் கதையைக் கூறுகையில்.
பூக்குட்டி ரயிலில் கிடந்த விளம்பர நோட்டீஸ்களை எடுத்துவந்தாள். ஒரு பக்கம் எழுத்தில்லாமல் இருந்தவைகளை மட்டும் வைத்துக்கொண்டு மற்றவைகளை தூக்கி எறிந்தாள். பையிலிருந்த என் பேனாவை பிடிங்கினாள். மேலிருந்து கீழாக ஒ,ஃ,த,ந,ஊ என நிறைய்ய எழுதிக்கொண்டே வந்தவள் ஒவ்வொரு எழுத்திற்கும் நேராக கையை வைத்து இது எப்படி இருக்கென கேட்கத் துவங்கினாள். யானை, காகம், புறா, அன்னம், தண்ணீ லாரி என எங்கள் பெட்டி நிறைய்யத் துவங்கியது.
அடிக்கடி எழுந்த வாம்மா... அங்கிளை டிஸ்டர்ப் செய்யாதே எனும் குரலை காதுகொள்ளாதிருந்தவள் என்னிடம் அவளின் அம்மாவை பழிப்புக்காட்டிக்கொண்டிருந்தாள். மறுபடியும் கதை கேட்டாள். குடுவையின் அடியில் இருந்த நீரை அருந்த சிறுசிறு கற்களை பொறுக்கப்போன காகத்தின் கதையைக் கூற தலையில் அடித்துக்கொண்டு காக்கா டீச்சர் சரியாகவே சொல்லித்தரல அங்கில், பேசாம ஒரே ஒரு ஸ்ட்ராவை எடுத்து வர சொல்லிக்கொடுத்திருக்கலாம் என்று சிரித்தவள் மேலே பார்த்தபடி இருந்தாள். நானும் பார்க்க இயேசுவின் படம் ஒன்று ஒட்டப்பட்டிருந்தது. என்ன பூக்குட்டி இயேசப்பாவா என்றேன். இல்ல, இயேசு தாத்தா என்றாள். புன்னகைத்த இயேசு தன் மடியிலிருந்த ஆட்டுக்குட்டியை பூக்குட்டியோடு வி¬ளாயட அனுப்பிவைக்க இருவரும் உரையாடிக்கொண்டிருந்தனர். என் பால்யத்தில் பக்கத்துவீட்டு பையன்களோடு ராசு தாத்தா கதை சொல்லிய இரவில் பெய்த மழை நினைவில் வர நனைந்துகொண்டிருந்தேன். என் ஈரம் உலர்த்த ஆட்டை அனுப்பிவிட்டு சூரியனை அழைத்து வந்தாள் பூக்குட்டி.
கை தட்டும் ஓசை கேட்க இருவரும் திரும்பினோம். தேவதைகளாக திருநங்கைகள். கொடுத்த பத்து ரூபாயிற்கு இருவரையும் தலையில் கைவைத்து ஆசிர்வதிக்க பூக்குட்டி அவர்களுக்கு முத்தத்தை பரிசாக்கினாள். நானும் ஆசையாக கன்னம் காட்ட அன்பால் அடி ஒன்று கிடைத்தது.
விரல்களிடம் தன் அப்பா குறித்து கோள்மூட்டிக்கொண்டிருந்தவளை இடைமறித்து போதும் விடுப்பா அப்பா பாவம் என்றேன். ஆமாம் அப்பா பாவம்தான் என அவளும் கூறினாள் அவள் அம்மாவை ஓரக் கண்ணால் பார்த்தபடி.
எங்கள் பெட்டிக்கு இப்போ கிளி ஜோசியர் வர கிளியை வேடிக்கை பார்த்து ரசித்துக்கொண்டிருந்தாள் பூக்குட்டி. கூண்டிலிருக்கும் கிளி பள்ளியிலிருக்கும் குழந்தையாக எனக்குத் தோன்றியது. அக்குழந்தை திரும்பி எனைப் பார்த்து சிரிக்க பூக்குட்டியாக இருக்க அதிர்ந்தேன். கிளிக்கூண்டின் முகப்பில் எல்.கே .ஜி என எழுதியிருந்தது. ஒரு டீச்சர் உள்ளே நுழைந்தார். ராபிட்-முயல், பேரட்-கிளி, டக்-வாத்து என சொல்லிக்கொடுத்தபடி இருந்த டீச்சரை இடை மறித்து மிஸ் பெங்குவினுக்கு தமிழ் பெயர் என்ன? எனக் கேட்க, எத்தனை முறை உங்களுக்கு சொல்வது பாடம் நடத்தும்போது டிஸ்டர்ப் செய்யக் கூடாதென. பிறகு கேளுங்க என அதட்டியபடி வெளியேறினார். எழுந்த மணியோசைக்கு எல்லோரும் சர்ச் பக்கம் விளையாடப்போக சத்தம் போடாதிங்க என பாதிரியார் விரட்ட தூரமாக விளையாடச் செல்கிறார்கள் உடன் இயேசுவும் சென்றுகொண்டிருந்தார். அவர்களை நோக்கி கை அசைத்துக்கொண்டிருந்தேன்.
ஐய்யோ அங்கிள் அங்க யாரு இருக்கா டாட்டா காட்டிக்கிட்டிருக்கீங்கவென என் தலையிலடித்தாள். உனக்குத்தான் காட்டினேன் பூக்குட்டியென மழுப்பினேன். சரி உங்களுக்குத் தெரியுமா எனக்கு எங்க ஹெல்மெட் கிடைக்குமென எங்க அப்பாவுக்கு தெரியல என்றாள். குழந்தைகளுக்கெல்லாம் ஹெல்மெட் தயாரிப்பதில்லை என்றேன். நாங்களும்தானே வண்டியில் போகிறோமென்றாள். குற்ற உணர்வில் முகம் பார்க்க தவறினேன். உங்க அப்பா எங்கேவென கேட்ட பக்கத்துவீட்டு சிறுமியிடம் அவர் சாமியிடம் போயிருக்கார் என நான் கூற, சாமிதான் முதலில் செத்தாரா எனக் கேட்டதும் நினைவில் வர இதுகாறும் குழந்தைகள் மீதான என் புரிதல் குறித்து ஏற்பட்ட குழப்பத்தோடு இருந்தேன்.
திடுமென பூக்குட்டி முத்தமிட்டாள். இறங்கப்போறோம் டாட்டா அங்கிள் என்றாள். அவளின் ஈரம் என்னுள் மகிழ்வை விதைத்தபடி இருக்க வாசித்துக்கொண்டிருந்த சொந்த ரயில்காரி தொகுப்பை பையிலிட்டு எனது நிறுத்தத்தை எதிர்பார்த்திருக்கையில் மறவாது கைகுலுக்கினேன். வாழ்த்துக்கள் ஜான் சுந்தர்.
சொந்த ரயில்காரி
ஜான்சுந்தர் கவிதைகள்
அகநாழிகை பதிப்பகம்.
nantri:malaigal.com

Saturday, February 1, 2014

nantri:puthu visai

மரணத்தோடு கண்ணாமூச்சு...
-ந.பெரியசாமி

பெரும் மரமெங்கும்
துளிர்த்திருக்கும் இலைக்கொன்றாக பறவைகள்
அதிசயித்துக் கேட்டான் வழிப்போக்கன்
அறியாயோ...
மரணமற்ற ஊர் இது
ஜீவிதம் முடிய பறவையாவார்களென்றேன்
அருகிலொருவன் அழைத்துக்கொண்டிருந்தான்
தன் மூதாதைப் பறவையை
உணவூட்டலுக்காக...

பால் சக்காரியாவின் சந்தனுவின் பறவைகள் கதை வாசிக்க நான் எழுதிய கவிதை.. ஒரு நல்ல படைப்பு எதையாவது செய்யத் தூண்டும்தானே...

நான் கேட்கத் துவங்கிய முதல் கதை வாசித்த முதல் கதை எதுவாக இருக்குமென அப்பப்போ தேடிப் பயணிப்பதுண்டு விடையற்று வானமாய் பெரும் தடுப்பு ஏற்பட பயணம் மறந்து போகும். நிச்சயம் ஒரு நல்ல கதையைத்தான் கேட்டிருப்பேன். இல்லையெனில் தொடர்ந்து கதை கேட்கும் ஆர்வம் இருந்திருக்காது. கதை படிக்கும் ஆர்வமும் ஏற்பட்டிருக்காது. நல்ல எழுத்துக்களை அப்பப்போ வாசிப்பதால்தான் தொடர்ந்து இன்னும் வாசித்துக்கொண்டே இருக்க முடிகிறது. பால்சக்காரியாவின் அல்ஃபோன்சம்மாவின் மரணமும் இறுதிச்சடங்கும் தொகுப்பும் மேலும் என் வாசிப்பை நீட்டிக்கச் செய்தது.

அழுது தொலைக்க வேண்டியதாகிவிட்டது. சனியன் எவ்வளவு கட்டுப்படுத்தியும் அடக்க முடியவில்லை.

அப்பா, பறவைகள் சாவதில்லையா?

இல்லை சந்தனு அவைகள் பறந்து பறந்து மேகம் கடந்து விண்வெளியை அடைந்து விடுகிறது.

அம்மா பறவையாகி பறந்து போவதை பார்த்தியாப்பாவெனும் கேள்வி கண்களை நீர்க்குமிழியாக்கிவிடுகிறது. ஏதோ குழந்தைகளுக்கு கதை சொல்லியிருக்கிறார் என வாசித்து வர மரணத்தை பறவையில் ஏற்றி மிதக்கச் செய்துவிடுகிறார் சந்தனுவின் பறவைகள் கதையில்...

என்றோ செய்த பயணத்தின்போது பார்க்க நேர்ந்த விபத்தில் சிதைந்த உடல் அவ்விடத்தை எப்பொழுது கடந்தாலும் நினைவில் வருவதை தவிர்க்க முடிவதில்லை. கருத்து முரண்பாடுகளோடு அடிக்கடி சண்டையிட்டு வாழும் தம்பதியர் பார்க்க ஒருவனை தற்கொலை செய்து ‘கடல்’ கதையில் கூறுகிறார் நினைவில் தேங்கி நிற்கும் மரணத்தை...

அந்தகாரம் கொடுத்த அமைதியையும் பாதுகாப்பையும் அங்கிகரிக்காது கிணறே உலகமாய் சுற்றி வலம் வர, கிணற்றின் பொந்துகளில் மறைந்துகிடக்கும் மரணங்களோடு இதுதான் உலகம் இதுதான் உலகமென கவிதையாய் நீண்ட தவளையின் பயணத்தில் மரணத்தையும் கூறிச்செல்கிறார் ‘பிரபஞ்சத்தின் சிதைவுகள்’ கதையில்.

விசில் ஒலியை ஒரு புள்ளியாக்கி மொழியால் அப்புள்ளியை பாவு காய்ச்சி அதை ‘ஒரு குறுகலான இடம்’ ஊற்றி வாசிக்கவும் கேட்கவுமாக இசையாகிறது மரணம்...

எனக்கும் ஆசையாகிவிட்டது. இறந்து பின் எழுந்து பார்த்தேன். உறவுகளின் துயர் பீறிட்ட அழுகை, மௌனம், யார் யாரெல்லாம் வந்துகொண்டிருக்கிறார்கள், பசிதாங்காதவர்கள் வேறெங்கோ போகிறமாதிரி போய் டீயோ ரொட்டியோ தின்று வருவது, எதையாவது காரணம் சொல்லி வராது இருப்பவர்கள், புதைப்பதாக இருந்தால் எந்த இடத்தில் புதைப்பார்கள், எரிப்பதாக இருந்தால் எந்த இடத்தில் எரிப்பார்கள். நண்பர்கள் பேஸ்புக்கில் போடும் மரணச்செய்திக்கு எத்தனை லைக் கிடைக்கும். உள் நாட்டில் எத்தனை நண்பர்கள் வெளி நாட்டில் எத்தனை நண்பர்கள் லைக் இட்டார்கள். அஞ்சலி கருத்து எத்தனைபேர் எழுதுவார்கள். நான் இருந்துகொண்டிருக்கும் தமுஎகச அமைப்பு அஞ்சலி நோட்டீஸ் அடிப்பார்களா, என்ன மாதிரி அடிப்பார்கள். எந்த போட்டோ பயன்படுத்துவார்கள். இப்ப ஒன்றும் பிரச்சினையில்லை பேஸ்புக்கில் நிறைய நல்ல போட்டோக்கள் இருக்கு. எனக்காக மெனக்கிட்டு எந்தந்த தோழிகள் வருவார்கள், மரணிக்கும் தருவாயில் யார்யாருக்கெல்லாம் நன்றி சொல்ல வேண்டும். இத்தனை வருட வாழ்வில் யார் யாரெல்லாம் நம்முடன் உண்மையாக இருந்தார்கள். கொஞ்சம் கவிதைகள் எழுதியிருப்பதால் எழுத்தாளன் என மதித்து ஏதாவது இதழ்களில் அஞ்சலி கட்டுரை வருமா. யார் யாரெல்லாம் எந்தெந்த பத்திரிகையில் எழுத சாத்தியமிருக்கிறது, வாய் மூடி கண்மூடி அழகாக உறங்குவதுபோலத்தான் இருக்கும் எனது பிரேதம் என நீண்ட நேரம் அல்ஃபோன்சம்மாவின் மரணமும் இறுதிச்சடங்கும் கதையில் வரும் அல்ஃபோன்சம்மாவாகவே இருக்க செய்துவிட்டார்...

மரணம் குறித்திருந்த பயத்தை பிடிங்கி எறிந்து மரணத்தை ஒரு குழந்தையாக்கி மடியிலிட்டு கொஞ்சவும், அதனோடு கண்ணாமூச்சாடாவும் செய்த சக்காரியாவை என்றாவது பார்க்க தழுவி கைகுலுக்க ஆவலோடு இருக்கச் செய்தது தொகுப்பு.

தொகுப்பில் வேறு கதைகளும் நிழலாய் உடன் வந்தபடி இருந்தன. சிறுவயதில் பாட்டியிடம் கேட்ட கதைகளில் வரும் ஆடு, மாடு, கிளி, மரம், வண்டு என எல்லாமே பேசும். அடுத்த நாள் காலை போய் அதுகளிடம் நீண்ட நேரம் பேசிப்பார்க்க எப்பதிலும் அதுகளிடமிருந்து வராதிருக்க ஏமாற்றங்களோடு பாட்டியிடம் போய் ஏன் என்னிடம் எதுவும் பேசமாட்டேன் என்கிறது எனக் கேட்க, போட போக்கத்தவனே அது கதையில்தான் பேசும் என்பார். ‘ஓரிடத்தில்’ கதையில் தவளை மூலம் நம் இயலாமையின் வலியை பேசிச் செல்கிறார்.

சில கதைகள் அது சொல்லப்பட்ட விதத்தில் நம் நினைவின் குடிபெயர்ந்து விடுவதுண்டு. ‘ரகசியப் போலீசும் ஓர் ஆட்டிடையனும்’ கதையும் அப்படித்தான். ஒரு கதை மர்மமாக முடிச்சுகளை போட்டுக்கொண்டே செல்வதும், அக்கதையில் இருக்கும் வேறு கதை அதை அவிழ்த்தப்படியே தொடர்வதாக பின்னப்பட்ட இக்கதையின் போக்கில் இராணுவத்தின் வறண்ட தன்மையையும், சாமானிய எழுத்தாளனின் கரிசனம் மிக்க போக்கையும் போகிற போக்கில் இசைத்து காட்டியிருப்பது அழகு...

‘குஞ்ஞாப்பு எப்படிப்பட்ட ஆளு, குஞ்ஞாப்புவுக்கு எல்லாம் தெரியும். வானத்தைப் பார்த்துக்கொண்டே ‘இதோ, இப்ப மழை வரப் போகுது என்பார் மழையைச் சும்மா அப்படியே தோளில் போட்டுக்கொண்டு எவ்வளவு வேகமாக நடக்கிறார். இப்போ மழை கீழே விழுமெனத் தோன்றும் அது சுகமாயிருக்கும்...’ குஞ்ஞாப்பு போன்றவர்களை எங்காவது சந்திக்க நேர்வதுண்டு. எல்லா விசயங்களிலும் குழந்தைமையோடு இருப்பார்கள். குஞ்ஞாப்புக்கும் உண்ணிக்குமான உறவுகளின் காட்சி கவிதையாக விரிகிறது ‘குழந்தை உண்ணி’ கதையில்.

நவீன மனிதனின் மன இடைவெளிக்குள் மற்றொரு மனிதன் நுழைய முடியாதபோது அவனது இடைவெளியில் பியானோ, புத்தகங்கள் மட்டுமே நுழைய முடியும் சாத்தியங்கள் இருப்பதால் எனது விரல்கள் பியனோவையும், புத்தகங்களையும் பற்றியிருக்கிறது என்பார் கோணங்கி.-இத்தொகுப்பின் கதைகள் வாசித்த நாட்களில் மனம் நிரம்பி விரல் பிடித்து உடன் அலைந்துகொண்டேயிருந்தனர் தொகுப்பிலிருந்த மனிதர்கள்.

நான் சிறுவனாக இருந்தபோது அம்மா இரண்டு ஆட்டுக்குட்டிகளை வாங்கி வந்தார். அதிலொன்றை சித்தி வளர்க்க எடுத்துச்சென்றார். சிறிது காலம் கழித்து வளர்ப்பதற்கான சூழல் இல்லையென திரும்ப அக்குட்டியை விட்டுச்சென்றார். இரண்டு குட்டிகளும் ஒன்றைப்போலவே இருப்பதால் என் தங்கைக்கு அடிக்கடி சந்தேகம் வரும் சித்தி விட்டுச்சென்ற குட்டி எதுவென. இத்தொகுப்பை வாசித்து முடிக்க நானும் என் தங்கையின் நிலையில்... கே.வி.ஜெயஸ்ரீ தமிழில் எழுதிய கதைகளா மொழிபெயர்த்த கதைகளாவென... நெருக்கமான நிறைவான மொழியக்கம் செய்துள்ளார் கே.வி.ஜெயஸ்ரீ.

அல்ஃபோன்சாம்மாவின் மரணமும் இறுதிச்சடங்கும்
பால் சக்காரியா - தமிழில்-கே.வி.ஜெயஸ்ரீ
வம்சி புக்ஸ், 19டி.எம்.சாரோன், திருவண்ணாமலை. விலை-100.

Friday, January 31, 2014

nantri: Ungal Noolagam

போராளிகள் வாழ்ந்துகொண்டுதான் இருப்பார்கள்
-ந.பெரியசாமி

ஏழு எட்டு ஆண்டுகள் இருக்கும் குளிர் நிறைந்த மாலைப் பொழுதொன்றில் தமுஎச நிகழ்வு ஒன்றிற்காக நானும் ஆதவன் தீட்சண்யாவும் ஒசூரில் தொழிலதிபர்களுள் ஒருவராக அறியப்பட்ட திரு.வசந்தசந்திரன் என்பவரை காணச் சென்றோம். அவரது அலுவலகத்தில் ஒரு போட்டோ மாட்டியிருந்தார். அதில் ஜி.நாராயணம்மாள் தனிநபர் சத்யாகிரகி என எழுதப்பட்டிருந்தது. அவர் குறித்து விசாரிக்க, தனது அத்தை என தொடங்கி 1941ல் காந்தி தனிநபர் சத்யாகிரகப் போராட்டத்தை துவங்கினார். காந்தியிடம் அனுமதி பெற்று அத்தையும் ஊரில் சத்யாகிரகப் போராட்டத்தை ஊரில் நடத்தி சிறைபிடிக்கப்பட்டு சிறையில் தகாத வார்த்தைகளால் திட்டி கன்னத்தில் அறைந்திருக்கிறார்கள். காந்திக்கு இத்தகவல் அறிய வைஸ்ராய்க்கு கடிதம் எழுதி அந்த சப் இன்ஸ்பெக்டர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். அத்தைக்கு மூன்று மாத தண்டனை அல்லது அபதாரம் விதிக்கப்பட்டது. அபதார தொகைக்காக கோர்ட்டில் அத்தையின் தாலி ஏலத்திற்கு விடப்பட்டது. இந்த செய்தி காந்தியின் ஹரிஜன் பத்திரிக்கையில் வெளிவந்திருக்கு. அதனால் அத்தையை பார்க்க அப்போ நிறைய்ய தோழர்கள் வந்துபோவார்கள் எனக் கூறியவர் அப்பாவும் இராமநாதபுர ஜில்லாவில் விவசாய சங்கம் அமைத்து போராடியவர். சுதந்திரப்போராட்ட போராளிதான் எனக்கூறி ஒரு டைரியை எடுத்துக் காட்டினார்.

பக்கங்கள் மடங்கி எழுத்துக்கள் ஆங்காங்கே அழிந்த நிலையிலும் இருந்த தாளில் ஒரு சில பகுதியை வாசித்து அப்படியே விட்டுவிடாம சீக்கிரம் புத்தகமா கொண்டு வர முயற்சிக்கலாம் தோழர் என கூறி எனக்கு காட்டினார்.

எனக்குத் தெரிந்த, பாடபுத்தகங்கள், கேட்டறிந்த வரலாறு என்பதன் அர்த்தம் சிதறுண்டது. வரலாறு என்பது பெரும் தலைவர்களோடு மட்டும் சம்பந்தப்பட்டதல்ல சாமானியர்களுக்கும் முக்கிய பங்குண்டு என்பதை அறியத் துவங்கினேன்.

டைரியின் ஒரு பக்கத்தை திறந்து வாசிக்கத் துவங்கினேன். ‘’நாங்கள் சிறை சென்ற சமயம் ஐரிஸ் பெண்ணை மணந்த ஆங்கிலேயர் சிறை சூப்பரிண்டெண்டாக இருந்தார். அப்பெண்மணி அயர்லாந்து சுதந்திரப்போரில் ஈடுபட்ட குடும்பத்தை சேர்ந்தவராம். அப்பெண்மணி தனது கணவரிடம் அரசியல் கைதிகளைத் தொந்தரவு செய்தால் நான் விவாகரத்து செய்து கொண்டு போய் விடுவேன் என்று எச்சரித்தாராம். அதனால் அச்சமயம் திருச்சி சிறை எங்களுக்கு சுதந்திர உலகமாக இருந்தது. சிறையில் நல்ல தேகப்பயிற்சிகள் செய்து வந்தோம்.” என்ற பகுதியை வாசித்ததும் எதையோ கண்டடைந்ததைப்போல உடல் விழித்தது.

அன்றைய இரவு டைரியின் விரிந்த பக்கங்களும் எழுத்துக்களுமாக கனவில் ஓடிக்கொண்டிருந்தது. அன்றைய சிப்ட் முடிந்ததும் நேராக வசந்தசந்திரன் அலுவலகம் சென்று நான் அந்த டைரியை உங்கள் கம்ப்யூட்டரில் டைப் செய்து வைக்கவா என அனுமதி கேட்டேன். அவரும் உற்சாகமாகி ஒத்துக்கொண்டார். தினசரி அங்கு சென்று கொஞ்சம் கொஞ்சமாக அடித்து முடித்தேன். அதன் பிறகு அவரது அலுவலகம் போகும்போதெல்லாம் கேட்டபடியே இருப்பேன். எப்ப சார் புத்தகம் கொண்டு வருவீங்கவென. ஊரில் அண்ணனும் அதற்கான முயற்சியில் இருக்கார் விரைவாக வந்துவிடும் என்ற பதிலோடு இருப்பார். நீண்ட காலங்கள் காத்திருக்கச்செய்து இப்பொழுதுதான் வந்திருக்கு பாவை பப்ளிகேசன் வெளியீடாக. புத்தகத்தை கையிலெடுத்த சமயம் உடல் சிலிர்த்து பழைய நாட்களின் நினைவில் கண்கள் பனித்தன.

“தொண்டர் பல்லாயிரவர் சூழ்ந்து நிற்கின்றோம்- என்ற பாடலின் கருத்தை கவனித்து அந்த தொண்டர் பல்லாயிரவர்களில் நாமும் ஒருவன் ஏன் ஆகக் கூடாது என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. அதன் பின் காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராகச் சேர்ந்தேன்” எனக்கூறும் போராளி ஜி.ராமச்சந்திரன் மதுரையில் அன்னியத் துணி எரிப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு சிறைசென்று ஆறுமாத கடுங்காவல் தண்டனையை அனுபவித்து பின்னர் நிறைய்ய சுதந்திர போராட்டங்களில் கலந்துகொண்டவராறு இருந்தவர். 1942 ஆகஸ்டில் நிகழ்ந் ஏகாதிபத்திய எதிர்ப்புப் பிரச்சாரப் போராட்டத்திலும் கலந்துகொண்டதால் போலிஸ் படை இவரது வீட்டிற்கு வந்தது. “ வீட்டை சோதனை செய்து பிரசுரங்கள் மற்றும் வெள்ளைப் பேப்பர்களை எடுத்துக்கொண்டு நீ எந்த ஊர் எங்கே வந்தாய் எனக் கேட்டனர். நான் உட்கார்ந்து பதில் சொல்லிக் கொண்டிருந்தேன். அதைக் கண்ட சிவகாசி சப் இன்ஸ்பெக்டர் எஜமான் நின்று கொண்டிருக்கிறார் நீ உட்கார்ந்து பதில் சொல்லிக் கொண்டிருக்கிறாய் என அடித்தான். நான், பிரிட்டீஸ்காரன் பூட்ஸ் கால் நக்கும் உனக்கு மரியாதையா ராஸ்கல்? என எழுந்தேன். பத்துபோர் சேர்ந்து என்னை அடித்தார்கள். கைது செய்திருப்பதாக கூறினார்கள். சட்டைபையில் வைத்திருந்த மற்ற தோழர்களின் விலாசங்களை வாயில் போட்டு மென்றுகொண்டேயிருந்தேன்.” எனக்கூறும் ராமச்சந்திரன் இதற்காக நிறைய்ய இன்னல்களை அனுபவித்திருப்பதை படிக்க உடல் சிலிர்த்து. தொடர்ந்து அலிப்புரம் சிறை சென்றிருக்கிறார். அங்கு கம்யூனிஸ்ட் தேச பக்தர்கள் சிறையில் அரசியல் வகுப்பு நடத்தியிருக்கிறார்கள். காங்கிரஸ்காரர்கள் வெறுமனே பஜனை பாடுவதும், காந்தியைப் போற்றுவதுமாய் இருந்ததால் சலிப்புற்றிருந்த ராமச்சந்திரன் அலிப்புரம் சிறையில் முழு கம்யூனிஸ்டாகவே மாறி பி.சீனிவாசராவைச் சந்தித்து அதன் பின் இராமநாதபுர ஜில்லாவில் விவசாச சங்கம் கட்டமைத்து விவசாயிகளுக்காக நிறைய்ய போராட்டங்களை நடத்தி சிறைசென்று வருகிறார். வாழ்வின் பெரும் காலம் சிறையிலும் தலைமறைவு வாழ்க்கையிலுமாக கடந்துகொண்டிருக்க 1950ல் கைதான சம்பவத்தை ஒட்டி நிகழ்ந்ததிது. “சப் மாஜிஸ்ட்ரேடிடம் அரசியல் கைதியாக நடத்த வேண்டுமென கேட்டுக் கொண்டதற்கு, சப்மாஜிஸ்ட்ரேட் அரசியல் கைதியாக நடத்துவதற்குள்ள(செக்சன்) சட்ட விபரம் தெரியாது. நான் புதியவன் தேவகோட்டை ஜில்லா மாஜிஸ்ட்ரேட்டிடம் கேட்டுக்கொள்ளச் சொல்லுங்களென்று சொல்லி எனது வாரண்டில் ‘பயங்கர கம்யூனிஸ்ட்” என்று எழுதிவிட்டான். அதனால் ஸ்டேசனில் லாக்கப்பில் சட்டை போட்டுக்கொள்ள அனுமதிக்க மறுத்துவிட்டார்கள். ‘பயங்கர கம்யூனிஸ்ட்’ என்று எழுதப்பட்ட விசயம் போலிஸ்க்கு பீதியை உண்டாக்கிவிட்டது. எனது கை விலங்கில் நீண்ட சங்கிலியைப் பூட்டி எந்நேரமும் பிடித்துக்கொண்டே நின்றனர்” என எழுதியுள்ளதை வாசிக்க சாமானியர்கள் பட்ட பாடு குறித்து எவ்வித பதிவும் அற்று ஏனோ தலைவர்களால் மட்டுமே சுதந்திரம் கிடைத்ததுபோல் வரலாறுகளை திரும்பத் திரும்ப புதிப்பித்துக்கொண்டே இருக்கிறார்களே என வலியோடு கடக்கவேண்டியிருந்தது.

இவரின் சுயசரிதையோடு இவரை அடிக்கடி தேடி அலைந்தபடியே இருக்கும் இவரது தாயர் ஒரு முறை இவரை கண்கள் வீங்க அடித்த போலிஸ் ஸ்டேசனுக்கு சென்று எவன் என் மகனை கைதுசெய்து அடித்து இம்சித்தது என பெரும் சப்தம் போட்டது... தனிநபர் சத்யாகிரகம் துவங்கி தொடர்ந்து சுதந்திர போராட்டங்களில் பங்கெடுத்த இவரது தமைக்கை ஜி.நாராயணம்மாள், தன் குடும்பத்தாருக்குப் பிடிக்காது போனாலும் தன் கணவரின் போராட்டங்களுக்கு உறுதுணையாக இருந்த அவரது துணைவியாருமென மூன்று பெண்களின் வரலாறும் பதிவாகி இருப்பது இப்புத்தகத்தின் மிகச் சிறப்பு.

ஜனசக்தியில் இவர் எழுதியி கட்டுரைகளும், இவர் குறித்து தலைவர்களின் கட்டுரைகளும், மற்றும் தாயார் துணைவியார் எழுதிய கடிதங்கள் என முக்கிய ஆவணங்களாக உள்ளன.

விடுதலைப்போராட்டத்தில் பங்கெடுத்த ஜி.இராமச்சந்திரனின் சுயசரிதை இப்பொழுதாவது வந்திருக்கென ஆறுதல்கொள்ளும் வேலையில் இவரைப்போன்று எத்தனையோ போராளிகள் எதையுமே பதிய வைக்காது வாய்வழிக்கதையாக மட்டுமே சொல்லி மறைந்திருக்கக்கூடும். எத்தனையோ வரலாறுகள் மண்ணோடு மண்ணாக கலந்திருக்கும் என்ற வருத்தமும் மேலோங்கியது...

விடுதலைப்போராளி ஜி.இராமச்சந்திரன்
தொகுப்பு- ஆர்.பாலச்சந்திரன்

வெளியீடு- பாவை பப்ளிகேஷன்ஸ்
142,ஜானி ஜான் கான் சாலை, இராயப்பேட்டை, சென்னை-600014
விலை- ரூ.80