Wednesday, April 11, 2012

விளையாட்டு

 பார்வையாளர்கள் குறித்த
பதட்டங்கள் ஏதுமின்றி
ஒரு விளையாட்டு துவங்கியது
கேள்விப்பட்டிடாது புதிதாக இருக்க
எல்லோர் நாவுகளிலும் பற்றிய தீ
வரைபடங்களில் மிளிரும்
நாடுகள் மீதும் நகரத் துவங்கியது
தேச நலனுக்கு பெரும் குந்தகம் வந்ததென
கமிட்டிகளை நியமித்தது அரசு
புத்தி ஜீவிகள்
கணிப்புகளை மேற்கோள்களின் நிழலில் வைத்தனர்
குறிசொல்லி சாமியாடிகளும்
அவிழ்க்கத் துவங்கினர் பொய் மூட்டைகளை
சமூக அறிஞர்கள் சந்தோசங்களை பகிர்ந்தனர்
வேப்ப மரத்தில் பால் ஒழுகுகிறதெனும் செய்தியென
அசட்டையாக இருந்த என்னுள்ளும்
ஆவல் பற்றிக்கொள்ள ஓடினேன்
துளி அடையாளமற்று போக்கிடச் செய்யும்
அனுபவம் தேறிய வேட்டையர்கள்
வேறு வேறு உபகரணங்களால்
வெற்றிகொள்ள துடித்தபடியிருக்க
தகர்க்க இயலாதவாறு தப்பிக்கொண்டிருந்தது பாறை
பறவையாகி...
 
nantri : Thinnai






Monday, April 9, 2012

nantri: 361

அமுத சுரபி

தனித்திருந்த நாளொன்றில்

தரிசித்து திரும்பினேன் செவிடப்பாடியாரை
தலைசாய்த்து மௌனம்பேசிய காதலரை கடந்துவர
கரும் வண்டொன்று வட்டமிட்டது
துரத்தியும் விலகியும் பார்க்க
விடாது தொடர்ந்தது
பயம் கவ்வ படியமர்ந்தேன்
அதுவும் அருகிருந்த செடியமர்ந்தது
அவதாரத்தின் வண்டாக இருக்குமோ
சந்தேகம் காட்சிகளை மனதில் ஓட்டியது
முன்னொரு காலத்தில்
சத்ரியனென காட்டிக்கொடுக்க
கர்ணனின் தொடை துளைத்து
இரத்தம் ருசித்த நாவின் பசி அடங்காது
எனை ருசிக்க வட்டமிடுகிறதோ
அப்படியாக இருப்பின்
மகிழ்வோடு தொடை காட்டியிருப்பேன்
குருதியடங்க குடித்துச் செல்லட்டுமென
கர்ணன் என் அமுதசுரபியன்றோ...

* *


சந்திப்பு

 

அவசரமாக தொலைக்காட்சிப்பெட்டியை அப்புறப்படுத்தினேன்
டேபிளை முன் அறைக்கு இழுத்து வந்தேன்
சன்னல் திரைத்துணியை உருவி விரித்தேன்
என்றோ ஒருவனின் பசியாற்றி
பரணில் கிடந்த பிளாஸ்டிக் பூந்தொட்டியை
சுத்தமாக்கி மையத்தில் வைத்தேன்
எதிரெதிராக இரு சேர்களை இழுத்துப் போட்டேன்
ஒன்றின்மீது பூனை வந்தமர்ந்தது
சிறிது நேரம் கழிய காக்கையும்
பூனை துள்ளிக் குதித்து சிரித்தபடி
நேற்றென் காதலி மிகவும் கொஞ்சினாள்
மரியாதைக்குரியவர் தழுவி பாராட்டினார்
நண்பர்களும் வியந்து வியந்து மகிழ்வித்தார்கள்
இடைவிடாது பேசிக்கொண்டிருக்க
காக்கை இடைமறித்து
எனக்கும் இப்படியெல்லாம் வாய்க்குமா
பிணங்கிய காதலி  எனையடைவாளோ
முகமறிந்த முகமறியா நண்பர்களும் போற்றக் கூடுமோ
கேள்விகளை தொடர்ந்த காக்கை
எனை பார்த்து கண் சிமிட்டியது
பின் டேபிளில் இருந்த நீரை அருந்தி
ஆளுக்கொரு முத்தமிட்டு பிரிந்து சென்றன
எழுதி முடித்த கவிதையிலிருந்த பூனையும்
எழுதப்போகும் கவிதையிலிருக்கும் காகமும்.

Thursday, April 5, 2012

வேர்களோடு வாழ்ந்து கொண்டிருப்பவரின் நினைவாக


கோணம்

நீ கவிதை எழுதுவதும்
அவன் மலம் எடுப்பதும்

மதிப்பீட்டில் வேறானாலும்
வகையில் ஒன்றுதான்
ஒரு கோணத்தில் பார்த்தால் பார்த்தால்
அவனது
உனதைவிடச் சிறந்தது.

மேலும்

அலைவுகளை விட்டுச் செல்வதைவிட
சுவடற்று மறைவது மேல்.

இக்கவிதையோடு சி.மணியின் இன்னும் சில கவிதைகளை வாசித்து நெடிதாய்
பேசியபடி இருந்தோம் பாபு சாகிப்கிரான் சீனிவாசன் அகச்சேரன் ராஜாவோடு
நானும். சேலத்தில் மதுக்கூடாரம் ஒன்றில் கொத்து கொத்தாக அமர்ந்து அழுகை
சிரிப்பு சண்டையென கலவையாக ஒரே ஆலமரத்தில் கூடடையும் பல பறவையின்
கீறிச்சிடலாக ஒலித்துக் கொண்டிருந்த  வார்த்தைகளின் ஓரத்தில்
அமர்ந்தபடி...

2009 ஏப்ரல் 6 காலை 8மணி வாக்கில் சாகிப்பிடமிருந்து தொலைபேசி அழைப்பு
தவறிவிட்டார் மணியென்று. தன் இல்லத்தாரின் இழப்பை தாங்கியிருந்த அவரது
குரலின் துயர் எனை உடனே புறப்படச் செய்தது. பெரியதாய் சி.மணியுடன்
எப்பழக்கமும் இல்லை. எனது திருமணத்திற்கு அன்பளிப்பாக வந்திருந்த
ஒன்றிரண்டு புத்தகங்களுள் அவரின் இதுவரை கவிதை தொகுப்பும் இருக்க
சாகிப்பிடம் அவரை அறிந்துகொண்டேன். சேலத்தில் இருக்க என்றாவது பார்க்க
வேண்டுமென நினைத்திருந்தேன். மரணத்தன்றுதான் வாய்த்தது சந்தர்ப்பம்.

அவரது அம்மாபேட்டை இல்லத்தில் பெரும் அமைதி கவ்வியிருக்க கட்டிலில்
கிடத்தப்பட்டிருந்தார். மேலும் மெலிவதற்கு இயலாத அவரது உடலை சிறிது நேரம்
பார்த்திருந்து சாகிப்கிரானின் கை தழுவினேன். அருகில் சாகிப்கிரானின்
துணைவியார் கலங்கிய கண்களோடு... பெரிய இலக்கிய ஆளுமையாச்சே நிறைய்ய
இலக்கியவாதிகள் இருப்பார்களென கண்கள் சுழன்றபடியிருக்க கைவிரல்களின்
எண்ணிக்கையே மிஞ்சியது. (மெலிந்த அவரது உடலே நெடுநாள் நினைவிலிருக்க
அடுத்த வந்த உயிர் எழுத்தில் சிபிச்செல்வனின் கட்டுரைக்காக
போடப்பட்டிருந்த சி.மணியின் போட்டோக்களை பார்த்து பிரமித்தேன்.
அக்காலத்திலேயே அவ்வளவு ஸ்டைலாகவும் மாடர்னாகவும் இருந்தார்.
அக்கட்டுரையும் புது எழுத்தில் வந்த சாகிப்கிரானின் கட்டுரையும் சி.மணியை
இன்னும் நெருங்கிப்பார்க்க செய்தது.)

டீக்கடைக்கும் மணியின் இல்லத்திற்குமாக நடந்து நடந்து பேசிப்பேசி அந்தியை
கொண்டுவர வேர்களின் மீது படுக்கவைத்து திரும்பி வந்து உடன் ஊர் திரும்ப
மனமின்றி மதுக்கூடாரத்தில் கவிதை வாசித்தும் நெடிதாய் பேசியும் கை பற்றிய
ஆரஞ்சு பழத்தை சாக்கடையில் தவறவிட்ட குழந்தையாக பெரும் தவிப்போடு இருந்த
சாகிப்கிரானிடம் விடைபெற்றோம்.

சி.மணியின் நினைவு நாள் இன்று...

Monday, April 2, 2012

நதிகளை பூட்டிக்கொண்டிருப்பவன்

விற்பனனோ பழுது நீக்குபவனோ அல்ல
சதாகாலமும் சடை சடையாய்
உடலெங்கும் தொங்கிக் கிடக்கும்
சாவிகளும் பூட்டுகளும்
பஸ் நிலையம் மேம்பால அடியென
தினசரி கண்களை அறுத்துப்போவான்
எனது கருணையை
பாவம் பைத்தியமெனும்
வார்த்தையுள் வைத்து கடந்திடுவேன்
ஒரு நாளும் கொடுத்ததில்லை
சோற்றுப் பொட்டலமோ
ரொட்டித் துண்டுகளோ
பெரும் மழைநாளின் அந்தியில்
எதையோ பாடிக்கொண்டிருந்தான்
ஒலி செவியடையும் தூரத்தில்
எனதுடலை வைத்தேன்
எனதிருப்பை சவமாக்கி
வேகமாய் பேசத் துவங்கினான்
துச்சனுங்க தொலைச்சிடுவானுங்க
 பூட்டி வச்சிக்கிட்டேன்
நதி குளங்களின் பெயர்கூறி
எண்ணத் துவங்கினான் சாவிகளை
 அங்குமிங்குமாய் ராஜநடையிட்டு
நானோ... நதி காப்பவன்
குளம் காப்பவன்
கடல் காப்பவனென்றான்
அன்றைக்குப் பின் பேசிக்கொண்டார்கள்
 தொலைந்துபோனது
பூட்டு பைத்தியமென
அவனற்ற இடம் வெறுமை சூழ்ந்தபோதும்
நம்பிக்கை இருக்கிறதெனக்கு
ஆற்றையோ குளத்தையோ
பூட்டிக்கொண்டிருபானென...
nantri: vallinam.com