Friday, December 9, 2011

கணம் இடறிய கடவுள்

தெருவெங்கும் பிரதியெடுத்தவர்களை
சுடரிடும் கண்களுடன்
கழற்றிவைத்தாள் மதுவாகினி
உறுத்தல் யாவும் அடங்கியவுடன்
மீண்டும் கண்களை பொருத்திக்கொண்டவள்
அதிசயித்தாள்
எதிரிலிருந்த யுவன்களோடு
இரு வயோதிகரும்
ஒரு கடவுளரும் நின்றிருந்தனர்
முதலாமவரை நெருங்க
அறுபது வருடங்களை
உன் வாசம் அளித்து இருபதாக்கியதாலென்றார்
மற்றவரோ
மனம் கிடந்த பிம்பம்
பெயர்ந்து
வீதியில் உலா வந்ததாலென்றார்
எட்டி நின்ற கடவுளோ
கணம் இடறினேன் குழந்தாய்
ஆண்டாளெனவென்றார் 

உறக்கத்தில் நீந்திச் சென்றாள் மதுவாகினி
தன்னிருப்பின் சிலிர்ப்பில்...

Saturday, December 3, 2011

இரு கோப்பைகளில்

இரு
கோப்பைகளில் கடலை
ஆற்றிக்கொண்டிருந்தவனிடம்
வேறெங்கு வாழ்வதென போராடின
மீன்கள்
மனமுடைந்த முதலைகள்
தற்கொலை பூண்டன
போக்கிடமற்று அலைந்தன பிற ஜீவராசிகள்
கூடை கூடையாய்
எல்லோரும் புசிக்கத் துவங்கினர்
மலிவு விலையில் மீன்களை...

கசப்பு

சோம்பிக் கிடந்த குழாயிலிருந்து
மழையை வரவழைத்துக்
கழுவிய இரு பாகற்காயை
துண்டாடினேன்
அலுப்பூட்ட விரும்பவில்லை
பொன்நிறமாகிட
வதக்கினேன்
சுவையறிய சிறுதுண்டை
நாக்கிலிட்டேன்
ஊறி ஊறி வழிந்த எச்சில்கள்
உடலுள் வளர்த்தது
ஒரு வேப்பமரத்தை

Friday, December 2, 2011

தவளைக்கு சிக்கிய மீன்

தூண்டிலிட்டது 
குளக்கரையிலிருந்து தவளை 
நீர் அதிர 
சிரித்தது சிக்கிய மீன் 
எனை பிடித்தென் செய்வாய்? 
ஏளனம் தரையில் வழிந்தது
மனித வசிப்பிட சிறையிலடைப்பேன் 
அங்கு உன் பெயர் தொட்டிமீன் 
சிறார்கள் உணவிடுவார்கள் 
தாளில் 
பிறப்பித்த மீனை 
துணைக்கு மிதக்கச் செய்வர் 
கழிவில் கசடான நீரை 
மறவாது மாற்றம் செய்வர் 
உனது வளர்ச்சிக்கு உண்டங்கு ஊசி
பெருமையின் அடையாளமாவாய் 
வந்துபோவோரெல்லாம் வேடிக்கையில் மகிழ்வர் 
ஒளிரூட்டி கதகதப்பாக்குவார்கள் 
ஒத்துப்போக ஓடித்திரியலாம்
முரண்கொள்ள செத்து மிதப்பாய் 
வீசி எறிய வேரொன்று இடம் நிரப்பும் 
என்றாவது விடுவிக்கவும்படலாம் 
வதை என்பதறியும் சிசு அவதரிக்க...