Wednesday, January 11, 2012

நிறைவு

 எறும்பாக ஊர்ந்து
சிறு சிறு தானியங்களென
சொல்லைக்கடத்தி
புற்று நிறைத்தேன்
வழிந்த வார்த்தைகள்
அவளின் கன்னக்குழியமர்ந்தது
முத்தங்களாக...

நன்றி : புன்னகை

Tuesday, January 10, 2012

தீட்டுறிஞ்சி

..


தூர்த்த குளக்கரையிலிருந்து வந்த விசும்பலின்
துயர்வெடிக்க கலைந்த தூக்கத்தின் எரிச்சலோடு
இடம் அடைய அதிர்ந்தேன்
எழுப்பிய தூண்களிடையே நின்றிருந்தாள்
குலசாமியான செல்லியம்மன்
யாது துயர் தாயே
மண்டியிட்டேன்
அவளும் மண்டியிட்டு தலைநிமிராது
நாப்கீன்கள் படைத்திட வேண்டினாள்
வீடு திரும்ப நினைத்துக் கொண்டேன்
பெரியாயிக்கு சேலை படைக்கும்
அம்மாவின் வேண்டுதலையும்
நிறைவேற்றிட வேண்டுமென...

நன்றி: திண்ணை

Thursday, January 5, 2012

புலியாகும் மதுவாகினி

ஓய்ந்த நேரங்களில்
விளையாடத் துவங்குவோம்
எப்பொழுதுமே மதுவாகினியின் தேர்வு
புலியாகவே இருக்கும்
நான் ஆடாகிக் கொண்டிருப்பேன்
ஒன்றிரண்டை காவுகொள்ள
மகிழ்வில் நடனமாடுவாள் கட்டங்களில்
நகர இயலாது ஒரு புலியை மடக்க
பெரும் காடாகிவிடும் கட்டங்கள்
உடல் சிலிர்க்க மாறுவாள்
புலியாக மதுவாகினி
உக்கிரம் தாளாது
பயத்தில் அலைவுறும் ஆடுகள்
வெற்றிகொள்ள சாந்தமாவாள்
காடு மீண்டும் கட்டமாகிட
கலைந்து போவோம்
மீந்த காய்கள்
பெரும் ஆடாக வளர்கிறது என்னுள்
என் புலி
எவ் வனத்திலோ...

நன்றி : வல்லினம்

Sunday, January 1, 2012

வாசமற்ற வாழ்வு

அதுகளின் மொழி
எனக்கெப்படித் தெரியுமெனும்
வியாக்கியானங்களை விலக்கிவையுங்கள்
அன்பின் வயப்பட பரிச்சயமாகும்
அடர்ந்து கிடந்த அந்திமந்தாரையில்
அமர்ந்திருந்த தட்டான்களின்
உரையாடலின் கவலைப்பாடிது
துரத்த துரத்த போக்குக்காட்டி
களைப்புறும் கணம் கையுள் சிக்க
சிறு சிறு கல் தூக்கச் செய்யும்
தண்டனையிட்டு மகிழ்ந்திட்ட
மழலைகளின்
வாசனையற்றுப் போனதே
நம் வாழ்வு...