“இயற்கை கவிதைமயம். உறவுகள் கவிதைமயம். இந்தக் கவிதைமயத்தை ஸ்வீகரிப்பவர்கள் களிப்பூட்டக் கூடிய கவிதை அனுபவத்தை அடைகிறார்கள். எல்லா அனுபவங்களும் கவித்துவத்தில்தான் சங்கமிக்கின்றன. இயற்கை, காதல், நேசம், நட்பு எல்லாவற்றிலும் கவிதை இருக்கிறது.” – யூமா வாசுகி எல்லோருக்கும் இப்படித்தான் தோன்றும், ஒன்பது வயது பையனுக்கு இது சாத்தியமாவென. சாத்தியம்தான். குழந்தைமை மனநிலையை தக்கவைத்துள்ளவர்கள் இதை உணர்வர். என், ‘குட்டிமீன்கள் நெளிந்தோடும் நீலவானம்’ தொகுப்பிலிருக்கும் கவிதைகள் அனைத்தும் குழந்தைகளோடு உரையாடியபோது கிடைத்த அனுபவத்தை வைத்து எழுதப்பட்டவை. எனவே மகிழ் ஆதனின், ‘நான்தான் உலகத்தை வரைந்தேன்’ தொகுப்பு என்னை ரொம்பவுமே வசிகரித்தது. சிறார்கள் சிலந்தியாக மாற்றம் கொண்டு மொழியால் வலை பின்னிக்கொண்டிருப்பார்கள். நாம் பூச்சிகளாக உருமாற்றம் கொண்டு அதில் சிக்கிக் கொள்வோம். விளக்குமாற்றைக் கொண்டு வலையை சுத்தம் என்ற பெயரில் அழிப்பவர்களே சூழலின் துயரம். சொற்பமானவர்களே வலையில் பூச்சியாக சிக்கிக்கொள்கிறார்கள். நாம் யாராலோ வரைஞ்சு அனுப்பப்பட்டவர்கள் எனச் சொல்லும் மகிழன் ஏசப்பாவும் வரைஞ்சு அனுப்பப்பட்டவர் என்கிறார். நிஜமான ஏசப்பா இன்னும் சிலுவையில் மட்டுமே இருக்கிறார் எனும் உண்மையே சிறார்கள் அறிந்த ரகசியம். “மழை ஒரு பூமி ரவுண்டு பூமி” எனும் இக்கவியில் மழையை மழைத்துளி எனக் கொண்டால் துளியில் இருக்கும் ரவுண்ட் நம்மை வசீகரிக்கும். ஒவ்வொரு துளியும் ஒவ்வொரு பூமி. மழைப் பூமி மண் பூமியை குளிரச் செய்யும். இரண்டு வரிகள்தான். நம்மை வேறு தளத்தில் சிந்திக்கச் செய்திடுகிறார் மகிழ் ஆதன். நம் வாழ்வு சிறைபட்டது. என்ன சிறையின் நீளம் அதிகம். இந்த நீளமே நம்மை சுதந்திரமானவர்களாக நம்ப வைக்கிறது. “பறவை நம்ம உயிர் உயிர் நம்ம மனசு மனசு நம்ம ஊரு” எனும் கவிதை நமக்குள் இருக்கும் விடுதலை உணர்வை எட்டிப்பார்க்கச் செய்கிறது. ஞாயிறு மற்றும் விடுப்பு நாட்களில் நம் மனம் பறவையாவதையும் காட்சிபடுத்துகிறது கவிதை. “என் பட்டத்திலே” எனத் தொடங்கும் கவிதையும் விடுதலை உணர்வையும், காற்றுக்கும் நமக்குமான காதலை காட்சிப்படுத்துகிறது. என் வெயில், என் முகம், என் நினைவு, என் குருவி, என் மஞ்சள் வெளிச்சம், என் போர்வை, என் புல்லாங்குழல், என் சட்டை என பிடிக்கும் எல்லாவற்றையும் தனக்கானதாகக் கொள்ளும் விசாலமான மனம் சிறார்களுடையது என்பதை பிரதிபலித்துக்கொண்டே இருக்கும் சொற்கள் தொகுப்பில் நிறைய்யவே. ஆதி வண்டொன்று ஆதி மூங்கிலொன்றைத் துளையிட காற்று இசையானது. உலகம் புல்லாங்குழலைப் பிறப்பித்தது. நாமே புல்லாங்குழலாகி நம்மை இசையால் கரைத்துக்கொள்ளும் தருணம் அலாதியானது. அது எல்லோருக்கும் ஏதோவொரு சூழலில் அமையும். அது சிறார்களுக்கும் கிட்டும் என்பதற்கு சாட்சியாக நிற்கிறது இக்கவிதை. “என் புல்லாங்குழல் புல்லரிக்கும் புல்லாங்குழல் மனசுக்குள்ளே போய் பாட்டு பாடும் புல்லாங்குழல் என் காத்துலே பூக்கும் புல்லாங்குழல் உன் நெஞ்சில் பாடும் புல்லாங்குழல்.” சொட்டுத் தண்ணீரில் மனசைத் தெரிந்து கொள்பவனால் இது சாத்தியம்தான். அவனிடம் இருக்கும் ஏணியால் மழையிலே ஏற முடியும். இப்படியொரு ஏணியை எதன் பொருட்டோ வளர வளர தொலைத்துவிடுகிறோம். சிறார் பருவத்தில் நம்மிடமும் அந்த ஏணி இருந்திருக்கும். அதைப் பாதுகாத்து நம்மோடு கொண்டுவரத் தெரியாது போய்விட்டோம். மகிழ் ஆதன் நம்மைப் போன்று தொலைத்திடாது உடன் கொண்டு வருவார் என்ற நம்பிக்கையை அளிக்கிறது இத்தொகுப்பு. மகிழ்வின் அடையாளம் முத்தம். சிறார்கள் தங்களுக்கு விரும்பியது கிடைத்துவிட்டால் அவர்களின் மகிழ்வு முத்தமாக வெளிப்படும். வானம் முத்தமாதல், முத்தம் தொங்கிச் சொட்டும் தேன், கண்ணீர் தரும் முத்தம், வெளிச்ச முத்தம், சிறகடிக்கும் முத்தம், கண்முத்தம், பனியாகும் முத்தமென நீளும் மகிழ் ஆதனின் முத்தப் பட்டியல் நம்முள் வியப்பை ஏற்படுத்திக்கொண்டே இருக்கிறது. முத்தம் தொங்கிச் சொட்டும் தேன் என்பதை வாசிக்கையில் நினைவு தித்திப்பாகி உடலை மணக்கச் செய்தபடி இருந்தது. வரைதல் சிறார்களின் கவசகுண்டலம் எனச் சொல்லலாம். தங்களின் மனப்போக்கை சுவற்றில் வரைவதன் மூலம் வெளிப்படுத்திவிடுவார்கள். அவர்களுக்கு எல்லாவற்றையும் வரையத் தெரியும். சரியா தவறா என்பது குறித்தெல்லாம் அவர்களுக்குக் கவலையில்லை. அந்தக் கணத்தின் ஆனந்தமே அவர்களுக்கு முக்கியம். மகிழ் ஆதனும் தொகுப்பில் வரைதல் குறித்து நிறைய்ய கவிதைகளைச் சொல்லியுள்ளார். “என் கண்ணில் இருந்து கண்ணீர் வழிந்து வரும் அதைப் பார்த்து நான் ஓவியம்மாரி வரைவேன் அது என்னைப் பட்டப்பகல் போல் வரையும்.” பறந்துபோன ஒளி சூரியனாகத் திரும்புதல், ஒலி இசையாதல், காற்று மழையாகப் பூத்தல், மழை வானமாக மாறுதல், மனதை நட்சத்திரமாகப் பார்த்தல், சூரியனைத் திரியாக மாற்றுதல், பழங்களாகும் மழைச் சொட்டு, தண்ணீரை வீடாகக் கொண்டு வரும் யானை என சூரியனால் வரையப்பட்ட மகிழ் ஆதன் வாசிப்பவர்களை சர்க்கஸ் கூடாரத்தில் அமரவைத்து அழகு பார்க்கிறார். கவிதை சொல்லிக்கொண்டிருக்கும் மகிழ் ஆதன் கவிதை எழுதுபவராகவும் பரிணாமம் அடைந்து செறிவுமிக்க படைப்புகளை நமக்குத் தருவார் எனும் நம்பிக்கையைத் தருகிறது ‘நான்தான் உலகத்தை வரைந்தேன்
Tuesday, June 28, 2022
Wednesday, June 22, 2022
ரோமுலஸ் விட்டேகரெனும் முறி மருந்து.
"காடு தொல்குடிகளோடு பேசும். தொல்குடிகள் காட்டோடு பேசுவார்கள். ஓடை நீரும், ஊற்று நீரும், ஆற்று நீரும் இவர்களோடு பேசும். அது மட்டுமா, பூச்சிகள், பறவைகள், விலங்குகளும் பேசும். இன்றுவரை நம்மிடையே புழங்கிக்கொண்டிருக்கும் ஈசாப் கதைகளில் எப்படி எல்லா உயிரினங்களும் பேசுகின்றன? அதை எப்படி குழந்தைகள் நம்புகின்றன? நாம் குழந்தைகளாக இருந்தபோது அதை நம்பினோமே? இப்போது ஏன் நம்புவதில்லை? வளர்ந்து விட்டோம். அறிவில் வளர்ந்து விட்டோம்."
- நக்கீரனின் காடோடி நாவலில்.
நம் அறியாமையின் பட்டியலை நீண்டுகொண்டிருக்கச் செய்கிறது வாசிப்பு. அறியாமையே ஆர்வத்தை மேலிடச் செய்து புது உலகத்தின் வாழ்வியலை வியப்பின் வழியலோடு கரைந்துபோகச் செய்கிறது. பாம்பு மனிதன் ரோமுலஸ் விட்டேகரின் வாழ்க்கை பயணம் நூலை வாசிக்க அதை மேலும் உணர்ந்துகொள்ள முடிந்தது. Zai whitaker ஆங்கில மூலத்திலிருந்து தமிழாக்கம் செய்த தோழர் கமலாலயன் மொழி சிக்கலில்லாது சுவாரஸ்யமான வாசிப்பை அனுபவிக்க செய்திடுகிறது. இம் மொழிபெயர்ப்பு அவருக்கு நிறைவை தந்திருக்கக் கூடும் என்பதை உணரமுடிகிறது.
ரோமுலஸ் விட்டேகரை மனம் நாயகனாக ஏற்றுக் கொண்டாடியது. சாகசங்களும் சவால்களும் மிக்க வாழ்வை வாழ்ந்ததோடு மட்டுமல்லாது நமக்கு பெரும் கொடையை தந்துள்ளது அவரது பயணம். நமக்கது புது கற்றலை தந்தபடியே இருக்கிறது.
குழந்தைகளை ஆச்சரியப்படுத்த, அதிசயத்து மகிழ்வோடு இருக்கச் செய்யும் பாம்புப் பண்ணை, முதலைப் பண்ணைகளை நிறுவியவர் ரோமுலஸ் விட்டேகர். நம்மோடு இப்படியான உயிரிகளும் வாழ்ந்து கொண்டிருந்தன. நம் பேராசையால் இவற்றையெல்லாம் அழித்துவிட்டோம் என குழந்தைகளிடம் பாவ மன்னிப்பு கேட்க இப்பண்ணைகளில் இருக்கும் உயிரிகள் மட்டுமே மிச்சமிருக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை எனும் உண்மை கசக்கத்தான் செய்யும்.
நம்முள் பயம்கொள்ள செய்ய உருவம் தேவையில்லை பாம்பு எனும் ஒற்றைச் சொல் போதும். அப் பாம்புகளின் வகைமைகள், வாழ்வு குறித்து காட்சிபடுத்தும் இந்நூலில் எதையும் அறிந்து கொள்ளாது அறிவியல் பார்வையற்று ஊடகங்கள் நமக்குள் ஊற்றிவைத்திருக்கும் மகாமட்டமான விஷங்களை நம்மிலிருந்து முறிவு கொள்ளச் செய்திடுகிறார் ரோமுலஸ் விட்டேகர்.
இவ்வுலகம் நமக்கு மட்டும்தான் எனும் திமிர்த்தனம் எல்லாவற்றையும் அழிக்கச்செய்கிறது. காடுகள், மலைகள், குளம், குட்டைகளோடு, பாம்புகள், முதலைகள், ஆமைகள் என எதையும் விட்டுவைக்கவில்லை. ரசனையற்று, இயற்கை குறித்த கற்றலற்ற சமூகமாக உள்ளது. இயற்கையை சக உயிரிகளை நேசிக்க கற்றுத்தராத பாடதிட்டமும் அரசியலும் அவலம். நடந்த தேர்தலில்கூட இதுகுறித்த அறிக்கை எந்த கட்சியிடமும் இல்லாதது துயரமே. மிச்சமிருக்கும் உயிரிகளையும் இயற்கையையும் வளரும் சந்ததியினரிடம் நேசிக்க கற்றுக்கொடுக்கும் முயற்சியை முன்னெடுக்கத் தூண்டுகிறது இந்நூல். அல்லது அவர்களிடம் இயல்பாகவே உள்ள ஆர்வத்தை பொசுக்கிடாமல் பாதுகாக்க செய்யும்.
காட்டுவாசிகள் என ஏளனமாக பார்க்கப்படுபவர்களே இயற்கையை காப்பாற்றுபவர்களாக இருக்கிறார்கள் என்பதற்கு இதுவே சாட்சியாக இருக்கும். " நான்கு மிகப் பெரிய நச்சுப்பாம்புகளை ஓர் இருளர் கூட்டுறவுச் சங்கம் என்ற அமைப்பின் உறுப்பினர்கள் பிடித்து வருவார்கள்; பின், அவற்றிலிருந்து பலமுறை நஞ்சு சேகரிக்கப்பட்ட பிறகு, மீண்டும் காடுகளிலேயே அவற்றை விடுவித்திட வேண்டும்". எதைக் கண்டாலும் எதிரியாக பாவித்து அடித்துக்கொள்ளும் மனப்போக்கு கொண்ட நாம் யார் என்பது குறித்த கேள்வி எழத்தான் செய்கிறது. இயற்கை எப்பொழுதும் தன்னைத்தானே சமநிலைப்படுத்திக்கொள்ளும். ராஜ நாகம் குறித்த இவரின் கூற்று உண்மையை உணர்த்துகிறது.
ராஜநாகம் மிகவும் அறிவான பாம்பு. கேரளா மற்றும் கர்நாடகாவில் அவற்றின் எண்ணிக்கை அதிகம். ராஜநாகங்கள், பாம்புகளை மட்டும்தான் சாப்பிடும். வேறு எதையும் சாப்பிடாது. ஆபத்தான பாம்புகளின் எண்ணிக்கையை அவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. ராஜநாகம் நமக்கு நண்பன்.
முதலையை முதன்முதலாக பள்ளி சுற்றுலாவின்போது கண்டது. வசீகரிக்கும் உருவம் கொண்ட விலங்காக இல்லாததால், பெரிதாக அதன்மீது ஈர்ப்பு ஏற்படவில்லை. அதன் வாழ்வு குறித்த விட்டேகரின் விவரிப்பை வாசிக்க முதலைகள் மீது பிரியம் சுரக்கிறது. சிந்தனை முழுக்க பெரும் சிக்கோடுதான் வாழ்கிறோம் என்பதை அறியச் செய்தது இந்நூல்.
"ஓர் ஆற்றிலிருந்த முதலையால் முட்டைகளை வெளியேற்ற முடியாமல் சிரமப்பட்டது. தன் இணை முதலையிடம் உதவிக்கு யாரையாவது அழைத்துவர கோரியது. அங்கு வேறு முதலைகள் இல்லாததால் கரைக்கு வந்த ஆண் முதலை அங்கிருந்த முருட் பெண்மணியிடம் உதவி கேட்க, தயங்கிய பின் ஒத்துக்கொண்டு முதலையின் வாலை பிடித்து சென்று முட்டைகளை வெளியேற்ற உதவினாள். இதனால் முதலைகள் முருட் இன மக்களை கடிப்பதில்லை என்ற கதை நக்கீரனின் காடோடியில் வாசித்தது நினைவிற்கு வந்தது. இது எனக்கு எக்கொடிய விலங்குகளிடமும் நேசிப்பை செலுத்த முடியுமென தோற்றுவித்தது. மேலிருப்பது கதை என்றால் கீழிருக்கும் உண்மை நம்மை வியப்பில் ஆழ்த்தும்.
"தாய் முதலை செய்ய வேண்டிய எல்லாக் கடமைகளையும் அந்த பெரிய, பொதுவாக பொறுப்பேற்க விரும்பாத ஆண் முதலை தானே முன்வந்து செய்தது. புதிதாக பொரித்த குஞ்சுகளுள் ஒன்று முட்டை வளையினருகே ஒரு வெற்றிடத்தில் விழுந்துவிட்டது. அந்த ஆண் முதலை, தன் வாயில் அதை ஏந்திச் சென்று தண்ணீருக்குள் மேல்லக் கீழே நழுவி விழுமாறு செய்தது. முட்டை வளையைத் தோண்டுவதில் ஓர் ஆண் முதலை பங்கேற்பதை அன்றுதான் பார்க்க முடிந்தது". என்றிருந்ததை வாசித்ததும் முதலைகள் நெருக்கம் கொள்ளத் தொடங்கின. எல்லா உயிரினங்களிலும் ஆண் தடித்தனத்தோடுதான் வாழும் போலும்.
நாம் செய்வது தவறு என்பதை ஒப்புக்கொண்டு காட்டுயிர்களை நேசிக்க குழந்தைகளின் மனநிலை நமக்கு தேவையாக இருக்கிறது. ஏழுகடல் ஏழுமலையை கடந்து ஒரு சிப்பியுள் அடைக்கப்பட்டிருக்கும் உயிர் அல்ல குழந்தைகளின் மனப்போக்கு. அது நம்முள் எப்பொழுதும் இருந்துகொண்டுதான் இருக்கிறது. நாம் அதை கண்டுகொள்ள மறுக்கிறோம் என்பதை உணரச் செய்து, தோழமை உணர்வோடு எல்லா உயிரிகளையும் அனுகச் செய்கிறது ரோமுலஸ் விட்டேகர் வாழ்க்கைப் பயணம்.
வெளியீடு: வானதி பதிப்பகம்
விலை : ரூ. 500.
Monday, June 20, 2022
தவுட்டாயி பாட்டியின் பேரன்
நீரோட்டம் பார்க்க வேப்பக் குச்சியோடு புறப்பட்ட தாத்தாவோடு பேரனும் சென்றான். நிலத்தில் அங்குமிங்குமாக அலைந்தபடி இருந்தவர் ஒரு இடத்தில் வட்டமிட்டு இங்கு போடுப்பா நல்ல தண்ணியோட்டம் கிடைக்கும் என்றார். பேரன் ஆச்சரியத்தோடு பூமிக்கடியிலிருக்கும் நீரை இந்த குச்சி எப்படி தாத்தா காட்டியது எனக் கேட்டான். சிரித்தவாறு எந்த குச்சியும் காட்டாது, இது ஒரு சாக்குதான். நிலத்தை உயிராக நேசிப்பவனுக்கு நிலம் தன் ரகசியங்களை காட்டிக்கொடுக்கும். அதை அறிய பரிச்சயமும் பயிற்சியுமே தேவை என்றார். மொழியும் நிலத்தை போன்றுதான். நேசிப்பவர்களுக்கு தன்னைத் தரும். அவரவர்களின் பயிற்சிக்குத் தக்க வடிவத்தை அறுவடை செய்கிறார்கள். நந்தன் கனகராஜ் 'அகாலத்தில் கரையும் காக்கை' எனும் கவிதை தொகுப்பை அறுவடை செய்துள்ளார்.
கவிதையாக்க தான் தேர்வு கொள்ளும் விசயத்தை விலாவாரியாக காட்சிப்படுத்துவதன் மூலம் அதன் முழு பரிமானத்தையும் நமக்குள் சட்டகம் சட்டகமாக அடுக்கி வைத்திடுகிறார். புறத்தோற்றத்தின் வெளிப்படைத்தன்மையை காட்சியாக்குவதன் மூலம் அகத்தின் ஆழத்தை எளிதில் நாம் உட்கொள்ள முடிவதால் கவிதைகள் நம்முடன் இணக்கமாகிவிடுகின்றன. சமகால அரசியல், சமூக இடர்கள், அழிவின் சித்திரங்களாகிக் கொண்டிருக்கும் சூழல், குழந்தமைகள் மீதான பரிவு, காணாமல் போய்கொண்டிருக்கும் குருவிகளை தன் மொழியில் பறக்கவைத்தலென நந்தன் கனகராஜின் ' அகாலத்தில் கரையும் காக்கை' தொகுப்பு ஓர் ஒளிக் கலவை.
ஆகாயம்
நனைந்துலரும்
சிறகுகளில்
நீருறிஞ்சி
அண்ணாந்து பார்க்கும்
தவிட்டுக்குருவிகளுக்காகவே
ஆகாயத்தில் கிளைக்கின்றன
அநேகம் நம்பிக்கைகள்.
இக்கவிதையில் வரும் தவிட்டுக் குருவிக்கும் நமக்கும் ஓர் ஓர்மை உண்டு. குயிலின் குஞ்சு நிறமும் இதன் குஞ்சு நிறமும் ஒத்திருப்பதால் குயில் அதன் குஞ்சை இதன் கூட்டில் விட்டுச் சென்றிடும். இதுவும் தனதாக பாவித்து அலைந்து திரிந்து உணவை சேமித்து ஊட்டி வளர்த்து ஏமாந்து போகும். உறவுகள் துவங்கி அனைத்திலும் நம்பி ஏமாறும் கதைகள் நமக்கு ஆயிரம் உண்டிங்கு. ஆகாயத்தில் நமக்கும் சில நம்பிக்கைகள் கிளைக்கத்தான் செய்கின்றன. அதுவே நம் உயிர்வேராகவும் இருக்கிறது.
எதையும் காலாகாலத்தில் செய்து முடிக்கவேண்டுமென பெரியவர்கள் சொல்லும் காலாகாலம் என்பது பருவத்தே பயிர் செய் என்பதன் நீட்சிதான். ஆனால் நாம் சூழலுக்கு செய்துகொண்டிருக்கும் மிக்க கொடிய அநீதியால் பருவங்கள் மாறுதலுக்குத் தள்ளப்பட்டன. ஐப்பசியில் பெய்த மழையால் டெல்டா விவசாயிகளின் நிலங்களில் அறுவடைக்கு காத்திருந்த பயிர்கள் நீரில் மூழ்கி விதைக்காமலே மீண்டும் துளிர்ப்பைக் கண்டது நம் இயல்பு வாழ்வை கலங்கச் செய்தது.
"ஆகாயத்தைக் கும்பிட்டு
ஆடிப்பட்டத்தில்
நாங்கள் ஊன்றும் விதைகளை
முளைக்கச் செய்யும்
வார்த்தைகளைத் தந்து
விபூதி பூசித் தணிவாள்." என முடிவுறும் ' அவ்வொலியை விட்டு விடுவது அத்தனை சுலபமில்லை' கவிதையில் வரும் தவுட்டாயிப்பாட்டியின் வாக்கு இனியாகினும் பலிக்கவேண்டும் என மனம் ஆசை கொள்கிறது. இக்கவிதையில் ஒவ்வொரு பத்தியுமே தனித்தனி கவிதையாக இருப்பது நம்மை இக்கவிதையில் இறுத்திவைக்கிறது.
மனிதர்களை தொந்தரவிற்கு உள்ளாக்கும் வார்த்தைகளை மிஞ்சும் ஆயுதம் உலகில் வேறொன்றுமில்லை. ' அதுவொன்றன்று' எனும் கவிதையில் நாற்காலியில்/ அப்பிக் கிடக்கிறான்/ முதி கிழவன் எனும் வரிகள் அப்படியானவைகளே. ஒன் பாத்ரூம்/ டூ பாத்ரூம் எவ்வளவு என சிலர்தான் கேட்கிறார்கள். பெரும்பாலானவர்கள் விரல்களைக் காட்டி சைகையாலே கடந்திடுகிறார்கள். சாதிய மனம், தகுதி என்பனவற்றையும் மீறி எல்லாவற்றையுமே எமோஜிகளாக மாற்றிக்கொண்டிருக்கும் காலமாகிப் போனது. உரையாடல்கள் குறைந்துகொண்டே இருக்கிறது. வாட்ஸ்அப் வார்த்தையாடல்களே போதும் என்ற மனப்போக்கு மிகுந்துபோனது. சொற்கள் நம்பிக்கை, சொற்கள் பலம், சொற்கள் இன்பம், சொற்கள் தோழமை, சொற்கள் அற்று வாழ்வேது?. சில இடங்களில் பேசத்தான் வேண்டும். காலமற்று தொழில்புரிவோரிடம் சிறு புன்னகையோடு எப்படி இருக்கீங்க, டீ சாப்பிடுறீங்களாவென சும்மா கேட்டுப்பாருங்க, வாழ்வில் நீங்க என்றுமே பார்த்திராத புன்னகையை பார்க்க முடியும். சமூகம் அவர்களை வேண்டாவெறுப்பாக பார்க்கள் பழக்கு வைத்துள்ளது. இப்படியான சமூகத்தில்தான் வாழவேண்டி இருக்கெனும் உண்மை சுடத்தான் செய்கிறது. இக்கவிதை காட்சிப்படுத்தலில் நம்மை ஒரு பேருந்து நிலையத்துள் நிற்கவைத்துவிடுகிறார்.
சிவானிக்குட்டி
இலை வரைந்த சுவரில்
வந்து ஒட்டிக் கொண்டன
மரங்கள்
' என்ன... இது? ம்...'
என்ற அதட்டலில்
கண்ணீரோடு பெயர்த்துவைத்தாள்
தனது காட்டை
பெருவழிச் சாலைக்கு
அளவுக்கல் நடப்பட்ட
நிலமென
துலங்கிக்கொண்டிருக்கிறது வீடு.
எனும் சிவானிக்குட்டி கவிதை போன்று ஏற்கனவே சுவற்றில் வரைவது குறித்து நிறைய்ய கவிதைகள் எழுதப்பட்டிருக்கு. இன்னும் நிறைய்ய எழுதப்படவும் கூடும். ஏற்கனவே என நாம் இதை கடந்திட முடியாது. தினம் வரும் சூரியன்தானே என நாம் அசட்டையாக இருந்திடுகிறோமா? புதிதாக தினம் பிறந்தபடியேதானே இருக்கு சூரியன். குழந்தமை கவிதைகளும் என்றும் புதிதுதான். இக்கவிதையில் வரும் அளவுக்கல் நடப்பட்ட நிலமெனும் வார்த்தை நம்மை கலங்கச்செய்திடுகிறது. அது வெறும் கல்தானே என இயல்பாக அவர்களால் இருந்திட முடியாதுதானே. அதிகாரத்திற்கு எதிராக எளியவர்களிடம் இருக்கும் கண்ணீர் நதியாகி அவர்களை அடித்துச் சென்றிடுமென ஆறுதல் கொள்ளத்தான் முடியுமா?. அதிகாரம் உதிரும் மயிருக்குச் சமானமென கண்ணுக்கு புலப்படாத கிருமி உலகரங்கை முடக்கிவைத்த காலத்தில் வாழ்ந்தும் மாதக்கணக்கில் டில்லியில் போராடியபடி இருக்கும் விவசாயிகளின் உணர்வை மதியாத அரசை என்ன செய்ய போகிறோம் என அலையலையாக தவிப்பை உருவாக்கியபடி இருந்தது இக்கவிதை.
கட்டுப்பாடற்ற மனப்போக்கோடு இருப்பவனின் கனவில், உலகம் காணாத பூக்களெல்லாம் மலரக் கூடும். அக்கனவை மொழிப்படுத்த பூக்களின் வாசனை காற்றுக்கானதாக மாற்றம்கொள்ளும். கனவு எதையும் சாத்தியப்படுத்தக்கூடியதே. இவரின் ' கேட்ட மழை' கவிதையை அப்படியனதொரு கவிதையாக பார்க்கலாம்.
ஆறு நீரோடும் தடம் அல்ல. அது வாழ்வு. வாழ்வைக் காட்டும் கண்ணாடி. ஆற்றுக்கும் மனிதனுக்குமான பிணைப்பை கூற ஆயிரமாயிரம் கதைகள் உண்டு. துயரோடு வருபவனின் கண்ணீரை தன்னில் கரைத்து இயல்பாக்கி அனுப்பிவைக்கும் அற்புதம். பாவங்களை கழுவி சுத்தப்படுத்திக்கொண்டே இருக்கும் பொக்கிசம். நமக்கும் ஆற்றுக்குமான வாழ்வை மீட்டுத் தருகிறது ' ஆறு என்பது ஒன்றல்ல' கவிதை.
ஊர் என்பது வாழும் இடம் மட்டும் அல்ல. ரசிக்கும் காட்சிகளின் தொகுப்பு. இருந்து இல்லாது போனாலும், இருந்திருந்த நாட்களின் காட்சி நம்மை என்றும் வசீகரித்துக் கொண்டே இருக்கும். இக்காட்சிகளை நந்தன் கனகராஜ் கோழியாக அடைகாத்து நமக்கு தந்தபடியே இருக்கிறார். ' தொலைவட்டம்' கவிதை ஊரின் சித்திரங்களை நம் நினைவில் ஒட்டியபடி இருக்கிறது.
கார்த்திகை தீப நாளில் மாடிப்படிகளில் விளக்கேற்றிக் கொண்டிருந்தாள் யுவதி. முடித்த கணத்தின் மகிழ்வை முகம் பூத்திருந்தது. சட்டென ஒரு விளக்கு அணைய அச்சோவென ஓடிப்போய் ஏற்றினாள். வேறொன்று வேறொன்றென அணையத் துவங்க அங்குமிங்குமாக ஓடி ஓடி ஏற்றியபடியே இருந்தாள். அக்காட்சி எனக்கு அவள் அழகை ரசிக்கும் தீபங்கள் அவளோடு விளையாடிக் கொண்டிருப்பதாகப் பட்டது. கடந்து செல்ல இயலாது நானும் ஒரு விளக்கில் தீபமாகி வேடிக்கை பார்த்தேன். இக்காட்சியில் மீண்டும் எனை வாழச் செய்தது இக்கவிதை.
சுடர்தல்
தீபம் ஏற்றிய வாசலை
காவல் செய்யும்
குழந்தை
சுடர் அணைந்த கணத்தில்
அம்மாவை அழைக்கிறது.
ச் சோ... என்கிற
அதன் பரிதாபத்துக்கு
சுடர்ந்து மறைகிறதொரு
பிரகாசம்.
'மலை' எனும் கவிதை மலையின் தொடக்கத்திற்கு/ இடறிக்கொண்டேயிருக்கிறார்கள்/ மனிதர்கள். இப்படியாக முடிகிறது. மனிதர்களின் தீராபசிக்கு படுத்துறங்கும் யானைக் கூட்டம்போல் கிடக்கும் மலைகள் நம் காலத்திலேயே இல்லாமல் போய்விடும் போலிருக்கிறது. எட்டுத் திக்கும் அழிவின் சித்திரங்களே. எதேனும் சின்னஞ்சிறு துளிர்ப்பை பிடித்தே காலத்தை நகர்த்தவேண்டி இருக்கிறது. சிறு கல்லும், பெரிய மலைகளும் இனி கவிதைகளில் மட்டும்தான் இருக்கும் போலும். மரத்தை உருவாக்கலாம், ஏன் காட்டைக்கூட உருவாக்கிவிடலாம், பாறைகளை உருவாக்கிட முடியதெனும் உண்மையை உணர்ந்தே செய்யும் திமிர்த்தனத்திற்கு என்ன தீர்வு இருந்திடப்போகிறது.
உன் காலை தள்ளாடவொட்டார்
உன்னை காக்கிறவர் உறங்கார்
கர்த்தர் உன்னை காக்கிறவர்
உன் வலது பக்கத்திலே உனக்கு நிழலாயிருப்பார்
உங்கள் பாவங்கள் கழுவப்பட்டு
உங்களுக்கு இளைப்பாறுதலைத் தருவார்.
கர்த்தரிடம் வாருங்கள். என அவ்வப்போது வாசித்த வசனங்களை நினைவூட்டும்விதமாக இருந்தது நந்தன் கனகராஜின் ' என் வீடு' கவிதை. அறைகளை கலைத்துப்போட, ஹேவென கத்த, குட்டிக்கரணம் அடிக்க, அழுது வேண்டியதை கைக்கொள்ள, சண்டையிட்டு சமாதானம் கொள்ள நீங்கள் வீட்டிற்கு வாருங்கள் என அழைப்பை விடுக்கும் நந்தன் கனகராஜ் நிபந்தனையொன்றையும் போடுகிறார். குழந்தைகளாகிக் கொண்டீர்கள் எனில்/ நிச்சயம் வரலாம்/ நீங்களென் வீட்டிற்கு. சொல்வது எளிதுதான் குழந்தமை மனம் கொள்ளுதல் அவ்வளவு எளிதானதா என்ன?.
குடிமக்களின் வாழ்க்கை நன்னிலையோடு இருக்க செம்மையான நெறிகளை வகுத்து ஆட்சி புரிதல் அரசின் கடமையாகும். அறம் பிறழாது அல்லவை நீக்கி அரசானது சமுதாயத்தினை மேன்மையுறச் செய்தல் வேண்டும் எனும் ' அறனிழுக்கா தல்லவை நீக்கி மகன் இழுக்கா
மானம் உடையது அரசு' எனும் வள்ளுவரின் குறளை நம் ஆட்சியாளர்களுக்கு
'அறன் தவறி மக்களுக்கு அல்லவை செய்து மறைந்திருந்து
கார்ப்ரேட்டுகளை காப்பதே நல்லரசு'
இப்படியாக மொழிபெயர்ப்பு செய்திருப்பார்கள் போலும். மதச்சார்பற்றது என் நாடெனும் பெருமிதத்தில் காவிக்கறை வீழ்ந்தது துவங்கி ஆட்சியாளர்களின் தொடர் திமிர்த்தனங்கள் அரங்கேறியபடியே இருக்கிறது. பெரும்பாலான இந்தியக் குடும்பத்தின் நிலையை காட்சிபடுத்தும் ' ம(வு)னச் சித்திரம்' கவிதையின் இறுதி பத்தி இப்படியாக.
பொய்மையின் ஊற்றை
சிருஷ்டிக்கும்
நம் கடவுளோ
எரிபொருள் நிலையங்களின்
பதாகைகளில்
மானியங்களின் சிரிப்பைத்
தந்துகொண்டிருக்கிறார்.
நம்மின் மனக்குமுறல்களை கவிதையில் கடந்துபோய் விடுவது இயல்பாகிவிடுகிறது.
தன்னை முழுமையாக அறியத் துடிப்பவன் தனக்கான இலக்கை தீர்மானிப்பதும், அதற்காக தேடுதலும், கற்பதும், சோதிப்பதும், பின் அதனை பண்படுத்துவதுமென தொடர்ந்து இயங்கியபடி இருப்பதே நம்மை உயிர்ப்போடு வைத்திருக்கும். அதற்கான துளிர்ப்பை நந்தன் கனகராஜின் அகாலத்தில் கரையும் காக்கை தொகுப்பில் காண முடிகிறது.
Wednesday, June 1, 2022
மெல்லுடல்
கைப்பிடி நிழலை
குடையாக்கினேன்.
காலத்தை
நகர்த்திக் கொண்டிருந்த
நத்தையின் நிழலை
நகர்த்திக் கொண்டிருந்தான்
கதிரவன்.
*
எதேச்சை
*
பேசி வைத்துக்கொண்டு வருவதல்ல
ஒத்த காலம்.
இன்றும் கடக்கையில்
தூக்கி சொருகிய நைட்டியோடு
வந்தவள் கொட்டினாள்
குப்பையை.
என்றைக்கும் இல்லாது
இன்றவள் கண்களில்
ரோஜாக்கள் பூத்திருந்தன.
“
வேளாங்கண்ணி...
*
உழுது கிடக்கும் நிலமென
நீண்டு கிடந்த மணல் பரப்பில்
பாதங்களாகின
மண்டியிட்ட மூட்டிகள்.
சித்திரங்களாக தீட்டப்பட்ட
வாழ்வை கண்டு
இளைப்பாறி
நகர்ந்து கொண்டிருந்தனர் கர்த்தர்கள்
அறிந்திராத வலியல்ல
ஆயினும்
தம்பாடலை
தாமே ஜபித்தனர்
கேவிக்கேவி அழுதனர்
கரைந்து உருகியது வலி.
நிறைவு கொண்ட வேண்டுதலுக்காகவும்
நிறைவேற்ற வேண்டிய வேண்டுதலோடும்
நிறைவாக
மரியாளின் கக்கத்தில்
மடி சாய்ந்தனர்.
அங்கே எல்லோருக்குமான
வால் நட்சத்திரம் ஒன்று
எப்போதும் ஜொலித்துக் கொண்டிருக்கிறது.
Subscribe to:
Posts (Atom)