Friday, September 6, 2013

சாயக்கனி

தொட்டி ஒன்று
தன் குறுகிய எல்லைக்குள்
வேர்களை உயிர்ப்பிக்க வைத்து
நேர்த்தியாக வளர்த்திருந்தது
மணத்தக்காளிச் செடியை
சாயமேறித் தொங்கும் நீர்த்துளிகளாக
அதன் கனிகள்
அவசர அவசரமாக பறித்துத் தின்றவன்
சிறிதளவு என்னிடம் காட்டினான்
இது எப்போ சிவப்பாகுமென்றான்
கருப்பாகத்தானிருக்கும் இப்பழமென்றேன்
சிகப்பானால்தானே பழம்
எல்லா பழங்களும் சிகப்பாகாதென்றேன்
திருப்தியின்மையோடு ஓடிப்போனான்
அடுத்த நாளில் அதிசயம் கண்டேன்
கனிகளுக்கு சிவப்பு வர்ணம் பூசிக்கொண்டிருந்தவன்
மணத்தக்காளிக்கு அறிவுறுத்தினான்
இனி இப்படித்தான் பழமாக வேண்டுமென...
*

பவனி

தாள் ஒன்று
தன்னில் எதையாவது வரையுமாறு
அழைப்பதாக கூறிச் சென்றவன்
இருந்த வர்ணங்களை சரிபார்த்து
ஒன்றிரண்டை வாங்கிவர பணித்தான்
என்ன செய்ய போகிறாய்
மகாபாரதம் தொடரில் பார்த்த
ரதம் ஒன்றை வரையத் துவங்கினான்
ஒளிர்வில் வீடு மினுங்க
ரதம் நின்றது பேரழகோடு
வலம் வந்து நின்றவன்
மற்றொரு தாளில்
புரவிகளை உயிர்ப்பித்து பூட்டினான்
ஊரே அதிசயித்து நோக்க
வானில் பவனி வந்தான்
இந்நிகழ்விற்கு பின்னான நாட்களில்
வரையும் சித்திரங்கள் வாகனமாகிட
தொலைந்து போவது தொடர்கதையானது...

நன்றி: திராநதி.

Wednesday, September 4, 2013

சூரியனை
சிறு கயிறாக திரித்து
அறையுள் அனுப்பியது கூரைத்துளை
கயிற்றை கண்ணாடியால் அறுத்தேன்
வாசலில் வட்டத்தை இட்டது
கடந்தவள் வளையலால் மீண்டும்
உட்செலுத்தி கூசச்செய்து
சிரிப்பை நிறுத்திச் சென்றாள்
துளை இப்போ மழையை திரித்தனுப்ப
அறையும் குளிர்ந்தது

தாளாத குளிர்விப்பு


இருள் பிளந்தது
வெண்மை பூக்கச் பிரிந்தது
பலாச்சுளை
தித்திப்புக் கடலில்
எத்துளியை பருகுவதென
மருகி ஊர்ந்தேன் எறும்பாகி
தாளாத குளிர்விப்பில்
உடல் கரைந்தது.

Sunday, September 1, 2013

பசியாற்றும் கண்கள்

மதநீர் சுரக்க
எனதுடல் பிரிந்த யானை
அறிந்தேன் நிகழும் மாற்றங்களை
மிளிரும் மூக்குத்தி
சிமிட்டும் தொங்கட்டான்கள்
மறையத் துவங்கின
நெளிவுறும் வானவில்
கிளர்த்தும் மதனமேடுகள்
அசைவுகளின் நளினமென
கள்ளத்தனமான கயமைகளை
பாசியாக்கி படியச் செய்தேன்
பசியடக்கத் தவறவில்லை
கண்கள்...