Friday, March 3, 2023

நன்றி: தமிழ்வெளி

 

இனி இல்லாமலாகட்டும் ' சாமி எசமாங்களே ராசாங்கமே'

- ந.பெரியசாமி

 

 

இதெல்லாம் சாத்தியமா? இப்படியெல்லாம் நடக்கக்கூடுமா? வாழ்ந்து மடிந்தவர்கள் இப்படியும் கூட இருந்திருப்பார்களா? இப்படியானவர்களை பிறக்க வைத்து வாழ்ந்து மடியச் செய்யும் காலத்திற்குட்பட்டதை மொழி எவ்வாறு எழுத்துக்களாக மாற்றுகிறது. இது இதனால்தான் என அறுதியிட்டுக் கூற முடியாத புதிர்த்தன்மையை எழுத்துக்கள் வைத்துக் கொண்டிருப்பதன் ரகசியம் யாருக்கேனும் புலப்படக் கூடுமோ? புலப்படும் தருணத்தை கண்டடைந்தவர்களின் விடியல் எத்தகைய இன்பத்தைக் கொடுக்கும். இன்பம் திகட்டத் தொடங்கி சலிப்படையும் காலத்திற்குமுன் இல்லாது போய் விடுதல் அபூர்வம்தானே. ஒருவரின் மனதுக்குள் குளமாக, ஆறாக, கடலாக மொழி உருக்கொண்டபடி இருப்பது எதனால். யோசிக்க அதன் புதிர்த்தன்மை கெட்டித்துக்கொண்டே இருக்கும் படைப்புகள் வந்துகொண்டுதானே இருக்கிறது!. அப்படியான படைப்பாக வந்திருக்கிறது தேவிபாரதியின் 'நொய்யல்' நாவல்.

 

வேரோடு பிடுங்கி இழுத்து வந்த மரத்தைக் கரை ஒதுக்கிச் சென்று கொண்டிருந்தது ஆறு. வேடிக்கை பார்த்தபடி மரத்திலிருந்த இலைகளைப் பறித்த சிறார்கள் ஆளுக்கொரு பீப்பி' செய்து ஊதிக்கொண்டு சென்றுகொண்டிருந்தனர். ஒவ்வொரு பீப்பியிலிருந்தும் நொய்யல் ஓடும் பகுதி மக்களின் கதைகளை கேட்கத் தொடங்கிடுகிறோம். தேவிபாரதியின் நொய்யல் நாவலை வாசித்து முடித்ததும் இப்படியான சித்திரம் ஒன்று மனதுள் உருக்கொண்டது.

 

ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஓடிக்கொண்டிருக்கும் தனித்த ஒன்றல்ல ஆறு. ஊரின் உயிர். ஊரில் வாழ்வோருக்கெல்லாம் அதனோடு உறவுண்டு. தாய், சிநேகிதி, தந்தை, சிநேகிதனென அவரவரின் தேவைக்கேற்ற உறவாக உருமாற்றம் கொள்ளும். ஒவ்வொருவரின் உடலின் ரகசியம் அறிந்தது ஆறு. உடல் கழிவோடு மனக் கழிவையும் அகற்றக் கூடியது. வாசிப்போரை தன் பிரதேச ஜீவன்களாகக்  கொள்ளும் தன்மை ஆற்றுக்கு உண்டு. நம்மையும் அப்படித்தான் சுழற்றி அணைத்துக் கொள்கிறது.

 

பேரிரைச்சலோடு வரும் நொய்யலின் பாய்ச்சலை எதிர்கொள்ளும் உடல் மற்றும் மனவலுவோடு இருக்கும் அப்பகுதி மனிதர்களின் சாமார்த்தியத்தையும் காட்சிப்படுத்தும் நாவலில் தேவனாத்தா எனும் சிறு தெய்வத்தின் கதையோடு சென்னி மூப்பன் சொல்லும் கதை நம்மையும் கரையில் அலைவுகொள்ளச் செய்திடுகிறது.

 

ஊரென்பது சாதிய அடுக்குகளால் பிளவுபட்டும் பிணைந்தும் கிடக்கக் கூடியது. உயர்சாதி எனும் நினைவு எதையும் செய்யத் துணிவு கொண்டது. அறம் அறியாதது. அடுக்குகளுக்குள் பின்னப்பட்ட வலையை தாண்டவிடாது பார்த்துக்கொள்ளக் கூடியது. சாதி தொழில் துறந்து தன் முனைப்பில் எதையாவது கற்றுக்கொண்டாலும் அதை செய்யவிடாதிருக்க எத்தகைய இழிசெயலையும் செய்யக்கூடியது.  " நாலூறு செரச்சு எட்டூறு எரந்து குடிக்கற எச்சக்கலைக்கு படிப்பு கேக்குதாக்கு" என திட்டிக்கொண்டிருப்பவர்கள் மத்தியில் குமரப்ப நாவிதன் பண்டிதனாக உருக்கொண்டதை சகிக்காது,  நாய்க்குண்டியை செரைக்கவைத்து பரிகாசப்படுத்தியதை வாசிக்க நினைவில்  உண்டான வலியே தங்கமுடியாதிருக்க, நிஜத்தில் அனுபவித்தவர்களின் துயர் எத்தகு வலி மிக்கது என்பதை உணர்த்தி செல்கிறது தேவிபாரதியின் மொழி. குமரப்ப நாவிதர் பண்டிதனாகவும், ஆகச் சிறந்த ஜோதிடனாகவும் மிளிரச் செய்திருப்பது 'சாமி எசமாங்களே ராசாங்கமே' என்பதினி இல்லாது போய்விடும் என்பதற்கான நம்பிக்கையை அளித்தது. ஏரிக்கரையில் மதிய நேரங்களில் வேட்டியை இரு கைகளால் மறைத்துப் பிடித்திருக்க உள்ளே உட்கார்ந்தபடி சிரைக்கும் காட்சிகளை நகைத்தபடி கடந்த சிறார் பருவகாலம் நினைவில் தோன்ற மிகுவலியில் வாசிக்க இயலாதிருந்ததும்  ஏற்பட்டது. ஓட்டப்பந்தயத்தில் முதன்மையாக ஓடிக்கொண்டிருப்பவனை பிடித்திழுத்து கால் நரம்பொன்றை அறுத்துவிட்டு ஓடச்செய்து வலியின் வேதனையைக் கண்டு குதூகலித்திருந்த மனிதக் கூட்டங்களின் குரூரத்தின் வீச்சத்தை காலம் கடந்தும்  நாசியைப் பிடித்து கடக்கவேண்டியதாக இருக்கிறது.

 

நல்லதங்காள் கதைபோன்று காரிச்சி, குமரப்ப பண்டிதன், தேவனாத்தா கதை என நாட்டார் வழக்காற்றியல் தன்மையுள்ள நிறைய்ய கதைகளை நாவல் கொண்டுள்ளது. ஊரார்களின் கதையை ஊரின் மொழியில் சொல்லப்பட்டிருப்பது கதைகளின் மீதான நம்பகத்தன்மையும், கதைகள் நம்மை தொந்தரவு கொள்ளவும் செய்கின்றன. கிராமங்களில் புதையுண்டு கிடந்த கதைகள் நாவல்களாக வந்தடைதல் வழி முன்னோர்களின் வாழ்வியல் துயர்களை அறிந்துகொள்ள முடிகிறது.

 

கிராமங்களில் கள்ளத்தனம் மிக்க காமக் கதைகள் நிறைய உண்டு. அதுவும் திருவிழாக்களில் நிகழும் காமத் திருட்டுக்கதைகள் ஆண்டு முழுமையும் உலவிக் கொண்டிருக்கும். கட்டற்ற காமம் எதையும் செய்யச் செய்யும். மனிதாபிமானம் மண்ணாங்கட்டிகளாக உதிர்ந்து கிடக்கும். விரைத்த குறியை வம்படியாக வாயில் திணித்து தன் தினவு தீர்த்த சம்பவங்கள் நிறைய்ய உண்டு. நாவலில் காட்டப்பட்டிருக்கும் ஒன்றே உயிர் வதைக்கும் வாதையை ஏற்படுத்தி செல்கிறது.

மனித்தன்மையற்ற காமத்தால் மதிகெட்டுத் திரியும் போக்கை குமாரசாமி, சாமியாத்தாள், பூபதி பாத்திரங்கள் வழியே நிகழும் வெறியாட்டத்தை அப்பகுதியின் பொதுத்தன்மையாக மாற்றம் கொள்ளாதிருக்கச் செய்திருப்பதும் நாவலில் கவனிக்கத்தக்கதாக இருக்கிறது.

அடிபட்டு தப்பிய பாம்புகள் அடித்தவரை நினைவில் வைத்து என்றாவது அவர்களை கொத்திவிடும் எனும் பேச்சு உண்டு. ஒருவிதத்தில் உண்மையும் கூட. பத்தாம் வகுப்பு படிக்கையில் சேக்காலிகளோடு தூரமாக இருக்கும் கிணற்றில் குளிக்கச் செல்வதுண்டு. அப்படியானதொரு நாளில் பாதையில் கண்ட பாம்பை கல்லெடுத்து எறிந்தேன். வாலில் அடிபட்டு தப்பியோடியது. இனி உஷாராக இரு அது உன்னை கொத்த வரும் என பயமுறுத்திவிட சிறிது காலம் பாம்பு துரத்துவதாக நினைத்து பயந்து திரிந்தேன். இரவில் தினந்தோறும் கனவில் பாம்பிடம் கடிபட்டுக்கொண்டிருந்தேன். நினைவும், கனவுமே பாம்பு நம்மை தீண்டுவதற்கு சமமானதாகிவிடுகிறது. இந்த அனுபவம்தான் இப்படியானதொரு பேச்சை உருவாக்கி இருக்கக் கூடும். நாவலில் சாரைப் பாம்பு குறித்த கதைப் பகுதி நல்லோட்டமாக இருந்தது.

 

உருவாக்கத்தில் இருக்கும் பாடுகளை உருவாக்கியவர்களே உணர்வர். உருவாக்கம் உள்ளவரைதான் பாடுகளுக்கான உயிர் இருந்துகொண்டிருக்கும். காணமலாக்கி வேறொன்றை உருவாக்கிட, எல்லாமுமே காலமானதாகிவிடுகிறது. நம் காலத்தில் கிணறுகளும், ஏரி, குளங்களும் மரணித்து கட்டிடங்களைப் பிறப்பித்துள்ளன. கிணறு உருவாக்கத்தில் இருக்கும் வலிகளும், இழப்புகளும், நம்பிக்கையும் கிணறு இருக்கும் வரைதான் வாய்மொழிக் கதைகளாக இருந்துகொண்டிருக்கும் என்பதை நாவலில் நெடும் பகுதியாக இருக்கும் கிணறு வெட்டும் கதை நம்முள் மிகுந்த வலியை உருவாக்கிச் செல்கிறது. கிணறு இருந்த இடங்களில் இருக்கும் கட்டடங்களை பார்க்கும்போதெல்லாம் கிணற்று நீரின் சலசலப்பு நினைவுக்கு வந்துகொண்டிருந்தது. காலப்போக்கில் கிணற்றை நினைவும் மறந்துபோக தொடங்கிவிடுகிறது. நாவலில் இருக்கும் இப்படியான சின்னச் சின்ன சம்பவங்கள் நம்முள் நோய்மையை உருவாக்கி சென்றுவிடுகிறது.

 

நாவலில் தேவிபாரதி அக்கால மாந்தர்களின் கதைகளை மட்டுமல்லாது, அவர்களுடனாக இருந்த மரங்கள், செடி கொடிகள், பறவைகள், விலங்குகள், பாம்புகள், மீன்கள் என அவ்வூர்களில் இருந்த எல்லாவற்வையும் பெயர்களோடும், அதன் தன்மைகளோடும் நாவலின் போக்கில் கதையோடு கதையாக சொல்லியிருப்பது குறிப்பிடத்தக்கதாக உணருகிறேன்.

 

கி.பி.ஏழாம் நூற்றாண்டில் அப்பர் தேவாரத்தில் கூறப்பட்டிருக்கும் " சென்று நாம் சிறு தெய்வம் சேரோம் அல்லோம்" என்பதன் நீட்சியாக இருக்கும் சிறு தெய்வமான தேவனாத்தா நொய்யல் பகுதியினரை கட்டுக்குள் வைத்திருக்க யாரின் மேலாவது மருள் வந்து பெரும் ஆட்டத்தை நிகழ்த்துவதும், சூறைக் காற்றை பயங்கொள்ளச் செய்யும் ஒன்றாக நாவலில் மாற்றம் கொள்ளுதலும் நாவலில் சுற்றும் கதைமாந்தராகிவிடுகிறது.

 

பூவுக்கு மட்டுமல்ல புற்களுக்கும் வாசனையுண்டு." கொழுக்கட்டிப் புற்களின் மணம் வீசும் காரிச்சியின் மார்புக் கூடு" என்பதை வாசிக்கையில் அப்புற்கள் எப்படி இருக்கும், என்ன நிறம், என்ன மணம், எவ்வளவு உயரம் இருக்குமென நினைவு தேடத்தொடங்கியது. வறண்டு கிடக்கும் ஆற்றில் வெள்ளம் வரும் காட்சியை காட்டுகையில் கிரிக்கவுண்டனோடு நம்மையும் நிற்கச் செய்திடுகிறாள் காரிச்சி. நான்தான் நொய்யல், நான்தான் தேவனாத்தா என்னை நினைச்சிக்கோ வரும் எனக் கூறும் நிறைவு ததும்பும் சொற்களின் முன் பிதற்றும் சொற்கள் கிரிக்கவுண்டனுக்கு மட்டுமா?

வலட்சணமான தோற்றத்தில் வசீகரிக்கும் பாடலை பாடும் காரிச்சி ஆற்றில் நிர்வாணத்தோடு மிதக்கையில் ஒளிப்பிழம்பாக தகதகக்கும் பேரழகோடு இருப்பதைக் கண்டவர்கள் கூறுவது காரிச்சியே நொய்யல் என்பது உறுதியாகிறது. மாசுபடுத்தப்பட்ட ஆறு அசிங்கமான தோற்றமுள்ளதாகவும், புது வெள்ளம் வரும் காலங்களில் தேவதையாக மிளிரும்  நொய்யலின் உருவாக காரிச்சி இருப்பதை நாவல் உணர்த்துவதாக கொள்ளலாம்.

 

குமரப்ப பண்டிதனை அடியில் சிரைக்க வற்புறுத்தியபோது நாயோடு நாயாக நினைத்து சிரைத்தான் எனும்போது மட்டும் நூலாசிரியரின் குரல் நாவலில் வெளிப்பட்டிருக்கும். மற்றபடி நாவலில் வேறெங்கும் குரலையோ கையையோ உயர்த்திப் பேசவில்லை. நாவலின் போக்கே நாம் யாருடன் நிற்கவேண்டும், யாருக்காக பேசவேண்டும் என்பதை உணர்த்திவிடுகிறது. பொதுவெளியில் மாதாரி இனத்தில் பிறந்த பெண், ஆதிக்க சாதியில் பிறந்தவனை கட்டியணைத்திட முடியாது. நாவலில் காரிச்சியின் உடலை பார்வதியின் உடலாக்கி மீறலை ஏற்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. இருபத்தி ஐந்து ஆண்டுகள் அடைகாத்து அடைகாத்து வைத்திருந்ததன் நோய்மையின் வலியை மறக்கடிக்கும் விதமாக நாவலை வாசித்து முடித்ததும் மீண்டும் ஒரு முறை நாவலை வாசிக்க வேண்டும் என வாசகனை நினைக்கச் செய்கிறது நொய்யல்.