நம் உடலில் இருந்து பிரியும் நிழல் எத்திசையில் எவ்வளவு உயரத்தில் விழவேண்டும் என்பதை நம்மால் தீர்மானிக்க இயலாது. அது நம் கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்டது. நம் உடலில் இருந்துதானே வந்தது என்பதற்காக அதை நாம் எதையும் செய்ய இயலாது. அதன் போக்கு வேறானது. அதுபோல்தான் நாம் கானும் உலகிற்கும், காணத் துடிக்கும் உலகிற்குமான போக்குகள் வெவ்வேறானவை. இரண்டிற்குமான நீண்ட சுவர் கண்ணுக்குத் தெரியாமல் எழுப்பப்பட்டிருக்கிறது. அதன் மீது ஏறி நின்று காணாததை கண்டதுபோலவும், கண்டதை காணாதது போலவும் வாழ்ந்துப் பார்க்கிறோம். நம் வாழ்வு அகம்-புறம் எனும் இரட்டைத் தன்மையிலான உருண்டை. ஷாஅ வின் 'கண் புகாவெளி' தொகுப்பின் பெரும்பாலான கவிதைகளில் இந்த இரட்டைத் தன்மையிலான உருண்டையை உருளவிட்டிருக்கிறார். அண்மை-விலக்கம், இருத்தல்-இல்லாதுபோதல், மேல்-கீழ், நிஜம்-நிழல், வறட்சி-ஈரம், அடி-அந்தரம், ரகசியம்-அ ரகசியம் இப்படியாக அவ்வுருண்டையை பிரித்துப் பார்க்க தெரியும் அர்த்தங்களின் சுவையை அனுபவிப்பின் மகிழ்வில் ஊஞ்சலாடச் செய்கின்றன கவிதைகள்.
இயல்பான வாழ்வு என நாமாக நினைத்துக்கொண்டிருக்கும் இயல்பு வாழ்வில் ஏதாகினும் ஒரு சொல் அல்லது செயல் என ஏதோவொன்று அலைவு கொள்ளச் செய்யும். அவ்வாறு அலைவு கொள்ளும் தருணங்களை ஷாஅ கவிதையாக்கியுள்ளார். 'உள்ளே பந்து', கவிதையில் உருண்டபடி இருக்கும் பந்து, 'மணப் பொந்து' கவிதையில் மனம் குடையும் மரங்கொத்தி, 'உள் திரும்பிய அறை' கவிதையில் ஒளிவெளி, 'புன்னகை' கவிதையில் படபடக்கும் தாள், 'அறிமுகம்' கவிதையில் முகம், 'மனதில் நீச்சல்' கவிதையில் பழகா நீச்சல் என தொகுப்பில் தொடர்ந்தபடி நிறைய்ய கவிதையில் காண இயலும்.
முதல் பார்வைக்கு எரிச்சலூட்டும் சிலதுகள் அதனை நாம் உள்வாங்க மிகவும் பிடித்தமானதாக மாறிப்போவதுண்டு. கண் புகாவெளி தொகுப்பிலிருக்கும் 'யுவள்' கவிதை முதல் பார்வைக்கு எரிச்சலூட்டும் வடிவமைப்பாக இருக்க, அக் கவிதையை வாசித்தபின் அவ் வடிவமைப்பாளரிடம் மனதார மன்னிப்பு கோரினேன். அக்கவிதையை வாசித்த பின் அவ் வடிவமைப்பிலிருந்து நல்ல வடிவான பெண்ணொருத்தி எழுந்து வந்தாள். நினைவில் நிரந்தரமாக ஒரு உருவத்தை ஏற்றிவைத்துவிட்டது அப்பக்கம். ஷாஅ விற்கு அப்பக்கம் மேகலை என்றாள் எனக்கு அது மதுவாகினி.
நாம் நம் மொழியுடன் விளையாடிப் பார்க்க முயல்வதுண்டு. அவ்விளையாட்டு சில நேரங்களில் சுவாராசியமாகவும், பல நேரங்களில் சலிப்பையும் ஏற்படுத்தும். அதற்காக நாம் விளையாண்டு பார்க்காமல் இருப்பதில்லை. வெறும் சொற்களோடு விளையாட்டு நின்றுபோகாது சம்பவங்களோடும் இருக்க அவ்விளையாட்டு அதற்கான விளைவிப்பை ஏற்படுத்தத்தான் செய்யும். இத் தொகுப்பில் ஷாஅ 'பூனையும் மதிலும்', 'ஞாயிறு', 'முக்கிய பாடன்' 'மீன் கலை', 'போ' போன்ற கவிதையில் தனக்கான விளையாட்டை நிகழ்த்தியிருக்கிறார்.
போ
கும்
போது
ஆற்றை கடக்கிறது பாலம்
நதியுடன்
போ.
நேசிப்பு பொதுவானது. அதற்கு உயர்தினை, அஃறினை என்ற பாகுபாடு கிடையாது என்றே நினைக்கின்றேன். ஆண் பெண்ணை நேசிப்பதும், பெண் ஆணை நேசிப்பதும் போன்றே வேறு உயிரினங்களின் மீதான காதலும். ஷாஅ மலைகள் மீதான நேசிப்பு மிக்கவர் போலும் 'மலைகளின் குரல்' கவிதையில் அவரின் காதலை தரிசிக்க முடிகிறது.
-------------------------
-------------------------
வந்து
மேல் நுரையென
படிந்து
வாஞ்சையோடு அழைக்கின்றன
மலைகள் அழைத்துச் செல்லும் இடமும்
மலைகளுடன் நான் போய்ச் சேரும் இடமும்
இந்த முகம் பார்க்கும்
கண்ணாடி தீர்மானிக்கும்போது
அறிந்துகொள்வேன்.
திடுக்கிடல்களும் ஆச்சரியங்களும் சொல்லி வைத்து வருவதில்லை. அதன் நேரம் மர்மமானது. எக்கணமும் நிகழக்கூடியது. ஏற்படுத்தக்கூடிய திடுக்கிடல் உண்டாக்கும் ஆச்சரியங்களை விட எதிர்பாராது சம்பவிக்கும் திடுக்கிடலின் அனுபவம் அலாதியானது. ஷாஅவிற்கு ஏற்பட்ட ஒரு ஆச்சரியத்தை கவிதையாக்கியுள்ளார். அதை நாமும் அனுபவித்து உணரத்தக்கவகையில் கவிதையாகி இருப்பது தனிசிறப்பு. மாடியில் காயும் துணி எடுக்கச் செல்கிறார். துனியின் நிழல் வீட்டின் பின்புறம் உள்ள மலையில் படிந்திருக்கிறது. அது இவருக்கு மலை சட்டை அணிந்திருப்பதுபோல் இருக்க திரும்பிவிடுகிறார். 'தலை பொருத்தம்' கவிதை ஷாஅ வை நினைவில் வைத்திருக்கச் செய்யும்.
காயப்போட்ட துணி எடுக்க
மொட்டை மாடி போனேன்
தூரத்து மலைகள்
என் சட்டையை அணிந்திருந்தன
ஒன்றையும் கழற்றத் தோன்றவில்லை
பேசாமல் தலையை கொய்து
மலைமேல் வைத்து
அவசரமாக படி இறங்கினேன்...
------------------------------------------
அலர்ஜி - ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றில் ஏற்படுவதுண்டு. எல்லோருக்கும் ஒத்தமாதிரி பெரும்பாலும் இருக்காது. ஆனால் பள்ளிக்கூடத்தின் மீதான அலர்ஜி மட்டும் எல்லோருக்கும் பொதுவானதாக இருக்கிறது. எல்லா படைப்பாளிகளும் வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் தங்களுக்கு பிடித்தமான வடிவங்களில் அதை பிரதிபலிக்கச் செய்கிறார்கள். வீச்சான மாற்று ஏதும் இல்லாததால் நாமும் அந்த செக்கில் நம் பிள்ளைகளைப் போட்டு சுழல வைத்துக்கொண்டு இருக்கிறோம். இத் தொகுப்பில் ஷாஅ வும் தன் பங்களிப்பாக 'படிக்காத பாடம்' கவிதையில் வகுப்பறையில் இருக்கும் முயல்களுக்கான தன் கரிசனத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
முழுமையடையாது தெளிவின்மையோடிருக்கும் கனவை ஒரு நிறை குடமாக்கி, வெளியெங்கும் சிதறும் துளியின் மையத்தை காட்சிபடுத்தி, களவு போன மலை குறித்து மழையோ மழையென்று கவலைகளை பொழிந்து, எதிரெதிர் நிலைகளின் இருப்பை இல்லை எனக் கூறுவதன் மூலம் இருப்பின் கவனத்தை அதிகப்படுத்தி, தான் தொலைத்ததைத் தேடும் பயணத்தில் முன்னர் தொலைக்கப்பட்டவைகளின் காலப்பொதியில் சுழன்று, ஆறுகள் நனையாது நதியாகும் காட்சியில் ஓடி, ஈரம் பட்ட தாளில் எழுதி, ஆச்சரியத்தில் நட்சத்திரம் அறிந்த கதைகேட்டு, வீட்டின் உயிராக கிடந்து, இலையிடம் கற்ற பாடங்களை அசைபோட்டபடி நம்மையும் இருந்திடச் செய்திடுகிறார் ஷாஅ தன் கண் புகாவெளியில்.
வெளியீடு
காலச்சுவடு பதிப்பகம்
நன்றி- மலைகள்.காம்