புத்தகம் : அகப்பிளவு
ஆசிரியர் : நா பெரியசாமி
பதிப்பகம் : சொற்கள் பதிப்பகம்
முதலில் புத்தகத்தின் முகப்பு அட்டை உள்ளிருக்கும் கருப்பொருளை சொல்லிவிடுகிறது. பின்னட்டையில் கவிஞர் சாகிப் கிரான் அவர்கள் காமம் என்பது குழந்தைமையின் முக்கிய தன் உணர்வு கூடிய வடிவம் என்பதே இத்தொகுப்பின் ரகசியம் என்று குறிப்பிடுவது மிகச்சரி. புத்தக வடிவமைப்பு மற்றும் ஓவியங்கள் கலை வடிவத்துடன் மிளிர்கின்றன.
ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஆன காமம் என்பது ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட பேசுபொருள் ஆகிறது. ஒரு கவிஞன் அதை கருப்பொருளாக எடுக்கும் போது தெருவோர கூடாரங்களில் இரு குச்சியை நட்டி கம்பி மேல் நடக்கும் சிறுமியின் முகம் தான் என் நினைவுக்கு வருகிறது. ரசனை என்னும் மெல்லிய கோட்டை கவிதை எங்கேனும் மீறிவிட்டால் உடனே கவிஞன் மீதான விமர்சனங்கள் பெருகிவிடும் அதே சமயம் அதைப் பற்றி சிறிதும் கவலைப்படாது என் கவனத்தை செரிவான சொற்களை காமத்தை அழகுப்படுத்த பயன்படுத்துவேன் என்ற உறுதியுடன் பெரியசாமி எழுதி இருப்பதாக தோன்றுகிறது.
ஒரு கவிஞன் சர்வ வல்லமை பெற்ற ஒரு படைப்பாளியாக உயர்வது அவனுடைய கருத்துக்கள் எதைப்பற்றி எல்லாம் பேசுகிறது என்பதை பொறுத்து தான். 'லாஸ்ட் பெஞ்ச்' போன்ற இளையோருக்கான கவிதைகளையும், கட்டுரைகளையும், சக கவிஞர்களின் புத்தகங்களை வாசித்து விமர்சனங்கள் எழுதுவதிலும், இலக்கிய கூட்டங்கள் நடத்துவதிலும் பெரியசாமி அவர்களின் நேர மேலாண்மையைக் கண்டு வியந்திருக்கிறேன்.
இந்தக் கவிதைகளை நான் வாசித்த போது அந்தக் கவிதைகளினூடே பெண்ணின் மெல்லிய வெட்கமும், ஒரு ஆணின் காதலும், ரசனையும் காமமும் கலந்த பாடல் ஒன்று இசைக்கிறது.
இந்தத் தொகுப்பில்
வன தேவதை என்னும் கவிதையில்
"எதிர் நின்று
வேடிக்கை கண்ட புங்கைக்கு
மீந்த நதியைக் கொடுத்து
இலைகளை சிலுப்பிச் சென்றாள்
சுவைமுத்தம் கொண்டதாகத்
தளும்பியது புங்கை
மாடியிலிருந்து ரசித்திருந்தவன்
இன்னும் மரக்கன்றுகளை
நட்டு வைக்கத் தீர்மானித்தான்
வனங்கள் உருவாவது இப்படித்தான்"
இது போன்ற பல கவிதைகள் நுட்பமாய் ரசிக்க வைக்கின்றன. காமம் சார்ந்த உணர்வுகளை மிக மெல்லிய குரலில் மனதுக்கு சொல்கிறது.
"உன் சொற்கள்
எல்லாருடனும் போகும் நிலா போர்வைக்கு உடன் இருந்து
உறங்கும் நம்பிக்கை மிக்கது பாவங்கள் கழுவி ரட்சிப்பதில்லை நான் இருப்பேன் எனும்
பலத்தைத் தருவது"
உங்கள் சொற்களும் இவ்வாறே நம்பிக்கை மிக்கதாக வெவ்வேறு திசைகளில் இலக்கிய வானில் சிறகு விரிக்கட்டும்.
அன்பு வாசகி,
மலர்விழி.